உலகச் செய்திகள்

மெக்சிகோ மெட்ரோ மேம்பாலம் உடைந்து விழுந்ததில் 23 பேர் பலி

மியன்மார் போராட்டக்காரர் எட்டுப் பேர் சுட்டுக்கொலை

பைடனின் ‘விரோதக் கொள்ளை’ குறித்து வடகொரியா எச்சரிக்கை

மியன்மாரில் பொட்டலத்தில் இருந்த குண்டு வெடித்ததில் ஐவர் உயிரிழப்பு

மியன்மார் போராட்டக்காரர் எட்டுப் பேர் சுட்டுக்கொலை

உலகில் கொரோனா தினசரி சம்பவம் இரட்டிப்பாக உயர்வு

50 வயதுக்கு மேற்பட்டோருக்கு பிரிட்டனில் 3ஆவது தடுப்பூசி

சிரியாவின் பல பகுதிகளில் இஸ்ரேல் சரமாரி தாக்குதல்


மெக்சிகோ மெட்ரோ மேம்பாலம் உடைந்து விழுந்ததில் 23 பேர் பலி

மெக்சிகோ தலைநகரில் ரயில் சென்றுகொண்டிருக்கும்போது மெட்ரோ மேம்பாலம் உடைந்து விழுந்ததில் 23 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இதன்போது பல ரயில் பெட்டிகள் பரபரப்பான வீதியில் விழுந்ததில் ஒரு கார் வண்டி நொறுங்கியுள்ளது. இடிபாடுகளில் மேலும் பல வாகனங்கள் சிக்கி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தை அடுத்து உயிர் தப்பியவர்களை மீட்கும் முயற்சியில் மீட்புப் பணியாளர்கள் மற்றும் தீயணைப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 70 பேர் வரை காயமடைந்திருப்பதாக கூறப்படுகிறது. பலரும் இடிபாடுகளில் சிக்கியிருக்கும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.

‘இடி முழக்கம் போன்ற சத்தத்தை கேட்டோம். அனைத்தும் உடைந்து விழுந்தன’ என்று இந்த விபத்தில் உயிர் தப்பிய 26 வயதான மரியானா என்பவர் எல் யுனிவர்ஸ் என்ற செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற பயங்கர பூகம்பத்தை அடுத்து இந்த மேம்பாலத்தில் வெடிப்பு ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எனினும் அது பற்றி தெரிந்ததும் நிர்வாகம் அதனை சரி செய்ததாக அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

மெக்சியோ சிட்டியின் மெட்ரோ ரயில் போக்குவரத்து உலகின் மிகப்பெரிய விரைவு போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாக உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 1.6 பில்லியன் பயணிகள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

இதில் விபத்துக்குள்ளாகி இருக்கும் லைன் 12 பாதை தலைநகரின் மெட்ரோ அமைப்பிற்கு மேலதிகமாக சேர்க்கப்பட்டது. இது 2012 ஆம் ஆண்டு உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டது.   நன்றி தினகரன் 


 


மியன்மார் போராட்டக்காரர் எட்டுப் பேர் சுட்டுக்கொலை

மியன்மாரில் இராணுவ சதிப்புரட்சிக்கு எதிராக அண்மைய நாட்களில் இடம்பெற்ற மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் குறைந்தது எட்டுப் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சிறுநகரங்கள் மற்றும் நகரங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர். நாட்டின் இரண்டாவது பெரிய நகரான மன்டாலாயில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக மசிமா செய்தி நிறுவனம் தெரிவித்தது. மத்திய நகரான வெட்லட்டில் மூன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. வடக்கு நகரான ஹப்கன்டில் மேலும் ஒரு ஆர்ப்பாட்டக்காரர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்.

கடந்த பெப்ரவரி முதலாம் திகதி ஆங் சான் சூச்சியின் அரசை கவிழ்த்து இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது தொடக்கம் சிவில் ஒத்திழையாமை போராட்டங்கள் மற்றும் பெரும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.  நன்றி தினகரன் 





பைடனின் ‘விரோதக் கொள்ளை’ குறித்து வடகொரியா எச்சரிக்கை

வட கொரியா தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விரதக் கொள்கையை பின்பற்றுவதாகக் குறிப்பிட்டிருக்கும் வட கொரியா, அமெரிக்காவின் மேலாதிக்க இராஜதந்திரத்திற்கு பதலளிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

வட கொரிய அணு திட்டம் தொடர்பான அச்சுறுத்தலை இராஜதந்திர ரீதியில், அதேபோன்று கடும் நடவடிக்கை மூலம் தமது நிர்வாகம் கையாளும் என்று ஜோ பைடன் கடந்த புதன்கிழமை குறிப்பிட்டிருந்தார்.

கொள்ளை மீளாய்வு ஒன்றை தொடர்ந்து அணு செயற்பாட்டை தணிக்கும் வட கொரியாவுடனான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படும் என்று வெள்ளை மாளிகை கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தபோதும், பைடன் பெரும் தவறை செய்வதாக வட கொரியா சாடியுள்ளது.

‘அவரது அறிக்கை, அமெரிக்கா கடந்த அரை நூற்றாண்டுக்கு மேலாக செய்துவரும் வட கொரியா மீதான விரோதக் கொள்கைளை தொடர்ந்து செயற்படுத்துவதையே காட்டுகிறது’ என்று வட கொரிய வெளியுறவு அமைச்சு அதிகாரியான க்வோன் ஜங் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.   நன்றி தினகரன் 





மியன்மாரில் பொட்டலத்தில் இருந்த குண்டு வெடித்ததில் ஐவர் உயிரிழப்பு

மியன்மாரில் பொட்டலத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இராணுவ எதிர்ப்பு இயக்கத்தில் இணைந்த பொலிஸ் அதிகாரிகள் மூவரும் உயிரிழந்தவர்களில் அடங்குவர்.

மேற்கு பாகோவின் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் வெடிப்பு நேர்ந்தது.

கடந்த திங்கட்கிழமை இரவு மேலும் இரண்டு நகரங்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் இருவர், மேக்வே வட்டாரத்தில், மக்களுக்கும் இராணுவத்துக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.

மியன்மார் இராணுவத்தின் அடக்குமுறைக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

அது தொடர்பில் சர்வதேச வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக மியன்மார் தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.   நன்றி தினகரன் 





மியன்மார் போராட்டக்காரர் எட்டுப் பேர் சுட்டுக்கொலை

மியன்மாரில் இராணுவ சதிப்புரட்சிக்கு எதிராக அண்மைய நாட்களில் இடம்பெற்ற மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் குறைந்தது எட்டுப் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சிறுநகரங்கள் மற்றும் நகரங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர். நாட்டின் இரண்டாவது பெரிய நகரான மன்டாலாயில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக மசிமா செய்தி நிறுவனம் தெரிவித்தது. மத்திய நகரான வெட்லட்டில் மூன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. வடக்கு நகரான ஹப்கன்டில் மேலும் ஒரு ஆர்ப்பாட்டக்காரர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்.

கடந்த பெப்ரவரி முதலாம் திகதி ஆங் சான் சூச்சியின் அரசை கவிழ்த்து இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது தொடக்கம் சிவில் ஒத்திழையாமை போராட்டங்கள் மற்றும் பெரும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.   நன்றி தினகரன் 





உலகில் கொரோனா தினசரி சம்பவம் இரட்டிப்பாக உயர்வு

உலக நாடுகளில் பதிவாகும் தினசரி கொரோனா வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் மார்ச் மாதத்திலிருந்து இரு மடங்காகியுள்ளதாக நியுயோர்க் டைம்ஸ் நாளேடு தெரிவித்துள்ளது.

கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கும் மேலாக, நாளொன்றில் பதிவாகும் புதிய வைரஸ் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 800,000 ஐத் தாண்டியுள்ளதாக அந்த நாளேடு குறிப்பிட்டது.

இவ்வாண்டு ஜனவரியில் சற்று குறைந்திருந்த புதிய தொற்றுச் சம்பவங்கள் மீண்டும் அதிக அளவில் உயர்ந்துள்ளது.

இந்தியா, தென் அமெரிக்க வட்டாரம், ஆசிய நாடுகளில் அதிகரித்துள்ள வைரஸ் தொற்றுச் சம்பவங்களால் சர்வதேச அளவில் எண்ணிக்கை உயர்ந்ததாகக் கூறப்படுகிறது.

இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து ஐரோப்பா, அமெரிக்கா ஆகியவற்றில் புதிதாகக் வைரஸ் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. 

இந்தியாவின் நோய்த்தொற்று சம்பவங்கள் சர்வதேச அளவில் 40 வீதமாக உள்ளது. அந்நாட்டின் உயிரிழப்பு எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு தினசரி உயிரிழப்பு 3,000 ஐ தாண்டி இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏனைய நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் நிலைமை மோசமடைந்து வருகிறது.

சராசரி மக்கள்தொகை அடிப்படையில் உலகில் அதிக நோய்த் தொற்று சம்பவங்கள் உள்ள நாடாக உருகுவே காணப்படுகிறது. 3.5 மில்லியன் மக்கள்தொகையை மாத்திரமே கொண்ட அந்த நாட்டில் நாளுக்கு சராசரியாக 3,000 தொற்று சம்பவங்கள் பதிவாகின்றன. குறிப்பாக தென் அமெரிக்க பிராந்தியத்தின் உருகுவே, பராகுவே, பிரேசில், பெரு, ஆர்ஜன்டீனா மற்றும் கொலம்பியா ஆகிய அனைத்து நாடுகளும் சனத்தொகை அடிப்படையில் அதிக உயிரிழப்பு பதிவான 20 நாடுகளுக்குள் அடங்குகின்றன.   நன்றி தினகரன் 





50 வயதுக்கு மேற்பட்டோருக்கு பிரிட்டனில் 3ஆவது தடுப்பூசி

பிரிட்டனில் 50 வயதைத் தாண்டிய அனைவருக்கும் இலையுதிர் காலத்தில் 3ஆவது தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் கிறிஸ்மசுக்குள் கொரோனா தொற்றை முற்றாகத் துடைத்தொழிக்கும் நோக்கத்தில் அந்த முயற்சி எடுக்கப்படுகிறது.

பிரிட்டனில் தற்போது, 2 முன்னோடித் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக தி டைம்ஸ் நாளேடு தெரிவித்துள்ளது.

முதல் திட்டத்தில், உருமாறிய புதிய வகை வைரஸை சமாளிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட தடுப்பூசிகள் போடப்படுகின்றன. 2ஆவது நடைமுறையில், பிரிட்டனில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ராசெனெகா, பைசர், மொடர்னா ஆகிய தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன.

முதன் முதலில் தடுப்பூசி போடும் பணியைத் ஆரம்பித்த ஐரோப்பிய நாடு பிரிட்டனாகும்.

வைரஸ் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை குறைந்து வருவதால், அங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன. வரும் 17 ஆம் திகதி, வெளிநாட்டுப் பயணங்களுக்கான கட்டுப்பாடுகளை பிரிட்டன் தளர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  நன்றி தினகரன் 




சிரியாவின் பல பகுதிகளில் இஸ்ரேல் சரமாரி தாக்குதல்

ஒருவர் பலி: அறுவர் காயம்

மத்திய தரைக்கடலை ஒட்டிய துறைமுக நகரான லடகியா உட்பட வட கிழக்கு சிரியாவின் பல பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலை சிரிய வான் பாதுகாப்பு முறை இடைமறித்துள்ளது. இதன்போது ஒருவர் கொல்லப்பட்டு ஆறு பேருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக இஸ்ரேல் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற இஸ்ரேலிய தாக்குதல்களில் ஹிபா, லடக்கியா நகரின் கிழக்கு பகுதி மற்றும் ஹமா மாகாணத்தில் மஸ்யாப் பகுதிகளும் இலக்கு வைக்கப்பட்டுள்ளன. தெற்கு லடக்கியா மற்றும் ஏனைய கரையோர பகுதிகள் மீது அதிகாலை 2.18 மணியளவில் தாக்குதல்கள் இடம்பெற்றதாக சிரிய இராணுவத் தரப்பை மேற்கோள்காட்டி அந்நாட்டு சானா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

‘ஏவுகணை தாக்குதல்களை எமது வான் பாதுகாப்பு பிரிவு எதிர்கொண்டதோடு அவற்றில் சிலவற்றை சுட்டு வீழ்த்தின’ என்று இராணுவம் சார்பில் பேசவல்ல ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் ஒரு ஏவுகணை சிவிலியன்களின் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் விழுந்து பொருட் சேதத்தை ஏற்படுத்தி இருப்பதாக அரச ஊடகம் தெரிவித்தது. இதில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட காயமடைந்த அனைவரும் பொதுமக்கள் என்று சானா செய்தி நிறுவனம் தெரிவித்தது. லடக்கியா சிரிய அரசின் கோட்டையாக இருப்பதோடு அது ஜனாதிபதி பஷர் அல் அஸாத்தின் பூர்வீக பூமியாகும்.

எனினும் இந்தத் தாக்குதல் பற்றி இஸ்ரேல் தரப்பில் உடன் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. சிரியாவில் ஈரானுடன் தொடர்புபட்ட போராளிகளை இலக்கு வைப்பதாகக் கூறி இஸ்ரேல் கடந்த பல ஆண்டுகளில் சிரியா மீது நூற்றுக்கணக்கான தாக்குதல்களை நடத்தியுள்ளது.

எனினும் அது பற்றி இஸ்ரேல் மிக அரிதாகவே வெளி உலகிடம் கூறுகிறது.

சிரியாவில் அரச எதிர்ப்பு ஆர்ப்பட்டங்கள் கொடூரமான முறையில் ஒடுக்கப்பட்ட நிலையில் அங்கு வெடித்த உள்நாட்டுப் போரில் சிரிய அரசின் நெருங்கிய கூட்டாளியாக ஈரான் உள்ளது.

அண்டை நாடான சிரியாவில் இருந்து ஈரானிய படைகளை வெளியேற்றுவதே தமது இலக்கு என்று இஸ்ரேல் கூறி வரும் நிலையில் அது சிரியா மீது நடத்தும் தாக்குதல்கள் அண்மைக் காலத்தில் அதிகரித்துள்ளன.   நன்றி தினகரன் 







No comments: