“டொக்ரர்…. எதுக்கெடுத்தாலும் பயமா இருக்கு! ஏதாவது மருந்து தாருங்கள்…” பதட்டத்துடன் கேட்டார் சிவம்.
“மொட்டையாகச் சொன்னால் எப்பிடி? கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்” என்றார் சிரித்தபடியே குடும்ப வைத்தியர்.
“ஒரே ரென்சனா இருக்கு… தலை வீங்கி வெடிக்கிறமாதிரிக் கிடக்கு. ஹாட்டுக்குள்ள இரத்தம் இல்லாதமாதிரி வெறுமையாய்க் கிடக்கு… இரவில நித்திரை கொள்ள முடியயேல்லை”
“எவ்வளவு காலமாக இது இருக்கு மிஸ்டர் சிவம்?”
“இரண்டு மாதங்களாக இருக்கு டொக்ரர்…”
“ஏதாவது குறிப்பிடத்தக்க சம்பவங்கள் நடந்திருக்கா? ஐ மீன்… ஏதாவது துக்ககரமாக அல்லது அதீத சந்தோஷமாக?”
அதுவரையிலும் ஒன்றுமே பேசாமல், சிவத்திற்கு அருகில் இருந்த அவரது மனைவி தேவா வைத்தியரைப் பார்த்தார். பின்னர் சிவத்தைப் பார்த்தார். `இந்த மனிசன் ஏதாவது உளறிக் குழறி விடப்போகுது’ என்ற பயத்தில் சிவத்தின் கால்களை நசுக்கினார், கரப்பான்பூச்சி நசுக்குவது போல்.
“இவருக்கு ஒன்றுமே இல்லை டொக்ரர். தான் செத்துப்போவன் எண்டு பயப்படுகின்றார்”
“அவருக்கு அப்பிடி ஒன்றும் வயசாகல்ல… இப்பதானே அறுபத்தைஞ்சு முடிஞ்சிருக்கு. சரி மிஸ்டர் சிவம்… வேறை என்ன செய்யுது?”
“முந்தி எண்டா நல்ல வேகமா கார் ஓடுவன். நூற்றிப்பத்தில கூட ஓடியிருக்கிறன். இப்ப கார் ஓடவே பயமா இருக்கு! இன்னொருத்தற்ரை காருக்குள்ளை இருந்து போகவே பயமாக் கிடக்கு டொக்ரர்…”
“நீங்கள் கார் ஓடுவியளா?” தேவாவைப் பார்த்துக் கேட்டார் வைத்தியர். அவர் இடமும் வலமுமாக, கோயில் யானை தலையாட்டம் காதை மாறி மாறி ஆட்டினார்.
“அதுதானே பாத்தன்… நீங்கள் அடிக்கடி அங்கை போவம், இஞ்சை போவம் எண்டு அவருக்கு தொந்தரவு செய்திருப்பியள். அதுதான் மனிசன் இப்படிச் சொல்லுறார்….”
“அப்படியொண்டுமில்லை. உந்த மனிசனுக்கு கீலாவாயு…”
“நீங்கள் வருஷத்திலை இரண்டு மூண்டு தரம் சிறீலங்கா போய் வாறனியள். வேறை நாடுகளுக்கும் சுற்றுலா போய் வந்திருக்கிறியள். அப்ப எப்பிடிப் பிளேனிலை போய் வாறனியள்?”
வைத்தியரின் குண்டக்க மண்டக்கக் கேள்வியினால் இருவரும் மலைத்துப் போனார்கள்.
“நல்லாக் கேட்டியள் டொக்ரர்… உவருக்கு தனக்கும் ஏதேனும் ஒண்டு எண்டு நாலுபேருக்குச் சொல்லவேணும். பாத்து ஏதாவது மருந்து குடுத்துவிடுங்கோ… தொந்தரவைத் தாங்க முடியேலாமல் கிடக்கு… நித்திரை கொள்ள விடுகிறார் இல்லை”
வைத்தியர் சில மருந்துகளையும், வைட்டமின் மாத்திரைகளையும் கிறுக்கினார். எல்லாவற்றையும் பார்மஷியில் வாங்கிக் கொண்டு வீடு வந்தார்கள் சிவம் தம்பதியினர்.
இரவு உறக்கத்திற்குப் போகும்போது, சிவத்தின் காதுகளுக்குள் உதடுகளைச் செருகினார் தேவா.
“நல்ல காலம்.... உளறிக் கொட்டிப்போடுவியள் எனப் பயந்து போனன். அவனவனுக்கு கோடி கோடியெண்டு லொட்டோ விழுகுது. நாலு லட்சத்து எண்பதினாயிரம் விழுந்ததுக்கு இப்படி நாண்டுகொண்டு சாகிறியளே!”
“உனக்கென்ன தெரியும்... நான் படுகிற பாட்டை. ஏதாவது சறிற்றி மோப்பம் பிடிச்சுதெண்டா வீட்டு வாசலிலை வந்து நிக்கும். சொந்தபந்தங்களுக்குத் தெரிஞ்சா, பிறகு வறுக நிப்பினம்.”
“அதுக்கொரு வழி நான் சொல்லுறன். சொந்தங்களிட்டைப் போய், வாழ்க்கை நடத்த கஸ்டமாக்கிடக்கு எண்டு சிணுங்கி, அதுகளிட்டைக் கிடக்கிறதை வறுகிப் போட்டிங்களெண்டா, பிறகு அதுகள் வாயே திறக்காதுகள்!”
“உனக்கென்ன சொல்லிப்போட்டாய். எனக்கு ஆரேன் கொலை செய்து போடுவான்களோ எண்டு பயமாக்கிடக்கு....”
“ஒரு பத்து வருஷம் வாயை மூடிக்கொண்டு கிடவுங்கோ... அதுக்கிடையிலை ஒரு அசுகையும் காட்டேல்லையென்றால், எல்லாம் சக்சஸ்.” சிவத்திற்கு அன்பால் ஒரு இடி விட்டார் தேவா.
“அதுக்குப் பிறகு?” ஆவலுடன் சிவம் கேட்டார்.
“ஆர்
இருக்கிறமோ ஆர் கண்டது? ஆண்டவன் விட்டவழி!”
No comments:
Post a Comment