எழுத்தும் வாழ்க்கையும் – அங்கம் 40 வலிசுமந்த மேனியராய் அலைந்துழன்றோம் ! கிராண்ட்பாஸ் வீதியில் வீசப்பட்டிருந்த தமிழ் எழுத்தாளர்களின் படங்கள் !! முருகபூபதி


எனக்கு மூன்று வயதும் நிரம்பாத 1954 ஆம் ஆண்டு இலங்கையில் தோன்றிய மூத்த இலக்கிய அமைப்பு இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்.

இச்சங்கத்தின்  அங்குரார்ப்பணம்  அக்காலப்பகுதியில் கொழும்பில் மருதானை வீரரத்தன மண்டபத்தில் நடந்திருக்கிறது. 

" ஒரு  முற்போக்கு  இலக்கியப் பரம்பரை வளர நம்நாட்டு எழுத்தாளர்களுக்குச் சரியான தலைமை அளித்து வழிநடத்தும் அமைப்பாகவும், அதன் கொள்கைகளையும் வேலைத்திட்டத்தையும் நடைமுறைப்படுத்தும்


உயிர்த்துடிப்பும் செயலாற்றும்  திறமையுமுள்ள நிறுவனமாகவும் இ.மு.எ.ச. திகழவேண்டும். எமது மக்களின் இலக்கிய எதிர்காலத்தை பொறுப்புணர்ச்சியுடன், கடமை உணர்வுடன் நாம் ஒவ்வொருவரும் கூட்டாகவும் தனித்தும் பொறுப்பேற்று எமது பணியை உற்சாகத்துடனும் உறுதியுடனும் நிறைவேற்ற வேண்டும் " என்ற தீர்மானம் முன்மொழியப்பட்டு ஏற்கப்பட்டிருக்கிறது.

இந்தத் தகவல்களை  ஈழத்து முற்போக்கு இலக்கியமும் இயக்கமும்  என்ற நூலில் மூத்த எழுத்தாளர் சுபைர் இளங்கீரன் பதிவுசெய்துள்ளார்.

1956 ஆம் ஆண்டில் - இலங்கையில் கொழும்பு, குருணாகல், கண்டி, மாத்தளை, திருக்கோணமலை, அநுராதபுரம், யாழ்ப்பாணம் ஆகிய ஊர்களிலும் மலையகத்தில் பல நகரங்களிலும் இ.மு. எ. சங்கம் பாரதிக்காக பல விழாக்களை நடத்தியபோது எனக்கு ஐந்து வயது.  பாரதி விழாவுக்கென  தமிழகத்திலிருந்து மூத்த  இலக்கிய விமர்சகரும்  புதுமைப்பித்தனின் சகாவும்  பாரதி இயல் ஆய்வாளருமான தொ. மு. சி. சிதம்பர ரகுநாதனை சங்கம் வரவழைத்தது. அச்சமயம் அவர் எமது நீர்கொழும்பு வீட்டுக்கும் வந்தார். 

இலங்கையில் பாரதியை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் முன்னிறுத்தியதற்கான காரணத்தை இளங்கீரன் தமது  நூலில் இவ்வாறு பதிவுசெய்துள்ளார்:

" இருபதாம் நூற்றாண்டின் முதல் இரு தசாப்தங்களில்  தமிழ் இலக்கியத்தில் தேசிய உணர்வையும் முற்போக்கு கருத்துக்களையும் புதிய தமிழையும் தொடக்கிவைத்தவர் மகாகவி பாரதியே. எனினும், அவரைப்பற்றி 1956 வரை, இலங்கையில் பேசியும் எழுதியும் வந்தவர்கள்


அம்மகாகவியின் தமிழ்த்தொண்டையும் கவிதையில் அவர் புகுத்திய புதுமையையும் மேல்வாரியாக சிலாகித்துக் கூறிவந்தனரே தவிர, பாரதி இலக்கியத்தின் முழு உள்ளடக்கத்தையும் அதன் உணர்வுபூர்வமான இலட்சியங்களையும்  மக்களுக்கு  சரிவர விளக்கிக் காட்டவில்லை. பாரதியின் ஏகாதிபத்திய எதிர்ப்பு,  தேசிய உணர்வு, சகோதர இனங்களையும் சகோதர மொழிகளையும் அவர் மதித்த விதம், ஆங்கில  மோகத்திற்கும் தமிழ் மொழியில் படித்தவர்கள் மத்தியில் நிலவிய தாழ்வுணர்ச்சிக்கும் எதிராக தாய்மொழிப்பற்றை ஊட்டிய  பாங்கு, தேசிய ஐக்கியத்தில்

அவர் கொண்டிருந்த பற்றுறுதி, சாதிக்கொடுமையை வெறுப்போடும் வெஞ்சினத்தோடும்  சாடிய முறை, முப்பது கோடி ஜனசங்க முழுமைக்கும் பொதுவுடமை வேண்டி நின்ற அவரது சமூதாயக்கொள்கை, அவரில் காணப்பட்ட சர்வதேச உணர்வு ஆகியவற்றை மக்களுக்கு எடுத்துச்சொல்லாமல் மறைத்துவிட்டார்கள்  என்றே கூறலாம். காரணம், நிலபிரபுத்துவ அமைப்பின் பிற்போக்கான சமூகக்கருத்துக்களையும் கோட்பாடுகளையும் மனோபாவத்தையும் கொண்டிருந்த அவர்கள், மேலே கூறப்பட்ட பாரதியின் முற்போக்கான அம்சங்களை அங்கீகரிக்க விரும்பாததுதான். சொல்லப்போனால் தமிழ் மொழிக்கும் தமிழ் கவிதைக்கும் மறுமலர்ச்சியை உண்டாக்கிய ஒரு புதுமைக்கவி என்ற அளவில் அவரைக்காட்டினரே தவிர (பண்டித வர்க்கம் இதனைக்கூடச்செய்யவில்லை) அம்மகா கவியின் முழுமையான தரிசனத்தை - பரிமாணத்தை மக்களுக்கு காட்டவில்லை."

இலங்கையில் முற்போக்கு இலக்கியத்தை


வளர்த்தெடுக்கவேண்டிய தேவை அக்காலப்பகுதியில் இருந்தமைக்கு இங்கிருந்த தமிழ் சமூக அமைப்பும் ஒரு முக்கிய காரணம்.   சாதி வேற்றுமை, ஏற்றத்தாழ்வு, ஆலயங்களில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு அனுமதி மறுக்கப்பட்டமை, குடிநீர் கிணறுகளில் அம்மக்களுக்கு காட்டப்பட்ட புறக்கணிப்பு, பாடசாலைகளில் நடந்த வேற்றுமை, அவற்றின் வெளிப்பாடாக வெடித்த கலவரங்கள் என்பன ஈழத்து இலக்கியத்தில் சிறுகதை, கவிதை, நாவல், நாடகம் முதலானவற்றில் இப்பிரச்சினைகள் மண்வாசனை கமழ பதிவுசெய்யப்பட்டன.

இச்சங்கத்திற்கென  இலங்கையின் மற்றும் ஒரு மூத்த எழுத்தாளர் அ.ந. கந்தசாமி எழுதியிருக்கும் எழுத்தாளர் கீதம் , சங்கம் 1962 இல் சங்கம்  நடத்திய அகில இலங்கைத் தமிழ் எழுத்தாளர் பொது மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது.  அதிலும் பாரதியின் பிரசித்திபெற்ற கவிதை வரிகளே தொடக்கமாக அமைந்திருந்தன.

குறிப்பிட்ட எழுத்தாளர் கீதம்:

நமக்குத்தொழில் கவிதை நாட்டிற் குழைத்தல்

 இமைப்பொழுதும் சோரா திருத்தல்

    சங்கு முழங்குது ! சங்கு முழங்குது !

    சங்கு முழங்குது கேள் - புதுமைச்  சங்கு முழங்குது கேள்

முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் இந்த எழுத்தாளர் கீதத்தை


இயற்றிய அ.ந. கந்தசாமி அவர்கள் பற்றி நான் இலக்கிய உலகில் பிரவேசித்த பின்னரே தெரிந்துகொண்டேன்.  பாரதியின் ஞானகுரு அல்வாய் அருளம்பலம் சாமி பற்றி தீவிரமாக தேடி ஆராய்ந்து,  அவரது சமாதி அமைந்துள்ள பருத்தித்துறை வியாபாரிமூலையில் அன்னாருக்காக சங்கத்தின் சார்பில் பெருவிழாவே எடுப்பதற்கு தூண்டுகோலாக இருந்தவர்தான் அ.ந. கந்தசாமி.

இதுபற்றியெல்லாம் எனது இலங்கையில் பாரதி ஆய்வு நூலில் விரிவாக பதிவுசெய்துள்ளேன்.  முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் 1973 இற்குப்பின்னர் நானும் இணைந்த கதையை இந்த எழுத்தும் வாழ்க்கையும் தொடரின் முன்னைய அங்கங்களில் குறிப்பிட்டுள்ளேன்.

 1982 - 1983 காலப்பகுதியில்   எமது சங்கம் பாரதி நூற்றாண்டு விழாக்களையும் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுத்தது. இதற்காக தமிழகத்திலிருந்து பாரதி இயல் ஆய்வாளர்கள் தொ.மு. சி. ரகுநாதன், பேராசிரியர் எஸ். இராமகிருஷ்ணன், ராஜம் கிருஷ்ணன் ஆகியோரையும் அழைத்திருந்தது.

ரகுநாதனுக்கு அது இரண்டாவது பயணம். ஏனைய இருவருக்கும் அதுதான் முதலும் கடைசியுமாக அமைந்த பயணம். 

அச்சமயம் நான் சங்கத்தின் கொழும்புக்கிளையின்


செயலாளராக இயங்கிக்கொண்டிருந்தேன்.  ஒருவார காலம் வீரகேசரியில் லீவு எடுத்துக்கொண்டு, இரவு பகலாக பாரதி நூற்றாண்டு விழா சம்பந்தமான பணிகளில் ஈடுபட்டேன்.

பாரதியிடத்தில் எனக்கு மிகவும் பிரியம்.  அதனால்தான் எனது மூத்த மகளுக்கும் பாரதி என்று பெயர்வைத்தேன்.

இச்சங்கத்தில்  எனக்கு முன்பிருந்தே  கே.கணேஷ், .. கந்தாமிசி.வி.வேலுப்பிள்ளைபேராசிரியர்கள்  கைலாசபதி, சிவத்தம்பி,   தில்லைநாதன்நுஃமான்மௌனகுருசபா. ஜெயராஜா, கவிஞர்கள்  பசுபதிசுபத்திரன்சில்லையூர்  செல்வராஜன்.முருகையன்,            . சிவானந்தன்சாருமதிமற்றும் படைப்பாளிகள் இளங்கீரன்,   கே. டானியல், டொமினிக் ஜீவாசோமகாந்தன்செ. கதிர்காமநாதன்செ. கணேசலிங்கன்என்.கே.ரகுநாதன்,    நீர்வை  பொன்னையன்,  எச்.எம்.பி. மொஹிதீன்முகம்மது சமீம்பத்மா சோமகாந்தன்மருதூர்க்கொத்தன்மருதூர்க்கனி,   . இக்பால்,     காவலூர்  இராஜதுரைதெணியான்செ. யோகநாதன், யோ. பெனடிக்ற்பாலன்,   மு. கனகராஜன்,   சாந்தன்ராஜஸ்ரீகாந்தன்அந்தனிஜீவா உட்பட   பலர்அங்கம்வகித்தனர்.   நானும்   திக்குவல்லைகமாலும்,   மேமன்கவியும், ஆப்தீனும்கே. விஜயனும்    பின்னர் இணைந்தவர்கள்.  இச்சங்கத்தில் நான்கு   தலைமுறைகளைச்சேர்ந்த  படைப்பாளிகள்  இயங்கினர். இவர்களில்   சிலர்  இன்று  எம்மத்தியில் இல்லை.   இவர்கள் அனைவரும்   பாரதியின்  கருத்தியல்களின்  பாதிப்புக்குட்பட்டவர்களே.

பாரதியின்  பிறந்த  தினம்  11-12-1882 .  அவரது நூற்றாண்டுகாலம் ஆரம்பமானதும்  12-12-1981  ஆம்  திகதி  கொழும்பு  தமிழ்ச் சங்கமண்டபத்தில்  பாரதி  நூற்றாண்டுக் கொண்டாட்டத்திற்கான முதலாவது  நிகழ்ச்சி  தொடங்கியது.

கொழும்பு தமிழ்ச்சங்கமும் அவ்வேளையில்  பவளவிழாக்காலத்தைக் கொண்டாடியது.

இ.மு. எ.சங்கத்தினால்   அமைக்கப்பட்ட  தேசியக்குழுவில்நூற்றாண்டு விழாக்குழு,   நூல்  கண்காட்சிக்குழுஎழுத்தாளர் ஒளிப்படக்கண்காட்சிக்குழு,   மகளிர் குழு  என்பனவும் உருவாக்கப்பட்டன.

தேசியக்குழுவில்  எழுத்தாளர்கள்  மாத்திரமன்றிநீதியரசர்கள், கலைஞர்கள்,   ஊடகவியலளர்கள்பொதுசனத்தொண்டர்கள், பெண்ணிய செயற்பாட்டாளர்கள்,  கல்வித்துறை  சார்ந்த  அறிஞர்கள்  பலரும் இணைந்தனர்.

மேற்குறிப்பிட்ட  திகதியில்   பாரதிநூற்றாண்டு  விழாக்குழுத்தலைவர் நீதியரசர்  எச்.டபிள்யூ. தம்பையா  தலைமையில்    முதல் விழா  நடந்தது.

இவ்விழாவில்  யாழ். பல்கலைக்கழகத்தின்   அன்றைய  துணைவேந்தர் பேராசிரியர்  சு. வித்தியானந்தனும்  சிங்களக்கலைக் களஞ்சியத்தை உருவாக்கிய  பேராசிரியர் டி.ஈ. ஹெட்டியாராய்ச்சியும்  தொடக்கவுரை  நிகழ்த்தினர்.   சங்கத்தின் பொதுச்செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரன்  நூற்றாண்டு தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்தார்.

கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் அன்றைய காலகட்டத்தின் தலைவர் பொ. சங்கரப்பிள்ளை  பாரதியின் படத்தை திரைநீக்கம் செய்துவைத்தார்.  சங்கத்தின் வெள்ளிவிழா மலரை அதன் ஆசிரியர் சோமகாந்தன்  அறிமுகம்செய்துவைக்க,  மருத்துவர் திருமதி இந்திரா சிவயோகம்  வெளியீட்டுரையையும்  தினகரன் ஆசிரியரும் உழைக்கும்  பத்திரிகையாளர்  சங்கத்தலைவருமான இ. சிவகுருநாதனும்  இளங்கீரனும்  மலர் பற்றிய  ஆய்வுரையை நிகழ்த்தினர்.

கவிஞர்  இ.முருகையன்  தலைமையில்  நடந்த கவியரங்கில் சில்லையூர் செல்வராசன்,  ஏ.பி.வி.கோமஸ், கலைவாதி கலீல், மேமன்கவி  ஆகியோர்  இடம்பெற்றனர். சொக்கன் நிகழ்ச்சிக்கு வரமுடியாத  நிலையில் த. கனகரத்தினம் அவரது கவிதையை சமர்ப்பித்தார்.

குறிப்பிட்ட  பாரதி  நூற்றாண்டு  அங்குரார்ப்பண  விழா இசைக்கலைஞர்கள்  எஸ்.கே. பரராஜசிங்கம், எம்.ஏ. குலசீலநாதன் வசந்தி சண்முகம்  ஆகியோரின் பாரதி பாடல் இன்னிசை விருந்துடன் நிறைவுபெற்றது.  சபா. ஜெயராஜா நன்றியுரை வழங்கினார்.

இவ்விழாவுக்கு பேராசிரியர்கள் கைலாஸும் சிவத்தம்பியும் தவிர்க்கமுடியாத காரணங்களினால் வரமுடியாமல்போனது.

எனினும் பின்னர் தலைநகரில் நடந்த நிகழ்ச்சிகளில் கைலாஸ் கலந்துகொண்டார். சிவத்தம்பி அச்சமயம் வெளிநாடு சென்றிருந்தார்.

சரியாக ஓராண்டுக்குள் கைலாசபதி 1982 டிசம்பர் மறைந்தார். எம்மனைவருக்கும் அதிர்ச்சிதந்த மரணம். அவர் இறந்தது டிசம்பர் 06 ஆம் திகதி திங்கட் கிழமை. அதற்கு முதல் டிசம்பர் 03 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை நானும் நண்பர் சபா. ஜெயராசாவும் அவரை கொழும்பு பொதுமருத்துவமனையில் பார்த்து உடல் நலம் விசாரித்துவிட்டு வந்தோம்.

மறுநாள் 04 ஆம் திகதி சனிக்கிழமை காலையில் வீரகேசரிக்கு பணிக்குச்சென்றதும்,  “ பேராசிரியர் கைலாசபதி தேறி வருகிறார்  “ என்ற தலைப்பில் ஒரு செய்தியை எழுதிக்கொடுத்தேன். அச்செய்தி 05 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வெளியானது.  யாழ்ப்பாணத்தில் பார்த்த யாழ். பல்கலைகழகத்தில் பணியாற்றிய கைலாசின் நண்பர்கள், மற்றும் மாணவர்கள் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து Get well மடல்களும், கடிதங்களும் அனுப்பினார்கள்.

அவற்றை கொழும்பில் தபால் சேவகர் கைலாசின் இல்லத்தில் வழங்கும்போது, அவர் பூதவுடலாக அந்த வீட்டினுள்ள நிரந்தர துயில்கொண்டிருந்தார்.

எனக்கு எப்படி இருக்கும்…? . குலுங்கிக் குலுங்கி அழுதேன்.  இந்த வரிகளை இப்போது எழுதும்போதும் எனது கண்கள் பனிக்கின்றன.

கைலாசின் துணைவியார் சர்வமங்களம்  மனவுறுதியுடன் நின்ற காட்சிதான் எமக்கெல்லாம் தைரியமூட்டியது.

 “ எவரும் அழக்கூடாது   “ என்று வந்திருந்தவர்களின் கரங்களை பற்றியவாறு இளங்கீரன் சொல்லிக்கொண்டிருந்தார்.

ஆனால், எழுத்தாளர் செ. கணேசலிங்கனை எவராலும் கட்டுப்படுத்தமுடியவில்லை.

கனத்தை மயானத்தில் பெருந்திரளான அன்பர்கள் சூழ்ந்திருக்க கைலாஸ் தகனமாகும்போது, நண்பர் கலா பரமேஸ்வரன் என்னருகே வந்து,   “ பூபதி… உங்கள் வீரகேசரி செய்தி சொன்னது என்ன…? நடந்திருப்பது என்ன…?  “ எனக்கேட்டார்.

நான் மௌனமாக நின்றேன்.

 “ எனக்கு சுகவீனம் வந்தால், வந்து பாரும். ஆனால், செய்தி எழுதவேண்டாம்  “ என்றார்.  ஆனால், நடந்தது என்ன…?

உங்கள் அனைவருக்கும் அந்த கொடிய கறுப்பு ஜூலை நினைவிலிருக்கும்.  1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம்  22   ஆம் திகதி  வெள்ளிக்கிழமை  நள்ளிரவு   யாழ்ப்பாணம் பலாலி  வீதியில் பரமேஸ்வரா சந்தியில் வந்துகொண்டிருந்த இராணுவ  ட்ரக்   வண்டி  மீது நிலக்கண்ணி வெடித்தாக்குதல் நடந்தது.

அச்சம்பவத்தில்  13 இராணுவத்தினர்  கொல்லப்பட்டதன் எதிரொலியை  தமிழர்கள்    இன்றும்    கறுப்பு   ஜூலை  என்று அனுட்டித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த  1983 ஜூலை  மாதத்தில்     யாழ்ப்பாணம் பலாலிவீதியில்    கலா. பரமேஸ்வரனும் அவரது மாமனாரும்  இராணுவத்தினரால்  மறுநாள்  24 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டனர்.

 

அன்று  24  ஆம்  திகதி   ஞாயிற்றுக்கிழமை   ஆடி  ஆமாவாசை - போயாதினம். தென்னிலங்கையில்   நாட்டின்    ஜனாதிபதி   உட்பட பௌத்தர்கள் அனைவரும்  சில்  அனுட்டித்துக்கொண்டிருந்தார்கள்.


இலங்கைத்தேசத்தில்  ஒரு  பகுதியில்  சில்..   மறுபுறத்தில் Kill...

 

கலா. பரமேஸ்வரன் கொல்லப்பட்ட  செய்தியை எழுதவும் ஒப்புநோக்கவும் நேர்ந்த எனது விதிப்பயனை என்னவென்பது..?

 

அந்த 1983 வன்செயல்பற்றி இனிவரும் அங்கங்களில் பேசுவேன்.

 

முற்போக்கு எழுத்தாளர் சங்கம்  நிகழ்ச்சிகளை ஒழுங்குசெய்யும்போது," இதனை இதனால் இவன்முடிக்கும் என்று ஆய்ந்து  அதனை அவன் கண்விடல்" என்னும் திருவள்ளுவர் வாக்கை கவனத்தில் எடுத்தே பணிகளை முன்னெடுத்திருப்பதையும்   என்னால் அவதானிக்க  முடிந்தது.

யார் யாரிடம் பொறுப்புகளை ஒப்படைக்கவேண்டும் என்பதில் தீர்க்கதரிசனமும்  அனுபவமும்  கொண்டிருந்தவர் செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரன். சங்கத்தின் உறுப்பினர்களிடம் புரிந்துணர்வை பேணுவதற்காகவும் அனைவரையும் அரவணைத்து இயங்கியவர். அதனால் அவர்தான் நீண்ட காலம் சங்கத்தின் பொதுச்செயலாளராக பணியாற்றினார்.

தொடர்பாடலில் அவருக்கிருந்த அனுபவம் சங்கத்தின் பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க வழிகோலியது. அவர் கனடாவுக்குச்சென்று அங்கு மறைந்தார். அவரதும் சங்கத்தினதும் இதர மூத்த உறுப்பினர்களினதும் மறைவும் சங்கத்திற்கு மாத்திரமல்ல ஈழத்து தமிழ்த்தேசிய இலக்கியத்திற்கும் பேரிழப்பே.

சங்கம் தொடர்ந்து 1983 தொடக்கம் வரையில் பாரதி நூற்றாண்டு நிகழ்வுகளை முன்னெடுத்தது. ஒரு அரங்கில் முற்போக்கு இலக்கியத்தின் பிதாமகர் மக்ஸிம்கோர்க்கியின் வாழ்க்கையை சித்திரித்த ஆவணப்படம் காண்பிக்கப்பட்டது.

தலைநகரில் இவ்வாறு முன்னெடுக்கப்பட்ட பாரதி நூற்றாண்டு விழாக்கள் இலங்கையின் ஏனைய பாகங்களிலும் சங்கத்தினாலும் சங்கத்தின் அனுசரணையுடனும் நடத்தப்பட்டன.

இலங்கை தமிழ், முஸ்லிம் எழுத்தாளர்களின் ஒளிப்படக்காட்சியும்  முக்கியமானது.

எழுத்தாளர்களின் படங்கள், பிறப்பிடம், வாழுமிடம்,  அவர்கள் எழுதிய நூல்களின்  விபரம், இதர துறைகள் பற்றிய குறிப்புகளை உள்ளடக்கியதாக  ஒவ்வொருவருக்கும் தனித்தனி அட்டைகள் தயாரிக்கப்பட்டன.

ஒவ்வொன்றும் A 5 அளவில் பெரிதாக  உருவாக்கப்பட்டன. கணினி வசதி இல்லாத அக்காலப்பகுதியில் சில ஓவியர்களின் உதவியுடன் குறிப்பிட்ட  பதிவுகள்  அட்டைகளில் எழுதப்பட்டன.  இடது பக்கத்தின் மேல் மூலையில் எழுத்தாளரின் படம் ஒட்டப்பட்டது. இன்றுபோல் அன்று தமிழ் விக்கிபீடியா இருக்கவில்லை. Google இல் தேடிப்பெறும் நவீன தொழில்நுட்பமும் இல்லை.  மின்னஞ்சல் வசதியோ, உடன் தொடர்புகொள்ளும் கைத்தொலைபேசி வசதிகளோ அன்று  இருக்கவில்லை. 

பத்திரிகைகளில் செய்திகளை வெளியிட்டும், எழுத்தாளர்களின் முகவரிகளைத்தேடிக் கண்டுபிடித்தும், சங்கத்தின் உறுப்பினர்களின் முகவரிப்பட்டியலின் துணையுடனும் தொடர்பாடல் மேற்கொள்ளப்பட்டது.

எழுத்தாளர்களின் படங்களையும் குறிப்புகளையும் சேகரிப்பதற்காக ஒருநாள் யாழ்ப்பாணத்துக்கு ரயிலேறினேன்.

முடிந்தவரையில்  தொடர்பாடல்களை மேற்கொண்டாலும், எழுத்தாளர்களுக்கென்றே  ஊறிப்போன இயல்புகள் இருந்தமையால் சிலர் தமது படங்களை தந்துதவ மறுத்தனர். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் முரண்பட்டிருந்தவர்களின் சார்பில்  எஸ்.பொன்னுத்துரையால் உருவாக்கப்பட்ட  நற்போக்கு என்ற பெயரளவில்  இயங்கிய  குழுவினரும்,  வடக்கில்  சித்தாந்த முரண்பாடுகளினால்  சங்கத்தின்  நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கியிருந்தவர்களும்  தமது  படங்களை  தந்துதவ மறுத்தனர்.

எனினும் மல்லிகை ஆசிரியர்    டொமினிக் ஜீவா தமது மல்லிகை இதழ்களின் முகப்புகளில்  ஏற்கனவே பதிவுசெய்த பலரதும் படங்களைத்  தந்துதவினார்.

குறிப்பிட்ட  கண்காட்சிக்குழுவில்  நானும், அச்சமயம் வீரகேசரிக்கு சமீபமாக கிராண்ட் பாஸ் வீதியில் பவர் அன் கம்பனியில் பணியாற்றியவாறு அந்த நிறுவனத்தின் குடியிருப்பில் வசித்த  நண்பர் வேல் அமுதனும்   இயங்கினோம்.  

பம்பலப்பிட்டி  சரஸ்வதி மண்டபத்தில் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் (1983 மார்ச் 19, 20 சனி ஞாயிறு தினங்களில்) நடைபெற்ற இக்கண்காட்சியை  நாட்டின்  பலபாகங்களிலுமிருந்து  வருகைதந்த இலக்கிய  ஆர்வலர்களும் ஆசிரியர்களும்  மாணவர்களும்  கண்டு களித்து வியந்தனர்.

நூறுக்கும்  மேற்பட்ட எழுத்தாளர்கள் பற்றிய குறிப்புகளுடன் அவர்தம் படங்களும்  இதில் இடம்பெற்றன.

இந்தக்கண்காட்சி பற்றி கொழும்பு பத்திரிகைகளும் பாராட்டி செய்திகளை வெளியிட்டன.

தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த மூன்று இலக்கியப்பேராளுமைகளும்,  அன்றைய எதிர்க்கட்சித்தலைவர் அமிர்தலிங்கம், சபாநாயகர்  பாக்கீர்மார்க்கார், நீதியரசர் அப்துல்காதர், தோழர் வி. பொன்னம்பலம் உட்பட பெருந்திரளானோர் கண்டு களித்தனர். சபாநாயகருக்கு மலர்மாலை அணிவித்து வரவேற்ற  நான்,  வரவேற்புரையையும்  நிகழ்த்தினேன். அவர்தான் கண்காட்சியை நாடா வெட்டி திறந்துவைத்தார்.

திருமதி சர்வமங்களம் கைலாசபதி , தமது கணவரின் சேகரிப்பிலிருந்த அனைத்து பாரதி சம்பந்தப்பட்ட நூல்களையும் அக்கண்காட்சிக்கு தந்துதவினார்.

யார் கண்பட்டதோ… 1983 கலவரத்தில்  , அந்தக்கண்காட்சிக்காக இரவு பகலாக நாம் வடிவமைத்த  எழுத்தாளர்களின் படங்கள் பதிவான அனைத்து அட்டைகளும்  வேல் அமுதன் வீடு சூறையாடப்பட்டபோது, வீதியெங்கும் இரைந்து கிடந்ததாக அயலவர்கள் சொன்னார்கள்.

வேல் அமுதன் குடும்பத்தினர் அகதிமுகாமுக்குச் சென்றனர்.

அந்த கிராண்ட்பாஸ் வீதியால்தான் நான் தினமும் கடமைக்குச்சென்று வந்தேன்.

வீதி வெறிச்சோடிப்போயிருந்தது. அக்கலவரத்தில் தென்னிலங்கையிலும் , மலையகத்திலும் இதர பிரதேசங்களிலும் ஆயிரக்கணக்கான தமிழர்களின் வாழ்க்கை வெறிச்சோடிப்போனது.

( தொடரும் )

 

 

No comments: