ரிஷாட் MPயை விடுவிக்குமாறு புத்தளத்தில் மக்கள் எழுச்சி
கணிதப் பிரிவில் சாவகச்சேரி மாணவன் தனராஜ் சுந்தர்பவன் முதலிடம்
வடமாகாணத்தில் கொரோனா தொற்றுக்களை எதிர்கொள்வதற்கு சுகாதாரத் துறையினர் தயார்
ரிஷாட் எம்.பி. பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதில் சட்ட சிக்கல் இல்லை
ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்கள் சபை தலைவராக மஹிந்த ராஜபக்ஷ
இலங்கையில் கொவிட்-19 புதிய அலை: இளைஞர் யுவதிகளும் பாரிய அபாயத்தில்
ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி நேற்று முதல் வழங்கல்
மாகாண சபை தேர்தல் முறைமை: அரசாங்கத்துடன் இணைந்துள்ள தமிழ் எம்.பிக்கள் கலந்துரையாடல்
யாழ்.மாநகர காவல் படையின் பணியாளர்கள் நாலாம் மாடிக்கு அழைப்பு!
ரிஷாட் MPயை விடுவிக்குமாறு புத்தளத்தில் மக்கள் எழுச்சி
அநியாயமான முறையில் கைது செய்யப்பட்டு, தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென கோரி புத்தளத்தில் நேற்று (02) ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. புத்தளம், கொழும்பு முகத்திடலில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், புத்தளம் மாவட்டத்திலிருந்து ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்களும், மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இதில் கலந்துகொண்டு ரிஷாட் பதியுதீனை விடுதலை செய்ய வேண்டுமென கோஷங்களை எழுப்பினர்.
சுலோக அட்டைகள் மற்றும் பதாகைகளுடன் சமூக இடைவெளிகளைப் பேணி நின்ற இவர்கள், “எங்கள் தலைவனை விடுதலை செய். “ரிஷாட் பதியுதீனை ஏன் விடுதலை செய்தாய்? அதற்கான காரணத்தை வெளிப்படுத்து? நீதி செத்துவிட்டதா?” போன்ற கோஷங்களுடன், மிகவும் ஆக்ரோஷமாகவும் உணர்ச்சிவசப்பட்டும் ஆர்ப்பாட்டம் செய்ததை காண முடிந்தது.
இங்கு கருத்து தெரிவித்த கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக் , எந்தக் குற்றமும் செய்யாத அவரை இன்னும் தடுப்புக் காவலில் வைத்திருப்பதன் நோக்கம் என்ன என்று கேள்வியெழுப்பியதுடன், நேர்மையாக விசாரணைக்கு அழைக்காமல் நள்ளிரவிலே அவரை கைது செய்தது அரசியல் பழிவாங்கல் என்றார்.
மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர் கருத்து தெரிவிக்கையில், இதுவரை காலமும் நடந்த அத்தனை விசாரணைகளிலும் தமது தலைவன் குற்றமற்றவர் என பகிரங்கமாக அறிவிக்கப்பட்டிருந்த போதும், இப்போது அவசர அவசரமாக தடுத்து வைக்கப்பட்டு, விசாரணை என்ற போர்வையில், விடுதலை செய்யாமல் இருப்பதன் மர்மம் என்ன என கேள்வி எழுப்பினார். நன்றி தினகரன்
கணிதப் பிரிவில் சாவகச்சேரி மாணவன் தனராஜ் சுந்தர்பவன் முதலிடம்
இன்று (04) வெளியான, 2020 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில், கணிதப் பிரிவில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் மாணவன் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்
சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த, தனராஜ் சுந்தர்பவன் எனும் மாணவனே இவ்வாறு தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்தவராவர்.
கணித பிரிவின் புதிய பாடத் திட்டத்திற்கமைய இம்மாணவன் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
(பருத்தித்துறை விசேட நிரூபர் - நிதர்ஷன் வினோத்)
உயிரியல் பிரிவு
உயிரியல் பிரிவில், கொழும்பு ரோயல் கல்லூரி மாணவன், பிரவீன் விஜேசிங்க, அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்துள்ளார்.
கலைப் பிரிவு
கலைப் பிரிவில் தெஹிவளை பிரஸ்படேரியன் பாலிகா கல்லூரி மாணவி ச்சமல்கா செவ்மினி, அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்துள்ளார்.
வர்த்தகப் பிரிவு
வர்த்தகப் பிரிவில் காலி சங்கமித்தா பாலிகா வித்தியாலய மாணவி அமந்தி இமாஷா அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்துள்ளார்.
உயிரியல் தொழில்நுட்ப பிரிவு
உயிரியல் தொழில்நுட்ப பிரிவில், ஹொரணை தக்ஷிலா வித்தியாலய மாணவன், சுசிக சந்தசர, அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்துள்ளார்.
பொறியியல் தொழில்நுட்ப பிரிவு
பொறியியல் தொழில்நுட்ப பிரிவில், ஹொரணை தக்ஷிலா வித்தியாலய மாணவன், அவிஷ்க ச்சனுக அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்துள்ளார். நன்றி தினகரன்
வடமாகாணத்தில் கொரோனா தொற்றுக்களை எதிர்கொள்வதற்கு சுகாதாரத் துறையினர் தயார்
- மேலதிக சிகிச்சை நிலையங்களும் நிறுவப்படும்
வட மாகாணத்தில், கொரோனா நோய்த் தொற்று எதிர்வரும் காலங்களில் அதிகரிக்கும் பட்சத்தில், கோப்பாய் சிகிச்சை நிலையம்,கிளிநொச்சி சிகிச்சை நிலையங்களூடாக 600 நபர்களுக்கு முதற்கட்டமாக சிகிச்சை வழங்ககூடியதாக இருக்குமென வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
வடமாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பிலான நிலைமைகளைத் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு நேற்று (04) யாழ் பண்ணையில் அமைந்துள்ள வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கருத்து தெரிவித்த போதே வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களப்பணிப்பாளர் கலாநிதி ஆர்.கேதீஸ்வரன் இதுபற்றிக் கூறினார்.
மேலும் அவர் தெரிவித்தாவது:வடமாகாணத்தில் நேற்று 404 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றில் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது.
வடமாகாணத்தில் சுகாதார பணியாளர்களாக கடமையாற்றும் 6648 நபர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் எற்றும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. இவற்றில் நேற்று வரையான காலப்பகுதிக்குள் 1385 நபர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று, வடமாகாணத்திலும் பரவக்கூடிய நிலை எற்பட்டால், அதனை எதிர்கொள்வதற்கு வடமாகாண வைத்தியசாலைகள் தயார் நிலையிலுள்ளன.
கோப்பாய் சிகிச்சை நிலையம், கிளிநொச்சியில் சிகிச்சை நிலையங்களென,வட மாகாணத்தில் இரண்டு தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்கள் உள்ளன. இவைகளில் 600 நபர்களுக்கு சிகிச்சை வழங்க முடியும். இதற்கு மேலதிகமாக,வட மாகாணத்தின் 05 மாவட்டங்களிலும் புதிய சிகிச்சை நிலையங்கள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தத் தொற்று இளவயதினரை வேகமாக தாக்குகின்றது.இதனால்,மாகாணத்திலுள்ள சுகாதார நிலையங்களில் புதிய விடுதிகள் அமைப்பதற்கான எற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். நன்றி தினகரன்
ரிஷாட் எம்.பி. பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதில் சட்ட சிக்கல் இல்லை
- தேசிய பாதுகாப்பு விடயம் என்பதால் அவைக்கு அழைத்து வர முடியாது: அமைச்சர் சரத் வீரசேகர
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள, ரிஷாட் பதியுதீன் எம்.பி. பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வது தொடர்பில் எவ்வித சட்ட சிக்கல்களும் இல்லை என, சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் CIDயினர் சட்ட மாஅதிபரிடம் கோரிய ஆலோசனைக்கு அமைய, சட்ட மாஅதிபர் குறித்த அறிவித்தலை வழங்கியுள்ளதாக, சட்ட மாஅதிபரின் இணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி முதல் கைது செய்யப்பட்டு, 90 நாள் தடுப்புக் காவல் அனுமதிக்கமைய, தடுத்து வைக்கப்பட்டுள்ளார்
அமைச்சர் சரத் வீரசேகர அனுமதி மறுப்பு
இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, ரிஷாட் பதியுதீன் எம்.பியை பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள அனுமதி வழங்க வேண்டாமென, தாம் கோரிக்கை விடுப்பதாக சபாநாயகரிடம் தெரிவித்தார்.
நடைபெற்று வரும் விசாரணைகள் தொடர்பிலான விடயங்கள் அம்பலமாகலாம் எனவும், இதன் காரணமாக வெளியில் உள்ள குற்றவாளிகள் அதற்கு தயாராகலாம் எனவும், இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் எனவும் அவர் இதன்போது பாராளுமன்றில் தெரிவித்தார்.
பாராளுமன்ற வரப்பிரசாதங்களைப் பயன்படுத்தி, பாராளுமன்றம் வரும் அவர், தொலைபேசி அழைப்புகள் மூலம் இவ்விடயங்களை வெளியில் அம்பலப்படுத்த வாய்ப்புக் காணப்படுவதாகவும், அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். நன்றி தினகரன்
ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்கள் சபை தலைவராக மஹிந்த ராஜபக்ஷ
- ஆசிய அபிவிருத்தி வங்கியின் அடுத்த ஆளுநர்கள் கூட்டம் கொழும்பில்
ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர்கள் சபையின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் நிதியமைச்சர் என்ற வகையில், ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநராக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அதன் ஆளுநர்களில் ஒருவராக அங்கம் வகிக்கின்றார்.
அந்த வகையில், இன்று (05) பிற்பகல் வீடியோ தொழில்நட்பம் மூலம் இடம்பெற்ற குறித்த ஆளுநர்கள் சபையின் 54ஆவது கூட்டத்தில், 2021/2022ஆம் ஆண்டுக்கான தலைவராக, பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
குறித்த கூட்டம் ஜோர்ஜியாவின், திபிலிசி நகரில் இடம்பெற திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது நிலவும் கொவிட்-19 பரவல் நிலை காரணமாக, வீடியோ தொழில்நுட்பத்தில் இடம்பெற்றிருந்துமை குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
இலங்கையில் கொவிட்-19 புதிய அலை: இளைஞர் யுவதிகளும் பாரிய அபாயத்தில்
- பெரும்பாலானோருக்கு சுவாசக் கோளாறு; ICUவில் சிகிச்சை
- கொவிட் பரவல் அதிதீவிரம்; அத்தியாவசியத்திற்கே வெளியில் செல்லவும்
கொவிட்-19 புதிய அலையானது இளைஞர், யுவதிகளையும் பாரிய அபாயத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக, சுகாதார மேம்பாட்டு பணியகம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.
இதுதவிர, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கணிசமான நோயாளிகள் கடுமையான சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவதையும் அவதானிக்க கூடியதாக உள்ளதாக, அது தெரிவித்துள்ளது.
அவ்வறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கொவிட்-19 வைரஸின் பல புதிய விகார வகைகள் உலகம் முழுவதும் பரவி வரும் இந்த நேரத்தில், பல நாடுகளில் இளைஞர்களும் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையிலும் கடந்த சில தினங்களாக அவதானிக்கப்பட்ட நிலையும் இதற்குச் சமமானதாகும்.
முன்னரை விட அதிக கவனம் அவசியம்
இந்த பின்னணியில், முன்னெப்போதையும் விட, தடுப்பு நடவடிக்கைகளை மிகத் துல்லியமாக மேற்கொள்ள வேண்டிய அவசியம் தோன்றி உள்ளது.
அத்தியாவசியத்திற்கு வெளியில் செல்லவும்
இளையோர், முதியோர் உட்பட சிறு குழந்தைகளைக் கூட இந்நோய் தொற்றக்கூடிய சூழல் உள்ளதால் முடிந்தவரை அவசர நிலைகளைத் தவிர வீட்டிலிருந்து வெளியேறுவது மட்டுப்படுத்தப்படல் வேண்டும்.
பரவல் வேகம் அதிகம்
இப்போது காணப்படும் புதிய விகாரமான வைரசானது முன்பு இனங் காணப்பட்ட விகாரங்களிலிருந்தும் வேறுபடுவதால் வேகமாக பரவ வாய்ப்புள்ளது என்ற கருத்தும் உள்ளது. எனவே, நெரிசலான இடங்களில் தேவையின்றி தரித்திருப்பது தம்மை மட்டுமல்ல, தமது குடும்பத்திலுள்ள இளையோர் மற்றும் முதியவர்கள் அனைவரின் வாழ்க்கையையும் ஆபத்தில் தள்ளுவது போலாகின்றது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
வீட்டை விட்டு வெளியேறும் போது எப்போதும் முகக்கவசம் அணிவது போலவே கைகளை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியமானது.
முடிந்தவரை நெரிசலான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள், அவசியமான சந்தர்ப்பங்களில் நீங்கள் நெரிசலான இடத்திற்குச் செல்ல வேண்டுமானால் விரைவில் அந்த இடத்தை விட்டு வெளியேறுவது நோய்த்தொற்று அபாயத்தை ஓரளவிற்குக் குறைக்கும்.
எவ்வாறு செயற்படப் போகிறோம்?
வெளிநாடுகளிலிருந்து நாம் காணும், கேட்கும் செய்திகள் மற்றும் அறிக்கைகள் மூலமாக குறுகிய காலத்தில் இத் தொற்று நோய் மிகக் கடுமையாக அதிகரிக்கின்றது என்பது தெளிவாகின்றது.
எதிர்வரும் கால கட்டத்தில் நமது நடத்தையின் தன்மை, நம் நாடும் அதே திசையில் இழுத்துச் செல்லப்படப் போகிறதா அல்லது அதிலிருந்து விலகி மகச்சிறந்த நாளை நோக்கி நகர்கிறதா என்பதை தீர்மானிக்கும். நன்றி தினகரன்
ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி நேற்று முதல் வழங்கல்
ஆரம்ப நிகழ்வில் அமைச்சர் சன்ன பங்கேற்பு
ரஷ்யாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஸ்புட்னிக் வி தடுப்பூசியை மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க நோயாளர்கள் அதிகமாக இனங்காணப்பட்டுள்ள கொழும்பு மாவட்டத்தின் கொலன்னாவை மற்றும் கொத்தட்டுவ பகுதி மக்களுக்கு நேற்றைய தினம் தடுப்பு ஊசி ஏற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமனவும் கலந்து கொண்டார்.
முதற்கட்டமாக மேற்படி தடுப்பூசி 30 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்ட நபர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ரஷ்யாவில் இருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ள தடுப்பூசியின் முதலாவது தொகுதி கடந்த மூன்றாம் திகதி நாட்டுக்கு கிடைத்தது. முதற்கட்டமாக பதினையாயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளதுடன் அடுத்தடுத்த வாரங்களில் மேலும் தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைக்க உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம் - நன்றி தினகரன்
மாகாண சபை தேர்தல் முறைமை: அரசாங்கத்துடன் இணைந்துள்ள தமிழ் எம்.பிக்கள் கலந்துரையாடல்
மாகாண சபை தேர்தல் முறைமை தொடர்பாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் உறுப்பினர்களுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர்களான ஜீவன் தொண்டமான்,எஸ்.வியாழேந்திரன், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் அங்கஜன் இராமநாதன் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொகுதிவாரியான தேர்தல் முறை யில் எமது மக்களுக்கான பிரதிநிதித்துவம் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும், என்பது தொடர்பாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அதேநேரத்தில் இவ்விடயம் தொடர்பாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் கட்சிகள் அரசாங்கத்திடம் தொடர்ந்து பல்வேறு ஆலோசனைகளை முன்வைத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
யாழ்.மாநகர காவல் படையின் பணியாளர்கள் நாலாம் மாடிக்கு அழைப்பு!
யாழ்ப்பாணம் மாநகரைச் சுத்தமாக வைத்திருப்பதற்கும் தண்டப் பணம் அறவிடும் நடைமுறையைக் கையாள்வதற்கும் என அமைக்கப்பட்ட யாழ். மாநகர காவல் படையின் பணியாளர்கள் ஐவரும் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள், கொழும்பிலுள்ள நாலாம் மாடியில் அமைந்துள்ள பயங்காரவாத விசாரணைப் பிரிவினரின் அலுவலகத்துக்கு எதிர்வரும் 11ஆம் திகதி காலை ஒன்பது மணிக்குச் சமுகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
யாழ். மாநகரத்தை தூய்மையான நகரமாகப் பேணும் பொருட்டு, மாநகர சபை ஊழியர்கள் ஐவர் மாநகர காவலர்களாக தனியான சீருடை அணிந்து கடந்த மாதம் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர்.
எனினும், உத்தியோகத்தர்கள் அணிந்திருந்த சீருடை தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறையின் சீருடைக்கு ஒத்தது என சர்ச்சைகள் எழுந்தன.
இந்நிலையில், இதுதொடர்பாக யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டதுடன் பின்னர், பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இதேவேளை, குறித்த சீருடை அமைப்பு கொழும்பு மாநகர சபையின் சீருடை அமைப்பைப் பின்பற்றியே உருவாக்கப்பட்டது என வி.மணிவண்ணன் விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி TodayJaffna
No comments:
Post a Comment