" எங்கட ஆட்களின்ர வரலாறு எல்லாருக்கும் போய்ச் சேரவேணும், நீங்கள் தாராளமாகப் பயன்படுத்துங்கள்”
14 வருடங்களுக்கு முன்னர் வண்ணை தெய்வம் அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையின் முக்கிய பகுதிகளை என் பகிர்வில் மீள் பிரசுரிக்க அனுமதி வேண்டி அழைத்தேன். அப்போது என் முதல் தொலைபேசி அழைப்பிலேயே அவர் பேசிய வார்த்தைகள் தான் அது.
வண்ணை தெய்வம் என்று தமிழ் ஊடகப் பரப்பில் அறியப்பட்ட நாகேந்திரம் தெய்வேந்திரம்
அவர்கள் புலம் பெயர் வாழ்வில் பிரான்ஸ் நாட்டில் தஞ்சம் புகுந்து கொண்டு வாழ்ந்து வந்தவர். எழுத்தாளராக, ஊடகராக இயங்கிய அவரின் தனித்துவம் ஈழத்து வாழ்வியலைத் தன் தலையில் சேமித்து வைத்தோடு அவற்றை எழுதி எழுதிக் குவித்தார் என்றே சொல்ல வேண்டும். அவை பல்வேறு நூல்களாக, பல்வேறு பரிமாணங்களில் வெளிப்பட்டு வந்தன. கலைத்துறையில் மேடை நாடகங்கள், திரைப்படங்களில் கூடத் தன் சீரிய ஆற்றலை வெளிப்படுத்தினார்.
ஈராயிரத்தின் முற்பகுதியில் நான் ஈழத் தாயகத்துக்குச் சென்ற போது பூபாலசிங்கம் புத்தகசாலையில் கண்டெடுத்தது “யாழ்ப்பாணத்து மண் வாசனை” அதுவே “வண்ணை தெய்வம்” என்ற எழுத்தாளரை எனக்கு அறிமுகம் செய்து வைத்த முதல் நூல். ஈழத்து இலக்கிய, அரசியல், கலைத்துறை ஆளுமைகள் பலரைப் பற்றி எழுதிய கட்டுரைகளோடு, பல்வேறு
படைப்பாளிகள் தத்தமது ஊர்களைப் பற்றி எழுதிய மண் வாசனைப் பதிவுகளுமாக ஒரு பல்சுவைக் களஞ்சியமாக அந்த நூல் அமைந்திருந்தது.
தனது முதலாவது கவிதைத் தொகுப்பு “விடிவை நோக்கி” 1992 இல் ரஜினி பதிப்பகத்தால் வெளிவந்தது என்று வண்ணை தெய்வம் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்.
தொடர்ந்து அவரின் படைப்புலகத்தில்,
கலைப்பாதையில் இவர் ( நடிப்பிசைக் காவலர் கிரெகரி தங்கராசாவின் கலைத்துறை வரலாறு) இதைப் பின்னர் இரண்டாம்
பதிப்பாகவும் அன்னார் மறைந்த பின் வெளியிட்டிருக்கிறார், கதாநாயகன் (கலைமாமணி பெஞ்சமின் இமானுவேல் அவர்களின் கலைத்துறை வரலாறு), கலைத்துறையில் இரு மலர்கள், விடிவை நோக்கி (இரண்டாவது கவிதைத் தொகுதி), கொந்தல் மாங்காய் (உருவகக் கதைகள்), பொல்லாத மனிதர்கள் (சிறுகதைத் தொகுப்பு), வானலையில் எங்கள் கவிதைகள் பாகம் 1 & 2 ( பாரிஸ் A.B.C தமிழ் ஒலியில் கவிஞர்கள் சங்கமத்தில் கவிஞர்கள் பாடியவை), எடுத்துக்காட்டாக விளங்கிய நாகேந்திரம் குடும்பம், தாயக தரிசனம் (2 வயதில் புலம் பெயர்ந்து மீண்டும் 20 வருடங்களுக்குப் பின் தாயகம் சென்று திரும்பிய கெளதமன், தெய்சியாவின் தாயக நினைவுகளோடு 18 கட்டுரைகளின் தொகுப்பு)
என்று தொடந்து தனதும், மற்றோரினதும் படைப்புகளை நூலுருவாக்கியவர்.
“நான் என்று சொல்லிக் கொண்டால் அது இலக்கணத்தில் ஒருமைச் சொல்” என்று தன்னடக்கமாகத் தன் தொகுப்புகளை வெளிக்கொணர்ந்தவரின் மிக முக்கியமான தொகுப்பு “காலங்கள் வாழ்த்தும் 300 ஈழத்துக் கலைஞர்கள்”. இவ்வளவு விரிவாகவும், பரவலாகவும் சம காலத்தும், சென்ற நூற்றாண்டினதும் ஈழத்துக் கலையுலகத்தைப் பதிந்து ஒரு நூல் வந்திருக்கிறதா என்ற ஆச்சரியத்தை எழுப்பியது இந்த நூலை விரித்துப் படித்த போது.
நூலகம் இணையத் தளத்தில் வண்ணை தெய்வம் அவர்களது படைப்புகள்
வண்ணை தெய்வம் அவர்கள் வழங்கும் கவிதைக் காணொளி
https://www.youtube.com/watch?
நான் இறவாதிருப்பேன் என்ற தனது கவிதையில் முத்தாய்ப்பாய் அவர் சொன்ன
வார்த்தைகளைத் தான் இங்கே நினைவு கூருதல் பெருந்தும்.
“மண்ணின் வாசங்களை தமிழ் உறவெல்லாம் பரவவிட்ட – இந்த
வண்ணையின் பெயர் இனி இறவாது வாழும்”
ஜனவரி 21 நம்மை விட்டுப் பிரிந்த வண்ணை தெய்வம் அவர்களின் நினைவை ஈழத்து இலக்கியப் பரப்பு என்றும் நினைவில் கொள்ளும்.
1 comment:
அருமையான பதிவு பிரபா
Post a Comment