இலங்கைச் செய்திகள்

விழிக்கும் வரை அழிப்புகள் தொடரும்- எதிர்ப்புகளை வெளிப்படுத்தும் தருணம் இது! 

முல்லை மண்ணில் பாரிய ஆக்கிரமிப்பிற்கான ஆரம்பமே இது!

இடித்தழிக்கப்பட்ட நினைவுதூபி! மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட அடுத்தகட்ட நடவடிக்கை

மரணித்த அனைவரின் குடும்பத்தினருக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது - இலங்கை அரசாங்கத்திற்கு வந்த முக்கிய தகவல்

 'சிலைகள், வேறு நிர்மாணங்கள் அமைக்கப்படமாட்டாது'


விழிக்கும் வரை அழிப்புகள் தொடரும்- எதிர்ப்புகளை வெளிப்படுத்தும் தருணம் இது! 


முல்லைத்தீவு, குருந்தூர் ஐயனார் ஆலய அழிப்புத் தொடர்பாக சர்வதேச இந்து இளைஞர் பேரவை கடுமையான கண்டனம் வெளியிட்டுள்ளது.

இந்து மதத்தின் பெயரால் பல அமைப்புகள் உள்ள போதும் தற்போதைய சூழ்நிலையில் அவை பெயரளவில் மாத்திரமே அமைப்புகளாக உள்ளதாக பேரவையின் தலைவர் சிவஸ்ரீ ஜெ.மயூரக் குருக்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

விழிக்கும் வரை அழிப்புகள் தொடர்ந்த வண்ணமே இருக்கும் எனவும் அனைத்தையும் இழந்த பின்னர் சிந்திப்பதில் பலனில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அண்மைக் காலமாக எமது வழிபாட்டுத் தலங்கள் பலவற்றை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். இதன் தொடர்ச்சியாக பல வருடங்களாக முல்லைத்தீவு மாவட்டம், குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் தமிழ் மக்கள் வழிபட்டு வந்த கிராமிய வழிபாட்டோடு ஒன்றிய ஆதி ஐயனார் ஆலய சூலம் உடைத்து எறியப்பட்டு புத்தர் சிலை கொண்டுவரப்பட்டு பௌத்த வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது அனைத்து தமிழ் மக்கள் மத்தியிலும் மிக வேதனையான செயலாகும்.

தொடர்பே இல்லாத இடங்களில் புதிது புதிதாக இவ்வாறான செயல்களைச் செய்வது திட்டமிட்ட செயலாகவே தோன்றுகின்றது. தற்போது ஏதோ குருந்தாசேவ பௌத்த விகாரையின் சிதைவுகள் உள்ளதாக இராணுவத்தின் ஆதரவோடு தொல்லியல் திணைக்களம் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது.

தற்போது புத்தர்சிலை ஒன்று குருந்தூர்மலைப் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டு அகழ்வாராச்சிப் பணி என்ற பெயரில் ஆரம்பித்துள்ளனர். அகழ்வாராச்சிக்கு புத்தபகவான் வர வேண்டிய தேவை என்ன இருக்கின்றது. ஒட்டு மொத்தமாக தமிழர் வழிபாட்டு நிலங்கள் பறிபோய்க் கொண்டே இருக்கின்றன.

எமது வழிபாட்டுச் சின்னங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இது அனைத்தையும் கண்டும் காணாதது போல் கடந்து செல்கின்றனர். அரசியல்வாதிகளும் ஆன்மீகவாதிகள், ஆன்மீக அமைப்புகளும் பெயரளவிலேயே அமைப்புகளாக இருக்கின்றன. இனமத நலன்களை கருத்தில் கொள்வதாகத் தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர்கள், சர்வமதப் பேரவையில் இருப்பவர்கள் என்று பலர் இருக்கின்றனர். அவர்கள் இன, மத நலன்கள் பற்றி எந்த விதமான நடவடிக்கைகளையும் செய்வதாகத் தெரியவில்லை என்பதே உண்மை.

அந்தப் பதவிகள் தமக்கு கௌரவம் என்று நினைக்கின்றனர். ஆக இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஒன்றிணைந்து இன, மத நலன்களைக் காப்பாற்ற வேண்டுமே தவிர கடந்து போக நினைக்கக் கூடாது. ஏனெனில், நாளை அது பல இடங்களுக்கும் வரலாம் .விழிக்கும் வரை அழிப்புகள் தொடர்ந்த வண்ணமே இருக்கும். அனைத்தையும் இழந்த பின்னர் சிந்திப்பதில் பலனில்லை எனவே, இவ்விடயத்தில் உங்கள் எதிர்ப்புகளை வெளியிட வேண்டிய தேவையுள்ளது என்பதை உணருங்கள் எனவும் வலியுறுத்தியுள்ளார்.   

 நன்றி  









முல்லை மண்ணில் பாரிய ஆக்கிரமிப்பிற்கான ஆரம்பமே இது!

தமிழ்மக்கள் மீது ஆக்கிரமிப்பினை மேற்கொள்வதற்கான ஆரம்பக் கட்டமாகவே குருந்தூர் மலை விடயத்தை பார்ப்பதாக வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், சி.சிவமோகன் தெரிவித்தார்.

இலங்கை தொல்லியல் திணைக்களத்தாலும், பொலிசாரினாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குமுழமுனையில் அமைந்துள்ள தமிழர் வழிபாட்டுப் பிரதேசமான குருந்தூர் மலைக்கு நேற்று நேரடி விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

தெடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

இதுவொரு தமிழர் பிரதேசம். இங்கு எமது மக்கள் ஐயனார் ஆலயத்தை பராமரித்து அதனை வழிபட்டு வந்தனர் என்பது தான் தமிழர் வரலாறு. இனரீதியாக தமிழர்களிற்கெதிராக உயர்மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் ஒன்றிற்கமைவாக பொய்யினை கூறி தொல்லியல் திணைக்களம் ஆராய்ச்சி என்ற போர்வையில் இங்கு வந்துள்ளது.

திட்டமிட்டு தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களத்தினால் தமிழ் மக்கள் மீதான ஆக்கிரமிப்பினை மேற்கொள்வதற்கான ஆரம்பக்கட்டமாகவே நான் இதனைப் பார்க்கிறேன்.

குறித்த செயற்பாட்டின் மூலம் முல்லை மண்ணில் பாரிய ஆக்கிரமிப்பு ஒன்று நடைபெறுகின்றது. இந்த ஆக்கிரமிப்பில் இருந்து நாம் எப்படி பாதுகாப்பாக இருக்கபோகிறோம் என்பது கேள்விக்குறியான ஒன்றாகவே இருக்கிறது.

இந்த மலையின் கரைப்பக்கமாகத் தான் எங்களால் வரமுடிந்துள்ளது. இந்த மலையில் ஏறி என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிப்படைத்தன்மையாக தொல்பொருள் ஆராய்ச்சிகள் எதுவும் நடக்கவில்லை என்பதற்கு இதுவொரு ஆதாரம்.

நான் ஒரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்று கூறியிருந்தும் அவர்கள் என்னை மலைப்பிரதேசத்திற்குள் செல்ல அனுமதிக்கவில்லை. உண்மையாக தொல்பொருள் ஆராய்ச்சிகள் நடைபெற வேண்டுமாகவிருந்தால் யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் உள்வாங்கப்பட்டு இது செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

நன்றி  









இடித்தழிக்கப்பட்ட நினைவுதூபி! மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட அடுத்தகட்ட நடவடிக்கை

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் தூபி கடந்த 8ஆம் திகதி இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டது.

இதனால் மாணவர்கள் மற்றும் தமிழ் சமுகத்தினரினால் கடுமையான எதிர்ப்பு எழுந்த நிலையில் மீண்டும் அதனை அமைப்பதற்காக துணைவேந்தரினால் அடிக்கல் நாட்டப்பட்டிருந்தது.

குறித்த நினைவுதூபியினை விரைவாக அமைத்து முடிப்பதற்காக இன்று மீண்டும் அதற்கான பணிகள் மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இது தொடர்பான காட்சிகள் நேரலையில்,

நன்றி  








மரணித்த அனைவரின் குடும்பத்தினருக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது - இலங்கை அரசாங்கத்திற்கு வந்த முக்கிய தகவல்


21/01/2021 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மத உணர்வுகளை மதிக்கவேண்டுமென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பி டெப்பிளிட்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிப்போரின் சடலங்கள் இலங்கை அரசாங்கத்தினால் தகனம் செய்யப்பட்டு வருகின்றன.

எனினும், மரணித்த முஸ்லிம்களின் சடலங்களை அவர்களின் மத நம்பிக்கைக்கிணங்க அடக்கம் செய்யுமாறு பல்வேறு தரப்புக்களாலும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிலையிலேயே, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மத உணர்வுகளை மதிக்கவேண்டுமென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பி டெப்பிளிட்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸினால் மரணித்த அனைவரினதும் குடும்பத்தினருக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளதென குறிப்பிட்டுள்ள அவர், சர்வதேச சுகாதார வழிகாட்டல்களின்படி மத நம்பிக்கைகளை பின்பற்ற அனுமதிப்பதன் மூலம் உரிமையையும் கௌரவத்தையும் மதிக்கவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை 1955 இல் கைச்சாத்திட்ட சர்வதேச மனித உரிமை பிரகடனம் அனைவரும் கற்பித்தல், பின்பற்றுதல், வழிபடுதல் போன்றவற்றில் தங்கள் மதநம்பிக்கையை பின்பற்றுவதற்கான உரிமையுள்ளதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வைரஸ் தொற்று சர்வதேச சவால்களை உருவாக்கினாலும் இதற்காக இரக்க குணத்தையும் நம்பிக்கைகளை மதிப்பதையும் இழக்கும் நிலையேற்படக்கூடாதெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நன்றி  










'சிலைகள், வேறு நிர்மாணங்கள் அமைக்கப்படமாட்டாது'

- யாழ்ப்பாணம் – நிலாவரைக் கிணற்றுக்கருகில் அகழ்வாராய்ச்சி
- பிரதேச சபை தவிசாளர் தியாராஜா நிரோஷ்

யாழ்ப்பாணம் – நிலாவரைக் கிணற்றுக்கு அருகில் சிலைகளோ அல்லது வேறு நிர்மாணங்களோ உருவாக்கப்பட மாட்டாது.

இது ஒரு சாதாரண தொல்லியல் ஆய்வு. இந்த ஆய்வு தொடர்பாக நாம் அறிக்கை சமர்ப்பிப்போம் என்று தொல்லியல் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் – நிலாவரைக் கிணற்றுக்கு அருகில் நேற்று முன்தினம் (21) அதிகாலை முதல் திடீர் அகழ்வாராய்ச்சி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தொல்லியல் திணைக்களத்தால் திடீரென மேற்கொள்ளப்படும் இந்த ஆய்வு நடவடிக்கைகளால் மக்கள் மத்தியில் குழப்ப நிலைமை ஏற்பட்டது.

தொல்லியல் திணைக்களத்தின் ஆய்வு நடவடிக்கைகள் தொடர்பாக மக்களால் வலி.கிழக்கு பிரதேச சபைக்கு அறிவிக்கப்பட்டது.

முன்னறிவித்தல் ஏதுமின்றி இந்தப் பணியில் தொல்லியல் திணைக்களம் ஈடுபட்டுள்ள நிலையில் சம்பவத்தை அறிந்த வலி.கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபை தவிசாளர் தியாராஜா நிரோஷ் தலைமையிலான குழுவினர், தொல்லியல் திணைக்கள அதிகாரிகளுடன் இது தொடர்பாகக் கலந்துரையாடியுள்ளனர். இதன் போதே தொல்லியல் திணைக்களத்தினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் கூறியதாவது,...

அகழ்வு பணியொன்று நடைபெறுவதாக கிடைத்த தகவலுக்கமைய, சபை நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு, நான் சம்பவ இடத்திற்கு வந்தோன். வரும்போது அங்கு இராணுவத்தினரும் இருந்தனர்.

அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பில் கேள்வி எழுப்பியபோது, ஆராய்ச்சி பணிகளுக்காகவே அகழ்கிறோம் என்று தெரிவித்தனர். ஆனால் எமக்கு சந்தேகம் உள்ளது. தொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கைகள் அனைவரும் அறிந்ததே. அந்தவகையில் ஏதாவது அத்துமீறலை செய்யும் தோக்கில் செயற்படுகின்றனரா தெரியவில்லை. எனவே நான் இப்போதும் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளேன் என்று அவர் தெரிவித்தார்.   நன்றி தினகரன் 

No comments: