எங்கள் ஊர் கோவூர் ( சிறுகதை ) முருகபூபதி

                                                                    


ங்களுக்கு இலங்கையிலிருந்த ஆபிராகாம் கோவூரைத் தெரியுமா…? 70 -80 காலப்பகுதியில் பகுத்தறிவாளராகவும் அதிரடியாக கருத்துச்சொல்பவராகவும் விளங்கியவர்.

அவரை கொழும்பில் பாமன்கடை வீதியில்  வசித்த ஒரு இலக்கிய நண்பரை பார்க்கச்செல்லும் வேளைகளில் கண்டிருக்கின்றேன்.  அவரது  வீட்டு முற்றத்தில்  வளர்க்கப்பட்ட  பூமரங்களுக்கு  தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருப்பார். ஆனால், ஒருநாளும் பேசியதில்லை. அவரது மேடைப்பேச்சைக் கேட்டு ரசித்திருக்கின்றேன்.

கட்டுப்பெத்தை  பல்கலைக்கழக வளாகத்தின் தமிழ்மாணவர்


மன்றம் ஒருதடவை  இராமகிருஷ்ண மண்டபத்தில் நடத்திய கலைவிழாவில், அவரும் வந்து உரையாற்றியிருக்கிறார்.

 “ மழைவேண்டி யாகம் வளர்க்கிறார்கள். அவ்வாறான யாகங்களுக்காகவே ஒரு அமைச்சகத்தை உருவாக்குவார்களா..?  “   என்று கேலியாக அவர் அன்று சொன்னபோது சபை சிரித்தது.

அவரது மனைவி இறந்ததும், சடலத்தை மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்போகும் செய்தியையே மரண அறிவித்தலாக இலங்கை வானொலிக்கு  அவர் வழங்கியபோது ஶ்ரீமா அம்மையாரின் அன்றைய அரசு அதற்கு தடைவிதித்தது.

பின்னாளில் ஆபிரகாம்கோவூரின் உடலும் மருத்துவக்கல்லூரிக்குத்தான் வழங்கப்பட்டது. அவருடைய எலும்புக்கூட்டையும் படம் எடுத்து ஒரு ஊடகம் வெளியிட்டதும் நினைவிருக்கிறது.

ஆபிராகாம் கோவூரின் அனுபவங்களை வீரகேசரி பத்திரிகையாளர் தனரத்தினம் தொடர்ந்து எழுதினார். அது புத்தகமாகவும் வந்ததும்  உங்களுக்கு  நினைவிருக்கிறதா..?

சரி, போகட்டும் அவரது நம்பிக்கை என்ற அனுபவப்பதிவைத் தழுவி கொழும்பில் எங்கள் தமிழ்க்கலைஞர்கள் ஒரு நாடகத்தை மேடையேற்றினார்களே…! அதில் ஆபிரகாம் கோவூராக இலங்கை வானொலி கலைஞர் ஜோர்ஜ் சந்திரசேகரன் நடித்தாரே…?  இதுவெல்லம் உங்களில் எத்தனைபேருக்கு நினைவில் தங்கியிருக்கிறது…!

வருடங்கள் தசாப்தங்களாக ஓடிவிட்டன. மறந்திருப்பீர்கள். நான் அன்று கண்ட ஆபிராகாம் கோவூரின் தோற்றத்திலேயே ஒருவரை நான் தற்போது வாழும் ஊரில் பார்த்திருக்கின்றேன். பேசியிருக்கின்றேன்.

உலகத்தில் ஒருவரைப்போல் உருவத்தில் ஏழுபேர் இருப்பார்களாமே…!? அது உண்மையா..!? கோவூருக்கு மறுபிறவியில் எல்லாம் நம்பிக்கை இல்லை. எனக்கும்தான்! அதனால்,  இலங்கையில் நான் பார்த்த கோவூர் இறந்து, தற்போது நான் வாழும் நாட்டில் நான் வசிக்கும் ஊரில் வந்து பிறந்திருக்கமாட்டார்.


மாலைவேளையில் அருகிலிருக்கும் பூங்காவைச்சுற்றி நான் நடைப்பயிற்சி செய்யும்போது அவரும் தனது செல்ல நாயை அழைத்துக்கொண்டு வருவார். அவரது ஒருகை நாயின் கழுத்தில் பிணைக்கப்பட்டிருக்கும் நீண்ட பட்டியின் ஒரு முனையிலிருந்தால், மறு கை அவரது வெண்மையும் கருமையும் கலந்த தாடியை  நீவியவாறு வருடிக்கொண்டிருக்கும்.

முதல் நாள் சந்திப்பில், எங்கள் தேசத்தில் நான் பார்த்த கோவூர் பற்றி அவரிடம் சொல்லி,   “ தோற்றத்தில் உங்களுக்கும் அவருக்கும் ஒற்றுமை இருக்கிறது  “  என்றேன்.

            நடையை சற்று நிறுத்தி, தாடியை வருடிக்கொண்டு, தோளை குலுக்கிச் சிரித்துவிட்டு,  “ அவர் இன்னும் இருக்கிறாரா..?  “ எனக்கேட்டார்.

 “ இல்லை. இறந்துவிட்டார். தான் இறந்தபின்னரும் தனது உடல் மற்றவர்களுக்கு குறிப்பாக மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு உதவவேண்டும் என்ற நோக்கத்தில் கொடுத்துவிட்டார். அங்கே இப்போது அவரது எலும்புக்கூடுதான் எஞ்சியிருக்கிறது  “ என்றேன்.

அவரது கைப்பிடியிலிருந்த நாய் திமிறிக்கொண்டு ஓட முயன்றது. அவரது வாயிலிருந்து  F  என்ற எழுத்தில் தொடங்கும்


இங்கு பொதுமைப்படுத்தப்பட்ட ஒரு சொல் உதிர்ந்தது. அதன் அர்த்தம் எனக்கும் அவரது நாய்க்கும், ஏன் உங்களுக்கும்  புரிந்திருக்கும். அவர் அந்தச்சொல்லை தனது செல்லப்பிராணியிடம் அடிக்கடி சொல்லியிருக்கலாம்.

 “ உமது நாட்டிலிருந்த உமது நண்பர், நல்லதோர் சேவையை செய்துள்ளார். எனக்கும் அவ்வாறுதான் செய்யவிருப்பம். நான் முதலில் இறந்துவிட்டால், இந்த எக்ஸெல் என்ன செய்யும்..? என்பதுதான் யோசனை, கவலை  “ என்றார்.

அப்போதுதான் அவரது நாயின் பெயர் எக்ஸெல் என்பதை தெரிந்துகொண்டேன்.

 “ அவர் எனது நண்பர் இல்லை. சிறந்த பகுத்தறிவாளர். மூட நம்பிக்கைகளுக்கு எதிரானவர். சர்ச்சைக்குரிய பேச்சுக்களும் பேசுவார்.  “ என்றேன்.

தொடர்ந்து நடந்தோம்.   சில அடி தூரத்தில், அருகிலிருந்த சிறிய ஏரியிலிருந்து நீந்திக்கொண்டிருந்த வெள்ளை – கறுப்பு – பழுப்பு நிற வாத்துக்கள் சில கரைக்கு வந்து மேய்ந்துகொண்டிருந்தன.

எக்ஸெல் குரைத்ததும் அவை அனைத்தும் விருட்டென பாய்ந்து பறந்து ஏரிக்குள் குதித்து மீண்டும் நீந்தத் தொடங்கிவிட்டன.

அவரிடமிருந்து திமிறிக்கொண்டு வாத்துக்களை எட்டிப்பிடிக்க முயன்ற எக்ஸெல்லை மீண்டும் ஒரு F சொல்லி கடிந்து அடக்கினார்.

பரஸ்பரம் எங்கள் பெயர்களைச்சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்டோம். அவருடைய பெயர் டேனியல். எனது பெயரைச்சொன்னதும் உச்சரிக்க சிரமப்பட்டார். எளிதாக அவர் உச்சரிக்கும் வகையில் எனது பெயரின் இறுதி ஐந்து ஆங்கில எழுத்துக்களைச்சொன்னேன்.

இவ்வாறுதான் எங்கள் முதல் அறிமுகம்,  எங்கள் வீட்டுக்கு அருகாமையில் ஏரியின் பக்கத்தில் வாத்துக்கள் புடைசூழ, அவரது எக்ஸெல்லின் சிறு சிறு குரைப்புச்சத்தங்களுடனும், கொக்கட்டோ பறவையினங்களின் தொடர்ச்சியான ஓலம்போன்றதொரு ஒலி அலைகளுடனும் தொடங்கியது.

தன்னை டேனியல் என்று அழைப்பதில் சிரம் இருப்பின் டெனி என்று கூப்பிடச்சொன்னார். இந்த Pathy யும் டெனியும் அவ்வாறுதான் பேசிப்பழகத்தொடங்கினோம்.

குளிர் காலத்தில் நான் வெளியே நடைப்பயிற்சியை தவிர்த்துவிடுவேன். மனைவி நல்லதோர் ஆலோசனை சொன்னாள். அருகிலிருக்கும் பெரிய ஷொப்பிங் சென்டரில் தொடர்ச்சியாக சூடாக இருக்கும். அங்கே நடந்து திரியலாம் என்ற அவளது ஆலோசனையை பின்பற்றினால், வீட்டுக்கு வாங்கவேண்டிய பொருட்களின் பட்டியலையும் என் தலையில் சுமத்திவிடுவாளோ என்ற பயமும் வந்தது.

ஒருநாள் அந்த சுமையுடன் வெளியே வரும்போது, டெனி, அதுதான் எங்கள் ஊர் கோவூர் எதிர்ப்பட்டார். தனது எக்ஸெல்லுக்கு தினமும் போடும் Black Hawk   உணவுப்பொதியுடன் வந்தார்.  வீட்டுப்பொருட்கள் வாங்கிவருமாறு பட்டியல் எழுதிக்கொடுக்க அவருக்கு மனைவி இல்லை என்பது அன்றுதான் தெரியவந்தது.

             “ அது பெரிய கதை.  ஒருநாளைக்கு சொல்வேன் “  என்றவர், “  இந்த நாய் உணவு Black Hawk    விலை அதிகம்தான்.  அவள் ஜெனிக்கு கொடுக்கும் தாபரிப்பு பணத்தோடு ஒப்பிடும்போது இது விலை குறைவுதான்  “ என்றும் சொன்னார்.

எங்கள் ஊர், கிராமமும் அற்ற மாநகரமும் அற்ற சின்னஞ்சிறிய அழகிய நகரம். அதனால், ரயில் நிலைய, தபால் நிலைய, வங்கி  ஊழியர்கள் அனைவருக்கும் எனது முகம் ஞாபகத்திலிருக்கும்.

டெனியை இங்கெல்லாம் சந்திப்பதுண்டு. எப்பொழுதும் அவரது எக்ஸெல் நாய் அவருடன்தான் அலையும். தொடக்கத்தில் என்னைக்கண்டபோது குரைத்த அந்தப்பிராணி, பின்னர் சிறிய முனகலோடு சிநேகமாகிவிட்டது.

அதன் மேனியை தடவியதும்,  வாலை ஆட்டி நன்றி தெரிவிக்கும்.

ஒருநாள் டெனி எனது வீடு வரையில் நடந்துவந்து தனது வீடு இருக்கும்   நாற்சந்தியின் வலதுபுறம் திரும்பினார்.  என்னைக்கடக்கு முன்னர், எனது வீட்டு முற்றத்தில் மலர்ந்திருந்த மஞ்சள் நிற ரோஜாமலர் செடியில் தனக்கும் ஒரு தடி வெட்டித்தரவேண்டும் எனக்கேட்டார். 

மாலைவேளையில் வருவதாகச்சொல்லி, சொன்னவாறு அன்று மாலையே வந்தார். வந்தவரை மனைவிக்கும் அறிமுகப்படுத்தினேன். அவர் வசம் நின்ற எக்ஸெல்லைக்கண்டுவிட்டு மனைவி தயங்கி நின்றபோது, அவர் தாடியை வருடிக்கொண்டு சிரித்தார்.

“  இவர்தான் நான் உமக்குச்சொன்ன கோவூர்  “ என்றேன். மனைவி, இலங்கை கோவூரை மனதிற்குள் அழைத்திருக்கவேண்டும்.  மனைவியே அவருக்கு மஞ்சள் நிற ரோஜா செடியிலிருந்து ஒரு தடியை வெட்டிக்கொடுத்தாள்.

வீட்டுக்கு வந்து தேநீர் அருந்துமாறு அழைத்தேன். வேண்டாம் இப்போதுதான் பியர் குடித்துவிட்டு வருகிறேன் என்று மறுத்தார். அவருடன் நடைப்பயிற்சியில் ஈடுபடும்போது எப்போதும்  ஒருவகை பியர் வாடை வீசிக்கொண்டிருக்கும்.

ஒருநாள் தனது வீட்டுக்கு  என்னை அழைத்தார்.  பழைய வீடு. சிறிது சிறிதாக சிதிலமாகிக்கொண்டிருக்கிறது. வீட்டின் பின்புற காணியில் நீண்ட நாட்களாக புல் வளர்ந்து வெட்டப்படாமல் காட்சியளித்தது. வெய்யில் காலம் வருமுன்னர் வெட்டிவிடுங்கள் என்றேன்.

தாடியை வருடிக்கொண்டே, “  எனது தாடியும் இந்தப்புல்லும் ஒன்றுதான். அடிக்கடி வளரும். அதனால் வெட்டாமல் விட்டுவிட்டேன்  “ என்றார்.

 “ புல் வளர்ந்து புதர்மண்டினால் பாம்பு – பூச்சிகள் வரும். கோடைகாலத்தில் எதிர்பாராமல் காட்டுத்தீ பரவினால் உங்கள் வீட்டுக்கும் சேதம் அல்லவா..? “  என்றேன்.

 “ நீங்கள் சொல்வது எதுவும் வராது. எக்ஸெல் இருக்கிறது. அது ஊர்வன பறப்பனவற்றை பார்த்துக்கொள்ளும். தீ வந்தால் அதனை அணைக்க நான் இருக்கிறேன்.  “ என்று சொன்னவர் எனக்கும் ஒரு சிறிய பியர்போத்தலை நீட்டினார்.

பியர் வகைகள் பற்றிய  கலைக்களஞ்சியமே அவரது போதையில்  இரண்டறக்கலந்திருப்பதையும்  அன்றுதான் தெரிந்துகொண்டேன். வீட்டின் பின்வளவில் ஏராளமான பியர்போத்தல்கள் தூசி படிந்தும், அழுக்கேறியும் காணப்பட்டன.

 “ ஏன், இவற்றை அப்புறப்படுத்தாமல் இருக்கிறீர்கள்…?  “ எனக்கேட்டேன்.

 “ இந்த வீடும் காணியும் இப்படி இருந்தால்தான், அவள் அந்த பிட்ச்  இந்தப்பக்கம் வரமாட்டாள்.  “ என்றார்.

மனைவியை அவ்வாறு வசைபாடும் அளவுக்கு  அவள்மீது சொல்லித்தீரமுடியாத கோபமும் வெறுப்பும் இருந்தது. தனது மகனையும்  குடும்ப நலநீதிமன்றில் ஏதேதோ காரணங்கள் சொல்லி பிரித்தெடுத்துக்கொண்டு போய்விட்ட ஆத்திரமும் அவருக்குள் கனன்றுகொண்டிருந்தது.

அந்த வீட்டின் சுவரில் மாட்டியிருந்த குடும்பப்படம் ஒரு கிறிஸ்மஸ் காலத்தில் எடுக்கப்பட்டிருக்கவேண்டும். டெனியும் ஜெனிஃபர் என்ற அவரது மனைவியும் தங்கள் ஆண்குழந்தையை கிறிஸ்மஸ் தாத்தாவின் மடியில் அமரவைத்து எடுக்கப்பட்ட படம். டெனி மெலிந்து உயர்ந்திருந்தார். ஜெனிஃபர் பருத்த உடலுடன் காட்சியளித்தாள்.  குழந்தைக்கு மூன்று வயதிருக்கும்போது எடுத்த படம் என்றார்.

“  தனக்கு எக்ஸெல்லும் வேண்டும் என்றாள். ஒரு நாயோடு படுத்து பெற்றுக்கொள் எனச்சொல்லி விரட்டிவிட்டேன்  “ என அவர் சொன்னபோது சற்று திகைத்துவிட்டேன். 

மகனுக்கு பதினெட்டு வயது வரும்வரையில் மாதம் ஒருதடவை   எங்காவது சந்திப்பதாகவும், அவன் தாயிடம் வளருவதுதான் சரியானது என்று தீர்மானித்ததாகவும் சொன்னார். தற்போது அவனும் ஒரு காதலியைத்தேடிக்கொண்டு எங்கோ போய்விட்டதாகவும், ஜெனி தொடர்ந்தும் ஒருவனுடன் Living together ஆக வாழ்வதாகவும் சொன்னார்.

அவரது சோகமான கதையை ஒருநாள் எனது மனைவியுடன் பகிர்ந்துகொண்டபோது,  “ அந்த மனுஷனின் சகவாசம் இனி உங்களுக்கு வேண்டாம்  “ என்றாள்.

அதன்பிறகு டெனியை நான் எங்கு சந்தித்து பேசினாலும் வீடு திரும்பினால், அவர் பற்றிய பேச்சே எடுப்பதில்லை. அவரை பஸ்தரிப்பிடத்தில், வங்கியில், ரயில் நிலையத்தில் ஷொப்பிங் சென்டரில், நடைபயிற்சி மேற்கொள்ளும் பூங்காவில் எல்லாம் அடிக்கடி சந்திப்பேன்.

தனது வீட்டுக்கு வருமாறும், பியர் அருந்துவதற்கு தனக்கு கம்பனி கொடுக்குமாறும் அழைப்பார்.

 “ எனக்கு நீரிழிவு உபாதை வந்துவிட்டது. குடிப்பதில்லை  “ என்றேன். 

அவர் தாடியை வருடியவாறு ,   “ F   “  சொல்லை உதிர்த்துவிட்டு,                          “   அது உடலில் தங்காது, சிறுநீராகவே ஓடிவிடும்  “ எனச்சொன்னபோது வாய்விட்டுச்சிரித்தேன். 

இந்த நகைச்சுவையையும்   எனது மனைவியிடம் பகிர்ந்து அவளையும் சிரிக்கவைக்கலாம் என்ற யோசனையையும்  ஏனோ  தவிர்த்துவிட்டேன்.

நாட்கள் சக்கரம் பூட்டிக்கொண்டு விரைந்து ஓடிவிட்டன. ஒருநாள்  காலை  பொழுது புலரும்வேளையில் எனது வீட்டின் முன்னால் திடீரெனத் தோன்றினார்.

குளியலறையிலிருந்தேன். யாரோ கதவு தட்டுவதாக பதட்டத்துடன் வந்த மனைவி குளியலறைக் கதவைத்தட்டினாள்.

சிரமபரிகாரத்தை முடித்துக்கொண்டு வந்து, கதவைத்திறந்து பார்த்தால், டெனி கலவர முகத்துடன் நிற்கிறார்.

                                      காலை வணக்கம் சொன்னதற்கும் பதில் வணக்கம் சொல்லாமல்,  “ எக்ஸெல்லைக்  காணவில்லை. கண்டீர்களா…? “    எனக்கேட்டார்.  முகம் வாடியிருந்தது. கண்களும் கலங்கி சிவந்திருந்தது.

 “ வழக்கமாக காலையில் எனது படுக்கைக்கு வந்து காலை நக்கிச்சுறண்டி எழுப்பும். இன்று என்னருகில் வந்ததாகத் தெரியவில்லை. நானும் நன்றாக தூங்கிவிட்டேன். இரவு கொஞ்சம் அதிகமாகத்தான் நான் குடித்திருக்கவேண்டும். எங்கே போனதோ…?  “

எனது மனைவியும் வாசலுக்கு வந்து,  அவரது இழப்பின் சோகத்தைக்கேட்டு முகம் வாடினாள். நானும் டெனியும்  அயலில் இருக்கும் வீடுகளுக்குச்  சென்று அழைப்பு மணியை  அழுத்தியும் கதவு தட்டியும் விசாரித்தோம்.

அவர்கள் எல்லோருக்கும் என்னை நன்கு தெரியுமென்பதால் முகம் சுழிக்காமல் பதில் தந்தார்கள்.

டெனி,  அன்று மாலையே எக்ஸெல்லின் படம் அச்சிடப்பட்ட துண்டுப்பிரசுரங்களுடன் வந்தார். இருவரும் நான்கு வீதிகளுக்கும் சென்று மின்கம்பங்களில் ஒட்டினோம்.

தினமும் காலையும் மாலையும் எனது வீட்டு வாசல் வரையும் வந்து இன்னமும் எக்ஸெல் கிடைக்கவில்லை என்ற தீராத சோகத்தை பகிர்ந்துகொண்டார். சில நாட்கள் மனைவிக்குத் தெரியாமல், நடைப்பயிற்சிக்கு செல்வதாக பொய்சொல்லிவிட்டு, டெனியின் வீட்டுக்குச்சென்று அவருக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தேன்.

அந்தத்  தேவையும் சில நாட்களில் இல்லாமல்போய்விட்டது. அவரது வீடு பூட்டியே இருந்தது. எக்ஸெல்லைத் தேடி எங்காவது போயிருக்கலாம் என நம்பிக்கொண்டிருந்தேன். ஒருநாள் நான் வசிக்கும் வீதியில் அடுத்தடுத்து இரண்டு அம்பூலன்ஸ்களும் இரண்டு பொலிஸ்கார்களும் விரைந்தன.

அருகில் ஏதும் வாகன விபத்து நடந்திருக்கலாம் என எண்ணிக்கொண்டு வெளியே வந்து பார்த்தேன். நாற்சந்தியில் சிலர் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

என்ன நடந்திருக்கும்…?

அவ்விடத்திற்குச்  சென்றேன். சந்தியிலிருந்து பார்த்தபோது டெனியின் வீட்டு வாசலில் அம்புலன்ஸ்களும் பொலிஸ்கார்களும் தரித்து நின்றன.

பொலிஸ்கார்களின் மேலே மின்விளக்கு ஔிர்ந்த வண்ணமிருந்தது. அதிலிருந்து இறங்கியவர்கள் முகத்திற்கு வெள்ளை நிற மாஸ்க் அணிந்திருந்தனர்.

 “ அந்த வீட்டிலிருந்த முதியவர்  சில நாட்களுக்கு முன்னர் இறந்திருக்கவேண்டும். பிணவாடை வந்திருக்கிறது. யாரோ சொல்லி பொலிஸ், அம்பூலன்ஸ் வந்திருக்கிறது  “ என்று ஒரு கிழவி சொன்னாள்.

நான் திடுக்கிட்டு டெனியின் வீட்டுப்பக்கம்  விரைந்தேன். தெருவிலேயே நின்றேன். சுமார் ஒருமணித்தியாலத்தின் பின்னர் கருநீலநிற நீண்ட உறையில் டெனியின் உடல் மூடப்பட்டு வெளியே வந்தது. தூக்கிவந்தவர்களின் முகங்களில் வெள்ளை நிற கவசம்.

நானும் கைக்குட்டையால் மூக்கைப்பொத்திக்கொண்டு திக்பிரமையோடு நிற்கிறேன்.

 “ எக்ஸெல் காணாமல்போன கடும் சோகத்துடனேயே டெனி போய்ச்சேர்ந்துவிட்டார்.  “ என்று வீடு திரும்பியதும் மனைவியிடம் சொல்லிவிட்டு குளியலறை சென்றேன். தலையில் கொட்டிய தண்ணீரோடு கண்களிலிருந்தும்  கொட்டிய கண்ணீரும் கலந்து ஓடியது.

 “ டெனி விரும்பியவாறு அவரது உடல் மருத்துவபீடத்திற்கு போயிருக்குமா..?  “ என்று ஒருநாள் மனைவியிடம் கேட்டதற்கு, 

 “ யாருக்குத் தெரியும். அவரது மனைவி ஜெனியும் மகனும் அவரது செல்லப்பிராணி எக்ஸெல்லும் என்னவாகியிருப்பார்கள்..?  “ என்ற கேள்விதான் பதிலாக அவளிடமிருந்து வந்தது.

போய்ச்சேர்ந்தவர்கள் பற்றி அதிகம் பேசவிரும்பாதவள் எனது மனைவி. நான் போனவர்களைப்பற்றியே யோசித்துக்கொண்டிருப்பவன்.

மற்றும் ஒருநாள் மனைவியின் கேள்விக்கும் பதில் கிடைத்தது.  அந்தப்பதிலும் டெனியின் வீட்டு வாசலிலிருந்தே கிடைத்ததுதான் பேராச்சரியம்.

தினமும்  மாலையில்,  டெனியின் நினைவுகள் மனதில்  சஞ்சரிக்க, அவர் வாழ்ந்த வீதியில் அந்த வீட்டை கடந்து நடப்பேன். அவரும் அவரது எக்ஸெல்லும் என்னுடன் கூடவருவதுபோன்ற குருட்டுணர்வோடு நடப்பேன்.

அன்றும் ஒருநாள் மாலை டெனியின் வீட்டை கடந்தபோது இரண்டு கார்கள் நின்றன. ஒரு காரிலிருந்து இறங்கிய இரண்டு ஆண்கள் - கோர்ட் சூட் அணிந்தவர்கள்   “ For Sale “ என எழுதப்பட்ட  பெரிய பலகையை அந்த வீட்டின் முன்னால் தரையில் பதித்துக்கொண்டிருந்தார்கள்.

வீட்டின் முன்வாசல் கதவு திறந்திருக்கிறது. ஒரு குண்டான பெண் வாசலில் நின்றாள். அது ஜெனி – ஜெனிஃபர்தான். அருகில் நிற்பவன் அவளது   போய்ஃபிரண்டாக இருக்கவேண்டும் என்பது எனது ஊகம்.  அந்தக்காட்சிகள் எனக்கு வியப்பூட்டவில்லை.

ஒருகாரின் உள்ளே இருந்து வந்த குரைப்புச்சத்தம்தான் என்னை கூர்ந்து பார்க்கவைத்தது.  டெனியின் செல்ல நாய் எக்ஸெல் உள்ளே இருந்து, காரின் கண்ணாடியை கால்களினால் சுறண்டியவாறு குரைத்துக்கொண்டிருந்தது.

பெருமூச்சுவிட்டவாறு தொடர்ந்து  நடந்தேன். ஏதோ கண்ணில் தட்டுப்பட்டது போன்ற உணர்வோடு திரும்பிப்பார்த்தேன். அந்த வீட்டின் முற்றத்தில் எங்கள் வீட்டிலிருந்து டெனியால் எடுத்துச்செல்லப்பட்ட மஞ்சள் ரோஜாத்  தடி, செடியாக வளர்ந்து  மலர்களுடன் காட்சியளிக்கிறது.

( நன்றி : இலங்கை ஞானம் இதழ் – ஜூலை 2021 )

 


No comments: