இலங்கையில் எரிபொருள் விலையேற்றமும் எதிரணியின் ஆர்ப்பாட்டமும் ? ! அவதானி



தமிழ்நாட்டில்  ஒரு முதலமைச்சர் இருந்தார்.

அவரது பெயர் காமராஜர். 

இலங்கையில் ஒரு பிரதமர் இருந்தார்.

அவரது பெயர் தகநாயக்கா.

இவர்கள் இருவரையும் பற்றி இன்றைய தலைமுறையினருக்குத் தெரியுமா..? சமகால அரசின் அமைச்சர்கள் - நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிரணியிலிருப்பவர்களுக்காவது தெரியுமா..?  இந்த இரண்டு பெயர்களுக்குப்பின்னாலிருந்த எளிமையுமாவது தெரியுமா..?

எப்பொழுதும் மக்களுக்கு நினைவு மறதி இருக்கவேண்டும் என நினைப்பவர்கள்தான் அரசியல்வாதிகள். தேர்தல் காலங்களில் மேடைகளில்  தாம் வழங்கும் வாக்குறுதிளை மக்கள் மறந்துவிடல் வேண்டும் என்றுதான் எதிர்பார்ப்பார்கள்.

காமராஜர் தமிழக முதல்வராக பதவியில் இருந்தபோது அவர் பயணித்த அரசாங்க வாகனத்திற்கு முன்னாலும் பின்னாலும்  வாகனங்கள் பாதுகாப்பு சமிக்ஞை ஒலி எழுப்பிக்கொண்டு வந்திருக்கின்றன.

அந்தத்  தொடர் ஒலியினால் எரிச்சலடைந்த காமராஜர் தான் வந்த காரை நிறுத்தச்சொல்லி வெளியே இறங்கி,  “ அது என்ன சத்தம்..? நீங்கள் எல்லாம் யார்…?  “  எனக்கேட்டுள்ளார்.

முன்னும் பின்னும் வந்த வகனங்களிலிருந்த பொலிஸ் பாதுகாப்பு அதிகாரிகள்  “ அய்யா உங்களுக்கு பாதுகாப்புக்காக இவ்வாறு வருகின்றோம்  “ என்றனர்.

 “எனக்கு எதற்கு பாதுகாப்பு. உடனே திரும்பிச்செல்லுங்கள். உங்களுக்கு வேறு ஏதும் உருப்படியான வேலை இருந்தால் செய்யுங்கள்  “ என்று சொல்லி கலைத்துவிட்டார்.

இலங்கையில் ஒரே நாளில் பொதுத்தேர்தலை நடத்தி அரசின் நிதிவளத்தை சேமித்த கலாநிதி தகநாயக்காவும் மிகவும் எளிமையான மனிதர்தான். இவர் கல்வி அமைச்சராகவிருந்தபோது பாடசாலை மாணவர்களுக்கு மதிய


வேளையில் பசியாற்ற பணிஸும் பாலும் வழங்கியவர்.

அதனால் மாணவச்செல்வங்களினால் பணிஸ் மாமா எனவும் அழைக்கப்பட்டவர்.

அவர் பிரதமராக தெரிவானதும், அதிகாரிகள் அவரை பிரதமர் தங்கும் அலரிமாளிகைக்கு அழைத்துச்சென்றனர்.

“  எனக்கேன் இந்தப்  பெரிய மாளிகை. நான் குடும்பஸ்தனும் இல்லை. எனக்கு  உறங்குவதற்கு  சிறிய படுக்கையும் உணவுண்ண  பாத்திரமும் தண்ணீர் அருந்த தம்ளரும் போதும். என்னிடமிருக்கும் மாற்றுடைகளும் தாராளம். எனக்கு இந்த மாளிகையெல்லாம் வேண்டாம். தேவைப்படின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கும் சிராவஸ்தி விடுதி அறையையே பயன்படுத்திக்கொள்கின்றேன்  “ என்றார்.

“  அய்யா… நீங்கள் இப்போது நாட்டின் பிரதமர். உங்களைச்சந்தித்துப்பேசுவதற்கு வெளிநாட்டுத்  தலைவர்கள், பிரதிநிதிகள், தூதுவர்கள் வருவார்கள். அதற்காகவாவது நீங்கள் இந்த அலரிமாளிகையில் தங்கவேண்டும் என்றார்கள். பின்னர் அவர் வேண்டா வெறுப்பாக அங்கே தங்கினார்.

அவரது எளிமையை பார்த்த அவரது அணியைச்சேர்ந்தவர்கள், இந்த மனுஷனை பதவியில் வைத்திருந்தால், எம்மால் சுருட்ட முடியாது எனக்கண்டு, அடுத்த தேர்தலில் தோற்கடித்துவிட்டனர்.


தேர்தல் முடிவுகளை வானொலியில் கேட்டுக்கொண்டிருந்த பிரதமர் தகநாயக்கா, மறுநாள் காலையில் சபாநாயகருக்கு அறிவித்துவிட்டு,  தனது சின்னஞ்சிறிய பெட்டியில் மாற்றுடைகளையும் எடுத்துக்கொண்டு, அங்கிருந்த ஊழியர்களிடம் ,  “ தேர்தலில் தோற்றுவிட்டேன். இனிமேல் நான் இங்கிருப்பது முறையல்ல. ஊருக்குப்புறப்படுகிறேன்  “ என்று விடைகொடுத்துவிட்டு இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸில் ஏறி தமது சொந்த ஊர் காலிக்குப்புறப்பட்டார்.

பின்னாளிலும் அவர் அதே தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவானபோதிலும் தொடர்ந்தும் பஸ்ஸிலேயே வந்து திரும்பிக்கொண்டிருந்தார்.

ஒரு தடவை அவர் இலங்கை அரசு, ஆடைகளின் விலையை உயர்த்தியதையடுத்து, கவனஈர்ப்பு போராட்டமாக கோவணம் அணிந்து நாடாளுமன்றம் வந்தார்.

ஆனால், சபாநாயகர் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை.

இவ்வாறு அரசின் மீதான கண்டனத்தை ஆட்களைத் திரட்டிக்கொண்டு தெரிவித்துக்கொண்டிராமல், தனிமனிதனாக பேராடினார். அதனால் அவரது போரட்டத்திற்கு மக்கள் மத்தியில் மரியாதையும் இருந்தது.

தான் எவ்வாறு எளிமையாக வாழ்கின்றேனோ, அவ்வாறே ஆட்சியாளர்களும் நடந்துகொள்ளவேண்டும் என்று முன்மாதிரியாக வாழ்ந்து காண்பித்த தகநாயக்கா ஒரு உதராண புருஷர்.

அவர் அன்று தொடக்கிவைத்த  கவன ஈர்ப்பு போராட்டத்தையே சமகாலத்தில் எதிரணியினர் வேறு விதமாக வீதிகளில் இறங்கி நடத்துகின்றனர்.

எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து  ஒரு பிரதேச சபையின் எதிரணியினர் துவிச்சக்கர வண்டியில் சபைக்கூட்டங்களுக்கு வந்துள்ளனர்.

இதுவெல்லாம் வெறும் ஊடகப்பிரசாரம்தான். முன்பு ஒரு தடவை  1970 களில் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் பதவிக்காலத்தில் எரிபொருள் விலையேற்றம் வந்தபோது, எதிரணியிலிருந்த ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாட்டுவண்டியில் வந்தனர்.

மற்றும் ஒரு தடவை நாடாளுமன்றில் மக்கள் விரோத சட்டம் ஒன்று பரிந்துரைக்கப்பட்டபோது,  மலர் வளையமும் பிரேதப்பெட்டியும் எடுத்துவந்தனர்.

இக்காட்சிகள் யாவும் அந்தந்த வேளைகளில் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்படும்.  காலப்போக்கில் அரசும் எதிரணியும் மக்களும் மறந்துவிடுவார்கள்.

உண்மையிலேயே எரிபொருள் விலை உயர்வை கண்டிக்கும் இவர்கள் தங்கள் சொந்தப்பாவனைக்காக எத்தனை வாகனங்கள் வைத்திருக்கிறார்கள் என்பதை பகிரங்கமாகச் சொல்வார்களா..?

மக்கள் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் தருணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வெளிநாடுகளிலிருந்து சொகுசு வாகனங்கள் தருவிக்கப்படுகிறது என்ற செய்தியும் கசிந்துள்ளது.

நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பவனி வரும் சொகுசு வாகனங்களின் பின்னாலும் முன்னாலும் எத்தனை  வாகனங்கள் பாதுகாப்பு என்ற போர்வையில் பயணித்து எரிபொருளை வீணாக்குகின்றன.?  கரியமில வாயுவினால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துகின்றன..?

இது பற்றி என்றைக்காவது, ஆட்சியாளர்களோ, எரிபொருள் விலையேற்றம் குறித்து உரத்துப்பேசும் எதிரணியினரோ சிந்திக்கின்றார்களா..?

இன்றைய எதிரணியினர் நாளை மற்றும் ஒரு நாள் ஆட்சிபீடத்திற்கு வரும்போது எரிபொருளின் விலையை ஏற்றமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்…?!

ஒரு காலத்தில் இலங்கையில் அரசிக்கு தட்டுப்பாடு வந்தபோது,  சந்திரனிலிருந்தாவது அரிசி இறக்குமதி செய்வோம் என்று சொன்னவரான ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா, பிக்குகளையும்  இணைத்துக்கொண்டு அரசை கைப்பற்றுவேன் என்று சொல்லி பதவிக்கு வந்து, பிக்குகளாலே கொல்லப்பட்டவருமான பண்டாரநாயக்காவுக்கும் பிறந்து,  பின்னாளில் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்கா விஜயகுமாரணதுங்காவும்  பதவிக்காலத்தில் முன்னும் பின்னும் வாகன அணி தொடர பவனிவந்தவர்தான்.

இன்று அவர் லண்டன் மாநகரில் வீதியில் நடைப்பயிற்சி செய்கிறார்.

எத்தனையோ வாகனங்களை தன்வசம் வைத்துக்கொண்டு நாடாளுமன்றத்திற்கு ஒரு தடவை கெலிகொப்டரில் வந்திறங்கினார் மகிந்த ராஜபக்‌ஷ.

இவ்வாறு பதவியிலிருக்கும்போது எரிபொருளை இவர்கள் வீண் விரயம் செய்ததை கண்டிக்காதவர்கள்,  இன்று திடீரென விலையேறிய எரிபொருளுக்காக அதற்குப்பொறுப்பான அமைச்சருக்கு எதிராக நம்பிக்கை இல்லாத்தீர்மானம் கொண்டுவந்தார்கள்.

வெளிநாடுகளில் அமைச்சர் பிரதானிகள் தங்கள் வாகனத்தை தாங்களே செலுத்தி வருவதையும் அவர்களே எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதையும் காணமுடியும்.

அவர்களுக்கு முன்னும் பின்னும் வாகனங்கள் அணிவகுப்பதில்லை.

ஆட்சியாளர்களும் எதிரணியினரும் எரிபொருளை முடிந்தவரையில்  சிக்கனமாக பயன்படுத்தினால்,  தேசத்திற்கு நன்மை விளையும்.

----0-----

( நன்றி:  யாழ். தீம்புனல் வார இதழ் )

No comments: