வெள்ளம் - மலையாளத் திரை - கானா பிரபா


“சொந்தத் தொழிலா?  நானா?
“டாக்டர் ! நான் எல்லாக் கதவுகளையும் தட்டிப் பார்த்து விட்டேன், யாரும் வேலை தரமாட்டேன் என்கிறார்கள் 
என்ன செய்வதென்றே தெரியவில்லை.
 
“முரளி !  நீ ஏன் சொந்தமாகத் தொழில் தொடங்கக் கூடாது?”

பணத்துக்கு எங்கே போவேன்?”

“உன்னிடம் இல்லாத முதலீடா?
  என்ன புரியவில்லையா?
  அவமானம்
  எத்தனை அவமானங்களைச் சேமித்து வைத்திருக்கிறாய்
  அது போதாதா?”

நடு ரோட்டில் விரக்தியில் நின்ற முரளிக்கு அந்த வைத்தியரின் அறிவுரை தான் கடைசி அஸ்திரம்.

இதே வைத்தியரின் தான் இந்த மொடாக் குடிகாரன் முரளி தன் தீராக் குடி நோயிலிருந்து விடுபட சிகிச்சை எடுத்துத் திரும்பியவன்.

Murali Kunnumpurath இன்று கேரளாவை மையப்படுத்திய  பெரும் கோடீஸ்வரர். முப்பது நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட முகவர்களைத் தன்னகத்தே கொண்டுள்ள உயர் ரக செங்கல் தகடு (tile) நிறுவனத்தின் சொந்தக் காரன். அந்த நிறுவனத்தின் பெயர் என்ன தெரியுமா?
Waterman


Waterman எவ்வளவு பொருத்தம் பாருங்கள். சதா குடி வெள்ளத்தில் மிதப்பவன் இந்த முரளி.

தன் ஒரே பெண் குழந்தை பெற்றோர் ஆசிரியர் கூட்டத்துக்கு அப்பா தான் வர வேண்டும் என்று கேட்டால் சரியென்று கூடப் போவான். ஆனால் பள்ளிக் கூடத்தின் படிக்கட்டிலேயே அரை நிர்வாணியாகக் குடி வெள்ளத்தில் கிடப்பான்.

இவன் செத்தால் தான் நிம்மதி என்ற எல்லைக்குப் போய் விட்ட முரளியின் பெற்றோர்,

இனியும் இந்த வீட்டில் இருந்தால்
என் மகளின் வாழ்க்கையும் வெறுத்து விடும் என்று வீட்டை விட்டு வெளியேறும் முரளியின் மனைவி. 

பாழாய்ப் போன குடி சமூகத்தில் முரளியைக் கள்ளனாக்குகிறது.
ஒரு கட்டத்தில் கொலை முயற்சி வரை போய் போலீஸ் காவலில் இருக்கிறான்.
ஒட்டியிருக்கவே பயப்பட்டு ஒதுங்குகிறார்கள் முரளியின் நண்பர்கள்.

ஆனால் போதை விட்டால் தானே
குடிக்கக் காசில்லாமல் யாரோ குடித்துப் போட்ட வெற்றுப் பிளாஸ்டிக் குவளையைக் கூட நக்கிப் பார்க்கிறான்.

இந்த “சாராய வெள்ளம்” முரளி மதுப்பழக்கத்தில் இருந்து மீண்டது மட்டுமா சாதனை? 
வெள்ளத்தை (நீர்) வைத்தே ஒரு புதிய உற்பத்தியைச் செய்து காட்டுகிறான். அதுதான் புதுவகை சீதோஷ்ண நிலைக்குத் தாக்குப் பிடிக்கும் Tiles. 

முரளி குன்னம்புரத் என்ற் இளம் தொழிலதிபர் வாழ்க்கையின் நிஜப் பதிவாக வெள்ளம் என்ற மலையாளப் படம். பிரஜேஷ் சென் எழுதி இயக்கியிருக்கிறார்.

ஏதாவது படம் பார்க்க வேண்டும், அதுவும் கொஞ்சம் கஷ்டப்படாமல் இயல்பாக மனதை வைத்துக் கொண்டு பார்க்க வேண்டும் என்றால் மலையாளத்தில் ஜெய்சூர்யாவின் படங்களைப் பார்ப்பேன். என் நினைப்பு பொய்க்காது. இதுவும் அப்படியே. பெரும் சினிமாத்தனத் திருப்பங்கள் இல்லாத இயல்பான மெது ஓட்டத்தில் பயணிக்கும் படம். ஆனால் முரளி என்ற குடிகாரனைப் பின் தொடர்ந்து பார்த்தால் அற்புதமான அனுபவம் கிடைக்கும். அந்த வெற்றுப் பார்வை, தோல்வியில் சலித்த நடை, தெனாவெட்டுக் குடிகாரத் தனம், ஆற்றாமை இவற்றின் ஒட்டு மொத்தம் ஜெய்சூர்யாவுக்கு எப்போதோ தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும். இந்த வெள்ளம் ஆவது கரை சேர்க்குமா?

“குடியில் இருந்து மீண்டு திரும்பியவனுக்குத் தேவை நல்ல பிடிமானம்”
என்று சொல்லும் அந்த வைத்தியரின் போதனை தான் முரளியின் வாழ்க்கையையும் மீட்டெடுத்திருக்கிறது.

கானா பிரபா

No comments: