தூபி இடிப்பிற்கு எதிராக மக்கள் போராட்டம் ஏன் விரிவடையவில்லை? - இதயச்சந்திரன்


 ராஜபக்ஷக்களிடம் அதிகாரம் இருக்கிறது. அதிகாரத்திற்குச் சேவை செய்யும் நிறுவனங்கள் இருக்கிறது. அந்த அரச இயந்திரங்களை இயக்கும் சக்தி அதிபர் கோட்டாபயவிடம் இருக்கிறது.

ஆனால் இப்பாரிய இயந்திரத்தின் அடக்குமுறையை எதிர்கொள்ளும் தமிழ்த் தேசிய அரசியலிடம் என்ன இருக்கிறது?

இதுவே சமகால அரசியலில் பேசுபொருளாகும் விடயம்.

கட்டமைக்கப்பட்ட இனவழிப்பினை நிறைவேற்ற, தொல்லியல் திணைக்களம் முதல் காணித் திணைக்களம் வரையான சகல அரச நிர்வாக இயந்திரங்களையும் சிங்கள தேசம் வைத்திருக்கிறது.

எமது தமிழ்த் தேசத்திடம் தேர்தல் கட்சிகளைத்தவிர வேறு என்ன இருக்கிறது?.

வெகுசன மக்கள் திரள் அரசியலிற்குரிய கட்டமைப்புகள் இருக்கின்றனவா?.

ஒடுக்குமுறையாளர் எம்மீது திணிக்கும் அழுத்தங்களை எதிர்கொள்ள நாடாளுமன்ற மேடை மட்டும் போதுமா? என்கிற கேள்வியும் எழுகிறது.

தூபி தகர்ப்பிற்கு எதிரான தன்னெழுச்சிப் போராட்டம் ஏன் மக்கள் போராட்டமாக விரிவடையவில்லை?.

தாயகத்தில் ஆங்காங்கே நிகழும் பல்வேறுவகைப்பட்ட போராட்டங்கள் ஏன் ஒருங்கிணைக்கப்படவில்லை?.

தமிழ்த் தேசிய அரசியல் தளத்தில் கட்சி மோதல்கள் குறித்து பேசப்படும் அளவிற்கு, பேரினவாதத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஒன்றிணைந்த மக்கள் திரள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்பது பற்றி ஏன் விவாதிக்கப்படுவதில்லை?.

விடுதலை அரசியலிற்குரிய உள்ளார்ந்த பண்புகளை கட்சிகள் புரிந்துகொள்ளவில்லையா?. அல்லது இலக்கினை அடையும் பாதையில் தெளிவில்லையா?.

'எதிரியே நாம் தேர்ந்தெடுக்கும் பாதையைத் தீர்மானிக்கிறான்' என்பது விடுதலைஅரசியலின் நடைமுறைத் தத்துவம்.

நாடாளுமன்றத்திலோ அல்லது அரசியல் யாப்பினைத் தூக்கிப் பிடிக்கும் நீதிமன்றத்திலோ, அரச அடக்குமுறையை எம்மால் எதிர்கொள்ள முடியாவிட்டால் நாம் என்ன செய்வது?.

தீர்வினை எங்கே தேடுவது?.

கட்சிகளுக்கு அப்பாலுள்ள மக்கள் திரள் கட்டமைப்புகளே அதனைச் சாத்தியமாக்கும்என்பதே வரலாற்று உண்மை.

இக்கட்டமைப்புகளை தேச விடுதலைக் கோட்பாட்டில் உறுதியாக நிற்கும் கட்சிகளும் உருவாக்கலாம். ஆனால் அவை வெகுசன அமைப்புகளோடு இணைந்து பொதுத்தளத்தில் செயலாற்ற வேண்டும்.    நன்றி  


No comments: