இயற்கை 2
......பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்


தென்றல் -

கோலநிலா தோற்றிடமென் குளிர்ச்சி தேக்கக்   

        குன்றெல்லாம் ஏறியவை உச்சி மோந்து 

ஓலமிடும் நீர்வீழ்ச்சி யுடன்விளை யாடி   

        ஓயாது பாயும் அருவிகளோ டோடி 

ஞாலமிசை வளம்பெருக்கும் ஆறெலாம் நீந்தி    

        நறும்பூங்காமலர்ப்பொய்கை நாற்றம் ஏந்தி 

காலத்தால் நினைவினிலே நிலைத்தெம் நெஞ்சம்   

        கசிந்துருகச் சாமரைதான் வீசிடுமே தென்றல்! 


அந்திகாணும் அருணன் -

செந்தீயின் நாப்போலச்  செக்கர் வானம்   

        சிவப்பேறத் தீப்பிழம்பாய் மேற்கில் நின்று 

"வந்துதிப்பேன் கிழக்கால்நான்" என்று சூரியனும்  

        மறைகின்ற வேளையெங்கும் அந்தோ வானில் 

விந்தையன்றோ விதம்விதமாய் வண்ண மாற்றம்   

        வேடிக்கை காட்டிடுதே மயக்கும் மாலை 

எந்தையீசன் எமக்களித்த எழிற்கோ லத்தை   

        எவ்வண்ணம் இயம்பிடுவேன்! வார்த்தை உளதோ? 


உதய சூரியன்

செங்கதிர்கள் ஒளிகாலக் கிழக்கில் வெய்யோன்  

        சீர்செய்ய வானிலெழஞ் சோதி உருவம் 

பங்கயத்துப் பாரதியைப் பதியாம் பிரம்மா  

        பார்வையெட்டால் பார்த்துமகிழ் தோற்றங் காட்டும்!

வெங்கதிரோ னுச்சிவெயில் வெப்பந் தரவே  

        வியனுலகைப் படைத்தசிவன் வடிவங் கூட்டும்!

மங்கிப்பின் மோதுகடல் மறைகின் றவேளை  

        மால்வண்ணன் முகங்காட்டி மயக்குமே இயற்கை


மழை

வெண்பஞ்சு நிகர்த்த 'பனி  மழை'யுங் கண்டேன்!   

        விளைபயிர்க்குப் பெய் 'பருவ மழை'யுங் கண்டேன்! 

விண்கனத்த கருமேகம் முட்டி மின்னல்   

        வெடிபோல அதிரஇடி  முழக்கத் தோடு 

கண்டொதுங்கப் பெய்யும்அடை மழையுங் கண்டேன்!   

        காற்றோடு பெய்மணிக் 'கல் மழை'யுங் கண்டேன்! 

சண்டைபின் அமைதிபோல் 'தூறல்' கண்டேன்!   

        சதிராடும் இயற்கையவள் சரசம் ஈதோ?. 


No comments: