தவறின தருணங்கள் (கன்பரா யோகன்)

நிகழ்ந்தவற்றை  நினைத்து வருத்தப்படுவது, இதே போல நிகழாமல் போய்விட்ட தருணங்களையும் எண்ணி வருத்தமடைவதுமுண்டு.

பேசிய வார்த்தைகளையிட்டு வருத்தம் கொள்வதுண்டு அதே வேளை  பேசாமல் விட்டு விட்டு விட்டோமே என்று வருத்தப்படும் வேறு

தருணங்களைப் போலத்தான் இதுவும்.

 

2011 ஜனவரியில் கொழும்பில் எமது விடுமுறையை முடித்து அவுஸ்திரேலியா திரும்பு முன் சந்திக்க வேண்டிய சிலரில் பேராசிரியர் சிவத்தம்பியும் ஒருவர். அப்போது அவர் கொழும்பில் டெகிவலயில் இருந்தார்.

அவரது தொலைபேசி இலக்கத்தை யாழ்ப்பாணம் -  திருநெல்வேலியிலிருந்த குழந்தை சண்முகலிங்கம் மாஸ்டரிடம்  வாங்கிக் கொண்டு கொழும்பு வந்திருந்தேன். அவுஸ்திரேலிய  பயணத்திற்கு  முதல் நாள் காலையில் பேராசிரியர் சிவத்தம்பியுடன் தொடர்பு கொண்டேன்.

 

நான் அவர் மாணவன் அல்ல. அவரை நான் அறிய வேண்டி வந்தது 1985 இல் பல்கலைக்கழக கலாச்சாரக் குழு நாடக  செயற்பாடுகளில்  ஈட்டுபட்டதால்  மட்டுமே.  அதன் பிறகு 1988 இல் அவர் தமிழ் அகதிகள் புனர் வாழ்வுக் கழகத்தில் (T.R.R.O)  தலைவராக கடமையாற்றியபோது அங்கே வேலை செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.  அதன் அலுவலகம் யாழ்ப்பாணத்தில்

4 ம் குறுக்குத் தெருவில் அமைந்திருந்தது. 

 

திரு கே.கந்தசாமி அவர்கள் மறைந்ததை அடுத்து T.R.R.O  தலைவராகவிருந்த  திரு விஸ்வலிங்கம் ஐயா அவர்கள் பணியாற்றிக்கொண்டிந்த காலத்திலிருந்தே  பல்கலைக்கழக மாணவர் மன்றத்தின் சார்பாக இந்த அமைப்புடன் அகதிகள் புனர் வாழ்வு சம்பந்தமான செயற்பாடுகளில் கைகோர்த்து செயற்பட்டு வந்திருந்தோம். 1986 இல் பேராசிரியர் சிவத்தம்பி இதன் தலைவரானார்.

 

1988 இல் IPKF இன் கட்டுப்பாட்டில் வட- கிழக்கு இருந்தபோதே நான் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நிவாரணப் பணிக்காக அமர்த்தப்பட்டேன்.  

இடப் பெயர்வுகளினால்  வாழ்வாதாரங்களை இழந்த பலவிதமானோர் இருந்தனர். அவர்களுக்கு கொடுப்பதற்காக பெரும்பாலும் உலர் உணவுப் பொருட்களை லொறிகளில் ஏற்றிக் கொண்டு மாங்குளம் - ஒட்டுசுட்டான் பாதை வழியே செல்வோம்.

அப்போதெல்லாம் முற்றாக பொருட்களை இறக்கி சோதனை செய்யும்  சில சோதனைச் சாவடிகளை தாண்டி செல்ல வேண்டியேற்பட்டது. இப்படி ஒரு வருடம் அங்கு  வேலை செய்தேன்.  

 

1989 இல் எனக்கு அரசாங்க ஆசிரியர் நியமனம் கிடைத்ததும்    பேராசிரியர் சிவத்தம்பியிடம்  நான் T.R.R.O  வேலையை விட்டுவிட்டு ஆசிரியர் வேலைக்குப் போகப் போவதாக சொன்னேன். உடன் அவர் கதிரையை விட்டு எழுந்து எழுந்து கை குலுக்கி வாழ்த்துச் சொன்னது எனக்கு அப்போது திகைப்பையே தந்தது. வயதில் பல வருடங்கள் மூத்தவர் அவர்.  அவரோ பேராசிரியர். நானோ அப்போது முன்னுபவமேதுமில்லாமல் ஆசிரிய தொழிலுக்குப் போகப்போகும் ஒரு சராசரி இளைஞன். இப்படியிருக்க அவர் ஏன் எழுந்து எனக்கு கை  குலுக்க வேண்டும் என்ற கேள்வி அப்போது  என்னைக் குடைந்து கொண்டிருந்தது . அது ஆங்கிலக் கலாசார மரபு என்பதை என்னால் அப்போது ஊகிக்க முடியவில்லை. வயது வித்தியாசமின்றி கை  குலுக்கி வாழ்த்துச் சொல்வது  என்பது இங்கு அவுஸ்திரேலியா வந்த பின்தான் எனக்குப்  பரிச்சயமானது.

அன்று போனில் பேசியதும் என்னை அவரின் நினைவுக்கு மீள கொண்டு வருவது இலகுவானதாகவிருக்கவில்லை. பிறகு நான் அந்த 1988 ஆம் ஆண்டு  T.R.R.O  புனர் வாழ்வுக் கழகத்தில்  பணியாற்றிய நினைவையும் அவருக்கு   நினைவூட்டிய பிறகு என் உருவம் அவருக்கு மங்கலாக துலங்கியிருக்கக்கூடும்

 

மனித மூளை  என்பது நினைவுகளில் எவற்றை சேமித்து வைத்திருப்பது , எதை அழித்து விடுவது  என்று  ஒரு சர்வாதிகாரி போல தன் பாட்டுக்கு முடிவெடுத்து விடுகிறது. கணினியில் பைல்களை அளிக்கும் போது

'நிச்சயமாக அழிக்கப்போகிறாயா?'   என்பது போல  நாகரீகமாக கேட்டு அது முடிவெடுப்பதில்லை.

 

அதை விட அந்த இரண்டு தசாப்த இடைவெளியில் பேராசிரியர் சிவத்தம்பி சந்தித்த கடந்து சென்ற பல்லாயிரம் பேர் மத்தியில் என் நினைவுகளை மீட்டெடுப்பதென்பது அவ்வளவு  சுலபமானதல்ல.

வழமையான சுக நலன்கள் விசாரிப்பின் பின்,

 

"எப்பிடி சேர் இப்பத்தைய  நிலைமைகள்" ? என்று கேட்டேன்.

 யுத்தம் முடிந்து ஒரு ஒன்றரை வருடங்களே  கடந்திருந்தது. அந்த வடுக்கள், அதிர்ச்சிகளிலிருந்து  தமிழர் விடுபட்டிராத காலம்.

 

" அரசியலை போனிலை பேசாதே நேரிலை வா" என்றார். இந்த வரிகளை அழுத்தமாக அவர் சொன்னது நினைவில் நிற்கிறது.

 

" மாலையில் போன்  பண்ணி விட்டு வருகிறேன்" என்றேன்.

 

அந்த மாலையிலும், இரவிலும் உறவினர் சந்திப்புகள், கடைசி நேர வேலைகள் என்று தலைக்குமேல்  குவிந்தன.  அவருக்கு ஏழு மணிக்கு மேல் போன் பண்ணிமாலை முழுவதும் ஓடித்திரிகிறேன், விடி காலையில் பயணம், மன்னித்துக் கொள்ளுங்கள் இந்த முறை உங்கள் சந்திக்க முடியவில்லை” என்று வருத்தம் தெரிவித்தேன்.

அடுத்த நாட் காலை  அவுஸ்திரேலியப்  பயணம்.

 

இங்கு வந்தபின் அதே 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதமளவில் அவர் காலமான செய்தியைக் கேள்விப்பட்டபோதே செய்யாது தவற விட்டவைகளின் ஒன்று அந்த சந்திப்பு என்பதை உணர்ந்து கொண்டேன்.


No comments: