ஆப்கானிஸ்த்தானில் இருந்து விலக தாலிபனுடன் அமெரிக்கா செய்துகொண்ட ஒப்பந்தத்தில் இருப்பது என்ன?

 19 ஆகஸ்ட் 2021

ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சர்வதேசப் படைகள் வெளியேறியபின்பு, ஆஃப்கானிஸ்தானை ஆக்கிரமித்த தாலிபன்கள் எல்லா ஊர்களையும் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டனர். இருபது ஆண்டுகள் சண்டை நடந்தபின்பு ஏன் அமெரிக்கா வெளியேற ஒப்புக்கொண்டது?

2001ல் நடந்த 9/11 நிகழ்வுக்குப் பிறகு நேட்டோ தாலிபன்களைக் காபூலை விட்டு வெளியேற்றியது.

ஆனால் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இஸ்லாமியவாத தீவிரவாத அமைப்பான தாலிபன் மீண்டும் ஆப்கானிஸ்தானின் தலைநகரத்தில் நுழைந்துள்ளனர். அதிபர் மாளிகையில் செல்ஃபி எடுக்கிறார்கள். நாட்டையே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டர்கள்.

இந்த நிலைக்கு ஒரு மோசமான ராணுவத் தோல்வி காரணமல்ல, இதற்கு வித்திட்டிருப்பது ஓர் அமைதி ஒப்பந்தம்.

ஓர் அமெரிக்க அதிபரால் கையெழுத்திடப்பட்டு அடுத்த அமெரிக்க அதிபரால் செயல்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் என்ன பிரச்னை?

ஏன் அமெரிக்கா தாலிபானுடன் ஒப்பந்தம் போட்டது?

தாலிபன்களை முக்கிய நகரங்களிலிருந்து வெளியேற்றும் முயற்சியில் நாட்டோ படைகள் முதலில் வெற்றி கண்டன

பட மூலாதாரம்,PA MEDIA

படக்குறிப்பு,

தாலிபன்களை முக்கிய நகரங்களிலிருந்து வெளியேற்றும் முயற்சியில் நாட்டோ படைகள் முதலில் வெற்றி கண்டன

இரட்டை கோபுரங்கள் வீழ்ந்த மறு நாள், அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஓர் உறுதிமொழியைக் கொடுத்தார் : "இந்தப் போர் முடிய கொஞ்சம் காலமாகும்,ஆனால் சந்தேகமே வேண்டாம், நாம் வெற்றிபெறுவோம்".

ஆனால் நிதர்சனம் என்னவென்றால், ராணுவ ரீதியாக அமெரிக்காவால் தாலிபான்களை வெல்லவே முடியவில்லை.

9/11 தாக்குதல்களுக்குக் காரணமான அல்-கய்தாவுக்கு அடைக்கலம் கொடுத்த தாலிபன்கள் நாட்டோவின் குறுக்கீட்டால் வெளியேற்றப்பட்டாலும் அவர்கள் மீண்டும் பல ஆண்டுகள் பணியாற்றி ஒருங்கிணைந்தார்கள்.

2004க்குள் மேற்கு நாடுகளைச் சேர்ந்த ராணுவங்கள் மீதும் அப்போதைய ஆஃப்கானிஸ்தான் அரசின்மீதும் தாக்குதல் நடத்தினார்கள். தாக்குதல்கள் அதிகரித்ததால் அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 2009ல் ராணுவத்தை அதிகப்படுத்தினார். ஆப்கானிஸ்தானின் மொத்த ஓர்ட்டோ படைகளின் எண்ணிக்கை 1,40,000 ஆக உயர்ந்தது.

இதனால் தாலிபன்கள் பின்னடைந்தாலும் அது கொஞ்ச காலமே நீடித்தது.

அமெரிக்காவின் மிக நீண்ட போராக இது மாறியது. 978 பில்லியன் டாலர் செலவு, 2300 பேரின் உயிரிழிப்பு ஆகியவற்றால் அமெரிக்கக் குடிமக்களே இதைக் கைவிடுமாறு குரல் எழுப்பினர்.

பயிற்சியளிப்பது, ஆதரவு தருவது ஆகியவற்றை மட்டும் செய்யப்போவதாக அமெரிக்கப் படைகள் அறிவித்த பின்பு வீரர்களின் உயிரிழப்பு குறைந்தது. "45,000க்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் வீரர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் இறந்திருக்கிறார்கள்" என்று 2019ல் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி தெரிவித்தார்.

இந்த சூழலில் ஒபாமாவுக்குப் பின்னால் வந்த அதிபர் டொனால்ட் டிரம்ப், தாலிபன்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு 2020ல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அந்த வருட அதிபர் தேர்தல்களிலும் இது மகிழ்ச்சியோடு குறிப்பிடப்பட்டது. "நாம் ஆப்கானிஸ்தானிலிருந்து கிட்டத்தட்ட விலகிவிட்டோம். 19 ஆண்டுகள் அங்கு இருந்தோம். இப்போது கிளம்பிவிடுவோம்" என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஒப்பந்தத்தில் என்ன குறிப்பிடப்பட்டிருந்தது?

அமெரிக்கா மற்றும் தாலிபன் இடையே ஒப்பந்தம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா எல்லா படைகளையும் விலக்கிக்கொள்ளும், அல்-கய்தாவோ பிற தீவிரவாத அமைப்புகளோ தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் இயங்காமல் தாலிபன் பார்த்துக்கொள்ளும். தாலிபன் தரப்பால் 1000 ஆஃப்கானிஸ்தான் வீரர்களும், அரசு தரப்பால் 5000 தாலிபான் கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள். இந்த அமைப்புக்கு எதிரான தடைகள் நீக்கப்படும். இந்த ஒப்பந்தம் தாலிபனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலானது மட்டுமே. தாலிபன் பிறகு ஆப்கானிஸ்தான் அரசுடன் பேசி யார் நாட்டை ஆள்வது என்று முடிவெடுக்கும் என்று சொல்லப்பட்டது. 88.32 பில்லியன் செலவில் பயிற்சியளிக்கப்பட்ட மூன்று லட்சம் ஆப்கானிஸ்தான் வீரர்கள் நாட்டைப் பாதுகாப்பார்கள்.

"இந்த ஒப்பந்தம் நன்றாக முடிய வாய்ப்பு இருக்கிறது" என்றார் முன்னாள் அதிபர் டிரம்ப். அப்போதைய அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் "இது ஓர் அற்புதமான ஒப்பந்தம்" என்றார்.

இரு தரப்புகளும் தங்கள் வாக்குறுதிகளைப் பின்பற்றினவா?

டிரம்ப் தலைமையிலான அரசு இயங்கும்போதே அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கின. தாலிபனுக்கு ஆப்கானிஸ்தான் அரசுக்கும் செப்டம்பரில் பேச்சுவார்த்தை நடந்தது, ஆனால் முடிவுகள் எட்டப்படவில்லை. பின்னடைவுகள் இருந்தாலும் இந்த ஒப்பந்தம் பொய்க்காது என்றே தாலிபன் எதிர்ப்பாளர்கள் அழுத்தமாகக் கூறிவந்தனர்.

காபூல் விமான நிலையத்தில் அமெரிக்க சிப்பாய் ஒருவர் ஆப்கன் பயணியின் துப்பாக்கியை நீட்டுகிறார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"இது வியட்நாம் அல்ல, உடைந்துகொண்டிருக்கும் அரசாங்கமும் அல்ல" என்று பிபிசியிடம் பிப்ரவரி மாதம் தெரிவித்தார் ஆப்கானிஸ்தான் அதிபர்.

ஜூலையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டது தாலிபன். "போர்க்களத்தில் நாங்கள் ஆதிக்கம் செலுத்தினாலும் பேச்சுவார்த்தையிலும் கவனமாக ஈடுபடுவோம்" என்று அறிவித்தது. அந்த காலகட்டத்தில் ஒரு வாரத்துக்கு 10 மாகாணத் தலைநகரங்களை அவர்கள் கைப்பற்றினார்கள்.

"நல்ல முடிவாகவே தெரிகிறது"

இப்போதைய அதிபர் ஜோ பைடன் எல்லா விஷயங்களிலும் டிரம்ப்புடன் முரண்பட்டாலும் அவரது ஒப்பந்ததத்தைத் தொடர்ந்து செயல்படுத்தினார். "இன்னொரு தலைமுறை அமெரிக்கர்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வேறு ஒரு முடிவை எதிர்பார்த்துப் போரை நடத்த முடியாது. எல்லாரையும் தூக்கி வீசிவிட்டு தாலிபன்கள் அந்த நாட்டைக் கட்டுப்படுத்துவதெல்லாம் சாத்தியமில்லை" என்று அவர் தெரிவித்தார்.

சமீபகால நிகழ்வுகளுக்குப் பிறகும் தன் முடிவில் அவர் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.

"சென்ற வாரம் நடந்த நிகழ்வுகளைப் பார்க்கும்போது ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தனது ராணுவத் தலையீட்டை நிறுத்திக்கொண்டது நல்ல முடிவாகவே தெரிகிறது" என்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

உலகின் மிகவும் சக்திவாய்ந்த ஒரு ராணுவத்தோடு ஒப்பந்தம் போட்டு முடித்த பின்பு நட்சத்திர விடுதி ஒன்றில் அமர்ந்துகொண்டு தாலிபன் தலைவர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஸாய் சென்ற செப்டம்பரில் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். பலருக்கு அதுவே உண்மையானதாகத் தோன்றும்.

அவர் என்ன சொன்னார் தெரியுமா?

"நாங்கள் போரில் வென்றுவிட்டோம் என்பதில் சந்தேகமில்லை. சந்தேகமே இல்லை"

நன்றி பிபிசி தமிழ் 

No comments: