அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 50 – தமுக்கு, துடும்பு மற்றும் அரைச்சட்டி – சரவண பிரபு ராமமூர்த்தி


தமுக்கு
: தமுக்கு மண்ணாலான கருவி. சிறிய குழம்பு சட்டியில் ஆட்டுத்தோல் கட்டி செய்யப்படும். தென் தமிழ்நாட்டில் பலா மரத்தைக் குடைந்தும் செய்யப்படும். தற்காலத்தில் இரும்புத் தகர சட்டி தான் பெரும்பாலும். அதிகமாக அறிவிப்பு கருவியாக உள்ளது தமுக்கு. தமுக்கு வீரன் என்கிற நாட்டார் தெய்வம் வட தமிழ்நாட்டில் உண்டு. அவர் கையில் தமுக்கு இருக்கும். அய்யனார், வீரனார் போன்ற காவல் தெய்வங்களின் கோயில் நுழைவாயிலில் தமுக்கை அடித்தபடி வேட்டை நாயுடன் நிற்கும் தமுக்கு வீரனின் உருவச் சிலை இருக்கும். தற்போது இதைக் காவலர்களாக (போலிஸ்)துப்பாக்கியுடன் நிற்பது போல் வடிமைக்கின்றனர்.ஆயிரமே அய்யனாருக்குப் படைச்சாலும் தமுக்கு வீரனுக்கும் முக்கியமாப் படைக்கணும்” என்பது நடுநாட்டு சொல் வழக்கு. இக்கருவி தண்டோரா என்றும் வழங்கும். விருத்தாசலம் அடுத்த கொளஞ்சியப்பர் கோவிலில் நேர்ச்சை செய்யும் பக்தர்கள் தமுக்கு வரி என்று தனியே செலுத்தும் வழக்கம் உள்ளது. பறை, பெரியமேளம் ஆகியவற்றின் துணைக்கருவி தமுக்கு. இறப்புக்கு மறுநாள் பால் ஊற்றும் நிகழ்வில் புதுவை வட்டாரத்தில் தமுக்கு மட்டுமே இசைக்கப்படும். தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் கோடியம்மனின் பச்சைக்காளி பவளக்காளி திருநடன பெருவிழாவில் காளி வேடமிட்டவர் தமுக்கு இசைக்கு ஆடி வருவர்.

 

துடும்பு: துடும்பு மண்ணாலான கருவி. மண்மேளத்தின் துணைக்கருவி.

கழுத்தில் மாட்டியபடி
இசைக்கப்படும். திடுமம், துடும்பு, கிடுமுட்டி எல்லாம் இதுவே. குழம்புச்சட்டி வடிவிலான மண்பாண்டத்தில் ஆட்டுத்தோலைக் கட்டி உருவாக்கப்படுகிறது. மண்மேளம் மற்றும் அரைச்சட்டியின் இசையை ஒன்றிணைக்கும் கருவி இது. மண்மேளத்தோடு இவ்விரு இசைக்கருவிகளும் சேர்த்தே இசைக்கப்படுகிறது.  தொன்மை அடையாளங்களான அரைச்சட்டியும் உருட்டியும் மெல்ல வழக்கொழிந்து விட்டது. எளிதில் உடையும் தன்மையுடைய இவ்விருக்கருவிகளுக்கு ஆதரவு இல்லை. உலோகம்/ஃபைருக்கு பெரும்பாலும் கலைஞர்கள் மாறிவிட்டார்கள்.

 

பாரம்பரியம் மாறாமல் துடும்பு தென் கொங்கு நாட்டு நாட்டார் தெய்வ கோவில்களில் தினமும் இசைக்கப்படும். இதற்கென்று இங்கே இசைக்கும் கோவில் ஊழியர்கள் உள்ளார்கள். திருவிழா நாட்களி


ல் ஆதிதிராவிட இன மக்கள் பூச்சாட்டு எனப்படும் பாடல்களைப் திடுமம் இசைத்து விருத்தாவளி எனப்படும் விருதாவளி பாடல்களைப் பாடுகிறார்கள். வெள்ளக்கோவிலில் உள்ள வீரக்குமாரர் கோவில் மற்றும் பெருவாரியான கொங்கு பகுதி நாட்டார் தெய்வ கோவில்களில் வெண்கல துடும்பு உள்ளது. வெள்ளக்கோவிலில் பழமையான இரண்டு துடும்புகள் உள்ளன. அதில் அதைக் காணிக்கை அளித்தவர்களின் பெயர் பொரிப்பு உள்ளது. அண்ணமார் சாமி கோவில்களில் உள்ள சாம்புகன் சாமி துடும்பு இசைத்துக்கொண்டு நிற்கிறார்.

 

வெள்ளகோவில் வீரக்குமாரர் கோவிலில் பொட்லி போடுதல் என்னும் சடங்கு உள்ளது. இது ஒரு பழந்தமிழர் வழிபாட்டு முறை. நேர்ச்சையாக இக்கோவிலில் வெடி போடுதல் தான் பொட்லி எனப்படும். இதைச் செய்யும் பொழுது கோவில் வாசலில் துடும்பு இசைத்து நேர்ச்சையாளரின் குறை


தீர்க்கப் பாடுவார்கள். கடவுளிடம் குறையைச் சொல்லும் இந்த துடும்பு கலைஞர்களுக்கு சில தனியார் கோவில்களில் உள்ளே செல்லும் அனுமதி இல்லை என்பது சாதி கொடுமைகள் இன்னும் உயிர்ப்புடன் உள்ளதன் சாட்சிகள்.

 

அரைச்சட்டி: அரைச்சட்டி மண்ணாலான கருவி. பெரிய மண் சட்டியில் மாட்டுத்தோல் வார்த்து செய்யப்படுவது.  மண் சட்டி என்று சொல்வதை விட மண்தொட்டி என்று சொல்லும் அளவு பெரிதாக உள்ளது பழைய கருவிகள். தாசா, அரிக்கிச்சட்டி, அழிக்கிச்சட்டி, அரப்புச்சட்டி என பல பெயர்கள் உண்டு. வட மாவட்டங்களில் அரப்புச்சட்டி என்று அழைக்கப்படும். பெரும்பாலும் அழிந்துவிட்டது. மேற்கு தமிழகத்தில் மண்மேளத்தின் இசையை பிசகாமல் வெளிப்படச் செய்வது இதுதான். தோளில் மாட்டிக்கொண்டு நெஞ்சோடு அணைத்து, அரளிக்குச்சியால் அடிக்கிறார்கள். தண்டோரா அறிவிக்கவும்  இக்கருவி பயன்பட்டுள்ளது.

 

தமிழர்களின் வாழ்வோடு இயைந்த இந்த இசைக்கருவிகள் மூன்றும் அழிவின் விளிம்பில் உள்ளன.

 

-சரவண பிரபு ராமமூர்த்தி

 நன்றி:

  1. பல்லடம் திரு க.பொன்னுசாமி அவர்கள்வரலாற்று ஆய்வாளர்பல்லடம்



No comments: