எழுத்தும் வாழ்க்கையும் அங்கம் – 48 இடதுசாரி இலக்கியவாதிகள் இணைந்த இலங்கை – தமிழக உறவு ! இலக்கிய ஆய்வுக்கு மாமனாரை தெரிவுசெய்த மருமகள் !! முருகபூபதி



சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுடன்  மூன்று திரைப்படங்கள் பார்க்கச்சென்றேன்.

அதில்  ஒரு தமிழ்ப்படத்தை  பார்க்குமாறு எனக்கு பரிந்துரை செய்தவர் அறந்தை நாராயணன். அது கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவர் தோழர் தா. பாண்டியனின் சங்கநாதம்.

மற்றது, சுஜாதாவும் கவிஞர் அக்கினிபுத்திரனும் குறிப்பிட்ட ஓம்பூரி நடித்த அர்த்சத்யா திரைப்படம்.

எவரது சிபாரிசுகளும் இன்றி நானே தெரிவுசெய்து நண்பர்களை அழைத்துச்சென்ற படம் மணிவண்ணனின் நூறாவது நாள்.

இந்தப்படத்தைப் பார்த்துவிட்டுத்தான் சென்னையை கலக்கிய ஓட்டோ சங்கர்,  பல கொலைகளை செய்து புதைத்திருப்பதாக பின்னர் செய்திகள் வந்தன. அவனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. அவனது இறுதித்தருணம் குறித்து ஒரு விவரணப்படமும்  வெளியாகியுள்ளது.

ஏற்கனவே அர்த்சத்யா பற்றி எனது சினிமா சம்பந்தப்பட்ட பத்திகளில் குறிப்பிட்டுள்ளேன்.

சங்கநாதம் திரைப்படத்தை நான் பார்க்கவிரும்பியதற்கு


முக்கிய காரணம்,  அதனைத் தயாரித்தவரும்,  அதற்கு கதை வசனம் எழுதியவருமான தோழர் தா. பாண்டியனை ஏற்கனவே இலங்கையில் சந்தித்திருக்கின்றேன்.

  பாரதி நூற்றாண்டு காலம்  தொடங்கிய காலப்பகுதியில் அவர் எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினால்  இலங்கைக்கு  அழைக்கப்பட்டிருந்தார்.

பாரதி தொடர்பாக நாம் அறியாத பல செய்திகளையும் அவர் அப்போது சொல்லியிருந்தார்.  அவர் தமிழகம் திரும்பு முன்னர் கொழும்பில்,  இலக்கிய நண்பர் ரங்கநாதன் இல்லத்தில் தேநீர் விருந்து வழங்கினோம்.

அதில் பேராசிரியர் கைலாசபதி, சி. வி . வேலுப்பிள்ளை, உட்பட பல ஆளுமைகள் கலந்துகொண்டனர்.


சென்னையில் மேற்கு அண்ணா நகரில் தனது மனைவி அசுந்தாவுடன் வசித்த நண்பர் மு. கனகராசன் என்னை தி.நகரிலிருந்த கம்யூனிஸ்ட் கட்சி  தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்றார். அதற்கு பாலன் இல்லம் என்று பெயர். தோழர் பாலதண்டாயுதம் அவர்களின் பெயரில் அது விளங்குகிறது. இப்போது இது நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கு அடுத்திருப்பதுதான் நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் அன்னை இல்லம். அதற்கு முன்னால் நடிகை மனோரமாவின் பூபதி இல்லம் அமைந்திருந்தது.

அவற்றைத்தவிர்த்துவிட்டு, பாலன் இல்லம் சென்றேன். 

இந்த பாலன் இல்லம் பற்றி,  இந்த ஆண்டு பெப்ரவரி மாதம்


மறைந்துவிட்ட தோழர் தா. பாண்டியன்,   அது நவீனமயப்படுத்தி கட்டி முடிக்கப்பட்டபோது ,  ஜூனியர் விகடனுக்கு வழங்கிய நேர்காணலை இங்கே பதிவுசெய்கின்றேன்.

''1933 இல் எஸ்.வி.காட்கே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை ஆரம்பித்தார். ஜார்ஜ் டவுன், டேவிட்சன் தெரு, ஜோன்ஸ் தெரு, பெரியண்ண மேஸ்திரி தெரு என்று மாறி மாறி வாடகைக் கட்டடத்திலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில அலுவலகம் செயல்பட்டு வந்தது.

தோழர்கள் எம்.ஆர்.வெங்கட்ராமன், பி.ராம​மூர்த்தி, பாலதண்டாயுதம், சீனிவாசராவ், கல்யாண​சுந்தரம், மணலி கந்தசாமி, ஏ.எஸ்.கே போன்றோர் காலத்தில்கூட சொந்தக் கட்டடம் சாத்தியம் ஆகவில்லை. 1970 ஆம் ஆண்டு கட்சியின் மாநிலச் செயலாளராக எம்.கல்யாணசுந்தரம் இருந்த போதுதான் சொந்தக் கட்டடம் கட்ட வேண்டும் என்ற முயற்சி முன்னெடுக்கப்பட்டது. அந்த முயற்சி முன்மொழியப்பட்ட பொதுக்குழுவில் பாலதண்டாயுதம், கே.டி.ராஜு, கே.டி.கே.தங்கமணி, காத்தமுத்து ஆகியோருடன் நானும் இருந்தேன். ஆனால், நாங்கள் எதிர்பார்த்த விலையில் நாங்கள் எதிர்பார்த்த பகுதிகளில் சென்னையில் அப்போது எங்களுக்கு இடம் கிடைக்கவில்லை.


 மேற்கு வங்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ரேணு சக்கரவர்த்தி மூலம், சென்னை தி.நகரில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டுக்கு அருகில் ஓர் இடம் இருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அந்த இடம் உலகப் புகழ்பெற்ற நாட்டியக் கலைஞர்கள் உதய சங்கர், அமலா சங்கர் தம்பதியினருக்குச் சொந்தமானது.

நடனப் பயிற்சிக்கான கலாசாலையை அங்கு நடத்தி வந்தனர். திடீரென்று உதய சங்கர் நோய்வாய்பட்டதால், அவர் அந்த இடத்தை விற்றுவிட்டு கொல்கத்தா போக முடிவெடுத்தார்.

இந்தத் தகவல் அறிந்த பெரிய பணக்காரர்கள் எந்த விலையும் கொடுத்தும் அதை வாங்கத் தயாராக இருந்தனர். சிதார்


இசைக் கலைஞர் ரவிசங்கர், இயக்குநர் சத்யஜித் ரே, உதய சங்கர் எல்லாம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர்கள்.

எனவே, அவர்கள் இந்த இடத்தை எங்களுக்கே கொடுத்தனர்.            ' உங்களால் முடிந்ததைக் கொடுங்கள்’ என்று சொல்லிவிட்டனர். அரசு மதிப்பீட்டுத் தொகையைக் கணக்குப் போட்டு, அப்போதைய மதிப்புக்கு நான்கரை லட்சம் கொடுத்தோம். அந்தத் தொகையை வசூலிக்க தோழர்கள் பாலதண்டாயுதம், கல்யாணசுந்தரம் ஆகியோருடன் தமிழகம் முழுவதும் நானும் சுற்றினேன். அப்படித்தான் இந்த 49 சென்ட் நிலத்தை வாங்கினோம். அதில் நடனப் பயிற்சிக்காக அவர்கள் அமைத்திருந்த ஓர் அரங்கம் இருந்தது. ஒரு சிறிய வீடும் இருந்தது. மீதி இடம் அத்தனையும் பொட்டலாகக் கிடந்தது.


அப்போது (1973 ஆம் ஆண்டு) நாடாளு மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த பாலதண்டாயுதமும் மோகன் குமாரமங்கலமும் ஜப்பானுக்குச் செல்லும் வழியில் விமான விபத்தில் காலமானார்கள். அதனால், இந்த அலுவலகத்துக்கு தோழர் பாலதண்டாயுதம் நினைவாக 'பாலன் இல்லம்’ என்று பெயர் வைத்தோம். “

 ( நன்றி: ஜூனியர் விகடன்  - ஜோ.ஸ்டாலின்படம்:  சொ.பாலசுப்ரமணியன் )

பாலன் இல்லம்தான் தனது பல்கலைக்கழகம் எனச்சொல்பவர்தான் தோழர் தா. பாண்டியன்.

அவரது சங்கநாதம் திரைப்படம்தான் நகைச்சுவை நடிகர் செந்திலின் முதல் படம்.   ராஜேஷ் – ராஜலக்‌ஷ்மி – நாகேஷ் – வெண்ணிற ஆடை மூர்த்தி உட்பட பலர் நடித்த படம்.

இத்திரைப்படத்திற்கு  தாமரை இதழின் ஆசிரியர் குழுவிலிருந்த எழுத்தாளர் கே.சி. எஸ் . அருணாசலம் , எழுத்து ஓடும்போது பின்னணியில் ஒலிக்கும் பாடலை எழுதியிருந்தார்.

 “பாதிமல்லி பூவெடுத்து…. “ எனத்தொடங்கும் பாடல்.  இளையராஜா இசை.

 எழுத்தாளர் கே.சி. எஸ் . அருணாசலம்,  அதற்கு முன்னரும் சில திரைப்படப்பாடல்கள் எழுதியவர்.  தமிழக கம்யூனிஸ்ட் தோழர்களினால் உருவாக்கப்பட்ட பாதை தெரியுது பார் திரைப்படத்தில் வரும்  “ சின்னச்சின்ன மூக்குத்தியாம் சிவப்புக்கல்லு மூக்குத்தியாம்… கன்னிப்பொண்ணே… உன் ஒய்யாரம் கண்டு கண்ணைச்சிமிட்டுற மூக்குத்தியாம்… “ என்ற பாடலையும் இவர்தான் இயற்றினார்.

அந்தப்படத்தில்தான் ஜெயகாந்தனின்  “ தென்னங்கீற்று ஊஞ்சலிலே…  “  என்ற புகழ்பெற்ற  பாடலும் ஒலித்தது.

ஜனசக்தி கம்பைன்ஸ் தயாரிப்பில்  1984 இல் வெளிவந்த சங்கநாதம் திரைக்கு வந்த சந்தர்ப்பத்தில் சென்னையில் நான் நின்றதனால் அதனைப்பார்த்துவிட்டு,  பாலன் இல்லம் சென்று,  கவிஞர் கே.சி. எஸ். அருணாசலம் ,  தா. பாண்டியன் ஆகியோரைச் சந்தித்தேன்.

அவர்களும் 1983 கலவரம் பற்றிய செய்திகளையே கேட்டறிந்தனர். 

தோழர்கள் பாலதண்டாயுதம், கல்யாணசுந்தரம், தா. பாண்டியன் ஆகியோரும் ஜீவானந்தமும் வெவ்வேறு காலப்பகுதியில் இலங்கை வந்தவர்கள்.

நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்தபின்னர், இடதுசாரி எழுத்தாளர்களான தாமரை மகேந்திரன், பொன்னீலன் மற்றும் வல்லிக்கண்ணன் ஆகியோரும் எமது சங்கத்தின் சார்பில் இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையைப்போன்று தமிழ்நாட்டிலும் கம்யூனிஸ இயக்கம் வலது – இடது என்றுதான் பிரிந்திருக்கிறது.  வலது கம்யூனிஸ்ட்  எழுத்தாளர்கள் போன்று இடது கம்யூனிஸ்ட் எழுத்தாளர்கள் கோமல் சாமிநாதன், முனைவர் மூர்த்தி, பேராசிரியர் அ. மார்க்ஸ்,  கு. சின்னப்ப பாரதி ஆகியோரும் இலங்கை வந்திருக்கிறார்கள்.

இவர்கள் அனைவரும் ஈழத்து எழுத்தாளர்களை நேசித்தவர்கள். அவர்களுடன் உறவைப்பேணியவர்கள்.  டொமினிக் , டொமினிக் ஜீவா என பெயர் மாற்றிக்கொண்டது தோழர் ஜீவானந்தம் அவர்களுடன் ஏற்பட்ட தோழமையினால்தான்.

பாலதண்டாயுதம் 1972 ஆம் ஆண்டு மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் மாநாடு அட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரியில் நடந்தபோது கலந்துகொண்டார்.

அன்றுதான் கோகிலம் சுப்பையாவின் ( வீரகேசரி பிரசுரம் ) தூரத்துப்பச்சை நாவலும் வெளியிடப்பட்டது.

மல்லிகையால் அறிமுகமாகி, முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினால் புடமிடப்பட்டமையால் தமிழக முற்போக்கு எழுத்தாளர்களுடன் இந்த இடது - வலது அலைப்பறைக்கு அப்பால் நேசத்துடன் உறவாடியிருக்கின்றேன்.

மற்றும் ஒரு வலது கம்யூனிஸ்ட் கட்சி எழுத்தாளரும், பாரதி இயல் ஆய்வாளருமான தொ.மு. சி. ரகுநாதனுக்கும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களுடன் நெருக்கமான தொடர்பு இறுதிவரையில் நீடித்திருந்தது.

நான் அவரது சென்னை வீடு கே.கே. நகரிலிருந்தபோது, அங்கு அப்போது சென்றேன்.  அச்சமயம் அவர் சி.வி. வேலுப்பிள்ளையின் இனிப்படமாட்டேன் நாவலை அங்கே அச்சிடக்கொடுத்துவிட்டு, அதனை ஒப்புநோக்கிக்கொண்டிருந்தார். அத்துடன் இளங்கோவடிகள் யார்..?  என்ற ஆய்வு நூலையும் வீட்டிலிருந்து எழுதிக்கொண்டிருந்தார்.

நான் பாதியில் எழுதிவைத்திருந்த இலங்கையில் பாரதி நூலை அவரது மேற்பார்வைக்கு கொடுத்தேன்.   முழுவதையும் எழுதித்தரச்சொன்னார்.

சென்னையிலிருந்து அந்த வாரம் நான் எனது அப்பாவின் உறவினர்களைப்பார்ப்பதற்காக மதுரை, திருநெல்வேலி, சாத்தூர்,  ஶ்ரீவைகுண்டம் எங்கும் செல்லவேண்டியிருந்தது.

ரகுநாதன் எமது உறவினர்களின் முகவரிகளை  எழுதித்தந்தார். அத்துடன் அவர் சொன்ன புதியசெய்தியும் என்னைக் கவர்ந்தது.

அவரது மூத்த மகன் ஹரீந்திரன் மணம்முடித்தது எனது அண்ணி முறையான மாலதியை. அவர் திருநெல்வேலியில் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றிக்கொண்டிருந்தார்.

அவர் தனது MPhil ஆய்வுக்கு ரகுநாதனின் படைப்புகளைத்தான் எடுத்திருந்தார்.  இதுபற்றி ஆனந்தவிகடன் இதழ் Cover Story எழுதியிருந்தது.   

“ மாமனார்  மருமகளை தேர்வுசெய்கின்ற காலமும் இருந்தது, தனது ஆய்வுக்காக மாமனாரையே மருமகள்  தெரிவுசெய்யும் காலமும் இலக்கியத்தில்  வந்துள்ளது   “ என்ற தொனியில் அந்தப்பதிவு மாலதி ஹரீந்திரனின் படத்துடன் வெளியாகியிருந்தது.

அத்துடன், மாலதி  கவிதைகளும் எழுதுபவர். அவரது கவிதை நூலுக்கு கவியரசு கண்ணதாசன்தான் அணிந்துரை எழுதியிருந்தார்.

இந்தத்தகவல்களை மாலதியை திருநெல்வெலிக்குச்சென்று பெருமாள் புரத்தில் சந்தித்தபோது தெரிந்துகொண்டேன்.

மேற்கு அண்ணா நகரில் நண்பர் கனகராசன் குடியிருந்த தொடர்மாடிக்குடியிருப்பில்தான் தமிழர் விடுதலைக்கூட்டணித்தலைவர் ஆனந்தசங்கரியும் தற்காலிகமாக வீடு எடுத்து தங்கியிருந்தார். அவருக்கும் இலக்கியவாதிகளுடன் தொடர்பிருந்தது.

முன்னர் அவர் கொழும்பில் சமூக அரசியல் விரிவுரையாளராக பணியாற்றியபோது, அவரது அறை நண்பராக இருந்தவர்தான் கவிஞர் ஈழவாணன். அத்துடன் எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரனின் உறவினருமாவார்.

ஆனந்தசங்கரி இலங்கை செல்லும் சந்தர்ப்பத்தில் அந்த வீட்டின் சாவி, கனகராசனிடத்திலிருக்கும். நான் சென்றவேளையில் ஆனந்தசங்கரி இலங்கையிலிருந்தார். அந்தத்  தொடர்மாடிக்குடியிருப்பில் அடிக்கடி தண்ணீர் தட்டுப்பாடும் வரும்.

சில நாட்கள் நான் அவரது வீட்டின் குளியலறையையும் பயன்படுத்திக்கொண்டேன்.  அவர்  வந்ததும், அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன். கவிஞர் ஈழவாணனின் மறைவுச்செய்தி அறிந்து மேலதிக தகவல்கள் கேட்டார்.

ஈழவாணனின் மறைவின்போதும் நான் சென்றிருந்தமையால், விபரங்களை கூறினேன்.  ஒருநாள் காலையில் நண்பர் பிரேம்ஜி திருச்சியில் தங்கியிருந்த தமது குடும்பத்தினரை பார்த்துவிட்டு, சென்னை வந்து அங்கே தங்கினார்.

நாம் நால்வரும் நீண்டநேரம் இலங்கை நிலைவரங்கள் பற்றித்தான் பேசினோம்.

ஆனந்தசங்கரி அரசியல்வாதி, நானும் கனகராசனும், பிரேம்ஜியும் அரசியல் தெரிந்த இலக்கியவாதிகள்.

இலங்கைத்தமிழர்களின் எதிர்காலம் குறித்து நீண்டநேரம் பேசினாலும் – விவாதித்தாலும் அந்தப்பிரச்சினை இடியப்பச்சிக்கலாகவே புலப்பட்டது.

கனகராசன்,  சில பிரசுரங்களை எழுதினார். அத்துடன் உமா மகேஸ்வரனின் புளட் இயக்கத்துடனும் நெருங்கிய தொடர்பிலிருந்தார்.

 விஜயகுமாரணதுங்கவும் சந்திரிக்காவும் உமா மகேஸ்வரனை 1985 இல்  டில்லியில் சந்திக்கவந்தபோது உடனிருந்தவர். பின்னர் திம்பு பேச்சுவார்த்தைக்கும் உமாவால் அனுப்பிவைக்கப்பட்டவர்.

இதில் இணைக்கப்பட்டுள்ள படத்தில்  கையில் ஒரு ஆவணத்துடன் சாய்ந்து நிற்பவர்தான் மு.கனகராசன்.

அந்தப்படத்திலிருக்கும் உமா, விஜயகுமாரணதுங்க, மற்றும் அவரது மக்கள் கட்சியைச்சேர்ந்த மற்றும் ஒரு தோழர்                              ( தாடிவைத்திருப்பவர் ) ஆகியோர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கொல்லப்பட்டனர்.

மு. கனகராசன் புற்றுநோய் வந்து மரணித்தார். அவரது கல்லறை வவுனியா மயானத்திலிருக்கிறது.

சந்திரிக்காவும் இலங்கை அதிபராகவிருந்தபோது ஒரு தற்கொலைத்தாக்குதலில் மயிரிழையில் உயிர்தப்பி,  ஒரு கண் பார்வையை முற்றாக இழந்தார்.

இந்தப்பதிவின் தொடக்கத்தில் குறிப்பிட்ட தோழர் தா. பாண்டியனும் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டவேளையில்  கடுங்காயங்களுடன்  உயிர் தப்பியவர்தான். அவர் இந்த ஆண்டு மரணிக்கும் வரையில் அவரது உடலில்  அந்த வெடிகுண்டின் துகள்கள் பல இருந்தன.

இவ்வாறு அவச்சாவுகளையும், மரணங்களையும் படுகாயங்களையும் வலிகளையும்  கடந்து வந்த கதைதான் எனது இந்த எழுத்தும் வாழ்க்கையும் தொடர்.

திரும்பிப்பார்க்கும்போது,  எத்தனை வகையான மனிதர்களை அனுபவங்களை சந்தித்திருக்கின்றேன் என்ற பிரமிப்பு வருவதும் தவிர்க்கமுடியாதது.

( தொடரும் )

letchumananm@gmail.com

No comments: