ஸ்வீட் சிக்ஸ்டி 10- பாக்கியலட்சுமி - ச சுந்தரதாஸ்

.

60 ஆண்டுகளுக்கு முன் தமிழ் சினிமாவில் பிரபலமாக விளங்கிய பட நிறுவனங்களில் ஒன்று நாராயணன் கம்பெனி. இவர்கள் தயாரித்த படங்களுக்கு எல்லாம் மங்களகரமான பெயர் சூட்டுவார்கள். கணவனே கண்கண்ட தெய்வம், மனம்போல மாங்கல்யம், தாயுள்ளம் என்று இவர்கள் தயாரித்த படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை குறிப்பாக பெண்கள் மத்தியில் பெற்றன. அந்த வகையில் அவர்கள் உருவாக்கிய கடைசி படம் தான் பாக்கியலட்சுமி.

குடும்பக்கதையானா இப்படத்தை புது இயக்குநர் கேவி சீனிவாசன் இயக்கியிருந்தார் அத்துடன் கதை வசனத்தையும் அவரே எழுதி இருந்தார். நாராயணன் கம்பெனியினர் தயாரித்த பெரும்பாலான படங்களில் கதாநாயகனாக நடித்தவர் ஜெமினி கணேசன். அந்தவகையில் இதிலும் அவர் நாயகனாக நடித்தார். படத்தில் அவருக்கு இரண்டு ஜோடிகள் ஒருவர் சவுகார் ஜானகி, மற்றையவர் இ வி சரோஜா.

குறும்பாகவும் துடிப்பாகவும் நடிக்கும் பாத்திரம் சரோஜாவுக்கு. அதனை அருமையாக செய்திருந்தார் அவர். அதேபோல் உணர்ச்சிகளை கொட்டி உருக்கமாக நடிக்கும் வாய்ப்பு சவுகார் ஜானகிக்கு கிட்டியது. பழக்கப் படட வேடம் என்பதால் இலகுவாக அதனை செய்திருந்தார். இவர்களுடன் பி கண்ணாம்பா தங்கவேலு சரோஜா ஆகியோரும் நடித்திருந்தார்கள்.

சிறுவயதிலேயே திருமணம் ஆகிவிடும் நாயகி மீண்டும் இளம் வயதிலேயே தன் கணவனை சந்திக்கிறார். ஆனால் அவனோ வேறு ஒரு பெண்ணின் கணவனாக காட்சி அளிக்கிறான். இவன்தான் தன் கணவன் என்று சொல்ல முடியாமல் அவள் பரி தவிக்கிறாள்.


இவ்வாறு அமைந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் மிக சிறப்பாக அமைந்தன . மாலை பொழுதின் மயக்கத்திலே, காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே, காதல் என்றால் ஆணும் பெண்ணும் ஆகிய பாடல்கள் மிகவும் பிரபலமாயின. விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தன . பாடல்களை கண்ணதாசன் எழுதியிருந்தார்.


படத்தில் இடம்பெற்ற மாலை பொழுதின் மயக்கத்திலே பாடலை தான் சிறுவயதில் கிராமத்தில் கேட்டு மயங்கியதாகவும் , தன் வாழ்வில் அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் இளையராஜா குறிப்பிட்டிருந்தார். பெண்களின் மனம் கவர் படமாக பாக்கியலட்சுமி விளங்கியது


No comments: