தமிழக முதல்வராக இன்று பதவியேற்கிறார் ஸ்டாலின்

 Friday, May 7, 2021 - 6:00am

 கொரோனா தொற்று அச்சம் காரணமாக ஆளுநர் மாளிகையில் எளிமையான வைபவம்

 அமைச்சர்களும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் முன்னிலையில் இன்று பதவிப் பிரமாணம்

 மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபடப் போவதாக சூளுரை

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெற்ற தி.மு.கவின் தலைவர் ஸ்டாலின் இன்று 7 ஆம் திகதி ஆளுநர் மாளிகையில், எளிய முறையில் பதவி ஏற்கின்றார். சட்டப் பேரவை தேர்தலில் தி.மு.க கூட்டணி 159 இடங்களை பெற்றுள்ளது.

அறுதிப் பெரும்பான்மை பெற்றதால் தி.மு.க தலைவர் ஸ்டாலின் மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்பட்ட முதல்வராக இன்று பதவி ஏற்கின்றார். தேர்தல் வெற்றிக்குப் பின்னர் நேரு உள்ளரங்கில் பிரம்மாண்டமான பதவி ஏற்பு விழா நடத்த உத்தேசித்திருந்த நிலையில், கொரோனா தீவிரம் காரணமாக ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் ஸ்டாலின் இன்று முதல்வராக பதவி ஏற்கின்றார்.

அங்கு அவருக்கும் பிற அமைச்சர்களுக்கும் ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

தி.மு.கவின் மூன்றாவது முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்கிறார். கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஸ்டாலின் நேரடியாக தெரிவு செய்யப்படும் முதல்வராகிறார்.

தமிழகத்தில் புதிய அரசு பதவிப் பிரமாண நிகழ்ச்சியை ஆடம்பர விழாவாக நடத்தாமல் ஆளுநர் மாளிகையிலேயே அதை நடத்துவது என்று நாங்கள் முடிவு செய்திருப்பதாக ஸ்டாலின் நேற்று கூறியுள்ளார்.

“சட்டப் பேரவைத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை தி.மு.க தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு தமிழகத்து மக்கள் வழங்கியிருக்கின்றனர். இந்த மகத்தான வெற்றிக்கு வழிவகுத்து தந்திருக்கும் அனைவருக்கும் தி.மு.க சார்பில் என்னுடைய இதயபூர்வமான நன்றியை, வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பத்தாண்டு காலமாக தமிழகம் ஒரு பாதாளத்திற்குப் போயிருக்கிறது என்பதை நாட்டு மக்கள் நன்கு புரிந்து, அதனைச் சரி செய்ய தி.மு.க தலைமையில் அமைந்திருக்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மிகப் பெரிய வெற்றியை வழங்கி இருக்கிறார்கள்.

எந்த எதிர்பார்ப்போடு அந்த வெற்றியைத் தந்து இருக்கிறார்களோ, எந்த நம்பிக்கையோடு எங்களிடத்தில் இந்தப் பொறுப்பை ஒப்படைத்து இருக்கிறார்களோ, அந்த நம்பிக்கைக்கு ஏற்ற வகையில், அந்தப் பொறுப்பை உணர்ந்து எங்களுடைய ஆட்சி நிச்சயம் அதனை நிறைவேற்றித் தரும்” என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

“எங்களையெல்லாம் ஆளாக்கிய கருணாநிதி ஐந்து முறை தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் முதல்வராக இருந்து தமிழகத்து மக்களுக்கு ஆற்றியிருக்கின்ற பணிகளையெல்லாம் நாங்கள் உணர்ந்து, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் எப்படிப் பயிற்றுவித்து இருக்கிறாரோ, அந்த வழிநின்று எங்கள் கடமையை நிச்சயம் ஆற்றுவோம்” என்றார் ஸ்டாலின்.

நேற்றுமுன்தினம் தி.மு.க முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின் பின்னர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை ஸ்டாலின் சந்தித்தார். அப்போது அவர் சட்டமன்ற கட்சி தலைவராக எம்.எல்.ஏ.க்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம் வழங்கினார். ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோரினார். இதை கவர்னர் பன்வாரிலால் ஏற்றுக் கொண்டார்.

இதையடுத்து கவர்னர் பன்வாரிலால் புரோகித், மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து பூங்கொத்து வழங்கினார். ஆட்சி அமைப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதாக கூறினார்.

பின்னர் அங்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவருக்கும் கவர்னர் தேநீர் வழங்கினார்.

7ஆம் திகதி முதல்-அமைச்சராக பதவி ஏற்க விரும்புவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். கிண்டி கவர்னர் மாளிகையில் பதவி ஏற்பு விழாவை வைத்துக் கொள்ளலாம் என்றும் விருப்பம் தெரிவித்தார். இதையும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஏற்றுக் கொண்டார்.இதையடுத்து தமிழகத்தில் ஆட்சியமைக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் அழைப்பு விடுத்தார். அதன்படி இன்று காலை 9 மணிக்கு பதவியேற்கின்றார் ஸ்டாலின்.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழாவும் இன்று காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

இது ஒருபுறமிருக்க, தமிழகத்தின் புதிய ஆளுநராக கிரண்பேடி நியமிக்கப்பட உள்ளதாக வெளியான தகவல் தி.மு.கவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் புதிய ஆளுநராக கிரண் பேடி நியமிக்கப்படவுள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு அடுத்த சில தினங்களில் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது. கடந்த காலத்தில் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு கொடுத்த குடைச்சல் கொஞ்ச நஞ்சமல்ல.

நாராயணசாமிக்கு 5 வருடமாக இவருடன் போராடவே நேரம் சரியாக இருந்தது. வீதியில் துண்டை விரித்து படுத்து போராடியது, உண்ணாமல் உண்ணாவிரதம் இருந்து எதிர்ப்பு காட்டியது உட்பட பல போராட்டங்கள் நடத்தினார் நாராயணசாமி.

ஆனாலும் கிரண்பேடி அசரவில்லை. இறுதியில் அந்த மாநிலத்துக்கு தேர்தல் வரப் போகிறது என்று தெரிந்ததும் துணைநிலை ஆளுநர் பதவியில் இருந்து கிரண்பேடி நீக்கப்பட்டார்.

அதேசமயம், பா.ஜ.க மீதான களங்கத்தைத் துடைக்கவும், புதுச்சேரியில் சுமுகமான சூழ்நிலையை ஏற்படுத்தவும், தமிழிசை சௌந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பாக புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் பதவி வழங்கப்பட்டது. இதையெல்லாம் தமிழகம் அன்றைக்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் வி.சி.க தலைவர் திருமாவளவன் எம்.பி, “இன்றைக்கு புதுச்சேரிக்கு வந்திருக்கிற நிலைமைதான் நாளைக்கு தமிழகத்துக்கும் வரும். அங்கே நடக்கிறது ஒரு ட்ரெயிலர்தான்” எனத் தெரிவித்தது இன்றைக்கு நடப்பதைப் பார்த்தால் நடைமுறை சாத்தியமாகி விடுமோ என்றே தோன்றுகிறது.

ஒருவேளை கிரண்பேடி இல்லாவிட்டாலும், பாஜக அரசுக்கு நெருக்கமான ஒருவரை தமிழகத்தின் ஆளுநராக நியமிப்பது மூலம், ஸ்டாலினின் செயல்பாடுகளை தடுக்க முடியும்என்று பாஜக திட்டமிடுவதாக சொல்லப்படுகிறது.

ஆனால் எடுத்த எடுப்பில் ஆளுநரை எல்லாம் மாற்ற முடியாது என்றும், ஒருவேளை ஆளுநர் மாற்றப்படும் பட்சத்தில் அவர்களை சமாளித்து காட்டினால் தி.மு.கவுக்கு அது பெரிய வெற்றிதான் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.   நன்றி தினகரன் 

No comments: