முருகபூபதியின் கதைத்தொகுப்பின் கதை சிறுகதைத் தொகுப்பில் பெண்கள் ! ஒரு கண்ணோட்டம் சி.ரஞ்சிதா

ழுத்தாளர் முருகபூபதி அவர்களுக்கு அறிமுக பாமாலை அவசியமற்றது. எழுத்துலகம் நன்கு அறிந்த ஒரு படைப்பாளி. புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழும் இவர் இன்றுவரை எழுத்து துறைக்குள் பயணித்துக்கொண்டு தொடர்ந்து இலக்கியப் பணி ஆற்றிவருகின்றமை மகிழ்ச்சியளிக்கிறது.

அவரால்   இந்த ( 2021)  ஆண்டு படைக்கப்பட்ட கதைத்தொகுப்பின் கதை என்னும் சிறுகதைத்தொகுதி அண்மையில் ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது. 15 சிறுகதைகளைக் கொண்ட இத்தொகுப்பில் இடம்பெறும் “அம்மம்மாவின் காதல்”, “அவள் அப்படிதான்”, “ஏலம்”, “கணங்கள்”, “நேர்காணல்” ஆகிய ஐந்து சிறுகதைகளிலும் பரந்து விரிந்து இடம்பிடித்துநிற்கும் பெண்கள் தொடர்பான பிரச்சினைகளை அலசி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

பெண்கள் தொடர்பான சமூகப் பார்வை, அவர்கள் மீதான கரிசனை – மேலைநாட்டார் வருகையோடு தமிழ்ச்சூழலுக்குள் வேரூன்றியது. பெண் கல்வி, பெண்களுக்கு தொழில், வாக்குரிமை என அவர்களது சமூக அந்தஸ்து உயரவே மேலைநாட்டுப் பெண்ணியச் சிந்தனைகளும் வலுப்பெற ஆரம்பித்தன.

அரசியல், பொருளாதாரம், கலை, கலாசாரம் - பெண்களுக்கான அங்கீகாரத்தை வழங்கவே இலக்கியங்கள் வாயிலாகவும் பெண்ணியம் பல எழுத்தாளர்களால் பேசப்பட்டன.

பெண்களின் பிரச்சினைகளைப் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் தமது


படைப்பிலக்கியங்களில் ஆழமாக பேசியுள்ளனர். முற்போக்குச் சிந்தனையுடைய பல பெண்ணிய படைப்புக்களை தமிழ்ச்சூழலில் இன்றுவரை நாம் தரிசித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

எழுத்தாளர் முருகபூபதி அவர்கள்  இத்தொகுப்பில் எழுதிய ஐந்து சிறுகதைகளில் பெண்களின் நிலை குறித்து இனி நோக்குவோம்.

அம்மம்மாவின் காதல்” – சிறுகதை பழமை, புதுமை, புலம்பெயர்நாட்டில் தமிழர் வாழ்வு நிலை, அதற்குள் தத்தளிக்கும் உறவு -  விரிசல்களை யதார்த்தபூர்வமாக சித்திரிக்கிறது.


இச்சிறுகதையில் வரும் அம்மம்மா பாத்திரமாகிய புனித மலர்,  தான் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த காலத்தில் குறைந்த சாதிக்காரர் என  மேல் சாதி சமூகத்தால் அடையாளம்  காணப்பட்டவரை   ( ராஜேஸ்வரன் ) காதலித்ததால் கொழும்பிற்கு அழைத்துவரப்பட்டு,  வேறு ஒருவருக்கு அவரை அவரது பெற்றோர்கள்  திருமணம்செய்து வைக்கின்றனர்.  

 தமிழர் மத்தியில் இழையோடியிருந்த சாதிய இறுக்கத்தை இது காட்டினாலும்,  அதனால் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்கள்தான் என்பதும் இங்கு புலனாகிறது.

திருமணத்தின் பின்னரும் கணவனின் தேவைகளை நிறைவேற்றும் பெண்ணாக புனித மலர் வாழ்ந்து கணவன் இறந்த பின்னர் தனது பேத்திக்காக வாழும் பழைய மரபுகளைப் பேணி வாழும் ஒரு சாதாரண பெண்ணாக இச்சிறுகதையில் வடிக்கப்பட்டுள்ளாள்.

 இச்சிறுகதையில் வரும் புனித மலரின் பேத்தி லதா நவீன யுகத்தின் முற்போக்கு சிந்தனைகொண்ட பெண்ணாக வார்க்கப்பட்டுள்ளாள்.

 “அம்மம்மா… நீங்கள் அவரை மனதால் விரும்பியிருந்தால், ஏன் சொல்வதற்கு தயக்கம் காண்பித்தீங்க…?”,

 “இந்தக் காலத்தில் இது சரிவராது அம்மம்மா…? நான் உங்களைப்போன்று


வாழ்க்கையைத் தொலைக்கமாட்டேன்…” என்று லதா தன்னுடைய பாட்டியிடம் கூறுவதினூடாக மரபுரீதியான சிந்தனைகள் உடைபடுவதையும் புதுமை - புரட்சி படைக்க  புதிய தலைமுறை எத்தனிப்பதையும் காணமுடிகின்றது.

எனினும் சாதியம் ஒருகாலகட்டத்தில் சமூக சமத்துவத்தை உடைத்தமையையும் அதனால் புனிதமலரின் வாழ்வு சிதைக்கப்பட்டமையையும் சிறிதும் ஏற்கமுடியாது. சாதியத்திற்கு எதிராக குரல்கொடுக்கும் புரட்சிப் பெண்ணாக புனிதமலரையும் இச்சிறுகதை ஆசிரியர் படைத்திருக்கலாம்.

“அவள் அப்படித்தான்” என்னும் சிறுகதை இன்றைய நூற்றாண்டில் பெண்கள் தீவிரவாதப் பெண்ணியத்தின்பால் செல்வதையும் அதற்கான காரணத்தையும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.


இச்சிறுகதையில் வரும் பிரபாலினி ஒரு கணக்காளர். படித்துத் தொழில் பார்க்கும்போது இந்தச் சமூகத்தில் விரும்பியும் விரும்பாமலும் திருமணம் என்ற குடும்பக் கட்டமைப்பை வலிந்து புகுத்திவிடுகிறது, சமூகம்.

ஒரு பெண் தானாக விரும்பி திருமணம் செய்வதற்கும் அதை மறுத்து விலக்கிவிடத் துடிப்பதும் இச்சமூகம் நமக்குத் தரும் அனுபவங்களிலேயே தங்கியுள்ளது. நாம் வாழும் சூழலே நமது சிந்தனைகளைச் செதுக்குகின்றது. இக்கதையில் வரும் பிரபாலினியின் நிலையும் அப்படித்தான். தனது குடிகார தந்தையால் வஞ்சிக்கப்பட்ட   தாயின் நிலைகண்டு உலகில் இருக்கும் ஆண்கள் மீது அவளுக்கு வந்த வெறுப்பினால் திருமணமே ஆகாமல் ஒரு குழந்தையைப் பெற்று வளர்க்கப்போவதாக சபதம் எடுப்பதாக கதை முடிகிறது.

கதையின் அதிர்வுப்பகுதியும் இதுதான். இனி பிரபாலினியின் வாழ்வு என்ன ஆகும்…?  என்பதை வாசகர்களே சொல்லவேண்டும்.

இச்சிறுகதையில் இரண்டு வகையான பெண் பாத்திரங்கள் வெவ்வேறு


புரிதலுடன் படைக்கப்பட்டிருக்கிறார்கள். முதலாவது வகை பிரபாலினியின் தாய். இவள் கணவன் குடித்து வந்து கொடுமைப்படுத்தியும் குடும்ப கௌரவத்தைப் பேணும் மரபினை பற்றியிருக்கும்  பெண்.

ஆனால்,  அவளின் மகள்  பிரபாலினி இரண்டாவது வகை  தனது தாயின் குணத்திற்கு, சிந்தனைக்கு எதிரானவள். தனது தந்தை,  தாயை அடித்து துன்புறுத்தியபோது பொலிஸாரை வரவழைத்த துணிச்சல்காரி. சமூகம் கட்டிக்காக்கத் துடிக்கும் திருமணத்தினூடான குடும்பக் கட்டமைப்பை உடைக்க முயற்சி செய்யும் வீரமங்கை.

இச்சிறுகதை உண்மையில் புதுமையானது. பெண்ணியத்தின் அதன் சுதந்திரத்தின் முழு புரிதலும் நன்கு வெளிப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி பெண்கள் மீது இழைக்கப்பட்ட பாலியல் வன்முறைகள் அதன் கொடூரம் என்பனவும் இச்சிறுகதையில் காட்டப்பட்டுள்ளன. சான்றாக யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த வித்தியாவின் கொடூர மரணம் தாங்கமுடியாத வேதனையைத் தருகிறது.

 பிரபாலினியின் தீவிரவாத பெண்ணியத்திற்கு ஆதரவு வழங்குவது போலவே பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களையும் இச்சிறுகதை ஆசிரியர் கூறியுள்ளார் என எண்ண வைக்கிறது.

பெண்ணியத்தின் தீவிரபோக்கையும் ஆணதிகாரத்தை வெறுக்கும் ஒரு பெண்ணின் மனநிலையையும் மென்மேலும் செதுக்கி இதை ஒரு பெண்ணியச்  சிறுகதையாகவே காட்டியுள்ளார் இச்சிறுகதையாசிரியர்.

“நான் புருஷன் இல்லாமல் ஒரு பிள்ளையை பெறப்போகிறேன். அந்தப்பிள்ளை துணையாக இருக்கும். அதற்கான வேலைகளை தொடங்கிவிட்டேன். அதற்கெல்லாம் இங்கே இப்போது வசதிகள், சிகிச்சைகள் இருக்கிறது…” என்று பிரபாலினி தனது தோழியிடம் கூறுவதன் மூலம் ஆண் வர்க்கத்தை வெறுத்து நவீன யுகத்தின் பெண் பிரதிநிதியாக வாழத்துடிப்பதைக் காணமுடிகின்றது.

“ஏலம்” -  சிறுகதை ஒரு காரையும் மணவாழ்வையும் ஒப்பிட்டுக்கூறும் பாணி மிக புதுமையானது. ஒரு தந்தை தனது மகளுக்கு கார் வாங்க மேற்கொள்ளும் பிரயத்தனம், இறுதியில் தோல்வி அடைதல் சாதாரணமான விடயமாக இருப்பினும்,  அந்தக் காரை குறியீடாகக்கொண்டு கதையை நகர்த்தியுள்ளார் இச்சிறுகதையாசிரியர்.

பெண்களே திருமணவாழ்வில் பல இன்னல்களை அனுபவிக்கின்றனர். திருமணச் சந்தையில் ஒரு பெண் விலைபோக கல்வி, தொழில், அழகு, சீதனம் என ஏராளமான தகுதிகள் பார்க்கப்படுகின்றன.

குகணேஸ்வரன் தனது மகள் சபீனாவுக்கு வாங்கச் சென்ற காருக்கு அப்பாற்பட்டு அவளது திருமணவாழ்வை நினைத்து கலங்கியதே மிகப்பெரிய வேதனை. “இவளுக்கு ஒரு நல்ல கார் தேடி வாங்கிக் கொடுப்பதற்கே இவ்வளவு சிரமப்படுறியள். மாப்பிள்ளை எப்படி தேடப்போறீங்க…?” என குகணேஸ்வரனின் மனைவி  சிறுகதையில்  கேட்கும்  பகுதி இதனை உறுதிசெய்கிறது.

அந்த விசாலமான மண்டபத்துக்கு வெளியே திறந்த வெளியில் ஏராளமான கார்கள் ஒழுங்காக வரிசைக்கிரமத்தில் நின்றன. சில கார்களுக்கு இலக்கத்தகடு இல்லை.

 “ ஃபினான்ஸில் எடுத்துப் பணம் ஒழுங்காக கடன் வட்டியுடன் செலுத்தாதமையால் பறிக்கப்பட்ட கார்கள்   “ என்று மகளுக்கு விளக்கம் சொன்னார் குகணேஸ்வரன். அத்துடன் அவர் நின்றிருக்கலாம். சொன்னபடி சீதனம் தரவில்லையென்று பெற்றவர்களிடம் அனுப்பப்படும் பெண்களைப் போன்றது தான் இந்த இலக்கத்தகடு இல்லாத கார்களும்…” என்று கூறியுள்ளமை உண்மையில் பெண்களின் வாழ்வு சீதனத்தால் எவ்வாறெல்லாம் பாதிப்படைந்துள்ளது என்பதைச் சுட்டுகின்றது.

நேரடியாக இச்சிறுகதையில் பெண் பாத்திரங்கள் பாதிக்கப்பட்டது பற்றி சிறுகதை ஆசிரியர் ஒன்றும் கூறவில்லை. ஆனால்,  மறைமுகமாக காரை குறியீடாகக் கொண்டு பெண்கள் சமூகத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகளைச் சித்திரித்துள்ளார்.

“கணங்கள்” என்னும் சிறுகதை ஒரு பெண்ணின் மன உணர்வுகளை உணர்வுபூர்வமாக வடித்துள்ளது. தனது கணவன் யுத்த காலப்பகுதியில் ஈழத்தில் காணாமல்போனதுடன் தனது ஒரே மகனுடன் தனியாக நின்று போராடிக்கொண்டிருந்தபோது ,  அந்தப் பெண்ணை அவுஸ்திரேலியாவில் வாழும் அவளது அண்ணன் அங்கே வரவழைத்து உதவிபுரிகின்றார். எனினும் அண்ணனின் மனைவிக்கு இந்தப் பெண் தங்களோடு இருப்பது விருப்பம் இல்லை. ஆரம்பத்தில் முகச் சலிப்பைக்காட்டி,  பின்னர்  அவள் வீட்டுவேலைகளைச் செய்து வந்தமையால் சமாதானம் அடைகின்றாள். அதுவும் நீடிக்கவில்லை. தனியொரு வாடகை வீட்டிற்கு அண்ணனின் உதவியால் சென்று தனது மகனோடு வாழ்வு நடத்துகிறாள், இந்தப் பெண்.

இச்சிறுகதையில் ஒரு பெண் கணவனை இழந்த நிலையில் சமூக மட்டத்தில் எவ்வாறு நோக்கப்படுகிறாள் என்பதையும் சிலவேளை உறவுகளோடு நெருங்கி வாழ முடியாமல் போகிறது என்பதையும் அவதானிக்க முடிகின்றது. அவுஸ்திரேலிய கலாசாரத்தில் தமது இஸ்டத்திற்கு பல திருமணங்களைச் செய்து வாழ்வதை இப்பெண்ணின் மகன் அறிந்து தனது தாயையும் அவ்வாறு திருமணம் செய்யச் சொல்வது, அதனால் அவள் மகனை அடிப்பது,  அதன்பின்பு அழுவது   என்பன ஒரு பெண் என்ற பார்வையில் அவள் உள ரீதியாக எதிர்நோக்கும் நெருக்கடிகளையே எடுத்துக்காட்டுகின்றது.

ஆண்களைவிட இந்தச் சமூகத்தில் ஒரு பெண் திருமணத்தின் முன்னரும் பின்னரும் பல பிரச்சினைகளை எதிர்நோக்குவது கீழைத்தேய கலாசார கட்டமைப்பில்தான். இவர்கள் தமது கலாசாரத்தை மேலைநாடுகளுக்குச் சென்று பேண முற்படும்போது இன்னும் பல சவால்களை எதிர்நோக்குகிறார்கள்.

“நேர்காணல்” என்னும் சிறுகதையில் பேரின்பநாதர் என்னும் முதியவரான திருமணத்  தரகரின்  அனுபவங்களும் அவரிடம் தனது சகோதரிக்கு  மாப்பிள்ளை பார்க்கச் சொல்லி வரும் ஓர் இளைஞனின் வாழ்க்கைப் பதிவும் சிறுகதையில் நீண்டு செல்கிறது.

இச்சிறுகதையில் பெரும்பகுதியை நிரப்பும்,  பெண் ஒருவருக்கு வரன்பார்க்கும் படலம் சிரிப்பாக இருக்கிறது.

பெண்ணியச் சிந்தனைகளோடு கல்வி, தொழில் என நடைபோடும் பெண்களின் நிலை,  திருமணம் என்ற ஒரு கால்கட்டு வந்தவுடன் மூடநம்பிக்கையுடன் ஆணதிகாரத்தை ஆதரிப்பதாகவே இருக்கிறது.

பேரின்பநாதரிடம் பெண்பார்க்கச் சொல்லி லண்டனிலிருந்து வந்த ஒரு மாப்பிள்ளையின் சில கேள்விகள் பிற்போக்காக இருக்கிறது. பெண் சமூக வலைத்தளங்களைப் பாவிப்பவளா, யாருடனாவது செட்டிங் செய்பவளா என்ற கேள்வி -  சாரி, சுடிதார், சோட்டி ஆகிய உடைகளுடன் புகைப்படம், அந்தப் பெண்ணின் கல்வி, தொழில், சகோதரம் என அந்த மாப்பிள்ளை கேட்கும் வினா இன்றைய பெண்களுக்கு பெரும் சவாலாகவும் அவர்களது சுதந்திர வாழ்வில் தலையிடுவது போலவும் இருக்கிறது.

ஒரு பெண்ணின் மனவுணர்வுகளை அவளது விருப்பங்களை, இலட்சியங்களைக் கேட்டறிந்து அதற்குத் துணைபோகாது தனது தேவை, ஆசைகளைப் பற்றி கனவு காணும் ஓர் ஆணின் அதிகாரமே இந்தத் திருமணப்பொருத்தத்தில் வெளிப்படுகின்றது. இது கடிந்து விலக்கப்பட வேண்டியது.

இதுவரை நோக்கிய சிறுகதைகளில் இன்றைய நவீன உலகில் பெண்கள் வீரமங்கைகளாக வலம் வருவது மிக மிக குறைவு என்பதையே வெளிப்படுத்துகின்றது.

திருமணம், கணவன், பிள்ளைகள் என ஒரு கட்டுக்கோப்புக்குள் வாழ்வு நடத்தி தமது சுயத்தை இழந்து வாழும் பெண்களையே பெரும்பாலான பெண்பாத்திரங்களாக காட்டியுள்ளார், இச்சிறுகதை ஆசிரியர்.

பெண்கள் மட்டுமல்ல,  பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களும் தமது பெண்ணுக்கு வாழ்வு திருமணமே என்றும்  வேறு எதுவும் இல்லை என்பது போலவுமே சிந்திக்கின்றார்கள். மரபு வலைக்குள் சிக்கவைக்கிறார்கள்.

இவ்வாறான பெற்றோர்கள் இருக்கும் வரை பெண்களின் வாழ்வில் ஆண்களால் புயல் வீசிக்கொண்டுதான் இருக்கும். ஆனால் “அவள் அப்படிதான்” என்னும் சிறுகதையில்  மாத்திரமே ஒரு பெண் முற்போக்காகச் சிந்தித்து சமூகக் கட்டமைப்பை உடைத்து புரட்சிசெய்ய விழைகிறாள்.

பெண்களைக் கொடுமைப்படுத்தும் ஆண்களுக்கு இச்சிறுகதையில் வரும் பிரபாலினி என்ற பெண்ணின் செயற்பாடுகள் தகுந்த பாடமாக கற்பிக்கப்படுகிறது.

எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் தான் சமூகத்தில் கண்ட பாத்திரங்களை ஒழித்து மறைக்காமல்,  அப்படியே சிறுகதைகளில் படைக்கும் வல்லமை கொண்டவர் என்பதை மேற்படி சிறுகதைகளின் வாயிலாக அறியமுடிகின்றது.

அவரது அனுபவத்தில் மரபு, பழமை, முற்போக்கு எனப் பல்வேறு கோணங்களில் சிந்திக்கும் பாத்திரங்கள் வந்து போயுள்ளனர். அதனால்தான் அவரது  சிறுகதைகளிலும் அவை பல கோணங்களில் படைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் கவலை துளிர்க்கிறது. அநேகமான சிறுகதைகளில் பெண்கள் அனைவரையும் புரட்சிசெய்பவர்களாக படைக்கவில்லையே என்று. பிரபாலினியைத் தவிர.

இனிவரும் காலங்களில் முருகபூபதி அவர்கள் புரட்சிப் பெண்களை தமது சிறுகதைகளில் படைக்கவேண்டும் என்பது எமது அன்பான வேண்டுகோள்.

எழுத்தாளர் முருகபூபதிக்கு இந்த ஆண்டு ஜூலை மாதம் 70 ஆது பிறந்த தினம். அதனை முன்னிட்டு யாழ். ஜீவநதி, அவரது கதைத் தொகுப்பின் கதை என்ற இந்தப்புதிய தொகுதியினை வெளியிட்டுள்ளது.

பிரதிகளுக்கு: ஜீவநதி, கலை அகம்,  அல்வாய், இலங்கை.

jeevanathy@yahoo.com

 

---0---

No comments: