திரைக்கலைஞர் சித்ரா மாரடைப்பால் காலமானார்

நடிகை, நல்லெண்ணெய் சித்ரா

தமிழ், மலையாளத் திரையுலகில் 80களின் பிற்பகுதியிலும் 90களிலும் பிரபலமாக விளங்கிய சித்ரா மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 56. தமிழ்த் திரைப்பட

உலகில் 1980களின் பிற்பகுதியிலும் 90களிலும் பிரபல நடிகையாக விளங்கியவர் சித்ரா. அவள் அப்படித்தான் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். சின்னப்பூவே மெல்லப்பேசு, மனதில் உறுதி வேண்டும், ஊர்க்காவலன், என் தங்கச்சி படிச்சவ திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரபலாக அறியப்பட்டவர் சித்ரா.

1991ல் வெளியான சேரன் பாண்டியன் திரைப்படமும் அதற்கு அடுத்த ஆண்டே வெளியான பொண்டாட்டி ராஜ்ஜியம் திரைப்படமும் அவருக்கு பெரும் புகழைத் தேடித்தந்தன. 1996வரை தொடர்ந்து தமிழில் நடித்த சித்ரா, அதற்குப் பிறகு 2001ல் கோபாலா கோபாலா படத்தின் மூலம் மீண்டும் திரையில் தோன்றினார்.

சித்ரா நடித்த நல்லெண்ணெய் விளம்பரம் ஒன்று மிகப் பிரபலமானதால், இவர் நல்லெண்ணெய் சித்ரா என்றே அழைக்கப்பட்டார். தமிழைப் போலவே மலையாளத் திரைப்படங்களிலும் 1970களின் மத்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 2000ங்களின் துவக்கம்வரை 100க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்திருந்தார்.

கேரளாவின் கொச்சியை சொந்த ஊராகக் கொண்டிருந்த சித்ரா, விஜயராகவன் என்பவரைத் திருமணம் செய்திருந்தார். இந்தத் தம்பதிக்கு மகாலக்ஷ்மி என்ற மகள் இருக்கிறார். சென்னை சாலிகிராமத்தில் வசித்துவந்த சித்ராவுக்கு வெள்ளிக்கிழமை இரவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.   நன்றி பிபிசி தமிழ் 

No comments: