உலகச் செய்திகள்

 சிரியா, ஈராக் எல்லையில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல்

சீனா- ரஷ்யா: நட்புறவு ஒப்பந்தம் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு புதுப்பிப்பு

தொடக்க விழாவில் ஜோ பைடன் கலந்து கொள்ளமாட்டார்

வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்காத ஜனாதிபதிக்கு 15 மாத சிறை

டெல்டா வகை கொரோனா 90இற்கும் மேற்பட்ட நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் என எச்சரிக்கை

கொரோனாவைக் கட்டுப்படுத்த செப்டெம்பருக்குள் ஒவ்வொரு நாடும் 10 % மக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும்


சிரியா, ஈராக் எல்லையில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல்

ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது, ஆளில்லா விமானங்கள் மூலம் ஈரான் பயங்கரவாத அமைப்புகள் தொடர் தாக்குதலை நடத்தி வருவதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தத் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்காவின் இராணுவ மையமான பென்டகன் தெரிவித்துள்ளது.

ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது, ஆளில்லா விமானங்கள் மூலம் ஈரான் பயங்கரவாத அமைப்புகள் தொடர் தாக்குதலை நடத்தி வருவதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தத் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்காவின் இராணுவ மையமான பென்டகன் தெரிவித்துள்ளது. பயங்கரவாத மையங்களாகவும், ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ள இடங்களாகவும் செயல்பட்ட இடங்கள் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் 2 இடங்கள் மற்றும் ஈராக்கில் ஒரு இடத்திலும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் உத்தரவுப்படி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்கள், காயம் அடைந்தவர்கள் பற்றிய விவரங்கள் தகவல் ஏதும் வெளியாகவில்லை. கடந்த 5 மாதங்களில், ஈரான் பயங்கரவாத அமைப்புகள் மீது அமெரிக்கா நடத்தும் 2 ஆவது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 
சீனா- ரஷ்யா: நட்புறவு ஒப்பந்தம் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு புதுப்பிப்பு

சீனாவும், ரஷ்யாவும் தங்களது நட்புறவு ஒப்பந்தத்தை, மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீடித்துக் கொள்வதாக முறைப்படி அறிவித்துள்ளன.

இந்த அறிவிப்பினை சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் காணொளி காட்சி வழியாக உறுதிப்படுத்தினர்.

ஒரு காலத்தில் எதிரிகளாக விளங்கிய இந்த இரு முன்னாள் கம்யூனிஸ்ட் நாடுகளும் மேற்கு நாடுகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில், இந்த நட்புறவு ஒப்பந்தத்தை புதுபித்துள்ளது.

காணொளி காட்சி வழி சந்திப்பின்போது, கடந்த 2001ஆம் ஆண்டில் இரு தரப்புக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட நட்புறவு ஒப்பந்தத்தை நினைவு கூர்ந்த தலைவர்கள், இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் தங்களுடைய நட்புறவு புதிய உச்சத்தை தொட்டதாக பெருமிதப்பட்டனர்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த ஜனாதிபதி விளாடிமிர் புடின், வெளியுறவு கொள்கை விவகாரங்களில் தொடர்ச்சியாக ஒருங்கிணைந்து செயற்படுவதால்தான் தங்களின் சர்வதேச ஒத்துழைப்பு நிலைத்து இருப்பதாக குறிப்பிட்டார்.

அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையே எதிர்காலத்தில் இராணுவ கூட்டணியை அமைக்கும் வாய்ப்பை ஒதுக்கி விட முடியாது எனவும் புடின் கூறினார்.

சீனா, ரஷ்யா இடையிலான கேந்திர ஒத்துழைப்பின் அவசியத்தை வலியுறுத்திய ஷி ஜின்பிங், பொது நல விவகாரங்களில் இரு நாடுகளும் சர்வதேச அரங்குகளில் ஒன்றுக்கொன்று தோள் கொடுக்கும் என்று கூறினார்.   நன்றி தினகரன் 
தொடக்க விழாவில் ஜோ பைடன் கலந்து கொள்ளமாட்டார்

டோக்கியோவில் எதிர்வரும் 23-ம் திகதி நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கலந்துகொள்ளமாட்டார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

எனினும் அமெரிக்க வீரர்களுடன் அரசின் சார்பில் மூத்த பிரதிநிதிகள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   நன்றி தினகரன் 
வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்காத ஜனாதிபதிக்கு 15 மாத சிறை

வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்காத ஜனாதிபதிக்கு 15 மாத சிறை-Former South African President Jacob Zuma Sentenced to 15 Months in Prison

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் சூமாவுக்கு (Jacob Zuma) 15 மாத  சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் (Constitutional Court) உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் விவகாரம் தொடர்பிலான விசாரணைகளுக்காக நீதிமன்றம் விடுத்த அழைப்பாணையை புறக்கணித்தமை தொடர்பில், நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு இவ்வாறு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

79 வயதான, ஜேக்கப் சூமா 2009 முதல் 2018 வரையான 9 ஆண்டுகள் தென்னாபிரிக்காவை ஆட்சி செய்திருந்தார். குறித்த காலப்பகுதியில் இடம்பெற்ற பல்வேறு முறைகேடுகள் தொடர்பிலேயெ அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து 5 நாட்களுக்குள் அவரை சரணடையுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதி பிரதம நீதியரசர் ரேமண்ட் ஷொண்டோ (Raymond Zondo) தலைமையில் இடம்பெற்ற குறித்த விசாரணைகள், தனிப்பட்ட குரோதத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இது அரசியல் ரீதியானதும் எனவும், முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் சூமா தெரிவித்துள்ளதோடு, தம் மீதான குற்றச்சாட்டுகளை மறுப்பதாக தொடர்ந்தும் தெரிவித்து வருகின்றார்.

அவரது ஆட்சிக் காலத்தில் முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளும் விடயங்களில் வர்த்தகர்கள் அரசியல்வாதிகளுடன் இணைந்து சதிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அவரது ஆட்சி முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து இடம்பெற்று வரும் இவ்வழக்கு விசாரணைகளில் கடந்த 2019ஆம் ஆண்டு ஒரு தடவை மாத்திரம் ஜேக்கப் சூமா நீதிமன்றில் முன்னிலையாகியிருந்ததாகவும் அதன் பின்னர் மருத்துவ காரணங்கள் மற்றும் ஏனைய வழக்கு விசாரணைகள் தொடர்பில் காரணங்கள் தெரிவித்து அவர் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அவரை இவ்வாறு விடும் நிலையில், நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்படும் ஏனையோரும் அதனையே தொடர வாய்ப்பு உள்ளதாக, பிரதி பிரதம நீதியரசர் பிரதி பிரதம நீதியரசர் ரேமண்ட் ஷொண்டோ கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி தினகரன் 
டெல்டா வகை கொரோனா 90இற்கும் மேற்பட்ட நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் என எச்சரிக்கை

டெல்டா வகை கொரோனா எதிர்வரும் மாதங்களில் 90க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக நாடுகளில் கொரோனாவால் கடந்த ஆண்டு முழுவதும் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. நடப்பு ஆண்டிலும் இதன் தீவிரம் பல நாடுகளில் வெளிப்பட்டன. இதுவரை கொரோனாவால் 18.29 கோடி பேர் பாதிக்கப்பட்டும், 39.62 இலட்சம் பேர் உயிர் இழந்துமுள்ளனர்.

எனினும், 16.75 கோடி பேர் குணமடைந்து இருப்பது ஆறுதல் ஏற்படுத்தியுள்ளது. 1.14 கோடி பேர் சிகிச்சையில் உள்ளனர். உலக நாடுகள் பலவற்றிலும் கொரோனாவின் உருமாறிய வகையால் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. அவை அல்பா, பீட்டா, காமா மற்றும் டெல்டா என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், 172 நாடுகளில், ஆல்பா வகை கொரோனா பாதிப்புகளாலும், 120 நாடுகளில் பீட்டா வகை கொரோனா பாதிப்புகளாலும், 72 நாடுகளில் காமா வகை கொரோனா பாதிப்புகளாலும் மக்கள் பெருமளவில் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதேபோன்று, 96 நாடுகளில் டெல்டா வகை கொரோனா பாதிப்புகள் உள்ளன என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த பாதிப்பு கடந்த வாரத்தை விட 11 நாடுகளில் அதிகம் என்றும் தெரிவித்துள்ளது.

96 நாடுகள் டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து தெரிவித்து உள்ளன. இந்த 96 நாடுகளில் வரும் மாதங்களில் டெல்டா வகை கொரோனா வைரஸ் ஆதிக்கம் செலுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.   நன்றி தினகரன் 
கொரோனாவைக் கட்டுப்படுத்த செப்டெம்பருக்குள் ஒவ்வொரு நாடும் 10 % மக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும்

உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த எதிர்வரும் செப்டம்பர் மாதத்துக்குள் ஒவ்வொரு நாடும் குறைந்தபட்சம் தங்கள் மக்கள் தொகையில் 10 சதவீதம் பேருக்குத் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் அறிவுறுத்தியுள்ளார்.

உலக அளவில் கொரோனா வைரஸ் பரவல் பெரும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்றிலிருந்து மக்களைக் காப்பது தடுப்பூசி ஒன்று மட்டும்தான் என்று உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதனால் ஒவ்வொரு நாடும் தங்கள் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுப்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், வளர்ந்த நாடுகளில் தடுப்பூசி எளிதாக மக்களுக்குக் கிடைத்து விடுகிறது, ஆனால் வளர்ந்து வரும் நாடுகள், ஏழை நாடுகளில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி கிடைப்பது பெரும் சிரமமாக இருந்து வருகிறது.

இதனால், ஏழை நாடுகளின் மக்களுக்காக தடுப்பூசி வழங்க கோவேக்ஸ் எனும் திட்டத்தை ஐ.நா. உருவாக்கியது. இந்தத் திட்டத்தில் வளர்ந்த நாடுகள் தங்களின் பங்களிப்பாக தடுப்பூசியை வழங்கிட வேண்டும், அதன் மூலம் அந்தத் தடுப்பூசி ஏழை நாடுகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டது. ஆனால், அந்தத் திட்டத்திலும் தற்போது மந்தநிலை நீடிக்கிறது. இந்நிலையில் இந்திய சர்வதேச கூட்டமைப்பின் நிகழ்ச்சியி்ல் காணொலி வாயிலாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் நேற்றுமுன்தினம் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

உலகளவில் தடுப்பூசி செலுத்துவதிலும், கிடைப்பதிலும் பெரும் ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன. சில வளர்ந்த நாடுகளில் உள்ள மக்களுக்கு அதிகமான பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ஆனால் பல ஏழை நாடுகளில் உள்ள மக்களுக்கு தடுப்பூசிகள் இன்னும் கிடைக்கவே இல்லை. அங்குள்ள முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், முதியோர் உள்ளிட்ட எளிதில் பாதிப்புக்கு ஆளாகும் மக்களுக்குக்கூட தடுப்பூசி கிடைக்கவில்லை.

சில நாடுகள் இன்னும் தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தாமல் இருப்பது அந்த நாட்டுக்கு மட்டுமல்ல மற்ற நாடுகளுக்கும் அது ஆபத்தை ஏற்படுத்தும்.

ஆதலால், எதிர்வரும் செப்டம்பர் மாதத்துக்குள் ஒவ்வொரு நாடும் தங்கள் மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 10 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி முடித்தால்தான் ஓரளவுக்கு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சிறந்த வழியாக அமையும்.

இந்த ஆண்டு இறுதிக்குள் 40 சதவீத மக்களுக்கும், அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்குள் 70 சதவீதம் மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தி முடிப்பதுதான் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தவும், உலகப் பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு வரவும் இதுதான் சிறந்த வழி. ஒவ்வொரு இடத்திலும் கொரோனா தொற்றை முடிவுக்கு கொண்டுவரும் வரை, எந்த இடத்திலும் நம்மால் தொற்றை ஒழிக்க முடியாது.   நன்றி தினகரன் 
No comments: