மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா
நேற்று
யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்றதும் தீதும்நன்றும் பிறர்தர வாரா
என்றதும் செம்புனல் பெயர்நீர் போல்
அன்புடை நெஞ்சம் கலந்தது என்றதும்
உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோர்
என்றதும் அரசியல் பிழைத்தோர்க்கு அறம்
கூற்றாகும் எனறதும் கற்கை நன்றே
கற்கை நன்றே என்றதும் இட்டார்
பெரியோர் இடாதார் சிறியர் என்றதும்
வள்ளுவப் பெரியோன் இளங்கோ துறவி
நாலடிஈந்த நற்கருத்தாளர் பக்தியை காட்டிய
பாங்குடை அடியார் இப்படி இப்படி
எத்தனை எத்தனை நேற்று நேற்று
நேற்று என்றதும் நெஞ்சம் நிறைகிறது
பழமரத் தோட்டம் குலையொடு முந்திரி
அளவிலா உறவுகள் ஆயிரம் கனவுகள்
நிலவிலே கூடினோம் நிம்மதி நம்மடி
பகலிலும் இரவிலும் பயமது இல்லையே
பார்ப்பவர் பார்வையில் பக்குவம் தெரிந்தது
பரிவுடன் அறவுரை பகர்பவர் மிகுந்தனர்
கற்றிடும் இடமெலாம் கண்ணியம் கண்டிட்டோம்
கற்பதும் நிற்பதும் வாழ்விலே செறிந்தது
சுற்றியே வேலியாய் சுற்றமும் நின்றது
நிற்பதும் நடப்பதும் வெளிச்சமாய் தெரிந்தது
வெற்றிகள் தோல்விகள் வென்றவர் தோற்றவர்
பார்த்திடும் நோக்கிலே பக்குவம் அணைத்தது
கூடினோம் ஓடினோம் குறைகளை ஒதுக்கினோம்
ஆடினோம் பாடினோம் அகத்தினைத் திருத்தினோம்
நினைக்கிறோம் நேற்றினை நுழைகிறோம் இன்றைக்கு
இன்று
இன்று என்றதும் எம்மெதிர் பலகாட்சி
அறுவடை முடிந்தது பெரும்பயன் அடைந்தநாம்
புதுவிதை நடுகையை தொடங்கிறோம் இன்றுமே
சவால்களும் சண்டையும் தாராளம் தாராளம்
புதுமையும் பழமையும் மோதிடும் காட்சிகள்
பண்பாடு பலவித ஆலையில் சிக்கியே
பிழிந்திடும் நிலைமையும் பெருகியே வருகுது
விஞ்ஞானம் ஓங்கிட மெஞ்ஞானம் தடுமாற
மேதினி புதுமைக்கு சாமரை வீச
இளசுகள் எழுந்திட பழசுகள் தளர்ந்திட
காந்தியம் சத்தியம் காத்திட வந்தது
பற்பல அமைப்புகள் பக்குவம் சொன்னது
பாரதி வந்தனன் தாசனும் வந்தனன்
போதனை புதுமையாய் புறப்பட்டு வந்தது
வள்ளலார் வந்திட்டார் வாரியார் வந்திட்டார்
உள்ளத்தில் நல்லதை ஊன்றியே நின்றிட்டார்
ஈரோடு வந்தது போராடி நின்றது
ஊரெலாம் புரட்சியாய் ஓங்கியே ஒலித்தது
தெள்ளிய உள்ளமே சிறந்தது என்றனர்
மக்களின் சேவையே மாண்பென உரைத்தனர்
தத்துவம் சமுயமும் தன்னிலை தெளிந்தது
மூலரின் தவமொழி செறிவுடன் பரந்தது
முக்கியம் பக்குவம் வெளிச்சமாய் விரிந்தது
மூடத்தை மூட்டையாய் கட்டினார் பலருமே
பகுத்தறி பகலவன் பட்டொளி பரப்பினான்
ஆராயும் அறிவு அகலமாய் விரிந்தது
அணுவையும் அறிந்தார் அருளையும் தெளிந்தார்
வித்துவம் சிறந்தது வித்தைகள் குவிந்தது
மண்ணுல கெங்கணும் மனிதமும் மிளிர்ந்தது
ஆசையும் கூடவே அகலமாய் ஆனது
ஆணவம் எழுந்துமே ஆடிட முனைந்தது
அரசியல் பிழைத்தது அராஜகம் அமர்ந்தது
சினிமா வந்தது போதையும் புகுந்தது
பண்பாடு பயந்து பதுங்கியே நின்றது
கவர்ச்சியால் பலரும் கட்டுண்டு போயினர்
பணமது தலைமை ஏற்றிட வந்தது
பண்பாடு பாவம் ஒதுங்கியே போனது
சன்மார்க்கம் கூட ஒரமாய் நின்றது
அறிவுரை பகர்ந்தோர் ஆன்மீகம் உரைத்தோர்
அமைதியாய் அவரவர் அகமதில் உறைந்தார்
ஆனந்தம் அமைதி அலையுது அலையுது
அகமதில் அலையும் எழுந்துமே மோதுது
திசை தெரியாமல் திணறுது மனமெலாம்
காண்பதும் உண்மையா கேட்டது உண்மையா
உற்றது உண்மையா கற்றது உண்மையா
நிதர்சனம் தானே நிச்சயம் என்பது
சென்றது மனதை தேடியே பார்க்குது
நடைமுறை அதனை ஒதுக்கியே நிற்குது
இருந்ததை எண்ணி இருப்பது முறையா
இருந்ததை திரும்ப நினைப்பது முறையா
இருப்பினை எண்ணி இருந்திடல் முறையா
பழையன கழிதல் புதியன புகுதல்
காலத்தின் போக்கென கருதிடல் முறையா ?
நாளை
திட்டம் இடாதவன் திருந்திட மாட்டான்
நட்டம் வந்து நயத்தினை இழப்பான்
சென்றது நினைப்பது சிறப்பினை அளிக்கா
நாளை என்பதே விடியலின் எழுச்சி
உண்டதை சமித்ததை நினைத்திடல் முறையா
உண்பதை எண்ணிடல் உறுதியை காட்டும்
கண்டதும் காண்பதும் இன்பமா சொல்வீர்
காணுவோம் காட்சிகள் என்பதே இன்பம்
வருவதைப் பார்ப்பது நல் விருந்தாகும்
பண்பாடு புதியாய் தெரிகுது பாரு
என்றிடும் நினைப்பு எழுச்சியை நல்கும்
இறந்ததை நிபைப்பவர் எழுந்துமே நில்லார்
பழையதை கிழித்து புதியதை எழுதுவோம்
காய்ந்த மலர்களை கணக்கினில் எடுத்தால்
மலரும் மலர்களின் வாசம் தெரியுமா
சென்றன எல்லாம் சென்றன ஆகட்டும்
புதியாய் பிறப்போம் புதிதாய் சமைப்போம்
புதியாய் உழைப்போம் புதிதாய் நினைப்போம்
மண்ணிலே இருந்து விண்ணிலே வசிப்போம்
தத்துவம் பேசிடல் எத்தனை நாள்தாம்
வாழுதல் என்பது ஒருமுறை அன்றோ
வாழுவோம் என்பது நாளையின் விடியல்
நாளை என்பது நம்பிக்கைத் தாரகை
நம்பிக்கை என்பது பண்பாட்டின் மகத்துவம்
கடந்ததை நினைப்பதும் கருத்தினில் கொள்வதும்
உணர்வினை அளிக்கா உற்சாகம் அளிக்கா
வருவதை நினைப்பது மகிழ்வினை அளிக்கும்
வாழ்வினில் வசந்தம் குவிவதை உணர்த்தும்
கவலைகள் பறக்க களிப்பது பெருக
நாளை என்பதே நல்கிடும் இன்பம்
மனத்தைத் திடமாய் வைத்திடல் பண்பாடு
மனத்தை மகிழ்வாய் வைத்திடல் பண்பாடு
மனத்தில் உறுதியை வைத்திடல் நற்பண்பாடு
அனைத்தையும் நாளை அளித்திடல் உறுதி
என்னும் நினைப்பே எழுச்சியைக் கொடுக்கும்
எனவே நாளைநமதே அந்தநாளும் நமதே !
No comments:
Post a Comment