தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை

ஆசிரியர் க்கம்


பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோத்தபாயா ராஜபக்க்ஷவின் பொதுமன்னிப்பு அடிப்படையில் நீண்ட காலமாகச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளில், அனுராதபுரம் சிறையிலிருந்து 15 பேரும், யாழ். சிறையிலிருந்து ஒருவருமாக 16 பேர் 24-06-2021 அன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஒரு தசாப்த காலத்துக்கு மேலாக தமிழர் தரப்பில் பேசப்பட்டு வந்திருக்கிறது. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் தற்போது ஒரு முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது.

தமிழர் உரிமைப் போராட்டத்தை நசுக்க வேண்டும், பயங்கரவாதத்தை ஒடுக்க வேண்டும் என்ற நோக்கில் 1978ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவினால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதச் சட்டம் ஒரு ஜனனாயக விரோதச் செயலாகக் கருதப்படுகிறது. சிறுபான்மையினர் அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழக்கூடாது, வாய் திறக்கக் கூடாது என்பதே அரசின் எதிர்பார்ப்பாக இருந்தது.

இச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தரப்பினர் கூறிவருகின்றனர். இதனை ஜனனாயக விரோதச் செயற்பாடு என ஐரோப்பிய ஒன்றியமும் தெரிவித்துள்ளது.

புலிகள் அமைப்புடன் தொடர்புள்ளவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டவர்களில் வழக்கு விசாரணை முடிவடைந்து தண்டனை அனுபவிப்பவர்களின் எண்ணிக்கை 35ஆகும். இவர்களில் பெரும்பாலானவர்கள், தமக்குக் கிடைக்கப் பெற்றுள்ள தண்டனைக் காலத்தைவிடவும் அதிக வருடங்கள் சிறையில் கழித்துள்ளனர். அத்துடன் மேலும் 38 பேருக்கு மேல்நீதி மன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தொடர்பான வழக்குகள்கூட 20 வருடங்களாக நடைபெற்றுள்ளன. இவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையிலேதான் வழக்கு விசாரணை தொடர்ந்தது. அதேபோல் வழக்கு விசாரணை எதுவுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 13ஆகும். வழக்கு விசாரணை முடிவடைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத 116 பேரும் சிறைகளில் வாடுகின்றனர்.

பொசன் பௌர்ணமி தினத்தன்று விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதிகளோடு, கொலைக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்ட தென்னிலங்கையைச் சேர்ந்த ஒரு அரசியல் பிரமுகர் ஒருவரையும் ஜனாதிபதி விடுதலை செய்துள்ளார். இந்த விடுதலைக்கு ஐ.நா. அமெரிக்க செயலகங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. சட்டத்தரணிகள் பலரும் குறித்த அரசியல் பிரமுகரின் விடுதலைக்கு தமது எதிர்ப்பைத் தெரிவித்து ஜனாதிபதியிடம் விளக்கம் கேட்டுள்ளனர். அத்துடன் ஜனாதிபதி ஏற்கனவே தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மிருசுவில் பகுதியில் பொதுமக்களைப் படுகொலை செய்தவரை நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதியின் அதிகாரத்தில் அவர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.

அரசியல் கைதிகள் சிறையில் வாடும் நிலையில் கொலைக் குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட ஏனையவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.

அண்மையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சம்பவத்தில் மட்டக்களப்பு கிரானைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டு இதே சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அதேபோல, முகநூலில் தவறாகப் பதிவிட்டார்கள் என்பதற்காக பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் யாபேரும் விடுவிக்கப்பட வேண்டும்.

அதேவேளை தொடர்ந்தும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி கைதுகள் மேற்கொள்வது நிறுத்தப்படுவதோடு பயங்கரவாதத் தடைச்சட்டமும் நீக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம். 

நன்றி ஞானம் கலை இலக்கியச் சஞ்சிகை

No comments: