.
குழந்தையாய் உன் மடியில் கிடந்தபோது
சேலைத்தலைப்பில் ஒளிந்து விளையாடியபோது
விளையாடி களைத்து வீடு வர
நீ தலைகோதி விட்டு
போய் குளி என்றபோது
தாமதித்து வீடு வரும் போதெல்லாம்
படுக்கையிலே விழித்திருந்து
சாப்பிட்டுப் படு என்றபோது
ஒருமுறை கூட
நான் நினைத்துப் பார்த்ததில்லை
நீ என்னை விட்டு
போய் விடுவாய் என்று
நான் உழைக்கும் வயதில்
உன்னிடம் கேட்டேன்
என்ன வேணும் என்று
சிரித்துக் கொண்டே
எல்லாம் இருக்கு என்றாய்
அந்த சிரிப்பில் ஒரு பெருமிதம்
உன் பிள்ளை உழைக்கின்றான் என்று
மீண்டும் கேட்டேன்
ஒரு ஆசையும் இல்லையா
இருக்கிறது என்கிறாய்
நிமிர்ந்து உட்க்கார்த்துக்கொண்டேன்
பூரித்து நிறைந்த முகம்
பூரணச் சந்திரன் போல்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
நான் செத்தா நீங்க நாலுபேர்
நாலுபக்கம் தூக்குங்க
கூறுகின்றாய்
எழுந்து சென்றுவிட்டேன்
அது கோபமா பயமா
தெரியவில்லை
தேசம் பிரிந்த பறவையாய்
வாழ்க்கையின் சிதறல்கள்
நீ கேட்டதை தரமுடியாத
மகனாய்
இன்றும் உன்நினைவுகளோடு
நான் மட்டுமல்ல அம்மா
1 comment:
அருமையான கவிதை பாஸ்கரன். எனக்கும் இதே நிலைதான்
Sivakaran
Post a Comment