படித்தோம் சொல்கின்றோம் : வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் இதழ் “ எங்கட புத்தகங்கள் “ முருகபூபதி


நவீன தொழில்நுட்ப சாதனங்கள் பெருகிவிட்டமையால் கணினியுகமும்  டிஜிட்டல் காலமும் வாசிப்பு பழக்கத்தை மக்களிடமிருந்து அந்நியப்படுத்திவருகிறது.

எழுத்தாளர்களும் முகநூல் கலாசாரத்திற்குள் சிக்கிவிட்டதனால், தத்தம் படைப்புகளுக்கு அங்கீகாரம் தேடி அலைந்துகொண்டிருக்கின்றனர்.

எத்தனைபேர் தமது படைப்பை பார்த்தார்கள்…?  படித்தார்கள்…?  விருப்பம்  ( Like ) தெரிவித்தார்கள்…? எதிர்வினையாற்றினார்கள்…?  என்பதை ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள்.

முழு உலகமும்  சினிமா முதல் விளையாட்டுக்கள், அரசியல் மற்றும் சமகால கொரோனோ புள்ளிவிபரங்கள் அனைத்தும் கைத்தொலைபேசிக்குள் அடங்கிவிடுகிறது. இவைதவிர வாட்ஸ் அப் அலைப்பறையை ரசிக்கும் – பகிரும்  பண்பாடும் பெருகிவிட்டது.

இந்தப்பின்னணியில்  புத்தகங்கள் பத்திரிகைகள், இதழ்களும்


மின்னூல் வடிவம் பெற்றுவருகின்றன.

உலகெங்கும் புத்தக சந்தைகள், கண்காட்சிகள் நடந்தாலும் மக்களிடம் வாசிக்கும் பழக்கம் அருகித்தான் வருகிறது. ஈழத்து தமிழ் சமூகம் நீண்டநெடுங்காலமாக இந்திய ஜனரஞ்சக வணிக இதழ்களில்தான் மோகம் கொண்டிருந்தது.

அவற்றுடன் போட்டிபோட்டுக்கொண்டுதான் இலங்கையில் பல தரமான  சிற்றிதழ்கள் தோன்றித் தோன்றி மறைந்தன.

இன்று இலங்கையில் யாழ்ப்பாணத்திலிருந்து ஜீவநதியும், கொழும்பிலிருந்து ஞானமும், மட்டக்களப்பிலிருந்து அவ்வப்போது மகுடம் காலாண்டிதழும் அநுராதபுரத்திலிருந்து படிகள் இதழும்  வெளியாகின்றன.

எனினும், பல பத்திரிகைகளை சமகாலத்தில் இணைய


வழியில் பார்க்கமுடிகிறது.  கணினியின் வரப்பிரசாதம்  இதனைச்  சாத்தியப்படுத்தியிருக்கிறது.

இந்தப்பின்னணிகளுடன் யாழ்ப்பாணம் நல்லூரிலிருந்து எங்கட புத்தகங்கள் என்ற பெயரில் ஒரு சிற்றிதழ் வெளிவரத்தொடங்கியுள்ளது.

இதன் இரண்டாவது இதழை ( 2021 ஜனவரி ) லண்டனில் வதியும் நூலகர் நடராஜா செல்வராஜா எமக்கு தபாலில் அனுப்பியிருந்தார்.  செல்வராஜா எப்போதும் ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாக திகழ்பவர்.  ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களை ஆவணப்படுத்தும் குறிப்புகளை தொகுத்து நூல்தேட்டம் என்ற பெருந்தொகுப்பினையும் வெளியிட்டுவருபவர்.

எங்கட புத்தகங்கள் இதழை எமக்கு அறிமுகப்படுத்திய நூலகர் செல்வராஜாவுக்கு நன்றி தெரிவிக்கின்றோம்.

இரண்டாவது இதழின் முகப்பு மனதை கவர்ந்திருக்கிறது. ஒரு பாலகன் ஒரு தமிழ் நூலைப்படித்துக்கொண்டிருக்கும்  காட்சி சிறப்பானது.

அடுத்துவரும் தலைமுறையிடம் வாசிப்பு பழக்கத்தை தூண்டவேண்டும் என்பதற்கு அடையாளமாக  முகப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

புத்தகங்களைத் தேடுவோம், நூலகங்களை அமைப்போம்,



வாசிப்பை கூட்டுவோம்
என்ற தலைப்பில் ஆசிரியத்தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.

இதில் இறுதிப்பந்தி இவ்வாறு கூறுகிறது:

 “ மேலைத்தேய நாடுகளில் மின்நூல்களின் வரவும், சமூக ஊடகங்களின் பெருக்கமும், நூல் வாசிப்பில் தேக்கநிலையை உண்டுபண்ணும் என்ற எதிர்வுகூறல், இலத்திரனியல் பயன்பாடு மலிந்த மேலைத்தேய நாடுகளில் கூட பொய்த்துப்போயுள்ள சூழ்நிலையில், எமது மண்ணிலும் அத்தகையதொரு கருத்தியல் புகுத்தப்பட்டு வருவதை நாம் அறிவோம். கையில் வைத்துத்தடவி, பக்கங்களைத் திருப்பி, விரும்பியபோது வாசிப்பைத் தொடரும்  “ எங்கட நூல்களின்  “ இருப்பின் எதிர்காலம் பற்றிச் சிந்திக்கும் படைப்பாளிகள், புத்திஜீவிகள் அனைவரும், எமது புத்தகங்களை வெளியீட்டு விழாக்களுக்கு அப்பால் தொடர்ச்சியாக எவ்வாறு வாசகரிடம் கொண்டுபோய்ச் சேர்க்கலாம் என்பது பற்றிய சந்தைப்படுத்தல் உத்திகளையிட்டு சிந்திக்கவேண்டும்.  “

தமிழில் இளைய தலைமுறைக்கான வாசிப்பு என்ற தலைப்பில் அகிலினி எழுதியிருக்கும் ஆக்கமும் குறிப்பிடத்தகுந்தது.

அவர் சொல்கிறார்:  “  வாசிப்பு நாம் பிறந்ததுமுதல் இறக்கும் வரை தொடரும் ஒரு பயணம் ஆகும். வாசிப்பானது நம் வாழ்க்கையின் பல்வேறு படிநிலைகளில் பல்வேறு வடிவங்களில் நம்முடனேயே பயணிக்கின்றது. வளர்ச்சியடைகின்றது. மாற்றங்களுக்குள்ளாகின்றது. நம்மையும் மாற்றி அமைக்கின்றது. இந்த உன்னதமான


செயல்முறையின் இயல்பு வடிவமைப்பிற்கும் சிறப்பான செதுக்குதலுக்கும் இன்றியமையாததாகும் .  “

ஈழத்தின் ஆசிரிய / வெளியீட்டாளர்களும் மின்நூல்களைத் தேடும் முகநூல் வாசகர்களும் என்ற தலைப்பில் நூலகர் செல்வராஜா எழுதியிருக்கும் ஆக்கம் கருத்தை கவர்ந்துள்ளது.

இதில் செல்வராஜா,  இடித்துரைத்துள்ள இச்செய்தியை கவனத்தில் கொள்ளவேண்டும்.

 “ தமிழகத்தில் தனது நூலை அச்சிடும் ஒரு புகலிடத்தின் அறிமுக படைப்பாளியை அறிந்துகொண்டுள்ள அளவுக்கு, தமிழக வாசகருக்கு தமிழகத்தில் தமது பதிப்பகத்தை தேடமுனையாத உள்ளுர் பதிப்பகங்களுடன் நின்று தமது படைப்பாக்கங்களை வௌிக்கொண்டு வந்திருந்த ஈழத்தின் முதுபெரும் படைப்பாளிகளைக்கூட தெரியவில்லை !  “

ஐந்து பக்கங்களில் வெளியாகியிருக்கும் செல்வராஜாவின் ஆக்கம்  பரவலான வாசிப்புக்குச்செல்லவேண்டும்.  மின்னூல் குறித்து எழுந்துள்ள சாதக – பாதக நிலைகுறித்தும் இந்த ஆக்கம் ஆதாரங்களுடன் விரிவாகப்பேசுகிறது.

செல்வராஜா, இந்த மின்னூல் விடயத்தில் இதுவரையில்


பேசாப்பொருளை பேசுவதற்கு துணிந்துள்ளார்.

புகலிடத்தில் இளையோருக்கான வாசிப்பு உலகம் குறித்து லண்டன் மடலில் செ. விஜயலட்சுமியும் விரிவாக பேசுகிறார்.

எங்கட சஞ்சிகை அறிமுகம் பத்தியில் ஈழத்தில் 2007 முதல்    2011 வரையில் வெளிவந்த  இருக்கிறம் இதழ் பற்றியும் அதனை வௌியிட்ட விழுதுகள் அமைப்பின் தலைவர் திருமதி சாந்தி சச்சிதானந்தன், அதில் அங்கம் வகித்த ஊடகவியலாளர் இளையதம்பி தயானந்தா குறித்தும் இவ்விதழின் உள்ளடக்கம் பற்றியும் குலசிங்கம் வசீகரன் பதிவுசெய்துள்ளார்.

மற்றும் ஒரு இதழ்பற்றி எங்கட புத்தகங்கள் ஆவணப்படுத்தியிருப்பதும் முன்மாதிரியான செயல்தான்.

எங்கட வாசகர் என்ற பகுதியில் எங்கட புத்தகங்கள் முதல் இதழ் தொடர்பாக தங்கள் வாசிப்பு அனுபவங்களை வாசகர்களும் எழுத்தாளர்களும் பகிர்ந்துள்ளனர்.

வாசிப்பும் எழுத்தும் பதிப்பும் எவ்வாறு அரசியல்மயமாகிறது என்பதை அறிமுகக்குறிப்பாக,  எனினும் விரிவாகவே எழுதியுள்ளார் விதை குழுமத்தின் செயற்பாட்டாளர் யதார்த்தன்.

மாணவச்செல்வங்களுக்காகவும்  ஆக்கங்கள் வெளியாகியிருக்கிறது. எனவே இவ்விதழ் மூத்ததலைமுறையினருக்கு மாத்திரமல்ல இளம் சந்ததியினருக்கும் பயன்படுகிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில்தான் கண்ணுக்குத் தெரியாத எதிரியான கொரோனோவின் தாக்கம் உருவானது.  அது இன்னமும் கட்டுப்படவில்லை.  தொடர்ந்தும் திரிபடைந்துகொண்டிருக்கிறது. இத்தகைய இக்கட்டான சூழலிலும் பல புத்தகங்கள் கடந்த ஆண்டு வெளியாகியிருக்கின்றன.  அவை பற்றி சுருக்க விபரமும் அவற்றின் முகப்புடன் தரப்பட்டுள்ளது.

எழுதுகோல் இன்றி ஒளியினால் வரையப்படும் கலையே


ஒளிப்படம் 
( Photograph is Art created by light )  என்று விளக்குகிறார் சப்னா இக்பால்.

பல ஆளுமைகளின் ஆவணங்கள் வெளியாகும் சமகாலத்தில் அவற்றில் இடம்பெறும் படங்களுக்கு ஒளியில் எழுதுதல் என்று தலைப்பிடப்படுவதையும் அவதானிக்கின்றோம்.

ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் ஓவியர் சிவஞானசுந்தரம் அவர்களுக்கும் அவரால் நீண்டகாலமாக வெளியிடப்பட்ட சிரித்திரன் இதழுக்கும் முக்கிய இடமுண்டு.

ஈழத்தமிழ்  சமூகத்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர் சிரித்திரன் சிவா.  தமிழர்மத்தியில்  சிரித்திரன் கேலிச்சித்திரங்களுக்கும்  அவற்றின் ஊடாக படைக்கப்பட்ட பாத்திரங்களுக்கும் சிறந்த வரவேற்பிருந்தது.

அவற்றுள் சிலவற்றையும் தேர்ந்தெடுத்து பதிவேற்றி,  சிவஞானசுந்தரம் பற்றிய ஆக்கத்தை சௌம்யன்,                                          “ ஈழத்தமிழரின் கருத்தோவியக்கலையின் முன்னோடி  “ என்ற தலைப்பில் நேர்த்தியாக எழுதியுள்ளார்.

கிளிநொச்சியில் இயங்கும் பாலுமகேந்திரா நூலகம் எவ்வாறு இயங்கத்தொடங்கியது – அதன் செயற்பாடுகள் பற்றியெல்லாம் குலசிங்கம் வசீகரனின் ஆக்கம் பேசுகிறது.

இலங்கையில் கட்டிளம் பருவத்தினருக்கான இலக்கியங்களின் தேவை பற்றி வசந்தி தயாபரன் எழுதியிருக்கும் ஆக்கமும் கவனத்தில்கொள்ளப்படவேண்டியதே.

வசந்தி,  இந்த ஆக்கத்தில் மேலைத்தேய சிறுவர் படைப்புகள், இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மொழிபெயர்ப்பு முயற்சிகள் பற்றியெல்லாம் விரிவாகப்பேசியுள்ளார்.

வசந்தியின் தந்தை ( அமரர் ) வ. இராசையா அவர்கள், என்னைப்போன்ற எழுத்தாளர்கள் 1970 களில்  இலக்கியப்பிரவேசம் செய்த காலத்தில் எமக்கு ஆதர்சமாக விளங்கியவர்.  சிறுவர் இலக்கியம் குறித்து அவ்வப்போது ரஸனைக்குறிப்புகள் எழுதிவந்தவர்.

சிறுகதை இலக்கியத்தின் மேம்பாட்டுக்காக தலைநகரில் தமிழ்க்கதைஞர் வட்டம் ( தகவம் ) என்ற அமைப்பினையே நிறுவிய முன்னோடி.

சிரித்திரன் சிவா பற்றிய அறிமுகம் போன்று இராசையா அவர்களைப்போன்ற மறைந்துவிட்ட ஆளுமைகள் பற்றியும் எதிர்காலத்தில் அறிமுகக்கட்டுரைகள்  எங்கட புத்தகங்கள் இதழில் வெளியாகவேண்டும்.

நூலகர் செல்வராஜா, துரைவி பதிப்பகத்தின் நிறுவனர்(அமரர் ) துரைவிசுவநாதன் பதிப்புத்துறையில் மேற்கொண்ட பணிகளின் தாற்பரியம் பற்றி எழுதியுள்ளார். துரைவி பதிப்பகம் வெளியிட்ட நூல்களும், இலட்சம் ரூபா பரிசுத்திட்டத்தில் அவர் நடத்திய சிறுகதைப்போட்டியும் மறக்கமுடியாதவை.

எங்கட புத்தகங்கள் எங்களுக்குச்சொன்னவை, என்ற தலைப்பில் உடுவில் பிரதேச செயலகத்தின் கலாசார உத்தியோகத்தர் றஜனி நரேந்திராவும், வாசிப்பு பண்பாட்டை கல்விப்பண்பாடக கட்டி எழுப்புதல் என்னும் தலைப்பில் எம்முன்னே இருக்கும் சவால்களும் சாத்தியங்களும் பற்றி கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை விரிவுரையாளர் வேல் நந்தகுமாரும் எழுதியுள்ளனர்.

எங்கட புத்தக அறிமுகம் பகுதியில், ஜீவநதி வெளியீடாக வந்த அலெக்ஸ் பரந்தாமனின் சிறுகதைத்தொகுதிபற்றிய மதிப்பீட்டினை மாதவி உமாசுதசர்மா எழுதியுள்ளார்.

மொழிபெயர்பு நூல்களின் வரிசையில் இரா. சடகோபன் தமிழில் மொழிபெயர்த்த இலங்கையின் மூத்த சிங்கள இலக்கியவாதி மார்டின் விக்கிரமசிங்காவின் அபேகம நூல்             ( எங்கள் கிராமம் )  தமிழ் மொழிபெயர்ப்பு பற்றி முருகபூபதியின் அறிமுகக்குறிப்பும் இடம்பெற்றுள்ளது.

மொத்தத்தில் எங்கட புத்தகங்கள் இதழ் கருத்துச்செறிவுடனும் மூத்த – இளம் தலைமுறை வாசகர்கள் படித்து பயன்பெறத்தக்க ஆக்கங்களை உள்ளடக்கியும் வெளிவந்துள்ளது.

அடுத்து வந்த எங்கட புத்தகங்கள் இதழ்பற்றியும் அறிவதற்கான ஆர்வத்தையும் தூண்டுகிறது.

படைப்பு இலக்கிய முயற்சிகளும்  வாசிப்பு அனுபவங்களும் அஞ்சலோட்டத்துக்கு ஒப்பானது.  இனிவரும் தலைமுறையையும் அணைத்து அழைத்துச்செல்லப்படவேண்டியது.

அந்த வகையில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரத்தொடங்கியிருக்கும் எங்கட புத்தகம் இதழை எமது சமூகம் வாழ்த்தி வரவேற்கவேண்டும்.  தமிழ்ப்பாடசாலைகள், ஆசிரிய பயிற்சிக்கலாசாலைகள், பல்கலைக்கழகங்களின் தமிழ்த்துறைகளில் அறிமுகப்படுத்தப்படவேண்டியது.

எங்கட புத்தகங்கள்  இதழ்களை பெறுவதற்கு, மின்னஞ்சல்:

engandapuththakangal@gmail.com 

இலங்கையில் தனிப்பிரதி ரூபா 100 /=

ஆண்டுச்சந்தா: ரூபா 500/=

---0---

letchumananm@gmail.com

 

 

 

  



No comments: