மவுண்ட் றூயிட் தமிழ்க் கல்விநிலைய மாணவர்களின் காணொளி நிகழ்வுகள் இணையதளத்தில் ----------------------------- பரமபுத்திரன்


 


 

மவுண்ட்றூயிட் தமிழ்க்கல்வி நிலையத்தின் முப்பது ஆண்டுகள் நிறைவினைக்  கொண்டாடும் முகமாக மாணவர்களின் கலையுணர்வுடன் கூடிய தமிழ் நிகழ்வுகளை இணைய வெளியில் உலா வரச்   செய்துள்ளனர்  மவுண்ட்றூயிட் தமிழ்க்கல்வி நிலையத்தினர். இந்நிகழ்வுகள் யாவும்  2020 ம் ஆண்டு மவுண்ட்றூயிட் தமிழ்க்கல்விப்  பள்ளியில் தமிழ்கற்ற முன்பள்ளி முதல் உயர் வகுப்பு வரையான மாணவர்களின்  திறன்களை வெளிக்காட்டும் அதேவேளை, பள்ளியின் பழைய மாணவர்களையும் இணைத்து   இணையத்தில் வலம் வரச்செய்துள்ளனர்.

 


 

இணையதளத்தில் தங்களது நிகழ்வுகளை தமது பாடசாலை தொடர்பாக பாடசாலையின் நோக்கம், வாழ்த்துக் கவிதைகள், பழைய மாணவர்களின் அனுபவப் பகிர்வுகள் என்பவற்றுடன் முன்பு படித்த மாணவர்களின் பிள்ளைகளின் செய்திகள் என்பவற்றைக் ‘Home’ எனும் பகுதியினுள் பதிவேற்றியுள்ளனர்.  இதன் மூலம் பாடசாலை இயங்குவதன் அடிப்படை நோக்கங்களைக் கூறுகின்ற அதேவேளை இதன்மூலம் கிடைத்த நன்மைகளையும் வெளிக்கொணர முயற்சித்துள்ளனர்.

 


 

அடுத்ததாக தமது பாடசாலை மாணவர்களின் ஆக்கத்திறன்களை மூன்று  பாகங்களாகப் பிரித்து ஆரம்பநிலை, இடைநிலை, முதுநிலை மாணவர்கள் என வகைப்படுத்திப்  பார்வைக்கு விட்டுள்ளனர். இதில் கவிதைகள், ஆடல்  பாடல் நிகழ்வுகள், பேச்சுகள், கதைகூறல்,  விளையாட்டுகள், பட்டிமன்றம், வாத்திய விருந்து,  எனப் பலவகை நிகழ்வுகளைத் தொகுத்தளித்துள்ளனர். இந்நிகழ்வுகள் யாவும் பெற்றோர்களின் உதவியுடன் ஆசிரியர்களால் பயிற்றுவிக்கப்பட்டு  மவுண்ட்றூயிட் தமிழ்க்கல்வி நிலையத்தின் தலைவர் கில்பேட் தேவதாசன், அதிபர் பாலசுப்ரமணியம் முரளிதரன், மற்றும் நிர்வாக உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் முன்னைநாள் பள்ளித் தலைவர்களாகப்   பங்காற்றிய  திரு சிவரத்தினம் சுதாகரன், திரு சிங்கநாயகம் சிவசங்கர் ஆகியோரினால் காணொளிப்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு சிவரத்தினம் சுதாகரன்  அவர்களால் படத்தொகுப்பு மற்றும் இணைய ஒழுங்கமைப்புகள்   செய்யப்பட்டு,  19/12/2020 அன்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

 



 

ஆரம்பநிலை மாணவர்களின் நிகழ்வுகளாக முன்பள்ளி மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களான முரளீதரன் தயாளினி, விஜயசங்கர் சரசுவதி ஆகியோரின் வழிகாட்டலில் பாரதியாரின்  ஓடி விளையாடு பாப்பா பாடலுக்கு ஓடி விளையாடுகின்றனர். அதேபோன்று  மழலையர்கள் தங்கள்  மழலைப்பேச்சு மூலம் கதை சொல்லுதல், பாட்டுப்பாடுதல், அபிநயம் செய்தல் போன்ற பல்வேறு நிகழ்வுகளை செய்துகாட்டியுள்ளனர். மேலும் ஆண்டு ஒன்று மாணவர்கள் ஒளவையாரின் ஆத்திசூடியைப்  பாடி மகிழ்கின்றனர். அடுத்து ஆண்டு இரண்டு மாணவர்கள் தமிழ் மொழியின் சிறப்புகளைக் கூறி பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பாடல் ஒன்றையும் பாடுகின்றனர். இதேபோல ஆண்டு மூன்று மாணவர்கள் கடவுள் தந்த அழகிய வாழ்வு எனும் பாடலை பின்னணி இசைக் கேற்பப்  பாடியுள்ளனர். மேலதிகமாக  சில மாணவர்களின் பாடலுக்கான நடனமும், நிலா தொடர்பான கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.  

 

 


 

இடைநிலை மாணவர்களின் நிகழ்வுகளாக ஆண்டு நான்கு மாணவர்கள் சில பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடிக் காட்டுகின்றனர். மற்றும் ஆண்டு ஐந்து மாணவர்கள் மவுண்ட்றூயிட் தமிழ்க்கல்வி நிலையத்தின் பிறந்த நாளைக் கொண்டாடுவதுடன்  தனி நிகழ்வுகளும் செய்துள்ளனர். இதேவேளை ஆண்டு ஆறு மாணவர்கள் கல்வியின் நோக்கம் பற்றி எடுத்துக் கூறுகின்றனர். ஆண்டு  7 மாணவர்கள் அவுத்திரேலியாவில் தமிழ் கற்பதால் நன்மை உண்டு/ இல்லை என்ற தலைப்பில் பட்டிமன்றம் ஒன்றை நிகழ்த்தியுள்ளனர். இந்நிகழ்வின் நடுவராக பருணிதன் இரங்கநாதன் அவர்கள் பங்குபற்றி பட்டிமன்றத்தை நெறிப்படுத்தியுள்ளார்.

 

  


 

முதுநிலை  மாணவர்களின் நிகழ்வுகளாக ஆண்டு எட்டு, ஒன்பது, பத்து மாணவர்களின் பாட்டு, கதை, நேர்காணல், எண்ணப் பகிர்வு, கவிதைகள், வாத்திய இசை என்பன இடம்பெற்றுள்ளன. ஆரம்பநிலை, இடைநிலை, முதுநிலை இந்த மூன்று பாகங்களும் மாணவர்கள் நிகழ்வுகளைக் காட்டுகின்றது. இத்தொகுப்பின் ஐந்தாவது பிரிவாக ஆண்டு மலர் 2020 இலத்திரனியல் புத்தகமாக இணைக்கப்பட்டுள்ளது. இந்நூல் ஆனது மவுண்ட் றூயிட் தமிழ்ப் பாடசாலை, தமிழ், மற்றும் மாணவர்கள்  தொடர்பான செய்திகளை வெளிக்கொணர்கின்றது. இணைய தளத்தில் இந்நிகழ்வுகள் யாவையும் பார்க்க இணையும் வழி

 

https://sites.google.com/mtsc.org.au/mtsc-ebook

 







No comments: