தூங்காநகர நினைவுகள் - 24: எல்லா நாளும் கொண்டாட்டம்! - அ.முத்துக்கிருஷ்ணன்

 .



ஒரு சமூகம் எவ்வளவு முற்பட்டதோ அத்தனை திருவிழாக்களை அது தன்னகத்தே கொண்டிருக்கும், ஓர் ஊரும் நகரமும் எவ்வளவு தொன்மையானதோ அங்கே அத்தனை திருவிழாக்கள் இருக்கும்தானே.

பரிணாம வளர்ச்சியில் மனித சமூகங்கள் குகைகளில் வசித்த போதே நெருப்பு மூட்டி அதனைச் சுற்றி நடனமாடியிருக்கிறார்கள். ஒன்றுகூடுதல், ஒரு வேட்டையைக் கூடிப் பகிர்தல், கூடி உண்ணுதல் என இந்தச் சமூகம் ஒரு கூட்டு வாழ்க்கையையே வாழ்ந்திருக்கிறது என்பதை மானிடவியல் ஆய்வுகள் நமக்கு உணர்த்துகின்றன. எந்தவொரு மகிழ்ச்சியும் ஒரு சமூகத்தின் மகிழ்ச்சியாகவே இருந்துள்ளது, ஒவ்வொரு கணமும் பகிர்தலின் கணங்களாகவே இருந்துள்ளது.

நம் சமூகம் மெல்ல மெல்ல சமதளங்களுக்கு வந்து வேளாண்மையை மையப்படுத்திய உற்பத்தி முறையைத் தனதாக்கிக்கொண்ட பிறகு, தனிச்சொத்து என்கிற புதிய உபரி உருவாகிறது. இந்த உபரி வந்த பிறகு நம் கூட்டு வாழ்க்கை ஒரு முடிவுக்கு வருகிறது. சொத்தும் உபரியும் பலவிதமான ஏற்றத்தாழ்வுகளை நம் மத்தியில் கற்பிக்கின்றன. இந்த ஏற்றத்தாழ்வுகளை மதங்கள் இன்னும் துல்லியமாக வரையறுக்கின்றன. இருப்பினும் இந்தச் சமூகம் முன்னகர அது மீண்டும் மீண்டும் ஒன்றுகூடுவது அவசியம் என்பதைப் பல படிப்பினைகள் மூலம் அறிந்துகொள்கிறது.



ஒவ்வொரு நிலத்திலும் உள்ள இனங்கள் தங்களின் உற்பத்தி முறைகளில் இருந்தே கூடுகைகளை உருவாக்கினார்கள். இயற்கை அவர்களுக்கு ஒரு புரியாத புதிராகவே இருந்தது, ஆனால் அதே இயற்கைதான் அவர்களுக்கு உணவு கொடுத்தது, வாழ்வு கொடுத்தது. உலகம் முழுவதிலும் உள்ள ஆதிச் சமூகங்கள் இயற்கையை வணங்கினார்கள், மெல்ல மெல்ல ஒவ்வொரு நிலத்திலும் மதங்கள் உருவாயின, மதங்கள் புதிய புதிய சடங்குகளையும் விழாக்களையும் உருவாக்கின. மதங்கள் தங்களை பலப்படுத்திக்கொள்ளவே திருவிழாக்களை வடிவமைத்தன, நிகழ்த்தின. நாகரிகம், கலாச்சாரம், பாரம்பரியம் என மனித சமூகம் தன் சேகரத்தில் இருந்து புதிய மதிப்பீடுகளை, புதிய எல்லைகளை அடைந்தது.

காவடி எடுத்து ஆடுதல்
காவடி எடுத்து ஆடுதல்

ஒரு சமூகம் எவ்வளவு முற்பட்டதோ அத்தனை திருவிழாக்களை அது தன்னகத்தே கொண்டிருக்கும், ஓர் ஊரும் நகரமும் எவ்வளவு தொன்மையானதோ அங்கே அத்தனை திருவிழாக்கள் இருக்கும்தானே.

மதுரை என்றாலே அனைவர் மனங்களிலும் முதல் பிம்பமாய் எழுவது ஒரு கொண்டாட்ட மனநிலைதான், மதுரை என்றாலே கொண்டாட்டம்தானே. மதுரையில் எங்கு திரும்பினாலும் ஏதோவொரு இடத்தில் ஒரு கொட்டுச் சத்தம், காற்றில் அலைவுறும் தென்னங்கீற்று, ஓர் ஒலிபெருக்கியில் இருந்து எழும் இசையும் நாதமும் காற்றில் கலந்தேயிருக்கும்.

“திருவிழாக்கள் என்பது சமூக அசைவுகளில் ஒன்றாகும். திருவிழாக்கள் இல்லாமல் ஒரு சமூகம் இயங்க இயலாது. சுடுவெயிலில் நடப்பவன் மரத்து நிழலில் தங்கி, அடுத்து நடப்பதற்கான உடல், மன வலிமையினைச் சேர்த்துக் கொள்வதுபோல திருவிழா என்பது ஒரு ‘சமூக இளைப்பாறுதல்’ நிகழ்வு ஆகும். ஆடுதல், பாடுதல், கூடிக் களித்தல், கூடி உண்ணுதல் ஆகிய அசைவுகளும் தொடர்ந்து வரும் அவற்றின் நினைவுகளும் ஒரு சமூகத்தைச் சோர்வின்றி இயங்கச் செய்கின்றன. இதுவே திருவிழாவின் பொருள் என்று சொல்லலாம். திருவிழாக்கள் என்பவை ஒரு சமூகம் இளைப்பாறிக்கொள்ளும் நிகழ்வுகளாகும். இதன்பின்னர் புதிய வேகத்துடன் சமூகம் தன் பயணத்தைத் தொடரும். எனவேதான் திருவிழாக்கள் வரவேற்புக்குரியவனவாக இருக்கின்றன” என்கிறார் தமிழறிஞர் தொ.பரமசிவன்.

ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கிணங்க தைப் பொங்கலும், ஜல்லிக்கட்டும் மதுரையின் மறுக்கமுடியாத அடையாளங்கள். இயற்கைக்கு நன்றி செலுத்தும் இந்தப் பொங்கல் விழா உலகின் ஆதிவிழாக்களில் ஒன்றாகும், மதுரை என்கிற தொல் நகரத்தில் பொங்கல் ஒரு பெரும் கொண்டாட்டம். தை இரண்டாம் வாரத்தில் வண்டியூர் மாரியம்மன் தெப்பத்திருவிழாவில் மக்களை நீங்கள் உற்சாகத்துடன் காணலாம். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தெப்பத்திருவிழா ஆண்டுதோறும் தை மாதம் கொண்டாடப்படுகிறது. தெப்பத்திருவிழாவின் தீர்த்தவாரிக்கு மறுநாள் சிந்தாமணியில் கதிரறுப்புத் திருவிழாவும், திருமலைநாயக்கர் பிறந்த தினத்தன்று தெப்பத்திருவிழாவும் நடைபெறுகிறது. இவ்விரு விழாக்களையும் ‘இராஜ உற்சவம்’ எனக் கோயில் தலவரலாறு குறிப்பிடுகிறது. தெப்பத்திருவிழா அன்று மீனாட்சி சுந்தரேஸ்வரருடன் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேர் தெப்பக்குளத்தில் காலையும் மாலையும் சுற்றி வரும்.

பிப்ரவரி - மார்ச் மாதங்களில் புதூர் லூர்தன்னை தேவாலயத் தேர்ப்பவனி புதூர்ப் பகுதியையே ஒளிவெள்ளத்தில் ஆழ்த்தும். பிரான்ஸ் நாட்டிலுள்ள லூர்து நகரில் 1858 பிப்ரவரி 11 முதல் ஜூலை 16 வரை புனித பெர்னதெத் சூபிரூஸ் என்ற பெண்ணுக்கு அன்னை மரியாள் காட்சி அளித்ததனால் ஆண்டுதோறும் பிப்ரவரி 11 அன்று லூர்து அன்னை தினமாகக் கொண்டாடப்படுகிறது. புனித லூர்தன்னை தேவாலயத்தில் பிப்ரவரி 11-ம் தேதிக்கு அடுத்துவரும் சனிக்கிழமை சப்பர பவனியும், மறுநாள் ஞாயிற்றுக்கிழமைக் காலை பொங்கல் விழாவும் நடைபெறுகிறது. பொங்கல் தமிழர் பண்டிகை மட்டுமல்ல, மதங்கடந்த பண்டிகை என்பதற்கு லூர்தன்னை தேவாலயப் பொங்கல் விழாவை சான்றாகச் சொல்லலாம்.

வலையங்குளம் நாடகவிழா மாசிமாதம் வரும் சிவராத்திரியன்று வலையங்குளம் கிராமத்தில் நாடகத் திருவிழா ஆரம்பம் ஆகிறது. இங்குள்ள பெருமாள் கோயிலுக்கு நேர்த்திக்கடனாகப் போடப்படும் இந்த நாடகங்கள் 50லிருந்து 80நாள்கள் வரை நடக்கும். சிவராத்திரியன்று ஊரிலிருந்து அபிமன்யு சுந்தரி நாடகம் நடத்தப்படுகிறது. அதேபோல இறுதிநாளன்று நடக்கும் நாடகத்தோடு ஊரிலுள்ளவர்களும் சேர்ந்து பட்டாபிஷேகம் நடத்துகிறார்கள். இறுதி நாளன்று நாடகம் முடிந்ததும் அன்னதானம் நடக்கிறது. தமிழகம் முழுவதும் இருந்து நாடக நடிகர்கள், ஆய்வாளர்கள் இந்த விழாவிற்கு வருகை தருவார்கள். இந்தத் தெப்பத்தில் நீர் நிரம்பிப் பல வருடங்கள் ஆகிவிட்டதால் நடுவிலுள்ள மையமண்டபத்தையே பெருமாள் சுற்றிவருகிறார்.

மாசிமகத்தன்று கஜேந்திரமோட்சம் திருவிழாவில் திருமோகூர் காளமேகப்பெருமாள் யானைமலை அடிவாரத்திலுள்ள தாமரைக்குளத்திற்கு கள்ளர் வேடத்தில் பவனி வருகிறார். இது குறித்து பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் பின்வரும் காரணத்தைக் கூறுகிறார். கி.பி.1700களில் திருமோகூர் கோயிலில் உள்ள சிலைகளை ஆற்காடு நவாப் படைகளும், ஆங்கிலேயப் படைகளும் சேர்ந்து கொள்ளையடித்துச் செல்ல, கள்ளர்கள் அந்தச் சிலைகளை மீட்டுக் கொண்டு வந்து கொடுத்ததால், திருமோகூர் கோயிலில் தேரிழுக்கும் உரிமையும், கஜேந்திர மோட்சத்திற்கு பெருமாள் கள்ளர் வேடமிட்டு வரும் உரிமையும் வழங்கப்பட்டது.

பங்குனி மாதத்தில் தாய்த்தெய்வங்களுக்கான திருவிழா நடக்கிறது. மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் பங்குனிமாதத்தில் பத்துநாள் இந்த விழா நடக்கிறது. தெப்பக்குளம் மாரியம்மன் இவ்விழாவின்போது மீனாட்சியம்மன் கோவிலுக்கு ஒருநாள் மட்டும் வருகை தருகிறார்.

பங்குனிமாதம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதில் மீனாட்சியம்மன் கோவிலிலிருந்து சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் இக்கல்யாணத்திற்கு வருகை தரும் படலமும், தேரோட்டமும் நடைபெறும். திருவிழாவின் உச்சமான இத்தேரோட்டத்தில் கலந்துகொள்ள சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் வருகின்றனர்.

அறுவடைக்குப் பிறகு கிராமங்களில் புரவியெடுப்புத் திருவிழாக்களை நடத்துகின்றனர். அதனால் தை, பங்குனி, வைகாசி மாதங்களில் கிராமங்களில் உள்ள அய்யனார் கோவில்களில் புரவியெடுப்புத் திருவிழா நடைபெறும். இவ்விழாக்களின் போது அய்யனாருக்கு மட்டுமன்றி துணைதெய்வங்களுக்கும் சேர்த்தே விழா எடுப்பர். மதுரையில் ஆரப்பாளையம், கோரிப்பாளையம், விராட்டிப்பத்து போன்ற பகுதிகளில் புரவி, சாமி சிலை செய்யக்கூடிய வேளாளர்கள் வசிக்கின்றனர்.

பங்குனி மாதத்தில் கிராமத்திலுள்ள கண்மாய்களில் நீர்வற்றிவிடும்போது மீன்பிடித்திருவிழா நடத்துகின்றனர். மீன்பிடித்திருவிழா கொண்டாடும் ஊர்களில் மற்ற நாட்களில் மீன்பிடிக்காமல் திருவிழாவன்று ஊர்மொத்தமாகச் சேர்ந்து மீன்பிடித்து மகிழ்கின்றனர். மதுரையருகே கள்ளந்திரி, மேலூர் சருகுவலையப்பட்டி, நடுமுதலைக்குளம் போன்ற கிராமங்களில் இத்திருவிழா இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது.

சித்திரை திருவிழாவில் அழகர்
சித்திரை திருவிழாவில் அழகர்

சித்திரை மாதத்தில் மதுரையில் சித்திரைத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், மறுநாள் தேரோட்டமும் நடைபெறுகிறது. இந்த விழாவின் மிக முக்கிய அம்சம் அழகர் எதிர்சேவை. அதாவது இத்திருமணத்திற்கு அழகர் கோயிலிலிருந்து அழகர் மதுரைக்கு வரும் போது மதுரையை சுற்றிலும் உள்ள கிராம மக்கள் அழகருக்கு எதிர்சேவை செய்து அழைத்து வருவதும், பின்னர் அவர் வைகையாற்றில் இறங்குவதும் பெருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

சித்திரைத் திருவிழாவின் எதிர்சேவை
சித்திரைத் திருவிழாவின் எதிர்சேவை

அழகர் ஆண்டாள் சூடிய மாலையை சூடவும், மண்டூகமாக மாறிய முனிவருக்கு மோட்சம் கொடுக்கவும் வருவதாக கோவில் அழைப்பிதழில் குறிப்பிட்டாலும், மக்கள் தமிழ்ப்பண்பாட்டின் வேராக உள்ள அண்ணன் – தங்கை உறவையே இவ்விழாவிற்கான கதையாக சொல்லிவருகின்றனர். அழகர் ஆற்றில் இறங்குவதற்கு முதல் நாள் இரவு முழுவதும் வைகை ஆற்றில் இருந்து புதூர் வரை பத்து லட்சம் மக்கள் கூடுவதால் அன்று மதுரையே பெரும்விழாகோலம் பூண்டிருக்கும்.

மே மாதத்தில் ஜெர்மேனம்மாள் என்ற புனிதருக்கு விழா எடுக்கின்றனர். மதுரை சோழவந்தான் அருகேயுள்ள இராயபுரம் கிராமத்தில் இந்த விழா நடக்கிறது. கிறிஸ்தவ தேவாலயத்திருவிழா கிராமத்திருவிழா போல நடப்பதைக் காண நாம் மதுரை இராயபுரத்திற்குத்தான் செல்லவேண்டும்.

மதுரை சித்திரைத் திருவிழாவைப் போல அழகர்கோயிலில் ஆடித்திருவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பத்து நாள் நடக்கும் இப்பெருவிழாவில் ஆடிப்பௌர்ணமி அன்று நடக்கும் தேரோட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அழகர்கோயில் தேர்த்திருவிழா மற்ற கோயில் தேர்த்திருவிழாக்களிலிருந்து சற்று வேறுபட்டது. கோயிலின் இருதிசைகளில் மலையுள்ளதால் தேர் இரணியன்கோட்டைக்கு வெளியேயுள்ள அழகாபுரிக்கோட்டையைச் சுற்றி வருகிறது. இவ்விழாவிற்கு சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து மக்கள் வருகின்றனர். பதினெட்டாம்படிக்கருப்பு உறைந்திருக்கும் கதவுக்கு சந்தனம் சாத்தும் நிகழ்வும் ஆடிப்பௌர்ணமி மற்றும் ஆடிஅமாவாசை நாள்களில் நடக்கிறது.

அழகர் கோவில் தேர் திருவிழா
அழகர் கோவில் தேர் திருவிழா

திருமலைநாயக்கர் காலத்தில் சிறுதேவாலயமாக இருந்த தூய மரியன்னை தேவாலயம் கி.பி.1842-ல் தந்தை கார்னியரால் ப்ரெஞ்சு மற்றும் கோதிக் கட்டடக்கலையில் கட்டப்பட்டது. வானிலிருந்து பார்க்கும் போது இது சிலுவை வடிவில் தெரியும்படி அமைக்கப்பட்டிருக்கிறது. இத்தேவாலயத்தில் வியாகுல அன்னையின் பிறந்தநாளான செப்டம்பர் 8-க்குப் பிறகு வரும் சனிக்கிழமை சப்பரப்பவனி வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

புரட்டாசி மாதத்தில் மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இச்சமயத்தில் எல்லாக் கோவில்களிலும் கொலு வைத்திருப்பர்.

ஐப்பசி மாதத்தில் தீபாவளிப் பண்டிகையை சமண சமயத்தவர் மகாவீரர் வீடுபேறு அடைந்த நாளாகக் கொண்டாடிவருகின்றனர். சமணமலையிலுள்ள மகாவீரர் சிலையை வழிபட வடமாவட்டங்களில் வசிக்கும் சமணர்கள் மதுரைக்கு வருகின்றனர். அப்போது விளக்கேற்றி அரிசி, பழங்கள் போன்றவற்றைப் படையலிடுகின்றனர்.

திருக்கார்த்திகை அன்று மதுரையின் பல கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தும் விழா நடைபெறுகிறது. பயிர்த்தொழில் நடக்கும் ஆடி முதல் தை மாதம் வரை பெரும்பாலான கிராமங்களில் விழாக்கள் கொண்டாடப்படுவதில்லை.

கோரிப்பாளையம் தர்கா சந்தனக்கூடு
கோரிப்பாளையம் தர்கா சந்தனக்கூடு
பள்ளிவாசல் தொழுகை செய்யும் தலம். தர்கா என்பது இறைநேசர்கள் அடக்கமான தலம். அதனால், தர்காக்களுக்கு எல்லாச் சமயத்தைச் சேர்ந்தவர்களும் வருகிறார்கள். மதுரை கோரிப்பாளையம் தர்காவில் அங்குள்ள இறைநேசர்களின் நினைவாக ரபியூல் அவ்வல் மாதத்தில் 16ஆம் நாள் சந்தனக்கூடு விழா நடைபெறுகிறது. கவ்வாலி எனும் இஸ்லாமிய கலைநிகழ்ச்சிகள் இவ்விழாவின் போது நடைபெறும்.

மதுரை சின்னக்கடைத் தெரு முகைதீன் ஆண்டவர் தர்காவில் சந்தனக்கூடு ஊர்வலத்தோடு, பெரிய அலங்கரிக்கப்பட்ட மரக்கப்பலும் சுற்றிவருவது சிறப்பு. ரபியூல் ஆகிர் மாதத்தில் 10நாள் அன்று சந்தனக்கூடு ஊர்வலமும், ரபியூல் ஆகிர் 11ஆம் பிறைநாளன்று காலை ஷரிபில் சந்தனம் பூசும் நிகழ்வும் நடக்கிறது. மதுரை மேலக்கால், திருப்பரங்குன்றம் சுல்தான் தர்காவிலும் சந்தனக்கூடு விழா அங்குள்ள இறைநேசர்கள் நினைவாக நடத்தப்படுகிறது.

முழுநிலவு நிறைந்திருக்கும் பௌர்ணமி நாள்களே பெருந்திருவிழாக்களுக்கான நாள்களாக இருக்கின்றன. சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆடிப்பௌர்ணமி, ஆவணி அவிட்டம், புரட்டாசிப் பௌர்ணமி, திருக்கார்த்திகை, தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத்திரம் போன்ற நாள்கள் எல்லாமே திருநாள்கள்தான். இதில் தை முதல் ஆடி வரை பெருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன, அதன்பிறகான காலங்கள் விவசாயப்பணிகள் நடைபெறும் காலமாகி விடுவதால் மக்கள் தங்களின் உழைப்பில் முழுமையான கவனம் செலுத்தச் சென்றுவிடுகிறார்கள்.


ஒரு நகரத்தில் இத்தனை திருவிழாக்கள் நடைபெறுவது நமக்கு இந்த நகரத்தின் இணங்கு தன்மையை உணர்த்துகிறது. இந்த நகரத்திற்கு அலை அலையாய் வந்த மன்னர்கள், அலை அலையாய் வந்த மதங்கள், அலை அலையாய் வந்த மக்கள் தங்களுடன் எடுத்து வந்த பிடிமண்ணுடன் ஒட்டி வந்த சடங்குகள் மற்றும் பண்பாடுகளே இந்த திருவிழாக்களின் அடித்தளம். இந்த ஒவ்வொரு திருவிழாவிலும் மக்கள் கூடுவார்கள், ஒரு கிராமத்தின் திருவிழாவிற்கு அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் எனப் பத்துக் கிராம மக்கள் கூடுவார்கள். ஒரு மதத்தின் திருவிழாவிற்கு வரும் கூட்டத்தினருக்கு வேற்று மதத்தவர்கள் இனிப்பும் நீராகாரமும் கொடுத்து மகிழ்வார்கள்.

இந்த மகிழ்ச்சிகளின் ஊடே இந்த நிலத்தின் தீண்டாமையும் குறிப்பிட்ட சாதிகள்/சமூகங்களை ஒதுக்கும் தன்மைகளும் இல்லாமலில்லை, 1939-ல் மீனாட்சியம்மன் கோவிலின் கதவுகள் வழுக்கட்டாயமாக ஜனநாயகத்தின் திறவுகோள் கொண்டு திறக்கப்பட்டது போல் அனைவரும் சமம் என்கிற நிலையை ஒவ்வொரு திருவிழாவிலும் கொண்டு வருவதற்கும் அனைவருக்கும் தேர்வடம் பிடிக்கும் உரிமை உண்டு என்கிற நிலைமையை உருவாக்கவும் நாம் தொடர்ந்து பேசுவதும் விவாதிப்பதும் போராடுவதும் அவசியமாகிறது. பல நேரங்களில் வருடத்தின் ஒரு நாள் பெருவிழா அன்று "எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது" ("ALL IS WELL") என்கிற ரீதியில் ஒரு போலச்செய்தலாகவே (Mimicking) இருக்கிறது. நாம் அனைவரையும் மனிதர்களாக சமமானவர்களாக மதிக்கிற நாளில்தான் உண்மையான திருவிழா மலரும். திருவிழாக்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்தளிக்கும் ஒரு கருவி என்றால், மகிழ்ச்சியை ஜனநாயகப்படுத்துவது நம் கடமை.

நன்றி:

பண்பாட்டு அசைவுகள் - தொ.பரமசிவன்

திருவிழாக்களின் தலைநகரம் மதுரை - சித்திரைவீதிக்காரன்


Nantri https://www.vikatan.com/spiritual

No comments: