மெல்பன் இராஜரட்ணம் வைத்தியநாதன் வாழ்வும் பணிகளும் செப்டெம்பர் 10 பிறந்த தினம் ! தாயகத்தின் பாதுகாப்புக்காக கடல்வலம் வந்தவர், புகலிடத்தில் கோயிலை வலம்வந்த கதை ! ! முருகபூபதி

அந்தச் சிறுவனுக்கு  கடல் மீது அளவுகடந்த நேசம்.  பிறந்த வீடும் கடலருகே இருந்தமையும் அதற்குக்காரணம்.  கடலில் விரைந்து செல்லும் படகுகளை கண்வெட்டாமல் பார்த்து பரவசமடைவான்.

கடலின் கரையில் இருப்பதோ படகுத்துறையாக பிரபலம்பெற்ற காங்கேசன்துறை. தமிழரசுத் தந்தை எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் தேர்தல் தொகுதி.

      

இலங்கை அரசியலில் கவனத்திற்குள்ளான ஊர். 1972 இல் புதிய அரசியலமைப்பினை எதிர்த்து தந்தை செல்வநாயகம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்து, மீண்டும் மக்களின் ஆணைக்காக தேர்தலில் இறங்கி வெற்றிவாகைசூடிய தொகுதி.

அத்தகைய ஒரு கடலோர நகரத்தில் 1952 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம்  10 ஆம் திகதி  பிறந்த குழந்தையின் விதியை இறைவன் எவ்வாறு எழுதியிருந்தானோ தெரியாது,

ஆனால்,  தனது பாதை இப்படித்தான் இருக்கும், என்று துணிவுடனும் ஆளுமைப்பண்புகளுடனும்  வாழ்ந்து காட்டியிருக்கும்  ஒருவருக்குத்தான் இன்று பிறந்த தினம்.

இலங்கையின் வடபுலத்தில் வாழ்ந்த தமிழ்ப்பெற்றோர் தமது பிள்ளைகள் எதிர்காலத்தில் எவ்வாறு வரவேண்டும் என்பதில் நிறைய கனவுகள் காண்பவர்கள்.   அதனால் கல்வியையே பெரிய மூலதனமாக கருதுபவர்கள்.

 “கோழி மேய்த்தாலும் கோரணமேந்தில் மேய்க்கவேண்டும்  “  என்ற பிரதேச மொழிப்பிரயோகத்தின் சொந்தக்காரர்கள். அதாவது அரச உத்தியோகம் கிடைத்தால்தான் சமூகத்தில் தனி அந்தஸ்து கிடைக்கும் எனக்கருதினார்கள்.  அதனால் பெரும்பாலான ஆண்கள் அரச உத்தியோகங்களுக்காக தென்னிலங்கை வந்து,  மணியோடர் பொருளாதாரத்தை  வடக்கில் அறிமுகப்படுத்தியவர்கள்.

அந்தக்கனவுதான் இந்த கதையின் நாயகனின் பெற்றோருக்கும் இருந்திருக்கும்.

யார் அந்த நாயகன்…?

   

அவர்தான் மெல்பனில் புறநகர் ரொக்பேங்கில்  எழுந்தருளியிருக்கும்  குன்றத்துக்குமரன் ஆலயத்தின் உருவாக்கத்திற்கு பிரதான காரணமாகத்திகழ்ந்தவரான திரு. இராஜரட்ணம் வைத்தியநாதன். இவரை எனக்கு நீண்ட நெடுங்காலமாகவே தெரியும்.

இவரது தந்தையார் இராஜரட்ணம் அவர்கள் எமது நீர்கொழும்பூரில் கடற்றொழில் திணைக்களத்தில் பணியாற்றியவாறு சமூகசேவைகளிலும் ஈடுபட்டவர். அத்துடன் கரப்பந்தாட்ட வீரர்.  எமது நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தின் துணைத்தலைவராகவும் பணியாற்றியவர்.  வைத்தியநாதனின் தாயார் திருமதி கணேஸ்வரி இராஜரட்ணம் எங்கள் ஊர் இந்து மகளிர் மன்றத்தில் அங்கம் வகித்து,  ஆலயத்திருப்பணி, மற்றும் பாடசாலை அபிவிருத்திக்கான சேவைகளிலும் இணைந்திருந்தவர்.

ஐந்து ஆண்மக்களின் பெற்றோர்களான  அவர்களின் மூன்றாவது மகனாக பிறந்திருக்கும் ரஞ்சன் வைத்தியநாதன், வடபுலத்து  பெற்றோரின் வழக்கமான கனவுகளுக்கு அப்பால், தனக்கென கனவொன்றை வரித்துக்கொண்டு  அதனை நனவாக்கியவர்.

சிறு பராயத்தில் காங்கேசன்துறை கடற்கரையில் நின்று இவர் பார்த்து ரசித்த கடற்படைக்கப்பல்களும்,  கடற்படை வீரர்களின் சீருடையும்,  அவர்கள் ஏந்தியிருந்த துப்பாக்கிகளும் மனதை கவர்ந்துவிட்டன.

தானும் ஒருநாள் அவ்வாறு சீருடையணிந்து கப்பலில் பயணித்து கடலை வலம்வரவேண்டும் எனக்கனவு கண்டார்.

   

அச்சிறுவயதிலேயே விளையாட்டிலும் தீவிரம் காண்பித்திருந்த இவர், கணப்பொழுதும் சும்மா இராமல் ஏதாவது செய்துகொண்டிருப்பவர்.  சைக்கிள் எவ்வாறு ஓடுகிறது,  என்பதை ஆராய்வது முதல், அதிலிருக்கும்  உதிரிப்பாகங்களிலிருந்து வேறு ஏதும் செய்யமுடியுமா ?  என ஆராய்ந்து பார்க்கும் தொழில் நுட்பத்தையும் தனது சுய அறிவினால் கண்டறிபவர்.

அவ்வாறு இவர்  சிறிய வயதில் முயன்றதனால்  ஒரு சாதனம்கூட அவரது கைவண்ணத்தில் பிறந்திருக்கிறது.  அது ஒரு துப்பாக்கி. சைக்கிளின்  சில்லுச்சுற்றுவதற்கு பிரதானமாக இருக்கும் சின்னஞ் சிறிய வெள்ளீய குண்டுகளையே தோட்டாக்களாக்கி, வெடிக்கவைத்துப் பார்த்தவர். இளம்கன்று பயமறியாதுதானே!

பின்னாளில் இவரும் பெற்றோருடன் நீர்கொழும்புவாசியானபோதுதான் இவருடனும்  இவருடைய சகோதரர்களுடனும் எனக்கு நட்புறவுதோன்றியது.

இவர் நீர்கொழும்பு புனித மரியாள் மகா வித்தியாலயத்திலும் இவரது தம்பி சிவநாதன் விஜயரத்தினம் மகா வித்தியாலயத்திலும் கற்றனர்.

ரஞ்சன் வைத்தியநாதன் தமது பாடசாலையில் நடந்த கலைவிழாக்களில் மேடையேறிய நாடகங்களிலும் நடித்திருப்பவர்.  இவர் படித்த நீர்கொழும்பு புனித மரியாள் வித்தியாலயத்தில்  இவரது  கல்வி நிறைவுறும் தருணத்தில், அங்கிருந்த தமிழ்ப்பிரிவும்  முடிவுக்கு வந்தது.  அதன்பின்னர்,  அந்த வித்தியாலயம்  முழுமையாக சிங்கள மாணவர்களுக்காக இயங்கியது.  இவர் கல்வி கற்ற தமிழ்ப்பிரிவின் அதிபர் அவர்கள் தமிழ்பேசும் கத்தோலிக்கர். அவருக்கு நடந்த பிரியாவிடை விழாவில் மேடையேறிய   ஒரு நாடகத்தை நானே எழுதி இயக்கியுமிருக்கின்றேன். அதில் ரஞ்சன் பிரதான பாத்திரமேற்று நடித்தார்.

இவ்வாறு நீண்டகாலமாக எம்முடன் நேசமுடன் பழகிவரும் ரஞ்சன் அவர்களது பிறந்த தினத்திற்கு ( செப்டெம்பர் 10 )  இவருக்கு வாழ்த்துக்கூறியவாறு,  இவரது இதர அயராத சேவைகளைப்பற்றி சொல்வதற்கு முன்னர், இவர் இலங்கை கடற்படையில் சேர்ந்த சுவாரசியத்திற்குப்பின்னால்,  முன்னாள் பிரதமர் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவும் இருந்திருக்கிறார் என்பதையும் சொல்லத்தான் வேண்டும்.

1971 ஆம் ஆண்டு  தொடக்கத்தில்  மக்கள் விடுதலை முன்னணியினரின் கிளர்ச்சி தொடங்கியபோது,  கடல் எல்லைகளில்  இந்தியப்பிரதமர் இந்திரா காந்தியின் உத்தரவுடன் இந்திய கடற்படை கண்காணிப்பில் ஈடுபட்டது.

அயல்நாட்டு தோழியை காப்பாற்ற அந்நியநாட்டுத்தலைவி தலையிட்ட  முதல் நிகழ்ச்சி அப்போதுதான்  அரங்கேறியது.

விளையாட்டு வீரரான ரஞ்சன் வைத்தியநாதனும் ஶ்ரீமா அம்மையாரின் நேரடித் தெரிவில் இலங்கை கடற்படையில் இணைந்துகொண்டார்.

அன்று முதல் பல வருடங்கள் இவரது வாழ்வு கடலோடி வாழ்வானது.  அதனால், பல நாடுகளின் கரைகளையும் தொட்டு மீண்டவர்.

இவரது கடல் பயணங்களை  கேட்டறிந்தால்   ஒரு நாவலே எழுதமுடியும்.  இறுதியாக இத்தாலி நாட்டிலிருந்து மீண்ட இவர்,  அங்கே நண்பர்கள் பரிசாக அளித்த கூடாரம் ஒன்றுடன் கதிர்காமத்திற்கு வந்து சேர்ந்துள்ளார்.

இவரது அந்த கதிர்காமம் பயணம் இவரது வாழ்வில்  ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது. அங்கே இவரை எதிர்பாராதவகையில் சந்தித்த ஒரு சித்தர்,   “  நீ… இங்கே இருக்கவேண்டியவன் அல்ல.  இதுவரையில் கடலைச்சுற்றி சுற்றி வந்தாய்.  விரைவில் நீ கடல்கடந்து செல்லப்போகிறாய்.  நீ சென்றடையும் நாட்டில்  நீ இதுவரையில் வாழ்ந்த வாழ்க்கை வேறு ஒரு திசையில் திரும்பிவிடும். அது ஆன்மீகப்பாதையாக இருக்கும்.  கதிர்காமக்கந்தனிடம் வந்திருக்கிறாய்.  நீ செல்லவிருக்கும் நாட்டில் கந்தன் புகழ் பாடும்  ஆன்மீகப்பணியை தொடங்கிவிடுவாய்.  சென்று வா.  நீ மீண்டும் கதிர்காமம் வரும்போது நான் இருப்பேனோ தெரியாது. ஆனால், நீ கடல் கடந்து செல்லப்போவது நிச்சயம்.  உனக்கு கந்தனின் அருள்  என்றும் இருக்கும் “ எனச்சொல்லி ஆசிர்வதித்துள்ளார்.

வாழ்க்கையில்  மேடுபள்ளங்களையும்  நெருக்கடிகளையும் சந்தித்து மீண்டு வருபவர்களுக்கு ஞானம் உதயமாகும் தருணம் விசித்திரமாகவும் அமையும்.

கதிர்காமத்தில் கூடாரம் அடித்து தங்கியிருந்து தரிசனம் செய்தவரின் வாழ்க்கை அங்கிருந்து வேறு ஒரு திசையில் பயணப்பட்டது.

கடற்படையிலிருந்து ஓய்வுபெற்று,   உல்லாசப்பிரயாணிகளின் வழிகாட்டியாகவும், அவர்களுக்கான பிரயாண முகவராகவும் தொழிற்பட்டவருக்கு எதிர்பாராதவகையில் கடல் சூழ்ந்த கண்டமான அவுஸ்திரேலியாவுக்கு  வருவதற்கான விசாவும் கிடைத்து மனைவி மாலினியுடன் வந்து சேர்ந்தார்.

தொழில் நுட்ப அறிவை எந்தவொரு தொழில் நுட்பக்கல்லூரியிலும் பயின்று பெற்றுக்கொள்ளாமலேயே சுயமாக ஆராய்ந்து தேர்ச்சி பெற்றிருக்கும் ரஞ்சன், அந்த அனுபவ அறிவையே  பின்னாளில் ரொக்பேங்  குன்றத்துக்கு குமரன் ஆலயத்தின் நிர்மாணத்திற்கும்  பயன்படுத்திக்கொண்டவர்.

பழுதடைந்த  மோட்டார் வாகனங்ளை திருத்தும் தொழில் நுட்ப அறிவையும் கொண்டிருந்த ரஞ்சன்,  குன்றத்து குமரன் ஆலயத்திற்கென  மோட்டார் வாகனங்களின் உதிரிப்பாகங்களையே வைத்து சப்பரம்,  சிறிய ரதம் முதலானவற்றையும் வடிவமைத்தவர்.

சமூகம் சார்ந்த பணிகளில் அக்கறைகொண்டிருக்கும் இவர் எமது தாயகத்தில்  முதியோர்களுக்காக  ஒரு காப்பகம்  அமைக்கவேண்டும் என்ற எண்ணத்துடனேயே இருப்பவர்.

கிழக்கிலங்கையில் மங்கையற்கரசி இல்லம் என்ற அமைப்பின் ஊடாக நலிவுற்ற பெண்களின் வாழ்வாதாரத்திற்கும் நீண்டகாலமாக உதவி வருபவர்.

1985 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா மெல்பனுக்கு வந்தபின்னர், காலத்தின் தேவைகருதி இவர் முன்னின்று அர்ப்பணிப்புடன் தொடங்கிய குன்றத்துக் குமரன் ஆலயத்தின்   சுற்றுப்பற புற்தரையும்  தூண்களும் சுவர்களும்  சிற்பங்களும் வாய் திறந்து  பேசினால், ரஞ்சன் வைத்தியநாதனின் அளப்பரிய சேவைகளை சொல்லும்.

கடந்த மூன்று தசாப்த காலத்தில் மெல்பனில் அடுத்தடுத்து எழுந்திருக்கும் ஆலயங்கள் ஒவ்வொன்றின்  தோற்றமும் வளர்ச்சியும்   ஏராளமான கதைகளை தன்னகத்தே வைத்துள்ளன.

பக்தர்கள் பெருகப்பெருக ஆலயங்களின் பெருக்கத்தையும் அவதானிக்கமுடியும்.

ரஞ்சன் வைத்தியாநாதன்,  ஆழ்ந்து யோசித்து ஒரு ஆக்கபூர்வமான செயலை முன்னெடுப்பதற்கு தயாரானால், அதிலிருந்து எளிதில் பின்வாங்கமாட்டார்.

குன்றத்து குமரன் ஆலயத்திருப்பணிகளில் அதன் தொடக்கம் முதல் இன்றுவரையில்  இவர் தனது   விசுவாசமான ஈடுபாட்டினை காண்பிப்பவர் என்பதை நன்கறிவேன். 

இந்த ஆலயத்தின்  தோற்றத்திலும் வரலாற்றிலும்  ரஞ்சன் வைத்தியநாதனின் பெயர் தவிர்க்கமுடியாதது.

மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற எண்ணத்துடன் இவர் வாழ்ந்துகொண்டிருப்பதனால்தான், எதிர்காலத்தில் தாயகத்தில்  முதியோர்களுக்கான காப்பகம் உருவாக்கவேண்டும் என்ற கனவையும் நெடுநாட்களாக சுமந்துவருகிறார்.

அவுஸ்திரேலியாவிற்கு வந்த நாள்முதல்,  இங்கே சமூகப்பணிகளில் ஈடுபட்டுவருபர்கள் பற்றி அவ்வப்போது எழுதி வந்துள்ளேன்.  அந்த வரிசையில் இன்றைய தினம் நண்பர் இராஜரட்ணம் வைத்தியநாதன் பற்றியும் பதிவுசெய்வதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது.

இந்த மெல்பன் மாநகரில்  1987 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடுப்பகுதியில் நான்  வந்திறங்கியதும்,  காலடி எடுத்துவைத்த முதல் இடம் நண்பர் வைத்தியநாதன் ரஞ்சனின்  Laverton இல்லம்தான். அன்றுமுதல் கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இவருடன்  நட்புறவை  தொடர்ந்தும் பேணிவருகின்றேன்.

திரு. ரஞ்சன் வைத்தியநாதன் தமது குடும்பத்தினர் சகிதம்  பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றேன்.

---0---

letchumananm@gmail.com

 

 

 

 

 

 



No comments: