கவியரசு கண்ணதாசன், சிலம்புச்செல்வர் ம.பொ. சிவஞானம், எழுத்தாளர்கள் விந்தன், ஜெயகாந்தன் ஆகியோர் அச்சகங்களில் அச்சுக்கோப்பாளர் – ஒப்புநோக்காளர் முதலான பணிகளில் ஈடுபட்டவர்கள்.
முதலில் அவ்வாறு பணியாற்றியபின்னர்தான்
பின்னாளில் எழுத்து மற்றும் கலை, சினிமா, ஊடகத்துறையிலும்
பிரகாசித்தனர்.
அறிஞர் ம.பொ.சி, தமிழரசு கழகம் என்ற அரசியல் கட்சியையும்
உருவாக்கியவர். இந்திய மேலவை உறுப்பினராகவும் தெரிவானவர். இன்றும் சிலம்புச்செல்வர் என போற்றப்படுபவர்.
அறிஞர் ம.பொ. சி. க்கும்
கண்ணதாசனுக்கும் இந்திய அரசு நினைவு முத்திரைகளும் வெளியிட்டுள்ளன. ஒரு காலத்தில்
அச்சுக்கோப்பாளர்களாகவும் ஒப்பு நோக்காளர்களாகவும்
விளங்கிய இவர்கள் நால்வரும் பல நூல்களையும் எழுதியிருப்பவர்கள். தமிழகமும் இலங்கையும் நன்கறித்த எழுத்தாளர்கள்.
அத்துடன் சில இதழ்களுக்கும்
ஆசிரியர்களாக விளங்கினர்.
ஆனால், இந்தத் தகவல்களை அன்றிருந்த வீரகேசரி ஆசிரிய பீடத்தில் எத்தனைபேர்
அறிந்துவைத்திருந்தனர் என்பது எனக்குத் தெரியாது.
ஒப்புநோக்காளர் – அச்சுக்கோப்பாளர் பிரிவிலிருந்து எவரையேனும் ஆசிரியபீடத்திற்கு எடுத்தால் , தங்களுக்கு தீட்டுப்பட்டுவிடும் என்று நினைத்தவர்கள் சிலர் அப்போதிருந்தார்கள்.
அந்த பிற்போக்குத்தனமான சிந்தனையை உடைத்தவர் ஆ. சிவநேசச்செல்வன். காரணம் அவர் கலை, இலக்கியவாதிகளுடனும் , விமர்சகர்களுடனும் நெருக்கமான உறவைப்பேணியவர். அத்துடன் மைசூர் பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறை சார்ந்த பட்டப்படிப்பும் பெற்றவர்.
யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக
வளாகம் 1974 இல் பேராசிரியர் க. கைலாசபதி அவர்களின் தலைமையில் உருவானபோது அங்கு நூலகராகவும் பணியாற்றியவர். அங்கிருந்த பல இலக்கியவாதிகளின் நண்பர்.
வீரகேசரியில் ரஸஞானி
என்ற புனைபெயரில் எனது எழுத்துக்களைப்பார்த்திருக்கும் இவர், நான் அங்கு ஆசிரிய
பீடத்தில்தான் பணியாற்றுகிறேன் என நம்பிக்கொண்டிருந்தவர்.
நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கு 1976 ஆம் ஆண்டு யாழ்.
பல்கலைக்கழகத்தில் இரண்டு நாட்கள் நடந்தபோது நானும் ஒரு பார்வையாளனாக அங்கு சென்றிருந்தேன். நான் சென்றதற்கு வேறு நோக்கம் இருந்தது.
இலங்கை முற்போக்கு எழுத்தாளர்
சங்கத்திலும் அதன் துணை அமைப்பான எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகத்திலும் மாதம் 150 ரூபா வேதனத்துடன் நான் பணியிலிருந்த
அக்காலப்பகுதியில், எமது செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரன், கூட்டுறவுப்பதிப்பகத்தின்
வாசகர் வட்டத்திற்கு உறுப்பினர்களை சேர்த்துக்கொள்வதற்காக விண்ணப்ப படிவங்களையும் தந்து
என்னை அனுப்பிவைத்தார்.
நண்பர் பேராசிரியர் எம்.
ஏ. நுஃமான் அவர்களின் அறையில் தங்கியிருந்து ஆய்வரங்கு நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்தேன்.
அந்த ஆய்வரங்கு ஆரம்பமாகுவதற்கு முதல்நாள் யாழ்ப்பாணத்தில், 1976 இல் தேசிய சாகித்திய விருது பெற்ற செங்கை ஆழியானுக்கு யாழ். இலக்கிய வட்டம் நடத்திய பாராட்டு விழாவுக்கும் சென்றிருந்தேன். அந்த ஆண்டுதான் எனக்கும் எழுத்தாளர்கள் ஐ.
சாந்தன், ஆத்மஜோதி முத்தைய, த. சண்முகசுந்தரம் ஆகியோருக்கும் அந்த விருது வழங்கும் விழா கம்பகா மாவட்டத்தில் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் தேர்தல் தொகுதி அத்தனகல்லையில் அமைந்த பத்தலகெதர ஆசிரியப் பயிற்சிக்கல்லூரியில் நடந்தது.
அன்றைய இலங்கையின் முதல்
ஜனாதிபதி வில்லியம் கொப்பல்லாவ எமக்கு அந்த
விருதுகளை வழங்கினார். அப்போது கலாசாரத் திணைக்களத்தின் செயலாளராகவிருந்தவர் தமிழ்
அபிமானி கே. ஜி. அமரதாச. பின்னாளில் இவரும் எனது அருமை நண்பரானார்.
செங்கை ஆழியான், விருது வழங்கும் அன்றைய நிகழ்ச்சிக்கு ஏனோ வரவில்லை. இதர நால்வரும் விருது பெற்ற படங்கள் வீரகேசரி உட்பட
பல தென்னிலங்கை பத்திரிகைகளில் முதல் பக்கங்களில் வெளிவந்திருந்தது.
யாழ். இலக்கிய வட்டத்தின் முக்கிய அங்கத்தவர் செங்கை ஆழியான்.
எனவே அந்த பாராட்டு விழா அவருக்கானது.
நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கிற்கு
வருகை தந்திருந்த தமிழக எழுத்தாளர் அசோகமித்திரனை ஒரு காரில் அழைத்துக்கொண்டு வந்திறங்கியவர்கள்
ஆ. சிவநேசச்செல்வனும் விரிவுரையாளர் சோ. கிருஷ்ணராஜாவும்.
மல்லிகைஜீவா என்னை அவர்களுக்கு
அறிமுகப்படுத்தினார். அதற்கு முன்னர் அவர்கள்
எவரையும் நான் பார்த்திருக்கவில்லை.
செங்கை ஆழியானின் வாடைக்காற்று நாவலை ( வீரகேசரி பிரசுரம் ) படித்துவிட்டு, எனது வாசிப்பு அனுபவத்தை அவருக்கு கடிதத்தில் எழுதியிருந்தேன்.
அச்சமயம் அவர் செட்டிகுளத்தில் உதவி அரசாங்க அதிபராகவிருந்தார். செங்கை ஆழியான் எனது
கடிதத்திற்கு பதிலும் எழுதியிருந்தார்.
1975 இல் தேசிய சாகித்திய மண்டலத்தில் அங்கம் வகித்தவர்
பேராசிரியர் கைலாசபதி. அவர் எமது விருது பெற்ற நூல்களைப்படித்திருந்தார். அத்துடன் யாழ். பல்கலைக்கழக நூல் நிலையத்திலும்
அவை இடம்பெற்றிருக்கவேண்டும்.
யாழ். இலக்கிய வட்டத்தின்
அந்த விழா எழுத்தாளர் சொக்கன் தலைமையில் நடந்தது.
அதிலும் நான் பார்வையாளன்தான். அங்கு
பல இலக்கியவாதிகளை சந்திக்கமுடிந்தது.
மல்லிகையால் அறிமுகமாகி,
முதல் தொகுதிக்கு தேசிய சாகித்திய விருதும் பெற்றிருந்த நீர்கொழும்பு வாசியான என்னை,
யாழ். மாவட்ட எழுத்தாளர்கள் அனைவரும் தங்கள்
உற்ற நண்பனாக வரவேற்று உரையாடினர்.
சிவநேசச்செல்வன், நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கு நிகழ்ச்சிகளின் இடையே என்னுடன் பேசினார். அத்துடன் நான் வெளியூரிலிருந்து
வந்திருந்தமையால் மதிய விருந்துகளுக்கும் அழைத்தார். யாழ். பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் ஒரு அழகிய இல்லத்தில் எழுத்தாளர்கள் அனைவருக்கும் மதிய விருந்து வழங்கப்பட்டது.
ஒரு நாள் இரவு எழுத்தாளர்
கே. டானியல் நல்லூரில் கோவில் வீதியில் அமைந்த தமது இல்லத்தில், எழுத்தாளர்கள் அனைவருக்கும்
இராப்போசன விருந்து வழங்கினார்.
சிவநேசச்செல்வன் இதிலும்
கலந்துகொண்டார்.
நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கின்
இரண்டாம் நாளன்று எமக்கு ஒரு அதிர்ச்சியான
செய்தி வந்தது. பருத்தித்துறையில் வீ. எம். வீதியில் அப்போது வசித்துவந்த இலக்கிய விமர்சகர் எம். ஶ்ரீபதியின்
தங்கை நஞ்சருந்தி தற்கொலைசெய்துகொண்டார் என்பதுதான்
அச்செய்தி.
முதல் நாள் ஆய்வரங்கில்
ஶ்ரீபதி எனக்கு அருகில்தான் அமர்ந்திருந்தார்.
அவரை, அவர் கொழும்பில் வெள்ளவத்தை மேரீஸ் வீதியில் இருந்த காலம் முதல் நன்கு
அறிவேன். எனது ஆரம்ப காலக்கதைகளை படித்துவிட்டு
தினகரன் வார மஞ்சரியில் எழுத்துலக இளம் பங்காளி என்ற தலைப்பில் ஒரு விமர்சனக்கட்டுரையும்
எழுதியிருக்கிறார்.
எனது முதல் நூலுக்கு
சாகித்திய விருது கிடைக்கும் முன்னர் 1974 இல் அந்த ஆக்கம் வெளிவந்திருந்தது.
எங்கள் ஊரில் நடந்த பாரதி விழாவுக்கும் அவரை அழைத்து பேச வைத்துள்ளேன். எனது நல்ல நண்பரின் தங்கை தற்கொலைசெய்துகொண்ட செய்தி என்னை மட்டுமல்ல,
கைலாசபதி உட்பட பல்கலைக்கழக வட்டாரத்தைச்சேர்ந்த அனைத்து எழுத்தாளர்களையும் உலுக்கிவிட்டது.
ஆய்வரங்கு முடிந்ததும்
நண்பர் நுஃமான் திருநெல்வேலி சந்தியில் ஒரு வாடகைக்காரை ஏற்பாடு செய்தார். அதில் நுஃமான்,
சண்முகதாஸ், நித்தியானந்தன், துரை மனோகரன், நிர்மலா, மௌனகுரு, ஆகியோருடன் நானும் இணைந்துகொண்டேன்.
எம்மை வழியனுப்பிவைத்தவர்
சிவநேசச்செல்வன். அவரும் வந்திருக்கலாம். ஆனால், காரில் இடமில்லை. வெளியூரிலிருந்து வந்திருக்கும் எனக்கு அவர் முன்னுரிமை
கொடுத்துவிட்டு நின்றுவிட்டார்.
இந்தளவில்தான் என்னை
அவருக்குத் தெரியும். அவர் ஆறுமுகம் என்ற ஆசிரியரின்
மகன் என்பதும், அம்பனை கலை இலக்கிய மன்றத்தின் முக்கிய உறுப்பினர் என்பதும் யாழ். தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் முன்னாள்
மாணவர் என்பதும், ஊடகத்துறையில் பயின்றவர்
என்பதும் அப்போது அவர் பற்றி எனக்குத் தெரியாத
தகவல்கள்.
ஆனால், அவர் ஒரு பதிப்பாசிரியர் என்பதை அறிந்திருந்தேன்.
கைலாசபதி எழுதிய பாரதி நூல்களும் பாட பேத ஆராய்ச்சியும் என்ற நூலின் பதிப்பாசிரியர்தான்
ஆ. சிவநேசச்செல்வன்.
இந்தப்பின்னணிகளுடன்தான் அவர் வீரகேசரிக்கு ஆசிரியராக வரப்போகிறார் என்ற
செய்தி கசிந்தபோது, “ அவரைத்
தெரியுமா..? “ என்று அங்கிருந்த சிலர் என்னைக்கேட்டபோது, தலையை
மாத்திரம் ஆட்டினேன்.
வீரகேசரி ஒப்புநோக்காளர்
பிரிவில் எனக்கு ஞாயிற்றுக்கிழமை அரைநாள் விடுமுறை. திங்கள் முழுநாள் விடுமுறை. ஞாயிறு மதியம் கடமை முடிந்து ஊருக்குச்சென்றால்,
மீண்டும் செவ்வாய்க்கிழமை காலைதான் கடமைக்குத் திரும்புவேன்.
வீரகேசரி நாளிதழ். அதனால்
அங்கு பல பிரிவுகளிலும் பணியாற்றியவர்களுக்கென நேர அட்டவணை தரப்பட்டிருந்தது.
சிவநேசச்செல்வன் ஒரு
திங்கட்கிழமை நாளில் கடமையை பொறுப்பேற்க வந்துள்ளார். வந்ததும் என்னைத் தேடியிருக்கிறார். அலுவலக சிற்றூழியரை அழைத்து எனது பெயரைச்சொல்லி
விசாரித்திருக்கிறார்.
அந்தச்சிற்றூழியரிடம்
அவர் பேசிய முதல் வார்த்தையே அந்த விசாரிப்புத்தான். சிற்றூழியர் ஒப்புநோக்காளர் பிரிவுக்கு வந்து, “ புதிய எடிட்டர் முருகபூபதியை அழைக்கிறார் “ எனச்சொன்னதும், அந்தப்பிரிவிற்கு பொறுப்பாகவிருந்த “அன்பர்
“ என்ற செல்லப்பெயரில் அழைக்கப்படும்
பொன்னுத்துரை என்பவர் உட்பட மற்றவர்கள் சற்று யோசித்திருக்கிறார்கள்.
புதிய எடிட்டருக்கும்
பூபதிக்கும் என்ன தொடர்பு…? என்ன உறவு…?
“ முருகபூபதி நாளை செவ்வாய்க்கிழமைதான்
மீண்டும் கடமைக்கு வருவார். வந்தவுடன் புதிய எடிட்டர் தேடியதாக நானே சொல்கிறேன் “ எனச்சொல்லி தேடிவந்த சிற்றூழியரை “ அன்பர்
“ பொன்னுத்துரை திருப்பி அனுப்பிவிட்டார்.
இந்தத் தகவல் பிரதம ஆசிரியருக்குரிய பிரத்தியேக அறையில்
வந்தமர்ந்த சிவநேசச்செல்வனுக்கு சென்றது. அந்த
ஆசனத்தில் முன்னர் அமர்ந்து கோலோச்சிய ஆசிரியர்களை அவர் நினைத்துக்கொண்டு தனது கடமைகளை
பொறுப்பேற்றிருப்பார்.
ஆனால், தனக்கு நன்கு
தெரிந்த எவரையுமே அங்கு காணமுடியவில்லையே என்பது அவருக்கு அப்போது சற்று யோசனையை தந்திருக்கவேண்டும்.
அதுவரையில் பிரதம செய்தி
ஆசிரியராகவிருந்த டேவிட் ராஜூ பக்கத்து அறைக்கு இணை ஆசிரியர் பதவி உயர்வுடன் மாற்றப்பட்டார்.
அவரது பிரதம செய்தி ஆசிரியர்
ஆசனத்திற்கு, அதுவரையில் துணை செய்தி ஆசிரியராகவிருந்த நடராஜா வந்து அமர்ந்தார்.
நல்லவேளை, முன்னாள்
துணை செய்தி ஆசிரியர் எஸ். எம். கார்மேகம் அவர்களும் ஏற்கனவே விலகிச்சென்றுவிட்டார். அவருக்கும் எமது நண்பர் எஸ். திருச்செல்வம் தமது
கொழும்பு கலை, இலக்கிய பத்திரிகை நண்பர்கள் அமைப்பினால், சாந்தி விகார் ஹோட்டலில்
பிரிவுபசார விழாவை தினகரன்
ஆசிரியர் இ. சிவகுருநாதன் தலைமையில் நடத்தினார். அதில் எமது வீரகேசரி பிரதம ஆசிரியர்
க. சிவப்பிரகாசமும் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சிக்கும் சென்றிருந்தேன்.
இதில் நல்லவேளை என்று
நான் குறிப்பிட்டதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. கார்மேகம் இருந்திருந்தால், சிவநேசச்செல்வன்
பிரதம ஆசிரியர் பொறுப்பேற்று வந்தசமயம் செய்தி
ஆசிரியர் பதவியை யாருக்குத்தருவது…? என்று
நிருவாகம் தலையை பிய்த்துக்கொண்டிருந்திருக்கும்.
இன்றும் அரசியல் கட்சிகளில் எப்போது
தலைமைப்பீடத்தின் திண்ணை காலியாகும் என்று காத்திருப்பவர்களை காண்கின்றோம்.
டேவிட் ராஜூ அவர்கள் ஊடகத்துறையில் நல்ல அனுபவம் மிக்கவர். தொடக்கத்தில்
வீரகேசரியின் கண்டி நிருபராக பணியாற்றியவர். பின்னர் ஆசிரிய பீடத்திற்கு வந்து
படிப்படியாக செய்தி ஆசிரியராக உயர்ந்தவர்.
பெரும்பாலும் வீரகேசரி – மித்திரனுக்கு
அவர்தான் ஆசிரியத் தலையங்கமும் எழுதி வந்தவர்.
சிவப்பிரகாசம் அபூர்வமாக எப்போதாவதுதான் அந்தப்பத்தியை
எழுதுவார். அதற்கும் அதிகம் நேரம் எடுத்துக்கொள்பவர். இருவரதும்
ஆசிரியத்தலையங்கங்களை அச்சில் பல முறை ஒப்பு நோக்கியிருக்கின்றேன்.
டேவிட் ராஜூ வீரகேசரியின் இரண்டாம் பக்கத்தின் வலது பக்க
மேல் மூலையில் தொடர்ச்சியாக உள்ளதை சொல்லுகிறேன் என்ற சிறிய பத்தியையும் தொடர்ந்து
எழுதிவந்தவர்.
1983 கலவரத்தையடுத்து பிரதம ஆசிரியர் க. சிவப்பிரகாசம்
விடைபெறும்போது, படிப்படியாக பலரும் நாட்டின் துர்ப்பாக்கிய நிலை
கருதி வெளியேறக்கூடும் என்ற அச்சத்தில் குறிப்பிட்ட பிரிவுபசார நிகழ்வில் விளம்பரப்பிரிவில்
பணியாற்றிய சிவஞானரஞ்சன் என்ற ஊழியர், வீரகேசரியின் எதிர்காலம் குறித்து தனது கவலையை வெளியிட்டார்.
அந்நிகழ்வுக்கு தலைமை தாங்கிக்கொண்டிருந்த
டேவிட் ராஜூ, உடனே அங்கிருந்த நிருவாக இயக்குநர்
வென்ஸஸ் லாஸ் அவர்களின் மனதை குளிர்விக்கும்வகையில், “ வீரகேசரி என்ற கப்பல்
சூறாவளியினால் தத்தளித்தாலும் எம்மிடமிருக்கும் மாலுமி அதனை சாதுரியமாக செலுத்துவார்.”
என்று நம்பிக்கை தெரிவித்தார்.
சிவநேசச்செல்வனை அவர் பதவி ஏற்று ஒரு நாள்
கழித்து மறுநாள் செவ்வாய்க்கிழமை காலையில் சந்தித்தேன்.
“
என்ன ஐ சே…. எங்கே போனீர்..? நேற்று வந்தேன். உம்மைக்காணவில்லை “ என்று அவர் உரிமையுடன் பேசியது அந்த கண்ணாடி அறைக்கு
வெளியே கேட்க வழியில்லை.
“
நேற்று எனக்கு விடுமுறை நாள். வருகை தந்திருக்கும் உங்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள். “ என்றேன்.
“
உமக்கு ஆசிரிய பீடத்திற்கு வரவிருப்பமில்லையா..?
“
உடனே அவர் மேசையிலிருந்த இன்டர்கொம் இணைப்பில்
பொது முகாமையாளரை தொடர்புகொண்டார். இந்தக்காட்சிகளை
அந்தக்கண்ணாடி அறைக்கு வெளியிலிருந்து சில சோடிக்கண்கள் பார்த்துக்கொண்டிருந்தன.
“
மதிய வேளையில் பொது முகாமையாளருடன் நேரில் பேசுவேன். இப்போது நீர் போகலாம் ஐசே. “ என்றார்.
சிவநேசச்செல்வனுக்கு இலக்கிய வட்டாரத்தில்
ஆசிச்செல்வன் என்றும் பெயர் இருக்கிறது. பின்னாளில் வீரகேசரியில் அவர் மாதொரு பாகன்
என்ற புனைபெயரில் நிறைய அரசியல் பத்தி எழுத்துக்களை எழுதினார்.
டேவிட் ராஜூ விலகிச்சென்று சில நாட்களில் சிவநேசச்செல்வனிடமிருந்து மீண்டும் எனக்கு அழைப்பு
வந்தது. இடைப்பட்ட நேரங்களில் அவர் என்னை அழைத்து இலக்கியப்புதினங்கள் கேட்பார். என்வசம்
இருக்கும் நூல்களை படிப்பதற்காக வாங்கிச்செல்வார்.
ஒரு நாள் அழைத்து மீண்டும் ஒரு விண்ணப்பம்
எழுதித்தரச்சொன்னார். கொடுத்தேன்.
இரண்டு நாட்களில் நான் துணை ஆசிரியர் பதவியை
ஏற்றேன்.
அந்தப்பதவியினால் கிட்டிய அனுபவங்கள் ஏராளம். கிடைத்த ஊடகத்துறை நண்பர்கள் ஏராளம்.
சிவநேசச்செல்வன் எனக்கு ஒரு கறுப்பு நிற டயறியை
தந்து, நான் தினமும் தொடர்புகொள்ளவேண்டிய முக்கிய
நபர்களின் தொலைபேசி இலக்கங்களை பதிவுசெய்து வைத்திருக்கச்சொன்னார். அந்த டயறி இன்னமும் என்வசம் பல கதைகளை சொல்லியவாறு
என்னோடு வாழ்கிறது.
அந்த டயறி பற்றிய எனது விரிவான ஆக்கம் எனது
சொல்லத்தவறிய கதைகள் நூலிலும் இடம்பெற்றுள்ளது.
என்னை இலக்கிய உலகத்திற்கு அறிமுகப்படுத்திய
மல்லிகை ஜீவாவையும் பத்திரிகை துணை ஆசிரியராக்கிய ஆ. சிவநேசச்செல்வனையும் எனது எழுத்துலக
வாழ்வில் எப்படி மறக்கமுடியும்.
எனக்காக எனது 70 வயது
பிறந்த தினத்தை முன்னிட்டு நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த நம்மவர் பேசுகிறார்
நிகழ்ச்சியிலும் இவர்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தேன்.
பின்னாளில் ஒப்புநோக்காளர் பிரிவிலிருந்து ஆசிரிய பீடத்திற்கு
வந்த நண்பர் வீரகத்தி தனபாலசிங்கம், தினக்குரல்
பத்திரிகையின் செய்தி ஆசிரியராகவும் அதனையடுத்து பிரதம ஆசிரியராகவும் பின்னர் மீண்டும் வீரகேசரியின் சிரேஷ்ட ஆசிரியராகவும்
உயர்ந்தார்.
ஒப்புநோக்காளர் பிரிவிலிருந்து வந்த பிரணதார்த்திகரன்,
பின்னாளில் தினக்குரல் செய்தி ஆசிரியராகவும் பின்னர் அதன் பிரதம ஆசிரியராகவும் உயர்ந்தார்.
அதே
பிரிவில் முன்னர் எம்முடன் பணியாற்றிய அற்புதானந்தன் பின்னாளில் யாழ். தினக்குரல் பிரதம
ஆசிரியராக உயர்ந்தார்.
மற்றும் ஒரு நண்பர் சிவராஜா, தற்போது வீரகேசரி
ஆசிரிய பீடத்தில் துணை ஆசிரியராக பணியாற்றுகிறார்.
வீரகேசரியில் முன்னர் அச்சுக்கோப்பாளராக பணியாற்றிய
நண்பர் நெவில் அந்தனி, தற்போது வீரகேசரியில் விளையாட்டுத்துறை தொடர்பான செய்திகளை எழுதும்
துணை ஆசிரியராக உயர்ந்தார். சில வெளிநாடுகளில் நடந்த விளையாட்டுத்துறை நிகழ்ச்சிகளுக்கும்
சென்று செய்திகளை எழுதினார்.
இவ்வாறு முன்னர் அச்சுக்கோப்பாளர்களாகவும்
ஒப்புநோக்காளர்களாகவும் பணியாற்றிய சிலர் பின்னாளில் ஆசிரிய பீடங்களை அலங்கரித்தார்கள்.
அன்று இந்தப்பிரிவுகளிலிருந்து வருபவர்களை
தீட்டுக்கண்ணுடன் பார்த்தவர்கள் இறுதியில் முகவரி
தெரியாமல் மறைந்து போனார்கள்.
உள்ளார்ந்த ஆற்றல் மிக்க எவரும் எங்கிருந்தாலும்
தமது ஆற்றல்களை வெளிப்படுத்திக்கொண்டே இருப்பார்கள்.
“
ஆற்றல்களை இனம்கண்டு ஊக்குவித்து, வளர்த்துவிடுங்கள்.” என்பதுதான் எனது இந்த அங்கத்தின் ஊடாக நான் தெரிவிக்கும் செய்தி.
----0----
letchumananm@gmail.com
No comments:
Post a Comment