சினிமா பிரபலங்களை அடுத்தடுத்து காவு கொள்ளும் கொரோனா தொற்று!

 Friday, May 7, 2021 - 10:50am

நடிகர் பாண்டு, பாடகர் கோமகன் நேற்று மரணம்

தமிழக பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனா தொற்றினால் நேற்று காலமானார். அவருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில், கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர் சென்னை கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், அவருக்கு வயது 74.

மறைந்த நடிகர் இடிச்சபுளி செல்வராஜின் தம்பியான நடிகர் பாண்டு, நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சின்னதம்பி, காதல் கோட்டை, ஏழையின் சிரிப்பில் உள்ளிட்ட பல்வேறு படங்களில் பாண்டுவின் நடிப்பு பலராலும் பேசப்பட்டது.

திறமைமிக்க ஓவியரான நடிகர் பாண்டு, பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளை அழகுற வடிவமைத்தவர். அ.தி.மு.கவின் கொடி மற்றும் சின்னத்தை வடிவமைத்தவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘கெப்பிட்டல் லெட்டர்ஸ்’ நிறுவனத்தை நடத்தி வந்த நடிகர் பாண்டுவுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பாண்டுவின் மனைவி குமுதாவும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். நடிகர் பாண்டுவின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக நடிகர் விவேக், இயக்குநர் கே.வி. ஆனந்த் ஆகியோர் உயிரிழந்த நிலையில், தற்போது நடிகர் பாண்டுவின் மறைவும் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதேவேளை பிரபல பாடகர் கோமகனும் நேற்று கொரோனாவினால் மரணமானார். கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. அதைத் தொடர்ந்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். பின்பு, மேல் சிகிச்சைக்காக மூன்று நாட்களுக்கு முன்பு சென்னை அயனாவரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அதிக மூச்சுத்திணறல் ஏற்பட்டு நேற்று (06/05/2021) அதிகாலை 01.30 மணியளவில் உயிரிழந்தார்.

கடந்த 2004ஆம் ஆண்டு சேரன் இயக்கி, நடித்த ‘ஆட்டோகிராஃப்’ படத்தில் இடம்பெற்ற 'ஒவ்வொரு பூக்களுமே...’ பாடலின் மூலம் உலகம் முழுக்க புகழ் பெற்றார் பாடகர் கோமகன். பரத்வாஜ் இசையில் இப்பாடலை எழுதிய பா.விஜய்க்கும், பாடகி சித்ராவுக்கும் தேசிய விருதுகள் கிடைத்தன. இப்பாடலில் நடித்ததோடு கடைசியில் உணர்வுபூர்வமாக ஓரிரு வார்த்தைகள் பாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் கோமகன்.

மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினராகவும் பணியாற்றியுள்ள கோமகன், இசைப்பள்ளி ஒன்றை நடத்தி வந்தார். அவருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு தமிழக அரசு ‘கலைமாமணி’ விருதினை வழங்கி கௌரவித்தது. பாடகர் மறைவுக்கு திரையுலகினரும் அவரது ரசிகர்கள் பலரும் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.   

தமிழ் சினிமா திரையுலகில் தொடர்ந்து பல பிரபலங்களும் கொரோனாவுக்கு இரையாகி வருவது அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் தினமும் காலையில் எழுந்தவுடனே ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனாவால் உயிரிழக்கும் செய்தியை கேட்டு வருவதே மிகப் பெரிய மன உளைச்சலாக மாறி வருகிறது. எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை தொடர்ந்து சமீபத்தில் இயக்குநர் கே.வி. ஆனந்த் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில், நடிகர் பாண்டு, கோமகன் ஆகியோரும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளமை ரசிகர்களை பெரும் துயரில் ஆழ்த்தி உள்ளது.   நன்றி தினகரன் 

No comments: