திருந்திட நினைப்போம் செகமுமே மகிழும் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா 

தவறுகள் செய்வது மனிதனிதன் இயல்பு
திருந்திட முயன்றால் செறிந்திடும் வாழ்வு
அறிந்துமே செய்தால் அகன்றிடும் அனைத்தும்
திருந்திட நினைத்தல் சிறப்புடை செயலே   ! 

மற்றவர் அழுகை மகிழ்ச்சியைத் தருமா
மற்றவர் விழுகை எழுச்சியைத் தருமா
செத்திடும் வரையில் செய்திடும் அனைத்தும்
சொத்தெனக் குவியும் சுகமெலாம் அழிக்கும்  ! 

நலிந்தவர் மெலிந்தவர் நசுக்கிடல் கொடுமை
நாளுமே அரக்கராய் மாறிடல் கொடுமை 
அழிப்பதை நினைப்பினில் அமர்த்திடல் கொடுமை
ஆணவம் அகந்தையை அணைத்திடல் கொடுமை  !

ஏழையின் உழைப்பை பிடுக்குதல் கொடுமை
இயலாமை நிலையில் எடுப்பதும் கொடுமை
வாழ்வினை ஒழித்திடும் போதையும் கொடுமை
வன்முறை வழியை எடுப்பதும் கொடுமை  !

முதியவர் தம்மை இகழ்வதும் கொடுமை
மூத்தவர் அழுவதைப் பார்ப்பதும் கொடுமை
பழியினை செய்து பதுங்குதல் கொடுமை
பாரினில் தலையால் நடப்பதும் கொடும ! 

தாயினைத் தந்தையைத் தாழ்த்துதல் கொடுமை
தலைநிகர் குருவினை ஒதுக்கிடல் கொடுமை
வாய்மையை நேர்மையை மழித்திடல் கொடுமை
வார்த்தையில் விஷத்தை சேர்த்திடல் கொடுமை !

திருந்திட நினைத்தால் திசையது தெரியும்
திருந்திட நினைத்தால் தினமுமே வெளிக்கும்
திருந்திட நினைத்தால் சிறப்பெலாம் பெருகும்
திருந்திட நினைப்போம் செகமுமே மகிழும்  ! 

No comments: