அவர்கண்ட பாதையிலே அனைவருமே பயணிப்போம் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் மெல்பேண் ....அவுஸ்திரேலியா


                              
        
வேதாந்த வித்தாக வெளிக்கிளம்பி வந்தாரே
பூதலத்தில் ஆன்மீகம் பொங்கிவிடச் செய்தாரே
பாரதத்தாய் மடிவந்த பாங்கான புத்திரராய்
வீரநிறை துறவியாய் வெளிப்பட்டார் விவேகானந்தர்

புதுக்கருத்து புத்தூக்கம் உளமுழுக்க நிறைத்தாரே
தருக்கமுடன் நோக்குவதை தன்கருத்தாய் கொண்டாரே
விருப்பமுற்று தத்துவத்தை வேகமாய் கற்றாரே
விவேகநிறை பிள்ளையாய் வேதாந்தம் நாடினரே

அறிவோடு அணுகுவதை அவரேற்று நின்றாரே
அலசிநின்று பார்ப்பதிலே ஆசையவர் கொண்டாரே
ஆண்டவனின்  நிலையவர்க்கு அதிசயமாய் ஆகியதே
ஆண்டவனைக் கண்டவரை அவர்காண விழைந்தாரே

 கண்டாலே உண்மையெனும் கருத்தையவர் கொண்டாரே
 காணாத நிலையினிலே கருத்திருத்த வெறுத்தாரே
 கடவுள்பற்றி பலருரைத்தும் கருத்திலவர் கொள்ளாமல்
 காத்திருந்தார் காத்திருந்தார் காந்தத்தைக் காண்பதற்கு

தூய்மைநிறை மிக்கவராய் துறவிகளைக் கண்டார்
தாய்மையுடன் அவர்க்குதவி தானவரும் மகிழ்ந்தார்
வாய்மையினை வளர்ப்பதிலே வாஞ்சையவர் கொண்டார்
வார்த்தைஜாலம் விரும்பாமல் மனத்தெளிவில் நின்றார்

பெரும்பயனை அளிக்குமென பிரம்மசாமஜம் சென்றார்
பிரார்த்தனைகள் பாடல்களால் வெறுமையினை உணர்ந்தார்
தேடியதை நாடியதை காணாது தவித்தார்
தேடுவதை மனமிருத்தி தினமுமே அலைந்தார்

 காளிகோவில் உறைகின்றார் காலடிக்குச் சென்றார்
 கடவுள்பற்றி கருத்துக்களை எடுத்துமவர் மொழிந்தார்
 உன்னையே காண்பதுபோல் கடவுளையான் கண்டேன்
 உரைத்துவிட்டு அவர்தெட்டார் உணர்விழந்தார் அவரும்

 தன்னை மறந்தார் தன்னாமம் தனைமறந்தார்
 நின்னையே சரணென்றார் நீதானே ஒளியென்றார்
 தேடியதை நாடியதை தெளிவாக அவருணந்தார்
 நாடெலாம் ஓடினார் நற்கருத்தை யவர்விதைத்தார்

 இராமகிருஷ்ண பரமஹம்சர் நற்குருவாய் வந்தமைந்தார்
 நலந்திகழும் நற்பணிகள் ஆற்றிவிட வழிகண்டார்
 துறவிகளைத் துணையாக்கி தூரநோக்குப் பார்வையுடன்
 அவரமைத்தார் இராமகிருஷ்ண அமைப்பினையே அடித்தளமாய்

 வாய்மையுடன் தூய்மை மனமுழுதும் துயர்துடைத்தல்
 வலிமைமிகு உள்ளம் மனவழுக்கை போக்கல்
 இளைஞர்தமை ஏந்தல் எடுத்துவிடல் சோம்பல்
 என்பதையே வாழ்வின் ஏற்றமென வுரைத்தார்

 இமயமுதல் குமரிவரை இலங்கைமுதல் இங்கிலாந்துவரை
 இயம்பிநின்ற ஆன்மீகம் எல்லோர்க்கும் கைகொடுக்க
 அமெரிக்கர் அணைத்துநிற்க அனைவருமே வியந்துநிற்க
 ஆற்றிநின்ற சொற்பெருக்கு ஆல்போல வளர்ந்ததுவே

 ஆண்டுகள் குறைவாக அகிலத்தில் வாழ்ந்தாலும்
 ஆன்மீகப் பாதையிலே அவரென்றும் வாழுகிறார்
 ஆண்டவனின் தூதுவராய் அவர்வந்தார் எனநினைப்போம்
 அவர்கண்ட பாதையிலே அனைவருமே பயணிப்போம்













 





No comments: