பொன்விழா ஆண்டில் இந்த படங்கள் 16 - வியட்னாம் வீடு - சுந்தரதாஸ்

 .

தமிழ் திரையுலகில் பலவிதமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து சாதனை புரிந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அந்தவகையில் பிராமணராக வேடமேற்று பிராமண பாஷையில் படம் முழுவதும் பேசி நடித்த வெற்றிப் படம் வியட்நாம் வீடு. சிவாஜியின் சொந்த பட நிறுவனமான சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்தது.

சுந்தரம் என்ற இளைஞர் எழுதி சிவாஜி நாடக மன்றத்தினால் பல தடவைகள் நடிக்கப்பட்ட வியட்நாம் வீடு நாடகத்திற்கு கிடைத்த பெரும் வரவேற்பு சிவாஜியை நாடகத்தை படமாக்க தூண்டியது. நாடகத்தில் ஏற்ற பிரஸ்ட்டீஸ் பத்தமனாதன் பாத்திரத்திலேயே படத்திலும் சிவாஜி நடித்தார். நடித்தார் என்பதைவிட அவ்வேடத்திலேயே வாழ்ந்தார் எனலாம். தனது முகபாவனை, உடல் அசைவு, மொழி என்று எல்லாவற்றிலுமே தன் திறமையை வெளிப்படுத்தியிருந்தார் சிவாஜி. 60 களில் வாழ்ந்த ஒரு பொறுப்பு வாய்ந்த பிராமண அதிகாரி எவ்வாறு நடந்து கொள்வாரோ அதனையே படத்திலும் வெளிப்படுத்தினார்.

கண்டிப்பும் கட்டுப்பாடும் கொண்ட பத்மநாபன் சாவித்திரி தம்பதிக்கு மூன்று வாரிசுகள் மூவரும் தந்தையை பின்பற்றாமல் தான்தோன்றித்தனமாக வாழத் துடிக்கிறார்கள்.இதனால் பல சங்கடங்கள் உருவாகின்றன அவற்றை பத்மநாபன் எவ்வாறு அனுபவிக்கிறார் என்பதே படத்தின் கதை.


இந்தப் படத்திற்கு கதை எழுதி அருமையான வசனங்களையும் எழுதிய சுந்தரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வியட்நாம் வீடு சுந்தரம் என்று அழைக்கப்பட்டார் நாடகத்தில் சாவித்திரியாக நடித்தவர் ஜி சகுந்தலா ஆனால் படத்தில் பத்மினி அவ்வேடத்தை ஏற்று திறமையாக நடித்திருந்தார். சில காட்சிகளில் சிவாஜியும் பத்மினியும் உண்மையான தம்பதிகள் போல் காட்சி அளித்தார்கள். இவர்களின் மகன்களாக நாகேஷும் ஸ்ரீகாந்தும் நடித்தார்கள் மகளாக பத்மாவும் மருமகளாக ரமாபிரபாவும் நடித்து மற்றும் தங்கவேலு ராமதாஸ் வி எல் ராகவன் ஆகியோரும் நடித்தனர் கண்ணதாசனின் உன் கண்ணில் நீர் வழிந்தால் பாடல் டி எம் சௌந்தரராஜன் இன் உருக்கமான குரலில் ரசிகர்களை கரைத்தது. படத்திற்கு இசையமைத்தவர் கே வி மகாதேவன். பி மாதவன் படத்தை டைரக்ட் செய்திருந்தார்

50 ஆண்டுகளுக்கு பின் இன்றைய வாழ்க்கைமுறை குடும்ப அமைப்பு அனைத்தும் மாறிவிட்ட சூழலில் இப்படம் ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை தரக்கூடும்


No comments: