உலகச் செய்திகள்

தலிபான் தலைவர்கள் நாடு திரும்பினர்: புதிய அரசு அமைக்கும் பணிகள் தீவிரம்

ஆப்கான் ஜனாதிபதி அஷ்ரப் கனி ஐ.அ. இராச்சியத்தில் அடைக்கலம்

எதிரிகளை பிடிக்க தலிபான் வீடு வீடாக தேடுதல் வேட்டை

கடலுக்குள் எரிமலை வெடிப்பு: ஜப்பானில் புதிய தீவு தோற்றம்

ஹெய்டி நிலநடுக்கம்: உயிரிழப்பு எண்ணிக்கை 2000ஐ நெருங்கியது


தலிபான் தலைவர்கள் நாடு திரும்பினர்: புதிய அரசு அமைக்கும் பணிகள் தீவிரம்

இதுவரை கட்டாரில் தங்கியிருந்த தலிபான்களின் முக்கியத் தலைவர்கள் பலரும் ஆப்கானிஸ்தானுக்கு திரும்பியுள்ளனர். அவர்கள் புதிய அரசை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கந்தஹார் விமான நிலையத்தில் வந்திறங்கிய தலிபான்களின் நிறுவனர்களில் ஒருவரான முல்லா அப்துல் கானி பராதருக்கு அங்கு கூடியிருந்தவர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்த வீடியோ வெளியாகியுள்ளது.

தலிபான்களின் புனித நகரமாகக் கருதப்படும் கந்தஹார் அவர்களது முக்கிய இராணுவத் தளமாகவும் உள்ளது.

பொது வெளியில் தோன்றும் தலிபான்களின் பெரும்புள்ளிகளில் ஒருவராக உள்ள அப்துல் கானி பராதர், புதிய ஜனாதிபதியாக வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஹைபதுல்லா அகுன்சதா தலிபான்களின் தலைவராக இருந்தபோதும் அந்தக் குழுவின் முகமாக பார்க்கப்படும் அப்துல் கானி பராதர் ஆப்கான் திரும்பி இருப்பது புதிய அரசைஉருவாக்குதற்கான ஏற்பாடுகள் தயாராகி வருவதை காட்டுவதாக உள்ளது.

அமெரிக்காவின் படையெடுப்புக்கு முன் ஆப்கானில் இருந்த தலிபான் ஆட்சியில் பராதர் பிரதி பாதுகாப்பு அமைச்சராக இருந்துள்ளார். தலிபான் நிறுவனர் முல்லா ஒமரின் சகோதரியையே இவர் திருமணம் புரிந்துள்ளார்.

இதேவேளை, ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பின்னர் தலிபான்கள் முதல் முறையாக கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாரபூர்வமான செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். தலிபான் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் கெமிராக்கள் முன்பாக தோன்றி பேசினார்.

‘20 ஆண்டுகாலப் போராட்டத்துக்குப் பின்னர் நாங்கள் நாட்டை விடுவித்துள்ளோம். வெளிநாட்டினரை வெளியே விரட்டியுள்ளோம். நாடு முழுமைக்கும் பெருமிதமான தருணம் இது’ என்றார் அவர்.

‘ஆப்கானிஸ்தான் மோதல்கள் நிகழும் போர்க்களமாக நீடிக்காது என்பதை உறுதி செய்ய விரும்புகிறோம்’ என்று வெற்றிக்குப் பிந்தைய தங்கள் முதல் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார் தலிபான் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித்.

‘எங்களுக்கு எதிராகப் போராடிய அனைவரையும் நாங்கள் மன்னித்துவிட்டோம். பகைமைகள் முடிவுக்கு வந்துவிட்டன. வெளிநாட்டிலோ, உள்நாட்டிலோ எங்களுக்கு எந்த எதிரிகளும் வேண்டாம்’ என்று குறிப்பிட்டார்.

‘நாடு முழுவதும் பாதுகாப்பு உள்ளது. யாரும் நாட்டைவிட்டு வெளியேறவேண்டியதில்லை’ என்றும் குறிப்பிட்டார் அவர்.

தலிபான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் கடத்தலும் கொலையும் நடப்பதாக கூறப்படுவது குறித்து கேட்டபோது ‘யாரும் யாரையும் கடத்தமுடியாது. ஒவ்வொரு நாளும் நாங்கள் பாதுகாப்பை அதிகப்படுத்துகிறோம். பொது மன்னிப்பு வழங்கப்படுமே அல்லாது, பகைமை இருக்காது’ என்று அவர் தெரிவித்தார்.

வேறொரு கேள்விக்குப் பதில் அளித்த அவர், ‘20 ஆண்டுகளுக்கு முன்போ, இப்போதோ எப்போதும் எங்கள் நாடு ஒரு முஸ்லிம் நாடு. ஆனால், அனுபவம், பக்குவம், பார்வை என்று வரும்போது இப்போதுள்ள எங்களுக்கும் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த எங்களுக்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன. நாங்கள் எடுக்கப் போகும் நடவடிக்கைகளிலும் வேறுபாடுகள் இருக்கும். இது ஒரு பரிணாம நடைமுறை’ என்று அவர் கூறினார்.

‘நாங்கள் ஒரு அரசாங்கத்தை அமைக்க இருக்கிறோம். அதன் பின்னர்தான் என்னவிதமான சட்டம் நாட்டுக்கு வழங்கப்படும் என்று தெரியும். அரசாங்கத்தை அமைத்த பின்னர் அது பற்றி தெரிவிக்கப்படும்’ என்று அவர் கூறினார்.

இதேவேளை தலிபான்களின் மூத்த தலைவர் அமீர் கான் முத்தக்கி புதிய அரசு ஒன்றை அமைப்பது பற்றி காபுல் நகரில் முன்னாள் ஜனாதிபதிகளான ஹமித் கர்சாயி மற்றும் அப்துல்லா அப்துல்லா உட்பட உள்ளூர் அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பெயர் வெளியிடப்படாத அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

புதிய அரசில் தலிபான் அல்லாத தலைவர்களையும் உள்ளடக்கும் முயற்சி இடம்பெற்று வருவதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

மறுபுறம், ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய பின்னர் அளித்த வாக்குறுதிகளைப் பின்பற்றுமாறு, தலிபான் அமைப்பை அமெரிக்காகேட்டுக்கொண்டுள்ளது.

பெண்கள் உள்ளிட்ட அதன் மக்களின் உரிமைகளை மதித்துச் செயல்பட தலிபான் அமைப்பு வாக்குறுதி அளித்திருந்தது. தலிபான் அமைப்பு, அதனை முறையாகப் பின்பற்றுவதைக் கண்காணிக்கவிருப்பதாக அமெரிக்கா கூறியது.

1990களில், 5 ஆண்டுகாலம் ஆட்சியைக் கைப்பற்றியபோது, தலிபான் அமைப்பு பெண்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. பெண்கள் கல்வி கற்பதற்கு அது தடை விதித்தது.

இந்நிலையில், ஆப்கான் மக்களைத் தங்கள் வாழ்க்கையை வழக்கம்போல் தொடருமாறு தலிபான் அமைப்பு கேட்டுக்கொண்டது. அனைத்து அரசாங்க அதிகாரிகளுக்கும் அது பொது மன்னிப்பு வழங்கியது.

தனது படையினரை ஒழுக்கத்துடன் நடந்துகொள்ள உத்தரவிட்டிருப்பதாக தலிபான் அமைப்பு கூறியது.

தூதரகக் கட்டடங்களுக்குள் நுழையவேண்டாம் என்றும், தூதரக வாகனங்களின் நடவடிக்கைகளில் தலையிட வேண்டாம் என்றும் அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக அது குறிப்பிட்டது.   நன்றி தினகரன் 



ஆப்கான் ஜனாதிபதி அஷ்ரப் கனி ஐ.அ. இராச்சியத்தில் அடைக்கலம்

ஆப்கான் ஜனாதிபதி அஷ்ரப் கனி ஐக்கிய அரபு இராச்சியத்தில் அடைக்கலம் பெற்றதாக அந்த நாடு அறிவித்துள்ளது.

தலிபான்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகர் காபூலை நோக்கி முன்னேறியதை அடுத்தே கனி நாட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் மனிதாபிமான அடிப்படையில் கனி மற்றும் அவர்களின் குடும்பத்தினரை வரவேற்றதாக ஐக்கிய அரபு இராச்சிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து கடந்த புதன்கிழமை கனி வெளியிட்ட வீடியோ அறிவிப்பு ஒன்றில், தாம் நாட்டை விட்டு தப்பி ஓடியதாக கூறுவதை மறுத்துள்ளார். பெரும் பேரழிவு ஒன்றை தவிர்ப்பதற்கே தாம் வெளியேறியதாக தெரிவித்துள்ளார்.

‘இப்போது நான் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருப்பதால் இரத்தம் சிந்தப்படுவது மற்றும் குழப்பம் நிறுத்தப்பட்டுள்ளது. ஆப்கானுக்கு திரும்புவது பற்றி நான் தற்போது பேசி வருகிறேன்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெரும் தொகை பணத்துடன் தாம் நாட்டை விட்டு தப்பிச்சென்றதாக கூறப்படுவது, ‘முற்றும் அடிப்படைய அற்றது’ என்றும் ‘பொய்யானது’ என்றும் அவர் மறுத்தார்.  நன்றி தினகரன் 





எதிரிகளை பிடிக்க தலிபான் வீடு வீடாக தேடுதல் வேட்டை

ஆப்கானின் முந்தைய அரசுக்கு அல்லது நேட்டோ படைக்காக வேலை செய்தவர்களை தேடும் நடவடிக்கையை தலிபான்கள் ஆரம்பித்திருப்பதாக ஐ.நா ஆவணம் ஒன்றில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமது எதிரிகளை தேடி தலிபான்கள் வீடு வீடாக சோதனை இடுவதோடு குடும்ப உறுப்பினர்களை அச்சுறுத்துவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பழிவாங்கும் செயல்கள் இல்லை என்று கூறியபோதும், ஆப்கானில் அதிகாரத்தை கைப்பற்றிய கடும்போக்கு இஸ்லாமியவாத குழுவான தலிபான்கள் தமது அதிகாரத்தை உறுதி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் கூறுவதற்கும் அவர்களின் செயல்களுக்கும் இடையிலான முரண்பாடு பற்றிய கவலை தற்போது அதிகரித்துள்ளது.

சர்வதேச ஆய்வுக்கான நோர்வே மையத்தின் மூலம் வெளியிடப்பட்டிருக்கும் இரகசிய ஆவணத்தில், தலிபான்கள் ‘கூட்டுச்சேர்ந்தவர்களை’ இலக்கு வைத்து செயற்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

‘தலிபான்கள் மூலம் பெரும் எண்ணிக்கையான நபர்கள் இலக்கு வைக்கப்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது’ என்று இந்த அறிக்கையின் பின்னணியில் உள்ள குழுவின் தலைவர் கிறிஸ்டியன் நெல்லமன் தெரிவித்துள்ளார்.

‘இவ்வாறானவர்கள் தாமாக முன்வரும் வரை அவர்கள் சார்பில் அவர்களின் குடும் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு, தண்டிக்கப்படுகின்றனர்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

தலிபான்களின் கறுப்புப் பட்டியலில் இருப்பவர்கள் பெரும் ஆபத்துக்கு முகம்கொடுப்பதாகவும் கூட்டுப் படுகொலைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு சக்திகள் தமது நாட்டு பிரஜைகளை ஆப்கானில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கடந்த ஐந்து நாட்களில் காபுல் விமானநிலையத்தில் இருந்து 18,000க்கும் அதிகமானவர்கள் வெளியேற்றப்பட்டதாக நேட்டோ அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார்.

இதில் வெளிநாட்டு படையினருக்கு உரைபெயர்ப்பாளர்களாக பணியாற்றிய சுமார் 6,000 ஆப்கான் நாட்டவர்கள் கடந்த வியாழக்கிழமை பின்னேரம் அல்லது நேற்றுக் காலை நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். வார இறுதியில் இந்த வெளியேற்றும் பணிகளை இரட்டிப்பாக்குவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

காபுல் விமானநிலையத்திற்கு வெளியில் நிலைமை தொடர்ந்தும் பதற்றமாக உள்ளது. நாட்டை விட்டு வெளியேற முயலும் ஆப்கானியர்களை தலிபான்கள் தடுத்து வருகின்றனர். விமானநிலைய மதிலுக்கு மேலால் தமது பிள்ளைகளை பெற்றோர் அமெரிக்க படையினரிடம் கொடுக்கும் வீடியோ ஒன்று அங்குள்ள நிலைமையை காட்டுவதாக உள்ளது.

மறுபுறம் ஆப்கானில் சிறிய அளவிலான தலிபான் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. ஆப்கானின் 102 ஆவது சுதந்திர தினம் கடந்த வியாழனன்று கொண்டாடப்பட்ட நிலையில் ஆப்கான் தேசிய கொடியை அசைத்தவாறு தலிபான் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளனர

ஆப்கானை கைப்பற்றிய தலிபான்கள் தமது வெள்ளை நிறக் கொடியை நாட்டின் தேசிய கொடியாக மாற்றியுள்ளனர்.

ஜலாலாபாத்தில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது தலிபான் உறுப்பினர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூவர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் அசாதாபாத் நகரில் கடந்த வியாழனன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திலும் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

20 வருடங்களுக்கு முன் அமெரிக்க தலைமையிலான படையால் ஆட்சி அதிகாரத்திலிருந்து தூக்கி எறியப்பட்ட தலிபான்கள் தற்போது மீண்டும் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்துள்ளனர். இதற்கு முன் தலிபான்கள் அதிகாரத்தில் இருக்கும்போது பல்வேறு கொடுமைகளை நிகழ்த்தியுள்ளனர். பொதுவெளியில் மரணதண்டனை வழங்குவது, பெண்களை பணியிடங்களுக்கு செல்லவிடாமல் தடுத்தது போன்ற பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இருப்பினும் அதிகாரத்தை கைப்பற்றியபின் அளித்த முதல் செய்தியாளர் சந்திப்பில், “பெண்களின் உரிமைகள் ஷரியா சட்டத்திற்கு உட்பட்டு காக்கப்படும்,” என தலிபானின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

இருப்பினும் தலிபான் அமைப்பு இதுவரை எந்தவிதமான நடைமுறைகள் பயன்படுத்தப்படும் என தெளிவாக கூறவில்லை.

மேலும் பெண்கள் புர்கா அணிய வேண்டும் என கட்டாயப்படுத்தப் போவதில்லை என தலிபான்கள் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தலையை மறைக்கும் ஹிஜாப் அணிவது கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த முறை தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது பெண்கள் பணிபுரிய அனுமதிக்கப்படவில்லை. பாடசாலைக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. எட்டு வயதிலிருந்து பெண்கள் புர்கா அணிய வேண்டும் என்ற விதிகள் இருந்தன.

மேலும் ஏதேனும் ஆண் குடும்ப உறுப்பினரின் துணையுடனேயே பெண்கள் வெளியே வரவேண்டும். இதை மீறும் பெண்களுக்கு பொதுவெளியில் கசையடி வழங்கப்படும்.

மேலும் அவர்கள், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தங்களுக்கு எந்த எதிரிகளும் தேவையில்லை என்று தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு படையினரின் முன்னாள் உறுப்பினர்களுக்கும், வெளிநாட்டு படைகளில் பணியாற்றியவர்களுக்கும் மன்னிப்பு வழங்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு வெளிநாட்டு அதிகாரிகளும், ஆப்கானியர்கள் பலரும் சந்தேகத்தில் உள்ளனர். நேர்காணல் ஒன்றில் தலிபான்கள் மாறிவிட்டனரா என்று கேள்வி எழுப்பியதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இல்லை என்று தெரிவித்திருந்தார்.   நன்றி தினகரன் 





கடலுக்குள் எரிமலை வெடிப்பு: ஜப்பானில் புதிய தீவு தோற்றம்

கடலுக்கடியில் எரிமலை வெடித்ததில் ஜப்பானில் புதிய தீவு ஒன்று உருவாகியுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு 1,200 கிலோமீற்றர் தெற்கில் அந்த எரிமலை வெடித்துள்ளது. புதிய தீவு பிறை வடிவில், சுமார் ஒரு கிலோமீற்றர் விட்டத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அந்தத் தீவு எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெரியவில்லை. அலை மோதல்களைத் தாங்க முடியாமல் போகலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அல்லது எரிமலை தொடர்ந்து வெடித்தால், அதிலிருந்து வெளியாகும் எரிமலைக்குழம்பு தீவை வலுப்படுத்தலாம். இந்த பகுதியில் தொடர்ந்து எரிமலை வெடிப்பு நீடிப்பதால் இங்கு மேலும் தீவுகள் தோன்ற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இது போன்று ஏற்கனவே 1904, 1914, 1986 ஆகிய ஆண்டுகளில் தீவுகள் உருவாகியுள்ளன. எனினும், அவை அனைத்தும் மண் அரிப்பால் காணாமற்போய்விட்டன.

ஜப்பானை சூழ தற்போது 110 எரிமலைகள் இயக்கத்தில் இருப்பதோடு அதில் 47 தொடர்ச்சியான கண்காணிப்பில் உள்ளன.   நன்றி தினகரன் 




ஹெய்டி நிலநடுக்கம்: உயிரிழப்பு எண்ணிக்கை 2000ஐ நெருங்கியது

ஹெய்டியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 500ஆல் அதிகரித்து 1,941 ஆக உயர்ந்துள்ளது.

7.2 ரிச்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை அடுத்து சுமார் 10,000 பேர் காயமடைந்திருப்பதோடு பலரும் தொடர்ந்து காணாமல்போன நிலையில் உள்ளனர்.

இங்கு ஏற்பட்டிருக்கும் புயல் மழையால் மீட்புப் பணிகளை முன்னெடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்த நிலையில் சிறிய அளவில் தொடரும் பின் அதிர்வுகள் மற்றும் புயல் காரணமாக சேதமடைந்த கட்டடங்களுக்கு மீண்டும் திரும்புவதற்கு பலரும் அச்சத்தில் உள்ளனர்.

தென்மேற்கு ஹெய்டியில் நில நடுக்கம் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக லெ கெயஸ் நகரைச் சூழ பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

‘நேற்று மாலை (செவ்வாய்க்கிழமை) தேவாலயம் ஒன்றுக்கு அருகில் அடைக்கலம் பெற்றேன். ஆனால் பூமி மீண்டும் அதிர ஆரம்பித்தபோது நான் இங்கே ஓடி வந்துவிட்டேன்’ என்று லெ கெயஸ் நகர குடியிருப்பாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.   நன்றி தினகரன் 




No comments: