பொன் விழா ஆண்டில் இந்தப் படங்கள் - சுமதி என் சுந்தரி - ச. சுந்தரதாஸ் - பகுதி 5

 .


நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் பெயரில் உருவாக்கப்பட்ட ராம்குமார் பிலிம்ஸ் கலரில் தயாரித்த படம் சுமதி என் சுந்தரி . ஏற்கனவே இவர்கள் தயாரித்த கலாட்டா கல்யாணம் படம் வெற்றி பெறவே அடுத்து இப்படம் தயாரானது. முந்திய படத்தில் இடம்பெற்ற சிவாஜி ,ஜெயலலிதா, நாகேஷ் தங்கவேலு, சச்சு இவர்களுடன் தேங்காய் சீனிவாசன், கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் நடித்திருந்தனர். கலர் படம் என்பதால் பெரும்பாலான காட்சிகள் குளு குளு கலரில் ஊட்டி போன்ற இடங்களில் படமாக்கப் பட்டிருந்தன. பிரபல ஒளிப்பதிவாளர் தம்பு தன் கைவண்ணத்தை கலர் வண்ணமாக படமாக்கியிருந்தார் .

பிரபல திரைப்பட நடிகை சுமதி படாடோபம் இன்றி எளிமையான வாழ்வு வாழ விரும்புகின்றாள் , அதற்கு அவளுடைய நட்சத்திர அந்தஸ்து தடையாக நிற்கின்றது படப்பிடிப்பிற்காக ரயிலில் செல்லும் சுமதி நடுவழியில் இறங்கி விடுகிறாள் எஸ்டேட்டில் வேலை பார்க்கும் மது என்ற இளைஞனின் அறிமுகம் அவளுக்கு கிட்டுகிறது. சினிமா வாசனையே இல்லாத மது சுமதியை சாதாரண பெண்ணாக கருதுகிறான். சுமதி தன் பெயரை சுந்தரி என்று கூறி விடுகிறாள். இதற்கிடையில் சுமதியை தேடி படப்பிடிப்பு குழுவினர் அலைகிறார்கள் .

நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவான இப்படத்தின் கதை வசனத்தை சித்ராலயா கோபு எழுதியிருந்தார். நகைச்சுவை வசனங்களை எழுதி தேர்ச்சி பெற்ற அவர் எதிலும் குறை வைக்கவில்லை. ஆனாலும் சிவாஜி இடமும் ஜெயலலிதாவிடமம் அந்த நகைச்சுவை சற்று குறைவாகவே காணப்பட்டது.


எந்த படம் என்றாலும் தனது இசை வல்லமையால் ரசிகர்களை வசீகரிக்கக்கூடிய மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் இந்தப்படத்திலும் இசையால் ரசிகர்களை அசத்தியிருந்தார். படத்தில் இடம்பெற்ற ஒரு தரம் ஒரே தரம், கல்யாண சந்தையிலே ஒரு பெண் பார்க்கும், ஆலயமாகும் மங்கை மனது ஆகிய பாடல்கள் பிரபலம் ஆகின. இந்த படத்தில் தான் எஸ் பி பாலசுப்ரமணியம் முதல் தடவையாக சிவாஜிக்கு பொட்டு வைத்த முகமோ பாடல் மூலம் குரல் கொடுத்து அப்பாடல் ஆண்டுகள் ஐம்பதைக் கடந்து ஒலிக்கிறது.

சுமதி என் சுந்தரி படத்தை டைரக்ட் செய்தவர் சி டி ராஜேந்திரன் பிற்காலத்தில் சிவாஜியின் இரண்டாவது மகன் பிரபுவை திரையுலகிற்கு கொண்டு வந்தவரும் இவரே.

சிவாஜியின் சொந்தப் படமான சுமதி என் சுந்தரியும் சாவித்திரியின் சொந்தப் படமான பிராப்தமும் ஒரே நாளில் திரைக்கு வந்து ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டு இறுதியில் சுமதி என் சுந்தரி தப்பிப் பிழைத்தாள் .


No comments: