வாசகர் முற்றம் – அங்கம் 14 வாசகியாக வளர்ந்து, விமர்சகியாக மாறிய சூரியகுமாரி ஶ்ரீதரன் பஞ்சநாதன் தாயகத்தில் நாலாதிசையிலும் வாழ்ந்துவிட்டு துபாய் சென்ற இலக்கியவாதி ! முருகபூபதிஇலங்கையில் வடமராட்சியில் 
பருத்தித்துறையைச்சேர்ந்த  மருத்துவர் பஞ்சநாதன் – அன்னலட்சுமி தம்பதியரின் ஐந்தாவது பிள்ளையாக பிறந்தவர் சூரியகுமாரி.

குடும்பத்தில் அஞ்சாவது பெண் குழந்தை கெஞ்சினாலும் கிடைக்காது என்று எமது முன்னோர்கள் சொல்வதை கேட்டுள்ளேன்.

இந்த செல்லக்குழந்தைக்கு வீட்டிலே செல்லப்பெயர் பபா.   எனது  அம்மாவுக்கும் குடும்பத்தில் செல்லப்பெயர் பபா.  அம்மா  பபாவும் இந்த சூரியகுமாரி பபாவும் இணைந்ததுதான் எமது  பெரிய குடும்பம் என்பது மற்றும் ஒரு கிளைக்கதை.

சூரியகுமாரி பிறந்தது மாத்தளையில்.   தந்தையார் வடமராட்சி
பருத்தித்துறையிலிருந்து மருத்துவராக ஊர் ஊராக மாற்றலாகிச்செல்ல நேர்ந்தமையால்  சூரியகுமாரி பிறந்த ஊர் நோர்த் மாத்தளை.

புத்தளம் மாம்புரி – மினுவாங்கொடை – ஆண்டிஅம்பலம் – நீர்கொழும்பு – நயினா மடம் – பருத்தித்துறை என தாயகத்தின் நாலா திக்கிலும் தந்தையார் மருத்துவத் தொழில் நிமித்தம் செல்ல நேர்ந்தமையால்,  சூரியகுமாரியும்  இங்கெல்லாம்  பயணித்து படிக்க நேர்ந்தது.

அதனால் சகோதர மொழியான சிங்களமும் இவருக்கு பரிச்சியமானது.  மூத்த அக்கா பத்மினி , இரண்டாவது அக்கா நந்தினி, மூன்றாவது அக்கா மாலதி , அண்ணன் விக்னேஸ்வரன் ஆகியோரும் பெற்றோரும்  தீவிரமாக வாசிப்பவர்கள்.

அதனால் அந்தப்பழக்கம் இவரையும் தொற்றிக்கொண்டது.  பத்மினி மணம் முடித்து சிங்கப்பூர் வாசியாகி, சிறிது காலம் சிங்கப்பூர் பத்திரிகை ஒன்றிலும் பணியாற்றியவர். அத்துடன் சமையல் கலை தொடர்பாகவும் நூல் எழுதியவர். அதனை கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டது.


நந்தினியும் ஆசிரியையாக பணியாற்றியவர். பருத்தித்துறையில் அவர் பணியாற்றிய காலப்பகுதியில்,
1987 இல் நிகழ்ந்த வடமராட்சி லிபரேஷன் ஒப்பரேஷன் பொம்மர் தாக்குதலில் பலியானார்.மாலதி,  பட்டதாரி ஆசிரியையாக இலங்கையில் பணியாற்றிவிட்டு அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தார்.

அண்ணன் விக்னேஸ்வரனும் எழுத்தாளர்-  கவிஞர், பாடலாசிரியர்.  தென்றல் விடு தூது கவிதை நூலும் பலரது பார்வையில் கண்ணதாசன் என்ற தொகுப்பும், மனமெட்டுக்கள்  பாடல் இறுவட்டும்  வெளியிட்டவர். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்து முடித்து சிங்கப்பூரில் பணியேற்றார்.

சூரியகுமாரி, நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில்  10 ஆம் வகுப்புவரை கல்வி கற்றதன் பின்னர், உயர்தர கல்விக்காக பருத்தித்துறை மெதடிஸ்ட் பெண்கள் உயர் தர பாடசாலைக்குச்   சென்று,   அதன் பின்னர் யாழ் பல்கலைக் கழகத்தில்  தமிழில் சிறப்புமானி பட் டம் பெற்றார்.  பேராதனை பல்கலைக்கழகத்தில் MPhil முதலாம் வருடம் சித்தியடைந்து, கிழக்கு பல்கலைக்கழகத்தில் மூன்றாண்டு காலம் உதவி விரிவுரையாளராகவும், வீரகேசரியில் துணை ஆசிரியராகவும் மித்திரன் வார வெளியீட்டுக்குப்பொறுப்பான ஆசிரியராகவும்,  அதன்பின்னர், சுடரொளியில் இணை ஆசிரியராகவும் பணியாற்றிவிட்டு,  தொழில் வாய்ப்புப்  பெற்று துபாய் சென்றார்.

அங்கு ஒரு ஏற்றுமதி – இறக்குமதி நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கும் சூரியகுமாரியுடன், எனது வாசகர் முற்றம் தொடர்பத்திக்காக தொடர்புகொண்டேன்.

வாசிப்பை அன்றாடக் கடமைகளில் ஒன்றாக மேற்கொண்டுவந்த குடும்பப்பின்னணியில் வளர்ந்திருக்கும் சூரியகுமாரியை தொடக்கத்தில் பெரிதும் கவர்ந்த எழுத்தாளர்கள்: கல்கி, புதுமைப்பித்தன், ஜானகிராமன், கு.ப.ராஜகோபாலன், க.நா. சு. ஜெயகாந்தன், அகிலன், சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி , கி.ரா, மற்றும் எஸ். பொன்னுத்துரை.

சூரியகுமாரிக்கு  யாழ். பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் கா. சிவத்தம்பி,  சண்முகதாஸ், நுஃமான், சித்திரலேகா மௌனகுரு, ஆ. வேலுப்பிள்ளை, கலாநிதி பார்வதி கந்தசாமி ஆகியோரிடம் கற்கும் வாய்ப்பு கிடைத்தமையால், தேர்ந்த வாசகியாகவும் மாற முடிந்திருக்கிறது.

அக்காலப்பகுதியில் பல்கலைக்கழக பேராசிரியர்களும் விரிவுரையாளர்களும்  தமது மாணவர்களுக்கு இது விடயத்தில் பெரும் தூண்டலாகத்  திகழ்ந்தனர்.

எங்காவது இலக்கிய நிகழ்வுகள் – நூல் வெளியீடுகள் நடந்தால், அவற்றுக்கு மாணவர்களை அனுப்பிவைப்பதுடன், மறுநாள் விரிவுரைக்கு வரும்போது, அங்கே என்ன பேசப்பட்டது..?  எவற்றை உள்வாங்கிக்கொண்டீர்கள்..? அவற்றிலிருந்த உங்கள் தேடல் என்ன..? முதலான கேள்விகளைக்கேட்டு,  பதில் பெற்று புடமிட்டு வளர்த்தார்கள்.

பின்னாளில் மாணவர்கள் மேற்கொள்ளும்  MPhil ஆய்வுகளும்  முறையாக ஆவணப்படுத்தப்படாமல்,  அரங்கேற்றத்திற்காக மாத்திரம் நடனம் பயின்று தயாரானவர்களைப்போன்று ஆளாகியதும் துன்பியல்தான் என்பது எனது அவதானம்.

சூரியகுமாரியிடத்தில், எழுத்துப்பிரதியாக வாசிப்பு அனுபவத்தை எழுதத் தொடங்கிய காலம் பற்றியும் எதில் முதலில் எழுதினீர்கள்… ? எனவும் கேட்டபோது,

  “ கிழக்கு பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராக  மொழித்துறையில் பணியாற்றியபோது,  சிவரமணி கவிதைகள் குறித்த ஆய்வினை பெண்கள் ஆய்வு வட்டத்தினரின்  நிவேதினி இதழுக்காக எழுதியதாகவும்  மட்டக்களப்பு சூர்யா பெண்கள் நிறுவனத்தின் உறுப்பினராக இயங்கிய வேளையில்  பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து கள ஆய்வு ஒன்றினை மேற்கொண்டு அந் நிறுவனத்துக்காக ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்ததாகவும், அது பெண் சஞ்சிகையில்  வெளியானது எனவும் தெரிவித்தார்.

சூரியகுமாரி, தனது தீவிர வாசிப்பு அனுபவத்தினால், பேராசிரியர் சிவத்தம்பியின் வேண்டுகோளுக்கிணங்க ஈழத்தின் மூத்த எழுத்தாளர் சு. இராஜநாயகன்  அவர்களின் நூலுக்கு முதல்  முதலாக  விமர்சனம்  எழுதியதாகவும் குறிப்பிட்டார்.

  அதனைத் தொடர்ந்து, மு பொன்னம்பலம் , கலாமணி, ராஜ ஸ்ரீகாந்தன் (அழகு சுப்பிரமணியம்  நீதிபதியின் மகன் - மொழிபெயர்ப்பு கதைகள் ),

நீர்கொழும்பூர் முத்துலிங்கம்,  உடுவை தில்லை நடராஜா, லெ முருகபூபதி,  சோ.  ராமேஸ்வரன் உட்பட மேலும் சிலரின்  நூல்களுக்கும் நூலறிமுகம் – விமர்சனம்  செய்யும் வாய்ப்பு கிடைத்ததாகவும் தெரிவித்தார்.

 இதே காலகட்டத்தில்   ஊடகத்துறை கற்கை நெறிக்காக சுவீடன் சென்று வந்திருக்கும் சூரியகுமாரி,  அதன் பின்னர்  சென்னையில் நடந்த தமிழ் இனி 2000 மாநாட்டில்  இருபதாம்  நூற்றாண்டு இலங்கை பெண் இலக்கியம் குறித்து ஆய்வு சமர்ப்பித்ததாகவும்,  அக்கட்டுரை பின்னாளில் சக்தி சஞ்சிகையில் சில  மேலதிக குறிப்புகளுடன்  வெளியானது என்றும் சொன்னார்.

வீரகேசரியில் பிரதம  ஆசிரியர் நடராஜா,  மற்றும்  அன்னலட்சுமி இராஜதுரை,  துணை ஆசிரியரும் மொழி பெயர்ப்பாளருமான  கேதாரநாதன்  மற்றும் வீரகத்தி தனபாலசிங்கம்  ஆகியோரிடமும்,  சுடரொளி பத்திரிகையில் பணியாற்றிய வேளையில் சிரேஷ்ட பத்திரிகையாளர் வித்தியாதரன்       ( சமகாலத்தில் யாழ். காலைக்கதிர் பிரதம ஆசிரியர் )  மற்றும் அரசியல் விமர்சன – ஆய்வாளர்  “ தராக்கி  “ சிவராம் ஆகியோரிடத்திலும்  ஊடகத்துறை சார்ந்து பல விடயங்களை தெரிந்துகொள்ள முடிந்ததாகவும் சொன்னார்.

இந்தக் காலகட்டத்தில் கொழும்பு பல்கலைக் கழகத்தில் Diploma in Journalism செய்து முடித்திருக்கும் இவர்,  Mechanics in News casting  பாடத்தில் அதி கூடிய புள்ளி பெற்றமைக்காக Professor  Hideo Shimizu  Trust  Fund விருதும் பெற்றுள்ளார்.

தொடர்ந்தும் சூரியகுமாரியிடம் நான் கேட்ட கேள்விகளும் அவர் சொன்ன பதில்களும்:

கேள்வி:  ஆரம்பத்தில் விரும்பிப்படித்த பத்திரிகைகள், இதழ்கள், நூல்கள்…?

 பதில்:  பத்திரிகைகள்:  தினகரன் வீரகேசரி, சுதந்திரன், சிரித்திரன், ஈழநாடு,  ஈழநாதம், உதயன், சரிநிகர், Saturday Review, Sunday Leader, Sunday Times.

இதழ்கள்:  அம்புலிமாமா,  ராணிமுத்து, மாலைமதி, பொம்மை ,, சினிமா எக்ஸ்பிரஸ், மல்லிகை, மாணிக்கம், கதம்பம்,  குமுதம், ஆனந்தவிகடன்,   கலைமகள்,  கல்கி,  மங்கையர்  மலர்,  அவள், நெய்தல், அலை, புதுசு, கணையாழி, காலச்சுவடு.

நூல்கள்:  கல்கியின் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, தி ஜானகிராமனின் மோகமுள், அம்மா வந்தாள், மரப்பசு, அகிலன் , சுஜாதா , இந்திரா பார்த்தசாரதி நாவல்கள்,  ஜெயகாந்தன் சிறுகதை , நாவல்கள்,  வீரகேசரி பிரசுரங்கள்  புதுமைப்பித்தன், கு.ப.ரா, ந.பிச்சமூர்த்தி க.நா.சு, கி.ரா, முதலானோரின் படைப்புகள், எஸ். பொன்னுத்துரையின்  சடங்கு, தீ , லெ முருகபூபதியின்  சுமையின் பங்காளிகள்,  பாட்டி சொன்ன கதைகள்,  பறவைகள்  , ரஞ்சகுமாரின்  மோகவாசல் , தெணியான்,  செ கணேசலிங்கன், செ  யோகநாதன் ஆகியோரின் நாவல்கள், மு.பொன்னம்பலத்தின்  - நோயில் இருத்தல்    , சு வில்வரத்தினத்தின்  காற்று வழி கிராமம்,  காலத்துயர் , ஆக்கங்களும் முகங்களும் , சேரனின்                                         இரண்டாவது சூரிய உதயம், நீ இப்பொழுது இறங்கும் ஆறு  , வ. ஐ. ச .ஜெயபாலனின் - சூரியனோடு பேசுதல் , அ  யேசுராசாவின் தொலைவும் இருப்பும்  ஏனைய கதைகளும், சண்முகம் சிவலிங்கத்தின்  நீர் வளையங்கள்  , எம் ஏ நுஃமானின் - அழியா நிழல்கள், தாத்தாமாரும் பேரர்களும் ,  சோலைக்கிளியின்  காகம் கலைத்த கனவு, பனியில் மொழி எழுதி, பாம்பு நரம்பு மனிதன் , உமா வரதராஜனின், உள்  மன யாத்திரை  எஸ். எல். எம். ஹனிபாவின்  மக்கத்து சால்வை, ஜெயமோகனின் விஷ்ணுபுரம், ரப்பர், சுந்தரராமசாமியின் புளியமரத்தின் கதை,  ஜேஜே சில குறிப்புகள்,   கிராவின் கரிசல் காட்டு காகிதம்,  கோபல்ல கிராமம்,   க. நா. சு. வின் பொய்த்தேவு, அம்பையின் வீட்டின் மூலையில் சமையல் அறை, சிறகுகள் முறியும் ராஜம் கிருஷ்ணனின் அலைவாய்க்கரையில், வளைக்கரம்,  குறிஞ்சித்தேன், வேருக்கு நீர், கரிப்பு மணிகள் என பட்டியல் நீளும்.  

கேள்வி:  உங்களை வாசிப்பதற்கு தூண்டியவர்கள்…?

  பதில்:  யாழ்.  பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்பு தேர்வில் Modern Literature ஒரு பாடமாக இருந்தது. நாவல்,  சிறுகதை இலக்கிய விமர்சனம் , மூலபாடத்திறனாய்வு                   (Textual Criticism )  என்பனவற்றை  பேராசிரியர் சிவத்தம்பியும் சித்திரலேகா மௌனகுருவும் கற்பித்தார்கள். தரமான நூல்களை இனங்காணவும் வாசிக்கவும் இவர்களது கற்பித்தல் இன்றுவரை உதவுகிறது. 

 யாழ். பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வுக்காக “ நாயகி நாயகி பாவம் - ஆண்டாளை மையமாகக் கொண்ட ஆய்வு  “ என்ற தலைப்பில் பேராசிரியர் அ. சண்முதாஸ் அவர்களின் வழிப்படுத்தலில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்துள்ளேன்.

கேள்வி:  அன்றைய வாசிப்பு அனுபவமும் இன்றைய வாசிப்பு அனுபவமும் பற்றி…?

  பதில்:  ஆரம்பத்தில் கிடைத்ததை எல்லாம் வாசித்தேன். இப்போது  தேர்வு  செய்து வாசிக்கிறேன்  ( எழுத்தாளர் - வெளியீட்டாளர்கள்  என்பனவற்றை மனதில் கொண்டு ). இன்று Digital  மீடியா வளர்ந்து விட்டது. எமக்கு எது தேவையோ அதனை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு நமக்குண்டு.

கேள்வி:  ஏதும் விசேடமாக… வாசிப்பு தொடர்பாக  மேலும் சொல்ல நினைக்கிறீர்களா..?

 பதில்:  பள்ளிக்காலத்தில் கிடைக்கும் எல்லாவற்றையும் வாசிக்க வேண்டும், பிறகு நூலக பரிச்சயம்  வாசிக்கும் திறனை  அதிகரிக்கும். அதன் பின்னர் தேர்ந்து வாசிக்கும் இயல்பு தானாகவே வந்துவிடும்.

நான்  விரும்பித்  தேடிச்சென்ற இடங்கள்:  நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்ற  நூலகம், யாழ்.  பல்கலைக்கழக நூலகம்,  கிழக்கு பல்கலைக்கழக நூலகம்,  பருத்தித்துறை கந்தமுருகேசனார் நூலகம்,  பருத்தித்துறை உதயன் புத்தகசாலை உரிமையாளர் து குலசிங்கம் அவர்களின் Personal books collection, சிங்கப்பூருக்கு  விடுமுறைக்காலங்களில்  செல்லும்போது எனது சகோதரன் கவிஞர் விக்னேஸ்வரனின் Personal Books collection என்பவற்றுடன்  தற்பொழுது noolaham.org, Project  Madurai மற்றும்  மின்னிதழ்கள்  ( லண்டன் எதுவரை,  பிரான்ஸ் நடு,  தமிழ்நாடு திண்ணை, மற்றும் வனம், அகழ்,  கனடா பதிவுகள்,  அவுஸ்திரேலியா அக்கினிக்குஞ்சு – தமிழ் முரசு, சரவணனின் நமது மலையகம் )

கேள்வி:  வாசிப்பதற்கான உங்கள் நூல்களின் தெரிவு எவ்வாறு அமைகிறது…?

  பதில்:  புதியவைகளை விரும்பிப்  படிக்கிறேன். எழுத்தாளர், வெளியீட்டகம், விமர்சனங்களின் மூலம் அறியப்பெற்ற   பெண்ணியம், இலக்கியம், அரசியல் விஞ்ஞானம், மருத்துவம்  சார்ந்த  நூல்களை வாசிக்கிறேன்.  

மின்னிதழ்கள்  தற்காலத்துக்குரிய  உயிரோட்டமான விடயங்களை பிரசுரிக்கின்றன. அவற்றில் மீள் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எம்மை வளர்த்துக்கொள்ள இது உதவுகிறது. 

சூரியகுமாரி , இலங்கைத் தலைநகரில் பெண்கள் ஆய்வு வட்டம், மற்றும் இலக்கிய சந்திப்புகளில்  காரசாரமான விவாதங்களில் ஈடுபடுபவர் என்றும் இவர் பற்றி அறிந்திருக்கின்றேன்.

நான் புகலிடத்தில் இருந்தமையால், அவற்றை கேட்கும் வாய்ப்பு எனக்கு கிட்டவில்லை.

1997 ஆம் ஆண்டு எனது இலக்கியப்பிரவேச வெள்ளிவிழாவை முன்னிட்டு, என்னை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்திய மல்லிகை ஜீவா அவர்களை பாராட்டி எமது நீர்கொழும்பூரில்   நான் பெருவிழா எடுத்தபோது, சூரியகுமாரியும்  கலந்துகொண்டு வீரகேசரி பத்திரிகையின் சார்பில் வாழ்த்திப்பேசினார்.

அந்த நிகழ்வில் தினக்குரல் ஆசிரிய பீடத்தைச்சேர்ந்த ஆ. சிவநேசச்செல்வன், தனபாலசிங்கம், தினகரன் ஆசிரியர் ராஜஶ்ரீகாந்தன், நவமணி ஆசிரியர் சிவலிங்கம், இலங்கை வானொலி சார்பில் இளையதம்பி தயானந்தா, ரூபவாகினி தொலைக்காட்சி தமிழ்ச்சேவை பணிப்பாளர் வன்னியகுலம், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின்  சார்பில் அதன் செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரன், மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் சார்பில் தெளிவத்தை ஜோசப், துரைவி பதிப்பகத்தின் நிறுவனர் துரை. விசுவநாதன், மற்றும் மேமன்கவி, திக்குவல்லை கமால், மு. பஷீர்,  நீர்கொழும்பூர் முத்துலிங்கம்,  தருமலிங்கம், இலக்கிய ஆர்வலர்கள் மாணிக்கவாசகர்,  தங்கவடிவேல் மாஸ்டர் அவரது புதல்வன் ஓவியர் சௌந்தர், மற்றும் எழுத்தாளர்  வதிரி சி. ரவீந்திரன் முதலானோர் கலந்துகொண்டனர்.

இவர்கள் அனைவரும் இலக்கியம்  ஊடகம்  மற்றும்  கல்வித்துறையில் ஆளுமைகள். இவர்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்தவர்தான் சூரியகுமாரி.

நான் எழுத்துலகில் பிரவேசித்த 1970 களில் குழந்தையாக எங்கள் ஊர் வித்தியாலயத்தில்  முதலாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த சூரியகுமாரி, பின்னாளில் தேர்ந்த வாசகியாகவும் சிறந்த இலக்கிய விமர்சகியாகவும் உருமாறியிருப்பதையிட்டு மகிழ்ச்சியோடு வாழ்த்துகின்றேன்.

கல்வி,  விரிவுரை, இதழியல்,  பெண்ணியம், விமர்சனம் என்று வலம் வந்துகொண்டிருந்தவரை துபாயில் ஒரு இறக்குமதி – ஏற்றுமதி நிறுவனம் ஒருங்கிணைப்பாளர் பதவியை வழங்கி உள்ளீர்த்துக்கொண்டுவிட்டது. அதனால் தன்னை நீர்த்துப்போகச் செய்யாமல் தொடர்ந்தும் வாசித்துக்கொண்டிருக்கிறார்.

துபாயில் கணவர் ஶ்ரீதரன் மகன் காருண்யனுடன் - தொழில் சார்ந்த பணிகளுக்கு மத்தியில் தனக்கு கிடைக்கும் நேரத்தில் வாசித்துக்கொண்டிருக்கும் சூரியகுமாரி ஶ்ரீதரன் பஞ்சநாதனுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

---0—

letchumananm@gmail.com

No comments: