பா.ஜ.கவின் வியூகத்தை முறியடித்து ஈட்டிய தனிப்பெரும்பான்மை வெற்றி

 Tuesday, May 4, 2021 - 6:44pm

- கேலி கிண்டல்களை தவிடுபொடியாக்கி சட்டசபைக்குள் பிரவேசிக்கும் ம.தி.மு.க
- தகர்ந்து போனது அ.ம.மு.கவின் கனவு; கூட்டு சேர்ந்த தே.மு.தி.கவும் படுதோல்வி
- தோல்வியுற்றாலும் பாராட்டப்பட வேண்டிய ஆளுமை கமல்
- கட்சிகள் ஒவ்வொன்றும் வென்றெடுத்த ஆசனங்கள்

சட்டசபைத் தேர்தலில் பெற்ற அமோக வெற்றியையடுத்து தமிழக முதல்வராக தி.மு.க தலைவர் ஸ்டாலின் எதிர்வரும் 7 ஆம் திகதி பதவி ஏற்க உள்ளார். தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித்திடம் ஆட்சி அமைக்க ஸ்டாலின் இன்று உரிமை கோருகிறார்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் தி.மு.க கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில், ஆட்சி அமைக்க 118 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், தி.மு.க கூட்டணி 159 இடங்களில் வென்றுள்ளது.

இதில் தி.மு.க தனியாக 125 இடங்களில் வெற்றி தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. அ.தி.மு.க கூட்டணி 75 இடங்களிலும், அ.தி.முக தனியாக 65 இடங்களிலும் வென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் பதவி ஏற்பு வைபவம் நடக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன. கொரோனா பரவல் காரணமாக பெரிய ஆரவாரம் இன்றி, கொண்டாட்டங்கள் இல்லாமல், தலைவர்களுக்கு அழைப்பு இல்லாமல் இந்த விழா நடைபெறும் என்று கூறப்படுகிறது.

பா.ம.கவை கூட்டணியில் சேர்த்துக் கொள்வதன் மூலம் வடதமிழகத்தில் கணிசமான வாக்குகளை பெற முடியும் என்கிற எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் வியூகத்தை தி.மு.க அணி தவிடுபொடியாக்கி விட்டது. தமிழக சட்டசபையில் 20 எம்.எல்.ஏக்களை கண்ட கட்சியாக பா.ம.க விஸ்வரூபம் எடுத்த வரலாறும் உண்டு. ஒரு எம்.எல்.ஏ கூட கிடைக்காத பரிதாபத்துக்குள்ளான வரலாறும் அந்த கட்சிக்கு இருக்கிறது.

15 ஆண்டுகளுக்கு முன்னர் தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து சட்டசபைக்குள் நுழைந்த பா.ஜ.க தற்போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் 4 பேருடன் சட்டசபைக்குள் நுழைகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க 4 இடங்களில் வென்றுள்ளது. இதன் மூலம் சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சட்டசபைக்குள் பா.ஜ.க செல்கிறது.

அ.தி.மு.கவையே பா.ஜ.க அழித்து விடும் என்றார்கள். அ.தி.மு.கவை அழித்து விட்டு பா.ஜ.க தாறுமாறாக வளரும் என்றார்கள். இந்த இரு கணிப்புகளுமே இன்று தவிடுபொடியாகி உள்ளன.

ஒருகட்டத்தில் அ.தி.மு.கவையே ஒதுக்கி தள்ளி விட்டு, திமுகவுக்கு ஒரே எதிரி தாங்கள்தான் என்ற பிம்பத்தை பா.ஜ.க தோற்றுவிக்க முயலும் என்றும் பேச்சுக்கள் எழுந்தன. அதாவது திமுக Vs பாஜக என்றே இனி தமிழக அரசியல் இருக்க வேண்டும் என்பதுதான் பா.ஜ.கவின் விருப்பம். ஆனால், இந்த தேர்தல் ஒரு செய்தியை உணர்த்தி உள்ளது. அ.தி.மு.க என்ற கட்சியை யாரும் தொட கூட முடியாது. அ.தி.மு.க என்ற கட்சி எப்போதும் இருக்கும் என்பதுதான் அந்த செய்தி.

காரணம் மிக மோசமான அளவில் அ.தி.மு.க தோற்று போய் விடவில்லை. எதிர்பார்த்த அமைச்சர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இன்று தி.மு.கவுக்கு எதிரில் உட்காரப் போகிறது அ.தி.மு.க. எனவே, பா.ஜ.க என்ன நினைத்து இந்த தேர்தலில் கணக்கு போட்டதோ அதுதான் உடைந்து நொருங்கி உள்ளது. அதனால் தி.மு.கவுக்கு மாற்று அ.தி.மு.கதான், அ.தி.மு.கவுக்கு மாற்று தி.மு.கதான் என்ற நிலைப்பாடே இப்போதும் தொடர்கிறது.

அதுமட்டுமல்ல, தேசிய கட்சிகளே இனி தி.மு.க, அ.தி.மு.க என்று ஏதாவது ஒரு திராவிட கட்சியில்தான் கூட்டணி வைக்கக் கூடிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன. எனவே, இந்தத் தேர்தலை பொறுத்தவரை, அ.தி.மு.கவும் அழியவில்லை, பா.ஜ.கவும் வளரவில்லை. அந்த தாமரை மொட்டாகவே இன்னமும் இருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, வலுவான எதிர்க் கட்சியாக இருந்தாலும் எதிர்க் கட்சித் தலைவராக அமரப் போவது யார் என்ற குழப்பம் அதிமுகவிற்குள் எழுந்துள்ளது. ஏற்கனவே தேர்தலுக்கு முன்னர் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இடையே போட்டி ஏற்பட்டது. பிறகு ஒரு வழியாக வேறு வழியில்லாமல் இ.பி.எஸ்ஐ முதல்வர் வேட்பாளராக ஓ.பி.எஸ் அறிவித்தார்.

இந்தத் தேர்தலில் அதிக வாக்கு எண்ணிக்கை வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் எடப்பாடி பழனிச்சாமி 3 வது இடத்தில் உள்ளார். ஆனால் ஓ.பன்னீர்செல்வம், திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வனிடம் மிகுந்த போராட்டத்திற்கு பிறகு குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றுள்ளார். பல சுற்றுகளில் பின்னடைவையும் சந்தித்தார்.

ஆனால் பன்னீர்செல்வத்திற்கு டெல்லியிலும், கட்சிக்குள்ளும் இருக்கும் செல்வாக்கால் பல விஷயங்களை அவரால் சாதிக்க முடியும். எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவருமே சம அளவு பலத்துடன் இருப்பதால் யார் எதிர்க்கட்சி தலைவராக அமர போகிறார் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இவர்களில் யார் எதிர்க்கட்சி தலைவர் என்பதை அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு முடிவு செய்யும் என கூறப்படுகிறது.

தமிழக சட்டமன்றத்திற்குள் பல ஆண்டுகளுக்கு பிறகு பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளின் குரல் ஓங்கி ஒலிக்க இருக்கிறது. இதுவரை தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், என்று மட்டுமே இருந்து வந்த கட்சிகளின் பிரதிநிதித்துவம் இப்போது பரந்து விரிந்துள்ளது. தற்போது நடைபெற்று முடிந்த தேர்தல் மூலம் 13 கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் சட்டமன்ற அவையை அலங்கரிக்க உள்ளனர்.

தமிழக சட்டமன்றம் என்றாலே தி.மு.க, அ.தி.மு.க என்றுதான் பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால் அவ்விரு கட்சிகளை கடந்து மாற்றுக் கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் ஆரோக்கியமான விவாதங்களை, ஆலோசனைகளை நல்கிய காலமும் இருந்திருக்கிறது. குறிப்பாக 2001 முதல் 2011 காலகட்டங்களில் நடந்த அத்தகைய நிகழ்வுகள் மீண்டும் திரும்ப இருக்கின்றன. பலதரப்பட்ட சிந்தனைகளை, கொள்கைகளை உடைய உறுப்பினர்களின் உரிமைக் குரல்கள் இனி ஓங்கி ஒலிக்க இருக்கின்றன.

அதன்படி தி.மு.க, அ.தி.மு.கவை தவிர்த்து தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் பேரவைக்கு செல்லவிருக்கின்றனர். இதேபோல் பிராந்தியக் கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க, ம.ம.க, கொ.ம.தே.க., தமிழக வாழ்வுரிமைக் கட்சி, பா.ம.க, புரட்சி பாரதம் என வெவ்வேறு சித்தாத்தங்களை கொண்ட கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் இம்முறை சட்டப்பேரவைக்கு செல்கின்றனர்.

இதனால் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு இதுவரை இல்லாத வகையில் ஒரு புதுமையை எதிர்கொள்ள உள்ளது. இதனிடையே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன் வைக்கும் கேள்விகள், சந்தேகங்கள், புகார்கள், கோரிக்கைகள் என எல்லாவற்றையும் சமநிலை செய்து செல்ல வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. பல்வேறு கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் இந்த முறை இடம்பெற்றுள்ளதால் புதிதாக அமையவுள்ள 16-வது சட்டமன்றத்தை ஜனநாயக சட்டமன்றமாகவே கருதத் தோன்றுகிறது. சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்கப் போகும் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் தனது அம்மாவிடம் ஆசி பெறுவதற்காக கோபாலபுரம் சென்றார். மனைவி துர்காவுடன் சென்ற ஸ்டாலினை ஆரத்தி எடுத்து வரவேற்று தேங்காயில் சூடம் ஏற்று சுற்றி திருஷ்டி கழித்துள்ளார் அவரது சகோதரி செல்வி.

மு.க ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இன்றைய தினம் அண்ணா அறிவாலயத்தில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் முதல்வராக மு.க ஸ்டாலினை தெரிவு செய்ய உள்ளனர். வெற்றிச் சான்றிதழை வாங்கிய உடன் நள்ளிரவில் நேராக கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று ஆசி பெற்றார் ஸ்டாலின். நேற்றுக் காலை தனது தாயார் தயாளு அம்மாவிடம் ஆசி வாங்குவதற்காக கோபாலபுரம் இல்லத்திற்கு சென்றார். அங்கு அவருக்கு ஆரத்தி எடுத்து குடும்ப உறுப்பினர்கள் வரவேற்றனர்.

'ஊர் கண்ணு எல்லாம் உங்க மேலதான்' என்று சொல்லி சகோதரி செல்வி தேங்காயில் சூடம் ஏற்றி சுற்றி திருஷ்டி கழித்தார். கோபாலபுரத்தில் பிறந்து வளர்ந்த ஸ்டாலின், திருமணம் முடிந்து சில காலம் வரைக்கும் அங்குதான் வசித்து வந்தார். தனது மனைவி, குழந்தைகள், பேரன், பேத்திகளுடன் வேறு வீட்டிற்கு சென்றாலும் அவ்வப்போது கருணாநிதி, தயாளு அம்மாளை சந்தித்து செல்வார். மிகப் பெரிய வெற்றியை தனது தாயிடம் பகிர்ந்து கொண்டு ஆசி பெற வேண்டும் என்பதற்காக நேற்று தான் பிறந்து வளர்ந்த கோபாலபுரம் வீட்டிற்குச் சென்றார்.

சொந்தங்களுடன் வெற்றி பெற்ற மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். அக்கம் பக்கத்தினர், நண்பர்கள் வீட்டிற்கு சென்று நலம் விசாரித்தனர். கோபாலபுரம் பகுதியில் உள்ள பால்ய கால நண்பர் இராமச்சந்திரனையும் சந்தித்து பேசினார் ஸ்டாலின். சிறுவயது நினைவுகளை நண்பர்களுடன் பேசி மகிழ்ந்தார் ஸ்டாலின்.

மாணவப் பருவத்தில் அரசியலை தொடங்கி இளைஞரணி, செயல் தலைவர், துணை முதல்வர், எதிர்கட்சித் தலைவர் என படிப்படியாக வளர்ந்து விரைவில் முதல்வராக பொறுபேற்கப் போகிறார் அவர். பலருடைய வாழ்த்துக்கள் வந்தாலும் அண்ணன் அழகிரியின் வாழ்த்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் மு.க ஸ்டாலின்.

கேலி கிண்டல்களை தவிடுபொடியாக்கி சட்டசபைக்குள் பிரவேசிக்கும் ம.தி.மு.க

ம.தி.மு.க இடம்பெறும் கூட்டணி ஆட்சிக்கு வந்ததில்லை என்ற புரட்டுவாதத்தை தூள் தூளாக உடைத்தெறிந்திருக்கிறார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ. சமூக வலைதளங்களில் தன்னை பற்றி வெளிவரும் கேலி-கிண்டல்களை பொருட்படுத்தாமல், தொடர்ந்து அரசியல் பயணம் மேற்கொண்டு வரும் அவர் ம.தி.மு.க சார்பில் 4 சட்டமன்ற உறுப்பினர்களை வென்றிருக்கிறார்.

ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு பிறகு ம.தி.மு.க உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்குள் செல்கின்றனர். ம.தி.மு.க இடம்பெறும் கூட்டணி ஆட்சிக்கு வந்ததில்லை எனக் கூறி சிலர் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு விமர்சித்து வந்தனர். 'போற்றுவோர் போற்றட்டும், புழுதுவாரி தூற்றுவோர் தூற்றட்டும்' என்ற பாரதிதாசனின் வரிகளுக்கு ஏற்ப அரசியலில் தனது உழைப்பை செலுத்தி வந்தார் வைகோ.

மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக்காமல் ஓயமாட்டேன் என சபதம் எடுக்காத குறையாக பணியாற்றினார். 4 தொகுதிகளில் இதனால் கூட்டணி விவகாரத்தில் கூட ஆசனப் பங்கீட்டில் சற்று தாராளம் காட்டினார் வைகோ. காலத்தின் தேவை கருதி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவும் இசைவு தெரிவித்து அவ்வாறே தனது கட்சி வேட்பாளர்களையும் போட்டியிட வைத்தார்.

இந்நிலையில், ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்ட 6 இடங்களில் சாத்தூர், அரியலூர், வாசுதேவநல்லூர், மதுரை தெற்கு என 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மதுராந்தகம் மற்றும் பல்லடத்தில் மட்டும் அக்கட்சி தோல்வியடைந்தது.

கடந்த 2006-_2011-க்கு பிறகு இப்போது தான் ம.தி.மு.க சட்டமன்றம் செல்கிறது. இடைப்பட்ட 2011 தேர்தலின் போது தேர்தலையே புறக்கணித்திருந்தார் வைகோ. இதேபோல் 2016-ல் மக்கள் நலக் கூட்டணியில் போட்டியிட்டார். இதனால் ம.தி.மு.க தொண்டர்களும், நிர்வாகிகளும் சோர்வடைந்திருந்த நிலையில், இப்போது அவர்கள் உற்சாகம் கொள்ளும் வகையில் வெற்றி ம.தி.மு.க வசம் தேடி வந்துள்ளது.

தகர்ந்து போனது அ.ம.மு.கவின் கனவு; கூட்டு சேர்ந்த தே.மு.தி.கவும் படுதோல்வி

என்னவெல்லாம் அரசியல் கணக்கு போட்டு வைத்திருந்தாரோ, அத்தனையும் டி.டி.வி தினகரனுக்கு தகர்ந்து விட்டது. இதையடுத்து, அ.ம.மு.கவின் அடுத்த நிலை என்ன என்ற கேள்வியும் பிறந்துள்ளது. இந்த முறை தேர்தலில் டி.டி.வி தினகரன், அதிகமாக நம்பியிருந்தது சசிகலாவைத்தான்.

பெங்களூரில் இருந்து வந்ததுமே, அ.ம.மு.க தலைமை பொறுப்பை ஏற்க செய்ய வேண்டும், அ.ம.மு.க ராயப்பேட்டை அலுவலகத்துக்கு அழைத்து செல்ல வேண்டும், கட்சி பொதுக்குழுவை கூட்டி, முதல்வர் வேட்பாளராக சசிகலாவை அறிவிக்க வேண்டும்.. இப்படி பட்டியல் போட்டு கனவு கண்டு கொண்டிருந்தார்.

ஆனால் "அரசியல் விலகல்" என்ற அறிக்கையை விட்டு தினகரன் கனவில் மண்ணை அள்ளி போட்டு விட்டார் சசிகலா. தேர்தல் முடிவு வந்தபிறகு, பா.ஜ.கவை வைத்து காய்நகர்த்தி அ.தி.மு.கவை மீட்டு விடலாம் என்பதெல்லாம் தினகரன் போட்டு வைத்த திட்டங்கள் ஆகும். ஆனால், இன்றைய நிலைமையை பார்த்தால், அவர் அ.ம.மு.கவை தொடர்ந்து நடத்துவாரா? இல்லையா என்பதே சந்தேகம் ஆக இருக்கிறது.அ.ம.மு.கவை தொடங்கியதே அ.தி.மு.கவை மீட்கதான் என்று சூளுரைத்தவர், இன்று தன் கட்சியையே பத்திரமாக வைத்து கொள்ள வைக்கவும், மீட்டெடுக்கவும் தவறி விட்டார். அத்துடன் அவர் கூட்டுச் சேர்ந்த தே.மு.தி.கவும் சுவடு தெரியாமல் காணாமல் போயுள்ளது. ஒரு இடத்தில் கூட வெற்றியை நெருங்க முடியாமல், அளவுக்கு அ.ம.முக திணறி போனது.

தோல்வியுற்றாலும் பாராட்டப்பட வேண்டிய ஆளுமை கமல்

இம்முறை தேர்தலில் கோவை தெற்கு தொகுதி நட்சத்திர அந்தஸ்தை பெற்றது. காரணம் இங்கு போட்டியிட்ட கமல்ஹாசன்தான். அது போல் வானதியும் மயூரா ஜெயக்குமாரும் அவரவர் கட்சிகளின் மூத்த தலைவர்கள்.

கோவை தொகுதியை கமல்ஹாசன் தெரிவு செய்ய இரு முக்கிய காரணங்கள் இருந்தன. ஒன்று தொழில் துறையை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல தொழிற்சாலைகள் நிறையவுள்ள கோவையிலிருந்து எம்.எல்.ஏவாக தெரிவாவது, மற்றொன்று பா.ஜ.கவை எதிர்த்து கமல் போட்டியிட விரும்பியது.

மயூரா ஜெயக்குமார் கடந்த தேர்தலில் இரண்டாவது இடத்தையும் வானதி ஸ்ரீனிவாசன் மூன்றாவது இடத்தையும் பிடித்தார்கள் என தெரிந்தும் அங்கு போட்டியிட்ட கமல்ஹாசனை பாராட்டித்தான் ஆக வேண்டும்.

வாக்கு எண்ணிக்கையின் போது வானதிக்கும் மயூராவிற்கும் சவால் கொடுத்தார் கமல். ஒரு கட்டத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்த கமல்ஹாசன், வானதியுடன் மட்டுமே கடுமையாக போராடினார். இறுதியில் கொஞ்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வானதி வென்றார். கமல் தோற்றாலும் பாராட்ட வேண்டிய விஷயம் உள்ளது.

தனியொரு மனிதனாக நின்று போராடி இத்தனை வாக்குகளை அள்ளியுள்ளார் கமல். அரசியலுக்காக சோரம் போகாத நேர்வழியை அவர் கடைப்பிடித்தார்.

கட்சிகள் ஒவ்வொன்றும் வென்றெடுத்த ஆசனங்கள்

தமிழக சட்டசபைத் தேர்தலில் எந்ததெந்த கட்சிகள் எவ்வளவு ஆசனங்கள் பெற்றன என்று தேர்தல் ஆணையம் விபரங்களை வெளியிட்டுள்ளது.

தி.மு.க கூட்டணி - 159 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதேவேளை தி.மு.க தனியாக 125 இடங்களில் வெற்றி பெற்றது.

காங்கிரஸ் -18, வி.சி.க -4, ம.தி.மு.க (உதயசூரியன் சின்னம்) 4, சி.பி.எம் -2, சி.பி.ஐ 2, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட இதர கட்சிகள் - 4 இடங்களில் வெற்றி, அ.தி.மு.க கூட்டணி -75 இடங்களில் வெற்றி, அ.தி.மு.க -தனியாக 65, பா.ம.க -5, பா.ஜ.க -4, இதர கட்சிகள்1.

மநீம+, நாம் தமிழர், அ.ம.மு.க+ - எங்கும் முன்னிலை, வெற்றி பெறவில்லை. தமிழகத்தில் ஆட்சி அமைக்க 234 இடங்களில் 118 இடங்களில் வெல்ல வேண்டும் என்ற நிலையில் தி.மு.க கூட்டணி 159 இடங்களில் வென்று ஆட்சி அமைக்கிறது.

தமிழகத்தில் தி.மு.க, அ.தி.மு.கவிற்கு அடுத்ததாக நாம் தமிழர் கட்சி பல இடங்களில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. வாக்கு சதவீத ரீதியாக அந்த கட்சி 3வது பெரிய கட்சியாக உள்ளது.     நன்றி தினகரன் 

No comments: