உலகச் செய்திகள்

நாடு திரும்பிய ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் கைது

அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவிப்பிரமாணம்

பைடன் பணிகளை ஆரம்பித்து 15 உத்தரவுகளில் கையொப்பம்

கொவிட்–19: பிரிட்டனில் உயிரிழப்பு புதிய உச்சம்

முன்னாள் ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிகாரிகள் மீது சீனா தடை

அடுத்த அமெரிக்க அதிபராவார் கமலா ஹாரிஸ் - வெளியான அறிவிப்பு


நாடு திரும்பிய ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் கைது

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சே நேவல்னி, மொஸ்கோ விமான நிலையத்துக்குச் சென்றுசேர்ந்த சில நிமிடங்களில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நஞ்சூட்டப்பட்டதால் சுமார் 5 மாதங்களாக நினைவிழந்த நிலையிலிருந்த அவர், பெர்லின் நகரில் மருத்துவ சிகிச்சை பெற்ற பின்னர் ரஷ்யா திரும்பினார்.

கையாடல் தொடர்பில் நேவல்னிக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்தது. அது தொடர்பான பிணை நிபந்தனைகளை மீறிய குற்றச்சாட்டின்பேரில் அவர் தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக மொஸ்கோ சிறைச்சாலைத் துறை குறிப்பிட்டது.

இரசாயன-ஆயுத நிபுணர்கள் மேற்கொண்ட பரிசோதனைகளில் நேவல்னிக்கு நரம்புகளை பாதிக்கும் நஞ்சு, அவர் அறியாமல் ஊட்டப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது.

தாம் நஞ்சூட்டப்பட்டதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினே காரணம் என நேவல்னி கூறிவருகிறார். இருப்பினும் ரஷ்ய அரசாங்கம் அதை மறுத்துவருகிறது.

அவர் நஞ்சூட்டப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை என அது குறிப்பிட்டது. நேவல்னி கைது செய்யப்பட்டதற்கு உலக அளவில் கண்டனம் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் நேவல்னி உடனடியாக விடுவிக்கப்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளார். அவரை விடுவிக்கும்படி ஐரோப்பிய ஒன்றியமும் அழுத்தம் கொடுத்துள்ளது.

இந்தக் கைது நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் சார்ல்ஸ் மைக்கல் கூறியுள்ளார்.

நேவல்னியை உடனடியாக விடுவிக்கத் தவறினால், ரஷ்யா பல வர்த்தகத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் எனச் சில ஒன்றிய நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள ஜோ பைடனின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரும் ரஷ்யாவின் அதிரடி நடவடிக்கையைச் சாடினார்.

அது மனித உரிமை மீறல் மட்டுமல்ல என்று கூறிய ஜேக் சலிவன், ரஷ்ய மக்களின் குரலைக் கேட்கவிடாமல் செய்யும் முறையற்ற செயல் என்றும் குறிப்பிட்டார்.   நன்றி தினகரன் 





 அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவிப்பிரமாணம்

- முதல் பெண் துணை ஜனாதிபதியானார் கமலா ஹரிஸ்
- வெள்ளை மாளிகைக்கு விடைகொடுத்தார் ட்ரம்ப்
- பதவியேற்பிலும் பங்கேற்கவில்லை

அரசியல் பிளவு, பொருளாதார தேக்கநிலை மற்றும் கொரோனா வைரஸ் பொருந்தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு மத்தியில் ஜோ பைடன் 46ஆவது அமெரிக்க ஜனாதிபதியாக இன்று (20) பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

வொசிங்டன் டி.சியில் பாராளுமன்ற கட்டடத்திற்கு முன்னால் இடம்பெற்ற பதவியேற்று நிகழ்வில் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹரிஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

பதவியில் இருந்து விடைபெறும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் பாராளுமன்றக் கட்டடத்தில் இந்த மாதம் ஆரம்பத்தில் கலகத்தில் ஈடுபட்ட நிலையில் சுமார் 25,000 துருப்புகள் நிலைநிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையிலேயே பதவியேற்று நிகழ்வு இடம்பெற்றது. கடந்த நான்கு ஆண்டுகளாக வெள்ளை மாளிகையில் குடியிருந்த டொனால்ட் ட்ரம்ப், அதனை விட்டு புளோரிடாவில் தமது இல்லத்திற்கு திரும்பினார்.

பைடனின் பதவியேற்பு நிகழ்வில் ட்ரம்ப் பங்கேற்காதது அமெரிக்க வரலாற்றில் 150 ஆண்டுகளில் முதல் முறையாக இருந்தது. இதற்கு முன்னர் கடைசியாக 1869 ஆம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதியாக உலிசஸ் எஸ் கிராண்ட் பதவி ஏற்றபோது அப்போதைய ஜனாதிபதியாக இருந்த அன்ட்ரூ ஜோன்சன் பங்கேற்கவில்லை.

அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதியரசர் ஜோன் ரொபட்ஸ் முன்னிலையிலேயே அமெரிக்க நேரப்படி நேற்று நண்பகலுக்கு சற்று முன்னர் பைடன் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த நிகழ்வு சம்பிரதாயமான அம்சங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. தவிர, ஜனவரி 06 ஆம் திகதி டிரம்ப் ஆதரவாளர்களின் அத்துமீறிய ஆர்ப்பாட்டங்கள் காரணமாக பாதுகாப்பு வழக்கத்தை விடவும் அதிகரிக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் முன்னர் பைடன் துணை ஜனாதிபதியாக பதவி வகித்தபோது ஜனாதிபதியாக இருந்த பராக் ஒபாமா, பில் கிளின்டன் மற்றும் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் ஆகிய மூன்று முன்னாள் ஜனாதிபதிகள் பங்கேற்றிருந்தனர்.

ட்ரம்பின் துணை ஜனாதிபதியான மைக் பென்ஸும் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்றிருந்தார். தலைநகருக்கு வெளியில் இராணுவத் தளம் ஒன்றில் ட்ரம்பின் பிரியாவிடை வைபவத்தை தவிர்த்தே பென்ஸ் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது பைடன் அரை மணி நேர உரை ஒன்றையும் நிகழ்த்தினார். அதில் தேசிய ஐக்கியம் அதிகம் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் முதலாவது பெண் மற்றும் கறுப்பு மற்றும் ஆசிய அமெரிக்கராக ஹாரிஸ் துணை ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டார்.

மறுபுறம் 78 வயதான பைடன் அமெரிக்காவின் மிக வயதான ஜனாதிபதியாகவே பதவியேற்றார்.

முன்னதாக அமெரிக்க நேரப்படி இன்று காலை மெரிலாந்தில் இருக்கும் அன்ட்ரூஸ் கூட்டுப்படை தளத்தில் ட்ரம்ப் பிரியாவிடை வைபவத்தில் பங்கேற்றார். தொடர்ந்து அவர் ஜனாதிபதிக்கு பின்னரான வாழ்வை தொடர்வதாற்காக பாம் பீச்சில் மாரா லேகோ கொல்ப் விடுதிக்கு ஏர்போர்ஸ் ஒன் விமனாத்தில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.

ஜனாதிபதி பதவியின் கடைசி நேரத்தில் ட்ரம்ப் 140க்கும் அதிகமானவர்களுக்கு பொது மன்னிப்பு அளித்தார். இதில் மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளான தமது முன்னாள் ஆலோசகர் ஸ்டீவ் பெனொனும் உள்ளார்.

பிரியாவிடை செய்தி ஒன்றையும் ட்ரம்ப் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டிருந்தார். அதில் நாட்டைப் பாதுகாப்பாகவும் வளமாகவும் வைத்துக்கொள்வதற்கு அடுத்த நிர்வாகத்துக்கு வாழ்த்து தெரிவத்துக்கொண்டார்.

ஆனால், அடுத்த ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜோ பைடனின் பெயரை அவர் தமது உரையில் குறிப்பிடவில்லை.

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பைடன் பெற்ற வெற்றியை முழுமையாக ஏற்றுக்கொள்ள ட்ரம்ப் மறுத்து வருகிறார்.

இந்த மாத ஆரம்பத்தில், அமெரிக்க பாராளுமன்ற கட்டடத்தின் மீது தொடுக்கப்பட்ட வன்முறை தாக்குதலை 'தூண்டியதாக' ட்ரம்ப் மீது ஏற்கனவே பாராளுமன்ற பிரதிநிதிகள் அவையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து செனட் அவையில் விசாரணை நடைபெறும். செனட் அவை விசாரணை நடத்தி, குற்றச்சாட்டை உறுதி செய்யும்பட்சத்தில் அவர் பதவி நீக்கப்பட வாய்ப்பு உள்ளது.

ஆனால், அவர் பதவிக்காலம் அதற்கு முன்பே முடிவுக்கு வருவதால், அவர் மீண்டும் அமெரிக்க அரசு பதவிகளுக்கு போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்படலாம்.

அமெரிக்க வரலாற்றிலேயே தமக்கு எதிராக இரண்டு முறை கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பெற்ற முதல் ஜனாதிபதி ட்ரம்ப் ஆவார்.

எனினும், பிரச்சினைகளை விடுத்து தனது தலைமையிலான நிர்வாகம் சாத்தியமாக்கிய இலக்குகளை மட்டும் தனது வீடியோவில் பட்டியலிட்ட ட்ரம்ப், 'எனது நிர்வாகம் உலக வரலாற்றில் மிகச் சிறந்த பொருளாதாரத்தை கட்டமைத்துள்ளது' என்று கூறினார்.   நன்றி தினகரன் 





பைடன் பணிகளை ஆரம்பித்து 15 உத்தரவுகளில் கையொப்பம்

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்ற விரைவிலேயே பதவியில் இருந்து வெளியேறும் டொனால்ட் ட்ரம்ப் காலத்தின் திட்டங்கள் பலதையும் மாற்றி அமைக்கும் நிர்வாக ஆணைகளில் கையெழுத்திட்டுள்ளார். 

இதன்படி கடந்த புதன்கிழமை ஜனாதிபதியாக முதல் நாளிலேயே பைடன் 15ஆணைகளில் கையெழுத்திட்டார். “நாம் முகம்கொடுக்கும் பிரச்சினைகளை கையாளும்போது வீணடிப்பதற்கு நேரமில்லை” என்று ட்விட்டரில் பைடன் குறிப்பிட்டுள்ளார்.  

இதில் கொரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை அதிகரிப்பதில் அதிகம் அவதானம் செலுத்தப்பட்டது. ட்ரம்ப் நிர்வாகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் குடியேற்ற விவகாரம் தொடர்பான கொள்கைகளை மாற்றியமைப்பதற்கு பைடன் ஆணை பிறப்பித்துள்ளார்.  

அமெரிக்காவின் பாராளுமன்றக் கட்டடத்திற்கு முன் அந்நாட்டின் 46ஆவது ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட பின்னரே பைடன் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் தனது பணியை ஆரம்பித்தார்.  

கொரோனா தொற்று காரணமாக பதவியேற்பு நிகழ்வு வழக்கத்திற்கு மாறானதாக இருந்தது. இதில் மட்டுப்படுத்தப்பட்டவர்களே பங்கேற்றிருந்தனர்.  

பைடனின் வெற்றியை இன்னும் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளாத டொனால் ட்ரம்ப் இந்த பதவி ஏற்பு நிகழ்வை தவிர்த்துக் கொண்டு வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார். நீதியரசர் ஜோன் ரொபர்ட்ஸ் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்ட பின்னர் உரையாற்றிய பைடன், “ஜனநாயகம் மேலோங்கியுள்ளது” என்று குறிப்பிட்டார்.  

ட்ரம்ப் நிர்வாகத்தில் கடந்த ஆண்டுகளில் நீடித்த கொந்தளிப்புக்குப் பின் ஒற்றுமை பற்றியே பைடன் தனது உரையில் பெரிதும் வலியுறுத்தி இருந்தார். தமக்கு எதிராக வாக்களித்தவர்கள் உட்பட தாம் அனைத்து அமெரிக்கர்களுக்குமான ஜனாதிபதியாக இருப்பேன் என்று அவர் வாக்குறுதி அளித்தார்.  

இதன்போது கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்றார். இந்தப் பதவியை ஏற்கும் முதல் பெண் மற்றும் கறுப்பின மற்றும் ஆசிய அமெரிக்கர் என அவர் பதிவானார். 

அமெரிக்க பாராளுமன்றம் அமைந்திருக்கும் கெப்பிட்டல் கட்டடத்தில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் கடந்த ஜனவரி 6ஆம் திகதி அத்துமீறி நுழைந்து கலகத்தில் ஈடுபட்ட நிலையில் பதவி ஏற்பு நிகழ்வை ஒட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.  

இதனைத் தொடர்ந்து ஹாரிஸ் மற்றும் அவரது கணவர் டப் எம்ஹோப் உடன் இணைந்து பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடன் பென்சில்வேனியா ஒழுங்கையில் நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வாழ்த்துகளுடன் வெள்ளை மாளிகைக்கு சென்றனர்.  

பைடனின் ஆணைகள் 

இதனைத் தொடர்ந்தே நிர்வாக ஆணைகளில் பைடன் கையெழுத்திட்டார். “ட்ரம்ப் நிர்வாகத்தின் மோசமான பாதிப்புகளை மாற்றுவது மாத்திரம் அல்ல எமது நாட்டை முன்னெடுத்துச் செல்லும் பணியும் ஆரம்பிக்கப்படுகிறது” என்று இந்த ஆணைகள் தொடர்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.  

அமெரிக்காவில் 400,000க்கும் அதிகமான உயிர்களை காவுகொண்ட கொரோனா பெருந்தொற்றை கையாள்வது தொடர்பில் தீவிரமான நடவடிக்கைகளுக்கும் பைடனின் ஆணைகள் வழிவகுக்கின்றன.  

மத்திய அரசின் அனைத்து இடங்களிலும் முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பேணுவது இதன்மூலம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  

பெருந்தொற்றை கையாள்வது தொடர்பில் புதிய ஒருங்கிணைப்பு அலுவலகம் ஒன்று அமைக்கப்படுவதோடு உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுவதற்கு ட்ரம்ப் நிர்வாகம் மேற்கொண்டு வந்த செயற்பாடுகள் நிறுத்தப்படவுள்ளன.   

உலக சுகாதார அமைப்பில் அமெரிக்கா மீண்டும் இணைவதை ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் வரவேற்றுள்ளார். சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த செயற்பாடு மிகத் தீர்க்கமானதாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.  

காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தமது நிர்வாகம் முன்னுரிமை அளிக்கும் என்றும் பைடன் தெரிவித்தார்.  

கடந்த ஆண்டு ட்ரம்ப் நிர்வாகத்தில் அமெரிக்கா உத்தியோகபூர்வமாக விலகிய 2015பாரிஸ் காலநிலை உடன்படிக்கையில் மீண்டும் இணையும் நடைமுறைகளை ஆரம்பிக்கும் நிர்வாக ஆணையிலும் பைடன் கையெழுத்திட்டார்.  

அமெரிக்காவில் எல்லைச் சுவர் எழுப்புவதற்கு நிதி சேகரிப்பதற்காக ட்ரம்பின் அவசர ஆணை ரத்துச் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று சில முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் மீது ட்ரம்ப் கொண்டுவந்த பயணத் தடையும் நீக்கப்பட்டுள்ளது.    நன்றி தினகரன் 





கொவிட்–19: பிரிட்டனில் உயிரிழப்பு புதிய உச்சம்

பிரிட்டனில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகவும் சாதனை அளவுக்கு தினசரி கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  

கொரோனா தொற்றினால் கடந்த புதன்கிழமை பிரிட்டனில் 1,820பேர் உயிரிழந்துள்ளனர். இது நோய்த் தொற்றினால் அந்நாட்டில் பதிவான அதிகபட்சம் உயிரிழப்பு எண்ணிக்கையாகும். எனினும் ஒரு நாள் இடைவெளியில் இந்த எண்ணிக்கை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

இந்த மாத ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்பட்ட முடக்க நிலை நோய்ப் பரவலை கட்டுப்படுத்துவதில் போதிய தாக்கம் செலுத்தவில்லை என்று விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.  

புதிய நோய்த் தொற்று சம்பவங்களிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த புதனன்று 38,905நோய்த் தொற்று சம்பவங்கள் பிரிட்டனில் பதிவாகியுள்ளன.  

நோய்த் தொற்றின் தீவிரத்தன்மை குறித்து தெரிவித்திருக்கும் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பெரும் எண்ணிக்கையான தொற்றுச் சம்பவங்களால் மோசமான நிலையை எதிர்கொண்டிருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.  

பிரிட்டனில் வேகமாக பரவக்கூடிய கொரோனா தொற்றின் புதிய திரிபு ஒன்று அங்கு நிலைமையை மோசமடையச் செய்துள்ளது.     நன்றி தினகரன் 






முன்னாள் ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிகாரிகள் மீது சீனா தடை

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தைச் சேர்ந்த 28பேர் மீது சீனா தடை விதித்துள்ளது. இதில் அமெரிக்க முன்னாள் இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ மீது தடை விதிக்கப்பட்டுள்ளது.  

அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்று சில மணி நேரங்களிலேயே சீன வெளியுறவு அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  

“சீனாவின் உள்ளக விவகாரங்களில் தலையிட்டு, சீன நலன்களை பாதித்து, சீன மக்கள் மற்றும் சீன–அமெரிக்க உறவுகளை மோசமாக சேதப்படுத்திய முட்டாள்தனமான செயற்பாடுகள் திட்டமிட்டு, முன்னெடுக்கப்பட்டதோடு நிறைவேற்றப்பட்டது” என்று சீன வெளியுறவு அமைச்சு இந்தத் தடை குறித்து தெரிவித்துள்ளது.  

ட்ரம்ப் நிர்வாகத்தின் வர்த்தக ஆலோசகர், தேசிய பாதுகாப்பு ஆலாசகர்கள் மீதும் இதன்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.  

சீனாவின் இந்தத் தடை பலனற்றது மற்றும் இழிவானது என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் தேசிய பாதுகாப்பு சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.  

அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவிக்கு வந்த பின்னர் சீன பொருட்கள் மீது வரி விதித்து வர்த்தகப் போர் ஒன்றைத் தூண்டியது அமெரிக்க மற்றும் சீன உறுவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியது.   நன்றி தினகரன் 





அடுத்த அமெரிக்க அதிபராவார் கமலா ஹாரிஸ் - வெளியான அறிவிப்பு


24/01/2021 கமலா ஹாரிஸ் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடக்கூடும் - அதில் அவர் வெற்றி பெறுவார் என்று தான் நம்புகிறேன் என அவரது தாய்வழி மாமா கோபாலன் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தனது மருமகள் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக பதவியேற்றுள்ள நிலையில், இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்தார். குறித்த செவ்வியில் தொடர்ந்தும் பேசிய அவர்,

நான் பதவியேற்பு விழாவில் இருக்க விரும்பியிருப்பேன். ஆனால் இந்தக் கட்டத்தில் நான் அதைச் செய்ய விரும்பவில்லை.

நான் தடுப்பூசி போடப்பட்ட பின்னரே அமெரிக்காவுக்குச் செல்வேன். கமலாவுடன் மிகவும் நெருக்கமான எனது மகள் ஷரதா பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார்.

நாங்கள் அனைவரும் அவளைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறோம். கமலா தொடர்ந்தும் எங்களுக்கு பெருமை சேர்ப்பார் என்று எனக்கு தெரியும்.

அவளுடைய அம்மாவும் பெருமையாக இருந்திருப்பார். கமலாவுக்கு நான் கூறுவது ஒன்று மட்டுமே, உங்கள் அம்மா உங்களுக்கு கற்பித்ததை செய்யுங்கள் என்றார்.    நன்றி  

No comments: