அன்புத் தெய்வம் அம்மா

இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்கா ன்புச் சுமையெனவே சுமந்தவண்ணம் எண்ணி மகிழும்

    அன்புத் தெய்வம் அம்மா…….. பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்

 

அன்புத் தெய்வம் அம்மா

 

மாசி லாத தூய அன்பை

மகிழ்ந்து பொழிந்த அன்னையைப்

பேசிப் போற்ற வார்த்தை இல்லை!

பெற்ற அம்மா தெய்வமே!

 

விரத மிருந்து பரனைத் தொழுது

வேண்டி வரத்தாற் பெற்று  

இரவு பகலாய்க் கண்ணின் மணிபோல்

என்னை வளர்த்தாள் அன்னையே! 

 

நேசக் கரத்தால் என்னைத் தூக்கி

நெஞ்சில் அணைத்து மகிழ்ந்தவள்

பாசத் தோடு ஆசை பொங்கப்

பண்பில் மலர வைத்தவள்!

 

பஞ்சு அஞ்சும் பாதந் தன்னைப்

பற்றிக் கண்ணில் ஒற்றியே

பிஞ்சுக் கையின் விரல்கள் அஞ்சைப்

பிடித்துக் கொஞ்சும் அன்பினாள்!

 

மெள்ளப் பாலைக் குடிக்கும் போது

மிகவும் இனிக்கும் தமிழ்தனை

அள்ளி அள்ளிக் கலந்து எனக்கு

அன்பாய்  ஊட்டி வளர்த்தவள்!

 

நாணி நின்று உடலைக் கோணி

நாவால் மழலை பொழிந்து

வாணி வடிக்கும் என்னைத் தூக்கி

வருடி அணைத்த தாயவள்!


மழலைக் குரலால் மதுரஞ் சொட்ட

மகன்நான்  பாடும் நேரத்தில்

நிழலைப் போலத் தொடர்ந்து கேட்டு

நித்தம் மகிழ்ந்த அன்னையே!

 

நெஞ்சில் என்தன் தலையைச் சாய்த்து

நீவி மகிழ்ந்த தாயவள்

கெஞ்சும் விழியால் அன்பைச் சிந்திக்

கொஞ்சும் தெய்வத் தாயவள்!

 

கிள்ளை மொழியிற் பேசும் என்னை

மெள்ள அள்ளித் தூக்கியே

வெள்ளைப் பட்டுச் சட்டை போட்டுப்

பள்ளிக் கனுப்பி மகிழ்ந்தவள்!

 

தமிழர் ஓம்பிக் காத்து வந்த

விழுமி யங்கள் யாவையும்

அமிழ்தம் போல ஊட்டி வளர்த்த

அறிவுத் தெய்வத் தாயவள்!


ஓங்கு புகழ் பெற்ற வர்கள்

உண்மைச் சரிதம் கூறியே

தூங்க வைக்க நீதி நேர்மை

துலங்கும் கதைகள் சொன்னவள்!

 

நீதி நேர்மை ஓதி ஒழுக்க

நெறியில் என்னை வளர்த்தவள்

சாதி இல்லைத் தெய்வம் ஒன்று

சமயம் அன்பே என்றவள்!

 

விழியைக் காக்கும் இமைபோல் அன்பு

வேலி கட்டி வளர்த்தவள்

வழி நடத்தும் தந்தையின் சொல்

மந்தி ரந்தான் என்றவள்!

 

சின்னப் பிள்ளை என்று நானும்;   

செய்த குறும்பைப் பொறுத்தவள்

மன்னித்(து) அணைத்து வாழ வைத்த

மனித தெய்வம் அன்னையே!
No comments: