காக்கைச் சிறகினிலே… பொன் குலேந்திரன் – கனடா

 .

அன்று புரட்டாசி சனிக்கிழமை. அம்மாவும் அப்பாவும் புரட்டாசிக் சனிக்கிழமைக்கு விரதம். இருவரும் காலை, வண்ணார்பண்ணை வரதராஜ பெருமாள் கோயிலுக்குப் போய் நல்லெண்ணை எரித்து, சிவனுக்கு அர்ச்சனை செய்து போட்டு வந்தார்கள். அவர்கள் தங்களோடு என்னையும் வரும்படி கூப்பிட்ட போது நான் சாக்கப் போக்கு சொல்லி கடத்திவிட்டேன். அப்பாவுக்கு ஏழரைச் சனி கடைக்கூறாம அம்மா சொன்னாள.; முதற் கூறில் அக்சிடென்ட் பட்டவர் நல்லகாலம் தன்றை மாங்கல்யப் பாக்கியத்தால் அவர் உயிர் தப்பியது என்பாள் அவள் அடிக்கடி. நடுக் கூறு நடக்கும் போது காணியில் பங்கு கேட்டு  அவர் போட்ட கேஸில் தோர்த்து போனார். நடுக் கூறு நடக்கும் போது தான் அப்பாவுக்கு புரமோசன் கிடைத்தது. அக்காவுக்கு திருமணம் நடந்தது .கனடா மாப்பிள்ளை வேறு. அந்த நல்ல காரியங்களைப் பற்றி அம்மா பேசமாட்டாள். அம்மா பயப்பட்டாள கடைக் கூறில் என்ன நடக்குமோ என்று. இதுக்கெல்லாம் காரணம் ஊர் சாஸதிரி சதாசிவம் தான். ஒரு மாதத்துக்கு ஒரு தடவை அவரிடம் இருபது ரூபாய் கொடுத்து ஆலோசனை கேட்காவிட்டால் அம்மாவுக்குத் திருப்தியில்லை. அவர் சொன்ன படி சனிக்கிழமை விரதப் பயித்தியம் அவளைப் பீடித்துக் கொண்டது. அது தான் ஒவ்வொரு சனிக்கிழமையும் அவள் விரதம் இருந்தாள். எனக்கு தான் வயிற்றில் அடி. சனிக்கிழமையில் தான் மார்க்கண்டன் கிடாய் வெட்டி கூறு போடுகிறவன். பனை ஓலையிலை கொழுப்போடை கட்டித் தரும் அந்த இறச்சியை ருசித்த சாப்பிடாமல் இந்த சனிக்கிழமை விரதம் தடுத்துவிட்டது. ஒரே ஒரு சனிக்கிழமை சித்தப்பா வீட்டை போய் அம்மாவுக்கு தெரியாமல் அந்த இறச்சியை சாப்பிட்டு வந்தனான். அம்மாவுக்கு தெரிந்திருந்தால் வீட்டுக்குள்ளை விட்டிருக்கமாட்டா. 



*****

கோயிலுக்குப் போய் வந்து, சமைத்து, கையில் வாழையிலையில் காகத்துக்குப் படைக்க சோறு கறியுடன் முற்றத்துக்கு அம்மா போவதைக் கண்டேன். கத்தரிக்காய் பொரித்த குழம்பு, முருங்கையிலை வறை, பாவக்காய்  பொரியல் , துவரம் பருப்பு கறி , புடலங்காய் வதக்கல், உருழைக் கிழங்கு பிரட்டல் வாசனை மூக்கைத் துளைத்தது. சனிக்கிழமை விரதத்துக்கு முருங்கையிலை கறி அவசியம் இருந்தாக வேண்டும். இது அம்மாவின் நம்பிக்கை. சுத்த பசு நெய்யின் மணம் கூட வீசியது. அடித்தது யோகம் காகங்களுக்கு.  வீட்டில் பழைய பராசக்திப் பாடலான கா கா கா என்ற பாடல் ரேடியோவில் கேட்டது அவவின் கா கா கா என்று காகத்தை அன்பாக விருந்துக்கு கூப்பிடும் அழைப்பும் பராசக்தி பாடலையும் கேட்டவுடன் எனக்கு சிரிப்புத்தான் வந்தது. தாளத்தில் தான் என்ன ஒற்றுமை.

 

இந்தக் காகங்கள் பொல்லாதது. சமயம் பார்த்து புரட்டாசி சனிக்கிழமைகளில் ஓடி ஒளிந்துவிடும். அதுகளுக்கு ஊரில் நல்ல மதிப்பு பாவம் அம்மா தொண்டை கிழிய கத்திய பிறகு எங்கையோ இருந்து பக்கத்து வீடுகளில் வயிறு முட்டச் சாப்பிட்டு விட்டு வேண்டா வெறுப்பாக துணிமணிகள் காயப் போட்ட கொடியில் வந்தமர்ந்தது ஒரு காகம்.

 

ஐயோ அம்மா பசிக்குது. இரண்டு நாளாக பட்டினி. ஏதும் சாப்பாடு இருந்தா போடுங்கோ.” பிச்சைக்காரன் குரல் கேட்டடியில் கேட்டது. அவன் போட்டச் சத்தத்தில் காகம் பறந்து போய் விடுமோ என்ற பயம் அவளுக்கு.

” ஏய் ஒரு மணித்தியாலம் கழித்து வா  காகம்  சாப்பிட்டபின் வாபார்ப்பம்” என்றாள் அம்மா. மனிதனின் பசியை விட காகத்தின் பசி தான் அவளுக்கு முக்கியமாகப் பட்டது. எல்லாம் சனியின் வேலை.  மதில் மேல் நாயுக்கு எட்டாத வாறு சாப்பாட்டை வைத்தாள். அவள் முகத்தில் ஒரு திருப்தி. சனி பகவான் வந்துவிட்டார் என்ற திருப்தியோ என்னவோ. நடப்பதை தூரத்தில் இருந்து நான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.

“உன் பொறுமைக்கு பாடம் கற்பிக்கிறேன். போன கிழமை காய வைத்த மிளகாயை கிளரியதுக்கு என்னை கல்லல் எறிந்து துரத்திய உன்னை பழி வாங்காமல் விடப் போவதில்லை நான் சாப்பிட்டால் தான் நீ சாப்பிட முடியும். நான் பக்கத்து வீட்டை சாப்பிட்டு விட்டேன்” என்பது போல் சாப்பாட்டு பக்கம் பாராமல் வேறு பக்கம் தன்தலையைத் திருப்பி வைத்திருந்தது அக்காகம். பழிவாங்க நினைத்த அக்காகம் என்ன நினைத்ததோ என்னவோ கொடியில் காயப் போட்டிருந்த அப்பாவின் வெள்ளை நிற மல் வேட்டியில் தன் எச்சத்தால் கோலம் போட்டது. அம்மா பார்த்துவிட்டாள். என் செய்வது வந்ததோ ஒரே ஒரு காகம். அதன் மேல் கல் எடுத்து வீசி தன் கோபத்தைத் தணிக்க முடியாதே அதுவும் புரட்டாசி சனிக்கிழமை அன்று சனி பகவானுக்கு எள் எண்ணை எரித்தப் பிறகு காகம் செய்த செயலுக்காக அதை தண்டிக்கலாமோ?. சனி  பகவான் கோபிக்க மாட்டாறொ. அப்பாவுக்கு இன்னும் ஏழரைச் சனி முடியவில்லை. காகம் கோபப்பட்டு சனிபகவானுக்கு கோள் மூட்ட, அவர் எதாவது எக்கச்சக்கமாக கடைக் கூறில் செய்து விட்டால். எழரைச் சனி முடியும் மட்டும் கவனமாக இருக்கும் படி சாஸ்திரி கூட எச்சரிக்கை செய்தவர். அவள் அதை யோசித்திருக்க வேண்டும். விருந்துக்கு வந்ததோ ஒரே ஒரு காகம். அதை ஆதரவாக வரவேற்று சாப்பாட்டைக் கொடுக்காவிட்டால் இன்று நாங்கள் பட்டின தான். அது சாப்பிட்டு ஏவறை விட்ட பிறகு தான் எமக்கு அம்மா சாப்பாடு போடுவாள். இல்லாவிட்டால் அவள் சுவையாக சமைத்த கறி சோறு ஆறிப் போய்விடும்.

 

அம்மா காகங்களுக்கு மரக்கறி சோறு பிடிக்காது. மீன் அல்லது இறச்சி கறி வைத்தால் அவை மணத்துக்கு உடனே வந்திடும் என்றேன் நான் கிண்டலாக”

டேய் நீ வாயை மூடு. உனக்குத் தான் இதிலை நம்பிக்கையில்லை என்றால் சும்மா இருக்க வேண்டியது தானே கடவுளின் கோபத்தை தேடிக்  கொள்ளாதே” அம்மா  என்னைஅதட்டினாள்.

 

பாவம் எங்கள் வீட்டு ஜிம்மிக்கு கூட பசி. பாவம் அதுவும் வீட்டோடை விரதம். நாக்கை வெளியே நீட்டிய படி தனக்கு அதில் ஒரு பங்கு கிடைக்காதா என்று தவித்து நின்றது. கலியாணவீட்டு மிச்சச் சாப்பாடும், ஹோட்டல்களில் எஞ்சி இருந்த சாப்பாட்டையும் ஒரு கை காகங்களுடன் போட்டி போட்டுக் கொண்டு சாப்பிடும் ஜம்மிக்கு புரட்டாசி சனிக்கிழமை மட்டும் காகங்களுக்கு ஏன் இந்த தனிச் சலுகை என்பது விளங்காத புதிராக இருந்தது. லொள் லொள் என்று அடிக்கடி குரைத்தது. கொடியில் இருந்த காகத்தை  கேட்டபோது அது சொல்லிற்று

“ ஏய் ஜிம்மி நாங்கள் சர்வ வல்லமை படைத்த சனிபாகவானின் அலுவலக வாகனம். அதாவது ஒபிசல் வெகிக்கல். அவர் நினைத்தால் தன் ஏழரை வருட ஆட்சியில் ஆக்களை ஆட்டி வைக்க முடியும். என்னை தாஜா செய்தால் நான் அவருக்கு சிபாரிசு செய்து கஷ்டத்தை அவர் ஆட்சி காலத்தில் கொடுக்காமல் செய்து விடுவேன். அதற்காக எனக்கு எனக்கு ஒரு தனி மரியாதை”

 

ஓ அப்ப ஒரு வித ஊழல் என்று சொல்லேன்” என்றது ஜிம்மி.

 

ஏய் ஜம்மி அதிகம் பேசாதே. உனக்கும் பிரச்சனையை தரச் சொல்லுவன்”

 

என்ன என்னை மிரட்டுகிறாயா. நான் எல்லோரையும் பாதுகாக்கும் வைரவரின் வாகனம். அவர் இருக்கு மட்டும் எனக்கேன் பயம்.?”

 

அப்படியென்றால் வைரவருக்கு பொங்கி படைக்கும் போது உனக்க என்னைப் போல் என்ட சலுகை காட்டுவதில்லை?”

 

ஏன் என்றால் உன்னைப் போல் நன்றியில்லாதவன் அல்ல நான். நாய் ஒரு நன்றியுள்ள மிருகம் எனக் கேள்விப்பட்டிருப்பியே. அது தான் என்னை அன்பாய வீட்டில் வளர்க்கிறார்கள். உனக்கு வருஷத்தில் சில தினங்களுக்கு தான் மரியாதை கொடுக்கிறார்கள். மற்ற நாட்களில் கல் எறிந்து துறத்திவிடுவார்கள்” ஜிம்மி தன் கௌரவத்தை விட்டுக் கொடுக்கவில்லை.

 

அம்மாவுக்கு காகம் சாப்பிடாமல் ஜிம்மியுடன் பேசிக் கொண்டிருந்தது புரியயில்லை. ஜிம்மி தொடர்ந்து குரைத்தது. காகம் கரைந்தது. இரண்டும் தொடர்நது பேசிக் கொண்டன. அவர்கள் பாhவையில் எனக்குப் புரிந்து அவர்களுக் கிடையே உள்ள கௌரவ பிரச்சனை.

 ஏய் ஜிம்மி என்னைப் பற்றி மகா கவி பாரதியார் கூட “காக்கைச் சிறகினலே..” என்று பாடியிருக்கிறார். என் நிறத்தில் அழகைக் கண்டு இரசித்திருக்கிறார்.. அதோ கேட்டாயா அந்த காக்கா பாடலை. அது கூட நடிகர் திலகம் தன் முதல் படத்தில் பாடியது. அந்த படம் வந்த போது எங்களைப் பார்த்து ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாக பாடுவார்கள்.”

ஒற்றுமையா?”

ஆமாம். உங்களைப் போல் நாலு பேர் கூடினால் வள் வள் என்று குரைத்து கடித்து சண்டை போடமாட்டோம். பிரச்சனையெண்டவுடன் கா கா கா என்று ஒரு குரல் கொடுத்தால் போது நாலு திசையிலும் இருந்தும் எம்மினம் பறந்து வந்திடும். ஒரு நாள் இப்படித்தான் ஒரு சிறுவன் மரத்தில் ஏறி கூட்டில் உள்ள முட்டைகளை  களவெடுக்க பார்த்தான். எனது சகோதரி அதைக் கண்டு விட்டர்ள. உடனே அவள் போட்ட குரலில் என் சொந்தக்காரர், நண்பர்கள் எல்லோரும் பறநது வந்து சிறுவன் தலையில் கொத்தோ கொத்தி இரத்தம் வழிய சிறுவனை ஓடச் செய்து விட்டார்கள். சாப்பாட்டை கூட பகிர்ந்துண்ணுவோம்.” என்றது பெருமையாக காகம்.

 

ஓ கோ. ஆனால் என்னை குளிப்பாட்டி தலை வாரி கவனிப்பது போன்ற மரியாதை உனக்கு நடப்பதில்லையே”

 

ஏன் இல்லை. என் பெயரில் யாழ்ப்பாணத்தில் காக்கை தீவு என்ற பெயர் உள்ள கடலோரப் பகுதி கூட உண்டு. கிட்டடியில் கொழும்பில் என் இனத்தவர்கள் சிலர் தீடீரென்று இறக்கத் தொடங்கினர். உடனே மாநகரசபை அதற்கு காரணம் கண்டு நடவடிக்கை எடுத்தது. நாம் நகரைச் சுத்தம் செய்யும் தொழிலாளிகளுக்கு ஒரு விதத்தில் உதவி செய்கிறோம். உன்னைக் கண்டால் படித்து கூட்டுக்குள் அடைத்து கொண்டு போய் விடுவார்கள். மக்களை விசராக்கி விடுவாய் என்ற பயம் வேறு”

 

ஏய் அப்படி சொல்லாதே நீ கூட தொற்று நோயை பரப்பி விடுவாய் என்று சனங்கள் பயப்பிடுகிறார்கள்?

 

நான் பிறருக்கு உதவி செய்யும் இனத்தை சேர்ந்தவன். குயில் கூட என் கூட்டில் தான் முட்டையிடும். நான் அடைகாத்து அதன் முட்டைகளை பொரிக்க வைப்பேன். குஞ்சுகள் வெளி வந்ததும் அவை வளரும் மட்டும் தாதியாக கவனிப்பேன். நீ அப்படி ஒரு நல்ல காரியம் செய்திருக்கிறாயா?”

 

ஏன் இல்லை. என் வீட்டு எஜமானின் குழந்தைகளை என்னை நம்பி எத்தனை தடவை தனிமையாக விட்டுப் போயிருக்கிறார்கள் தெரியுமா உனக்கு.?”

 

ஏய் ஜிம்மி உன்னைப்பற்றி அதிகம் புழுகாதே. என்னைப் பற்றிய காகமும் நரியும் என்ற பிரபல்யமான கதை கேள்விப்பட்டிருக்கிறாயா?

 

ஏன் இல்லை. நீ நரியால் ஏமாற்றப் பட்ட கதையைத் தானே சொல்லுகிறாய். அந்த வடைக்கு என்ன நடந்தது?”

 

அடேய் ஜிம்மி அதையல்ல நான் சொல்வது. போப் இசை  பாடகன் ஏ.யீ மனோகரனின் பிரபல்யமான இலங்கைக்காகத்தின் பாடலில் வந்த கதையை. நரிக்கு காதுலை பூ வைத்துவிட்டு போன புத்தியுள்ள காகத்தின் மொடர்ன் கதை அது”

 

அவர்களிடையே நடந்த சம்பாஷணை அம்மாவின் பொறுமையை சோதித்தது. ஜிம்மி காகத்தை சாப்பிட விடாமல் குரைத்துக் கொண்டிருந்தது அவளுக்கு எரிச்சலை கொடுத்தது. கீழே கிடந்த கல்லை தூக்கி ஜிம்மி மேல் எறிந்து “ ஓடிப் போ “ என்று துறத்தினாள்.  அது வள் வள் என்று கதறிய படி ஓடியது. பார்க்க பரிதாபமாகயிருந்தது.

 அடுத்த புதன் கிழமை அரசடி வைரவர் வடைமாலை சாத்தி பொங்கல்.. அது தான் எனக்கு ஞாபகத்துக்கு வந்தது. அப்போ பார்ப்பொம் ஜிம்மிக்கு அம்மா மரியாதை செய்கிறாவா வென்று.

 

ஜிம்மி போனபின்னும் கொடியில் இருந்த காகம் சாப்பிட மறுத்தது. அம்மாவின் கா கா என்ற பரிதாபமான ஓலத்தைக் கேட்டு மனம் இரங்கி இன்னும் இரண்டு காகங்கள் சாப்;பிட மதிலில் வந்தமர்ந்தன. கொடியில் இருந்த காகமும் அவையளோடை சேர்ந்து உண்ண ஆரம்பித்தது.

 

கனகம் எனக்கு பசி வயித்தை பிடிங்குது என்று அப்பா உள்ளுக்குள் இருந்து சத்தம் போட்டார். எனக்கு மனதுக்குள் சந்தோஷம். சாப்பிட வீட்டுக்குள் அம்மாவுக்குப் பின்னால் போனேன். ஜம்மியும் அப்பா சொன்னது விளங்கியோ என்னவோ என் பின்னால் வந்தது. நல்லகாலம் எல்லா காகங்களும் முழுதையும் சாப்பிடும் மட்டும் அம்மா நிற்கவில்லை.

 

காகங்கள் இல்லாத தேசங்களில் புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் காகத்துக்கு சாப்பாடு வைக்க என்ன செய்வார்கள் என்று யோசித்தேன். பதில் கிடைத்தது. கலியாணத்தில் பொம்மைப் பசுக் கன்று, வாழை மரம், முருக்கை மரம்  வைத்து கலியாணச் சடங்குகள் செய்வது போல் பொம்மைக் காகத்துக்கு சாப்பாட்டை வைப்பார்கள் போலும் என்றது என் மனம். கிட்டடியில் கனடாவில், புரட்டாசிக் சனிக்கிழமை அன்று இரண்டு காகத்தை எங்கிருந்தோ கொண்டு வந்து கூட்டுக்குள் அடைத்து வைத்து கோயிலில் சாப்பாடு வைக்க இரண்டு டொலர் எடுத்ததாக அத்தான் போன் செய்த போது சொன்னார். கேட்கும் போது வேடிக்கையாகயிருந்தது. எல்லாம் மக்களின் மூட நம்பிக்கை தான். அதை வைத்து பிஸ்னஸ் செய்யினம் கோயில்கள்.  “காக்கைச் சிறகினிலே நந்தலாலா மடைமைத் தனம் தோன்றுதடா நந்தலாலா” என்று எனக்குள் பாரதியார் பாடலைத் திருத்தி பாடிக்கொண்டேன்.

 

( யாவும் புனைவு)


No comments: