இலங்கைச் செய்திகள்

கொரோனாவை கட்டுப்படுத்த இதுவரை 262 பில். ரூபா செலவு

இலங்கையும் பாகிஸ்தானும் பாதுகாப்பு ரீதியில் கூட்டு நாடுகள்

இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்ததாக தெரிவிக்கப்படும் செய்தி உண்மையல்ல

மட்டு. மாவட்டத்தில் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக இந்தியா 300 மில்லியன் ரூபா நிதி

யாழ். மக்களுக்காக இன்று மேலும் 50,000 தடுப்பூசிகள்


 கொரோனாவை கட்டுப்படுத்த இதுவரை 262 பில். ரூபா செலவு

2020 முதல் இதுவரை  அரசின் செலவீடு  குறித்து பிரதமர் விளக்கம்

கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்துவதற்காக 2020ஆம் ஆண்டு முதல் இதுவரை அரசாங்கம் 262 பில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று (30) அலரி மாளிகையில் நடைபெற்ற நிதி அமைச்சின் முன்னேற்ற ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

நிதி அமைச்சர் என்ற வகையில் அமைச்சுக்குரிய அனைத்து நிறுவனங்களதும் தற்போதைய நிலை மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் பிரதமர் இதன்போது கவனம் செலுத்தினார்.

நிதி அமைச்சின் செயலாளர் எஸ். ஆர்.ஆட்டிகலவினால் 'சவாலுக்கு மத்தியில் சுபீட்சத்தை நோக்கி' என்ற நிதி அமைச்சின் முன்னேற்ற மற்றும் எதிர்கால நோக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

கொவிட்19 முதலாவது மற்றும் இரண்டாவது அலைகளை அரசாங்கம் வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதாக தெரிவித்த நிதி அமைச்சின் செயலாளர், சமூக பொருளாதார தாக்கங்களை ஏற்படுத்தி ஏப்ரல் மாதம் முதல் ஆரம்பமான மூன்றாவது அலைக்கு வெற்றிகரமாக முகங்கொடுத்து வருவதாக சுட்டிக்காட்டினார்.

இந்த கடினமான சூழ்நிலையிலும் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் உள்ளிட்ட நிவாரணம் பெற தகுதியான மக்களுக்காக பிரதமரின் ஆலோசனைக்கமைய நிதி அமைச்சின் ஊடாக ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த எஸ். ஆர்.ஆட்டிகல 2019ஆம் ஆண்டு தீர்க்கப்படாதிருந்த 423 பில்லியன் நிலுவை தொகையை செலுத்திய பின்னரே கடந்த வரவு-செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

வட்டி விகிதத்தை குறைத்து கடன் நிவாரணங்களை வழங்கியும் பணவீக்கத்தை 04 சதவீதத்திலிருந்து 06 சதவீதமாக பேணுவதற்கு முடிந்ததாகவும், கடந்த மே மாதம் அது 6.1 சதவீதம் அல்லது 6.2 வரை அதிகரித்த போதிலும் அதனை குறைப்பதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பரவலாக்கப்பட்ட நிதியிலிருந்து இதுவரை அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ள அபிவிருத்தி திட்டங்கள் 11,000 ஆகும் எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் கொடுப்பனவு வழங்கப்படும் சகல மக்களுக்கும் 5,000 ரூபாய் கொடுப்பனவு நான்கு முறை வழங்கப்பட்டுள்ளதாக இதன்போது கருத்து தெரிவித்த சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில் மற்றும் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன தெரிவித்தார்.

500 உற்பத்தி கிராமங்களை உருவாக்குவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் நீல் பண்டார ஹபுஹின்ன சுட்டிக்காட்டினார்.

கொவிட்19 நிலைமைக்கு மத்தியில் வீழ்ச்சியடைந்த வர்த்தக நடவடிக்கைகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வங்கிகளுடன் கலந்துரையாடி வட்டி விகிதத்தை குறைத்து கடன் நிவாரணங்களை வழங்குவதற்கு முடிந்ததாக நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஆர். எம். பி. ரத்நாயக்க குறிப்பிட்டார்.

வெளிநாட்டு முதலீடுகளை நாட்டிற்குள் ஈர்ப்பதற்கு நிதித் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்களுடன் கலந்துரையாடி வருவதாக தெரிவித்த ஆர். எம். பி. ரத்நாயக்க, 2022 ஜனவரி மாதமளவில் தேசிய கடன் பாதுகாப்பு நிறுவனமொன்றை நாட்டில் நிறுவுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டார். 2020 – -2024 காலப்பகுதியில் பங்குச்சந்தையில் புதிதாக 500 நிறுவனங்களை பட்டியிலிடுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி வெவ்வேறு கருத்துக்களை முன்வைப்பினும் இதுவரை வெளிநாட்டு கடன்களை முறையாக செலுத்த முடிந்துள்ளதாகவும், அதேபோன்று எதிர்காலத்திலும் அக்கடன் தவணைகளை எவ்வித தாமதங்களுமின்றி செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஷ்மன் தெரிவித்தார்.

நிதி அமைச்சின் பல்வேறு இடங்களில் பரந்து காணப்படும் நிறுவனங்களை மக்களின் வசதிக்காக ஒரே கட்டிடத்தொகுதிக்கு கொண்டு வருவது தொடர்பில் ஆராயுமாறு பிரதமர் இதன்போது நிதி அமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகலவுக்கு ஆலோசனை வழங்கினார்.

இக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான அஜித் நிவாட் கப்ரால், ஷெஹான் சேமசிங்க, பிரதமரின் செயலாளர் .காமினி செனரத், பிரதமர் அலுவலக பணிக்குழாம் பிரதானி .யோஷித ராஜபக்ஷ, நிதி அமைச்சின் செயலாளர் எஸ். ஆர்.ஆட்டிகல, பிரதமரின் மேலதிக செயலாளர் சமிந்த குலரத்ன உள்ளிட்ட அரச வங்கி மற்றும் நிதி அமைச்சுக்குரிய நிறுவனங்களின் பிரதானிகள் பலர் கலந்து கொண்டனர்.    நன்றி தினகரன் 

 



இலங்கையும் பாகிஸ்தானும் பாதுகாப்பு ரீதியில் கூட்டு நாடுகள்

பாகிஸ்தானின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர்

இலங்கையும் பாகிஸ்தானும் பாதுகாப்பு ரீதியாக ஒரு கூட்டு நாடுகளாகவே நீண்டகாலமாக இருந்து வருகின்றன. பாகிஸ்தான் நாட்டின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் ஓய்வுநிலை இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் மொகமட் சாட் கட்டக் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் எச்.பி ரணசிங்கவை நேற்று முன்தினம்(29-) மாலை சந்தித்த அவர் இரணைமடுவில் அமைந்துள்ள நெலும்பியசவில் கிளிநொச்சி பாதுகாப்புப் படை தலைமையகத்தின் ஏற்பாட்டில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த 30 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நான் கடமையில் இருக்கின்ற ஒருவனாகவே உணர்கின்றேன். நான் இங்கு கடமையாற்றுவது என்னுடைய திறமையை வெளிக்காட்ட மட்டுமல்ல. மக்களுக்கு சேவை ஆற்றுவதே என்னுடைய கடமையாகும்.

இலங்கையும் பாகிஸ்தானும் நீண்ட காலமாக நட்பு நாடுகளாகவும் பொருளாதார உதவிகளை வழங்குகின்ற நாடுகளாகவும் பாதுகாப்பு ரீதியாகவும் ஏனைய உதவிகளை வழங்கும் நாடுகளாகவும் இருந்து வருகின்றன.

நாட்டினுடைய சொந்த பாதுகாப்புக்கு பாதுகாப்புப் படைகள் தான் முன் நிற்கின்றன. அவர்கள் முன் நிற்பதன் காரணமாகத்தான் ஏனைய மக்கள் நாட்டின் வளங்கள், உடமைகள் பாதுகாக்கப்படுகின்றன.

நான் ஒரு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் நபராவேன். இலங்கையில் பௌத்தர்கள் மற்றும் ஏனைய மதத்தவர்களும் வாழ்கின்றனர். ஆனால் பாதுகாப்புப் பற்றி பேசும் போது நாங்கள் மிகவும் நெருக்கமாகவும் விரிவாகவும் அதைப் பார்க்கவேண்டும்.

2005ஆம் ஆண்டிலிருந்து எங்களது வளர்ச்சி காணப்படுகின்றது. நான் என்னைப் பாதுகாக்கும் நோக்கம் காணப்படுவதோடு நாட்டின் அனைத்து தேவைகளையும் பாதுகாப்பதே எனது நோக்கமாகும். அதுபோலவே இலங்கை பாதுகாப்புப் படைகளும் நாட்டினை பாதுகாக்கும் சிறப்பை உடையவர்களாக காணப்படுகின்றனர். அதன் மூலம் தான் அனைத்து நாட்டினுடைய அனைத்தையும் பாதுகாக்க முடியும். நான் தலைமைத்துவம் பற்றி பேசும்போது இலங்கையும் பாகிஸ்தானும் மிகவும் நெருக்கமான தலைமைத்துவத்தை கொண்ட நாடாகவே நான் கருதுகின்றேன். இலங்கையும் பாகிஸ்தானும் பாதுகாப்பு ரீதியாக ஒரு கூட்டு நாடாகவும் 1976ஆம் ஆண்டிலிருந்து நெருக்க நாடாகவும் இருக்கின்றன. இலங்கையும் பாகிஸ்தானும் கிரிக்கெட் மற்றும் பாதுகாப்பு தொடர்பாகவும் இணைந்த நாடுகளாகவே காணப்படுகின்றன என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் யாழ் செயலகத்திற்கு விஜயம்

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மொகமட் சாட் கட்டக் நேற்று யாழ் மாவட்ட செயலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.

மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்த உயர் ஸ்தானிகர் முதலில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரின் அலுவலகத்தில், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத்தலைவரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

பின்னர் யாழ் மாவட்டத்தின் தற்போதைய அபிவிருத்தி, சமகால நிலைமைகள் தொடர்பில் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகருக்கு கானொளி முறையில் விளக்கமளிக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அங்கஜன் இராமநாதன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எஸ்.முரளிதரன், மாவட்ட திணைக்களத் தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்,

தற்போதைய கொரோனா காலகட்டத்தில் விவசாயம் கல்வி கடற்றொழில் போன்ற விடயங்களை எவ்வாறு மேற்கொள்வது என்றும் அதில் உள்ள சவால்கள் தொடர்பிலும் பாகிஸ்தான் தூதருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

குறித்த சந்திப்புகளில் இரு நாடுகளுக்கும் இடையில் பொருளாதார வர்த்தக ரீதியாக எவ்வாறு உறவுகளை வலுப்படுத்தலாம் என்பது தொடர்பிலும் பாகிஸ்தானில் கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கு இலவசமாக புலமைப்பரிசில் வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.   நன்றி தினகரன் 

(பரந்தன் குறூப் நிருபர் ) - நன்றி தினகரன் 




இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்ததாக தெரிவிக்கப்படும் செய்தி உண்மையல்ல

இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்ததாக தெரிவிக்கப்படும் செய்தி உண்மையல்ல-India Deny Reports on Sri Lankan airspace for a Joint Military Exercise

- இந்திய உயர் ஸ்தானிகராலயம்

மூன்றாம் நாடொன்றுடன் இணைந்து கூட்டு இராணுவப்பயிற்சியில் ஈடுபடுவதற்காக இலங்கையின் வான்பரப்பை பயன்படுத்த இந்தியா விடுத்த கோரிக்கையை இலங்கை அதிகாரிகள் நிராகரித்திருப்பதாக சில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய உயர் ஸ்தானிகராலயம் மறுப்புத் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது நாடொன்றுடன் இணைந்து கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவதற்காக இலங்கை வான்பரப்பை பயன்படுத்துவதற்கான எந்தவொரு கோரிக்கைகளும் அண்மைய காலங்களில் இந்தியாவால் விடுக்கப்பட்டிருக்கவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது   நன்றி தினகரன் 




மட்டு. மாவட்டத்தில் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக இந்தியா 300 மில்லியன் ரூபா நிதி

மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேசங்களை சேர்ந்த குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இந்திய அரசின் உதவியுடன் 3000 க்கும் மேற்பட்ட கழிவறைகளை அமைத்துக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் இத்திட்டத்துக்கு 300 மில்லியன் ரூபா நிதி ஒதுகீடு ஒதுகீடு செய்யப்பட்டுள்ளது

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இந்திய அரசின் உதவியுடன் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தில் முதற்கட்டமாக சுகாதார வசதிகளை மேம்படுத்த இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் விடுத்த வேண்டுகோளின் விளைவாக, இந்திய அரசின் நிதி உதவியுடன் இவை கட்டப்படவுள்ளன.

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் அரசியல் துறை முதன்மை செயலாளர் திருமதி பாணு பிரகாஷ் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கிடையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது. இப்பின்தங்கிய பிரதேச உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டத்துக்கு 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் இத் திட்டத்தினூடாக மட்டக்களப்பு மாவட்டத்தின் இப் பிரதேசங்களின் அடிப்படை சுகாதார வசதிகளை ேமம்படுத்த முடியுமென இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்    நன்றி தினகரன் 




யாழ். மக்களுக்காக இன்று மேலும் 50,000 தடுப்பூசிகள்

யாழ். மாவட்ட மக்களுக்காக அடுத்த கட்டமாக, மேலும் 50,000 சைனோபார்ம் கொவிட் 19 தடுப்பூசிகள் இன்று கிடைக்கவுள்ளதாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் வழிகாட்டுதலுக்கமைய இத் தடுப்பூசிகள் இன்று யாழ். நகருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

கோவிட்19 தொற்று பரவல் அதிகமுள்ள பகுதிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இவை பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

அத்துடன் தற்போது இடம்பெற்றுவரும் இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் நிறைவடைந்தவுடன் இவற்றை மக்களுக்கு வழங்கும் பணிகள் ஆரம்பமாகுமென்றும், தடுப்பூசி வழங்கும் மையங்கள் தொடர்பில் அதிகாரிகள் விரைவில் அறிவிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே முதற்கட்டமாக வழங்கப்பட்ட இரண்டு கட்டத்துக்குமான தடுப்பூசிகளை யாழ். மாவட்ட மக்கள் ஆர்வத்தோடு பெற்றுக்கொண்ட காரணத்தினால், இந்த மேலதிக 50,000 தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடிந்ததாக யாழ்.மாவட்ட எம்பி.அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

அடுத்த கட்ட தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வது தொடர்பாகவும், யாழ் மாவட்ட மக்கள் அனைவருக்கும் தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும் உரிய தரப்பினருடன் தொடர்ச்சியாக பேசி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   நன்றி தினகரன் 





No comments: