உலகச் செய்திகள்

பலஸ்தீனர்களுக்கு நியாயமான தீர்வை கேட்டு டிரம்பிடம் சல்மான் வலியுறுத்து

பெலாரஸ் ஆர்ப்பாட்டங்களில் 600க்கும் அதிகமானோர் கைது

உலகெங்கும் விநியோகிப்பதற்கு 8,000 ஜம்போ ஜெட்கள் தேவை

இஸ்ரேல் – ஐ.அ. இராச்சிய உடன்படிக்கை செப். 15இல்

அமைதிக்கான நோபல் பரிசு: டிரம்பின் பெயர் பரிந்துரை

ஈராக்கில் இருந்து 2,200 அமெ. துருப்புகள் வாபஸ்

அரபு லீக்கில் பலஸ்தீனத்தின் கண்டனத் தீர்மானம் தோல்வி

பெலாருஸ் நாட்டின் மற்றொரு எதிர்க்கட்சி தலைவர் கைது

பிரிட்டனில் 6 பேருக்கு மேல் கூட கட்டுப்பாடு

ரொஹிங்கிய படுகொலைகள் தொடர்பில் இரு மியன்மார் படை வீரர்கள் ஒப்புதல்


பலஸ்தீனர்களுக்கு நியாயமான தீர்வை கேட்டு டிரம்பிடம் சல்மான் வலியுறுத்து

பலஸ்தீனர்களுக்கான நியாயமான மற்றும் நிரந்தர தீர்வொன்றை எட்டுவதற்கு சவூதி ஆரேபியா ஆர்வமாக இருப்பதாக அந்நாட்டு மன்னர் சல்மான் பின் அப்துல் அஸிஸ் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் தெரிவித்துள்ளார்.

இரு நாட்டுத் தலைவர்களும் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொலைபேசியில் உரையாடிய போதே இதனைத் தெரிவித்ததாக சவூதி அரச செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவின் அமைதி முயற்சியை பாராட்டி இருக்கும் மன்னர் சல்மான், 2002இல் சவூதியினால் பரிந்துரைக்கப்பட்ட அரபு அமைதி முயற்சியை அடிப்படையாகக் கொண்டு பலஸ்தீனர்களுக்கு நியாயமான மற்றும் நிரந்தர தீர்வொன்றை காண சவூதி அரேபியா விரும்புகிறது என்று தெரிவித்துள்ளார்.

அந்த பரிந்துரையின் கீழ், 1967 மத்திய கிழக்கு போரில் கைப்பற்றிய பகுதிகளில் இருந்து இஸ்ரேல் முழுமையாக வாபஸ் பெற்று பலஸ்தீனத்துடன் தனி நாடு ஒன்றுக்கான உடன்படிக்கைக்கு பகரமாக இஸ்ரேலுடன் அரபு நாடுகள் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதாக நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாத்தின் பிறந்தகமும், இரு புனிதத் தலங்களையும் கொண்டிருக்கும் சவூதி அரேபியா இஸ்ரேலை அங்கீகரிப்பதில்லை.

எனினும் இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு இடையில் இராஜதந்திர உறவு ஏற்பட்டிருக்கும் நிலையில் இஸ்ரேல் விமானங்களுக்கு தமது வான் பகுதியை பயன்படுத்த சவூதி அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் இன்னும் ஒரு மாதத்திற்குள் மற்றொரு அரபு நாடு இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவை ஏற்படுத்தும் என்று டிரம்பின் மருமகனும் வெள்ளை மாளிகை ஆலோசகருமான ஜரட் குஷ்னர் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்தை பின்பற்றுவது குறித்து வேறு எந்த அரபு நாடும் உறுதி அளிக்கவில்லை.   நன்றி தினகரன் 






பெலாரஸ் ஆர்ப்பாட்டங்களில் 600க்கும் அதிகமானோர் கைது

பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகசென்கோவுக்கு எதிராக ஆறு வாரங்களாக தொடர்ச்சியாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தப் பதற்றத்தில் குறைந்தது 633 பேர் கைது செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சு நேற்று தெரிவித்தது.

தலைநகர் மின்ஸ்கில் இராணுவம் மற்றும் நீர்ப் பீச்சியடிக்கும் வாகனங்கள் நிறுத்தப்பட்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கானோர் கடும் பாதுகாப்பை மீறி பேரணி நடத்தினர்.

கடந்த மாதம் இடம்பெற்ற தேர்தலில் லுகசென்கோ மீண்டும் வெற்றியீட்டியது குறித்து தேர்தல் மோசடி குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் அவரை பதவி விலகும்படி ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரி வருகின்றனர்.

இந்த எதிர்ப்பை ஒடுக்க அரசு முயன்று வரும் நிலையில் இது தொடர்பான பதற்ற சூழலில் இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளனர். எதிர்க்கட்சியின் பெரும்புள்ளிகள் பலரும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். கைதாகும் அச்சுறுத்தல் காரணமாக மற்றொரு செயற்பாட்டாளரான ஒல்கா கெவல்கோவா, போலந்தில் தஞ்சமடைந்துள்ளார்.

1994 ஆம் ஆண்டு தொடக்கம் ஆட்சியில் இருக்கும் லுகசென்கோ, மேற்கத்தேய நாடுகள் உள்நாட்டில் தலையிடுவதாக குற்றம்சாட்டி வருகிறார்.  நன்றி தினகரன் 





உலகெங்கும் விநியோகிப்பதற்கு 8,000 ஜம்போ ஜெட்கள் தேவை

கொவிட்–19 தடுப்பு மருந்து:

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை உலகெங்கும் எடுத்துச் செல்வது விமானப் போக்குவரத்தில் பெரும் சவாலாக அமையும் என்று விமானத் துறையினர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மருந்துகளை எடுத்துச் செல்வதற்கு 8,000 பொயிங் 747 விமானங்களுக்கு இணையான அளவு விமானங்கள் தேவைப்படும் என்று சர்வதேச விமானப் போக்குவரத்துச் சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து இன்னும் தயாராகாதபோதும் அதனை எடுத்துச் செல்வது குறித்து விமானசேவைகள், விமான நிலையங்கள், உலக சுகாதார நிறுவனங்கள் மற்றும் மருந்தக நிறுவனங்களுடன் இணைந்து சர்வதேச விமானப் போக்குவரத்துச் சங்கம் ஏற்கனவே பணிகளை ஆரம்பித்துள்ளது.
ஒருவருக்கு ஒரு முறை மாத்திரமே மருந்து வழங்கப்படும் வகையிலேயே விநியோகம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
தடுப்பு மருந்தை எடுத்துச்செல்ல எல்லா ரக விமானங்களும் ஏற்றவை அல்ல. அதற்கு விமானத்தினுள் வெப்பநிலை 2லிருந்து 8 டிகிரி செல்சியஸாக இருக்க வேண்டும்.
தடுப்பு மருந்துக்கான அங்கீகாரம் கிடைத்தவுடன் அவற்றின் விநியோகத்திற்கு இப்போதே திட்டமிடும்படி அரசாங்கங்களுக்கு சர்வதேச விமானப் போக்குவரத்துச் சங்கம் ஆலோசனை கூறியுள்ளது.
“கொவிட்–19 தடுப்பு மருந்துகளை பாதுகாப்பாக எடுத்துச் செல்வது உலக சரக்கு விமானத் துறையில் இந்த நூற்றாண்டின் பெரும் சவாலாக அமையும். எனினும் அவதானம் கொண்ட நவீன திட்டம் இன்றி இது நடக்காது. அதற்கு இதுவே நேரம்” என்று குறித்த சங்கத்தின் தலைமை நிர்வாகி அலெக்சாண்ட்ரே டி ஜூனியக் தெரிவித்துள்ளார்.    நன்றி தினகரன் 





இஸ்ரேல் – ஐ.அ. இராச்சிய உடன்படிக்கை செப். 15இல்

இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு இடையில் இராஜதந்திர உறவை ஏற்படுத்தும் உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வு வரும் செப்டெம்பர் 15 ஆம் திகதி வெள்ளை மாளிகையில் இடம்பெறவுள்ளது.

வளைகுடா நாடு ஒன்றுடன் இஸ்ரேல் இவ்வாறான உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடவிருப்பது இது முதல் முறை என்பதோடு 1979இல் எகிப்து மற்றும் 1994இல் ஜோர்தானுக்கு அடுத்து மூன்றாவது அரபு நாடாகவும் இது உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த வரலாற்று நிகழ்வை நடத்துவார் என்று வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இரு தரப்புகளினதும் சிரேஷ்ட தூதுவர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர். இதில் இஸ்ரேல் தூதுக்குழுவுக்கு பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு தலைமை வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா பின் செயித் அந்நாட்டு தூதுக்குழுவுக்கு தலைமை வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த உடன்படிக்கையின்படி ஆக்கிரமிப்பு மேற்குக் கரையின் பகுதிகளை தமது ஆட்புலத்திற்குள் இணைப்பதை நிறுத்துவதற்கு இஸ்ரேல் உடன்பட்டபோதும் அதன் கால எல்லை குறித்து தெளிவுபடுத்தப்படவில்லை.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இந்த முடிவு முதுகில் குத்தும் செயல் என்று பலஸ்தீனர்கள் கடுமையாக சாடியுள்ளனர்.   நன்றி தினகரன் 






அமைதிக்கான நோபல் பரிசு: டிரம்பின் பெயர் பரிந்துரை

அடுத்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நேர்வேயின் தீவிர வலதுசாரி பாராளுமன்ற உறுப்பினரான கிறிஸ்டியன் டைப்ரிங் ஜெட்டே, டிரம்பின் பெயரை கடந்த புதன்கிழமை பரிந்துரைத்தார். இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு இடையே அண்மையில் ஏற்பட்ட இராஜதந்திர உறவில் டிரம்பின் பங்களிப்புக்காகவே இந்தப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

“டிரம்ப் நாட்டில் எவ்வாறு நடந்துகொள்கிறார், ஊடக சந்திப்புகளில் என்ன கூறுகிறார் என்பது விடயமல்ல. அமைதிக்கான நோபல் பரிசை பெற அவருக்கு நிச்சயமாக வாய்ப்பு உள்ளது” என்று டைப்ரிங் ஜெட்டே ஏ.பீ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

2021ஆம் ஆண்டின் நோபல் பரிசுக்காகவே டிரம்ப் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விருதைப் பெறுவதற்கான பெயர்களை பரிந்துரைக்கும் காலக்கெடு முடிந்திருக்கும் நிலையில் வரும் பெப்ரவரி 1 ஆம் திகதி நோர்வே நோபல் குழுவுக்கு டிரம்ப் தொடர்பான பரிந்துரையை முன்வைக்க முடியும்.

நியாயமாக வழங்குவதென்றால் தமக்கு பல விடயங்களுக்காக நோபல் பரிசு கிடைத்திருக்க வேண்டும் என்று டிரம்ப் கடந்த ஆண்டு குறிப்பிட்டிருந்தார்.   நன்றி தினகரன் 






ஈராக்கில் இருந்து 2,200 அமெ. துருப்புகள் வாபஸ்

ஈராக்கில் இருந்து மூன்றில் ஒரு பகுதிக்கும் அதிகமான அமெரிக்க துருப்புகள் அடுத்த ஒரு சில வாரங்களுக்குள் வாபஸ் பெறப்படும் என்று மத்திய கிழக்கிற்கான முக்கிய தளபதியான ஜெனரல் கென்னத் மக்கன்சி அறிவித்துள்ளார்.

செப்டெம்பர் மாதத்திற்குள் தற்போது நிலைகொண்டிருக்கும் துருப்புகளின் எண்ணிக்கை சுமார் 5,200இல் இருந்து 3000 வரை குறைக்கப்படும் என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

எஞ்சி இருக்கும் வீரர்கள் இஸ்லாமிய அரசு ஜிஹாதிக் குழுவுக்கு எதிராக ஈராக் பாதுகாப்பு படைகளுக்கு ஆலோசனை மற்றும் உதவிகளை தொடர்ந்து வழங்கவுள்ளனர்.

கூடிய விரைவில் ஈராக்கில் இருந்து அனைத்து துருப்புகளையும் வாபஸ் பெற திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த ஜனவரி மாதம் பக்தாதில் ஆளில்லா விமானத் தாக்குதல் மூலம் ஈரான் இராணுவ ஜெனரல் காசிம் சுலைமானி அமெரிக்காவால் கொல்லப்பட்டது தொடக்கம் அமெரிக்க துருப்புகள் ஈராக்கில் நிலைகொள்வதில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.   நன்றி தினகரன் 







அரபு லீக்கில் பலஸ்தீனத்தின் கண்டனத் தீர்மானம் தோல்வி

இஸ்ரேல்–ஐ.அ. இராச்சிய உறவு:

இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு இடையில் இராஜதந்திர உறவை ஏற்படுத்தும் சர்ச்சைக்குரிய உடன்படிக்கையை கண்டிப்பதை அரபு லீக் கைவிட்டுள்ளது.

அரபு லீக் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் வீடியோ கொன்பிரன்ஸ் முறையில் கடந்த புதன்கிழமை இடம்பெற்றது. இதில் பலஸ்தீனம் முன்வைத்த தீர்மானத்தையே அரபு லீக் நாடுகள் தோற்கடித்துள்ளன.

2002 இன் இரு நாட்டு தீர்வைக் கொண்ட அமைதி முயற்சி அடிப்படையில் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன விவகாரத்தில் இறுதித் தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதில் இந்தக் கூட்டத்தில் இணக்கம் ஏற்பட்டதாக பலஸ்தீன இராஜதந்திரி ஒருவரை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

எனினும் சில அரபு நாடுகள் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுக்கு சட்டபூர்வமான தன்மையை கொடுப்பதற்கு முயன்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த நாடுகளின் பெயர்களை அவர் வெளியிடவில்லை. 1967 இல் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் பலஸ்தீன தனி நாடு ஒன்றை உருவாக்கும் உடன்படிக்கை ஒன்று எட்டப்படாத நிலையில் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவை ஏற்படுத்துவதை பெரும்பாலான அரபு நாடுகள் நிராகரித்து வருகின்றன.   நன்றி தினகரன் 







பெலாருஸ் நாட்டின் மற்றொரு எதிர்க்கட்சி தலைவர் கைது

பெலாருஸின் மற்றொரு எதிர்க்கட்சி அரசியல்வாதியான மக்சிம் ஸ்னெக் முகமூடி அணிந்தவர்களால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டில் நீடிக்கும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் எதிர்க்கட்சியினரை ஒடுக்கும் திட்டமிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மற்றொரு எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொலஸ்னிகோவா கைது செய்யப்பட்டு இரண்டு தினங்களிலேயே ஸ்னெக்கும் கைதாகியுள்ளார். இந்த இருவரும் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகசென்கோவை பதவி விலகும்படி கோரும் ஆர்ப்பாட்டங்களில் முன்னின்று செயற்பட்டவர்களாவர்.

கடந்த ஓகஸ்ட் 9ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் லுகசென்கோ வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டபோதும் அதில் மோசடி இடம்பெற்றதாக எதிர்ப்பாளர்கள் கூறி வருகின்றனர். பெலாருஸ் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பில் தொடர்ந்து அந்நாட்டில் இயங்கிவந்தவர்களில் கடைசியானவராகவே ஸ்னெக் இருந்தார். எஞ்சிய அனைவரும் நாட்டை விட்டு தப்பிச்சென்று அல்லது கைது செய்யப்பட்டுள்ளனர். 1994 ஆம் ஆண்டு தொடக்கம் பெலாருஸில் ஆட்சியில் இருக்கும் லுகசென்கோ தமது அரசுக்கு எதிராக மேற்குலக சக்திகள் செயற்படுவதாக கூறி வருகிறார்.   நன்றி தினகரன் 







பிரிட்டனில் 6 பேருக்கு மேல் கூட கட்டுப்பாடு

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த இங்கிலாந்து எங்கும் சமூக ஒன்றுகூடல்கள் தொடர்பில் கடுமையான புதிய முடக்கநிலை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வரும் செப்டெம்பர் 14 தொடக்கம் ஒன்றுகூடல்கள் ஆறு பேருக்கு மேற்படாத வகையில் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதோடு மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். இந்தப் புதிய விதி தொழில் இடங்கள் அல்லது பாடசாலைகளில் அமுல்படுத்தப்பட்டபோதும் திருமணங்கள், இறுதிச் சடங்குகள் மற்றும் சில விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் அண்மைய தினங்களில் வைரஸ் தொற்றாளர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை 2,460 புதிய நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது ஓகஸ்ட் மாதத்தில் நாளுக்கு சுமார் 1,000 புதிய நோய்த்தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

“வைரஸ் பரவலை நிறுத்துவதற்கு நாம் இப்போதே செயற்பட வேண்டும்” என்று ஜோன்சன் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.    நன்றி தினகரன் 






ரொஹிங்கிய படுகொலைகள் தொடர்பில் இரு மியன்மார் படை வீரர்கள் ஒப்புதல்

மியன்மார் இராணுவத்தில் இருந்து வெளியேறிய இரு வீரர்கள், தாம் கண்ணில்பட்ட ரொஹிங்கிய முஸ்லிம்களை சுட்டுக்கொன்றதாகவும் அவர்களின் உடல்களை பாரிய புதைகுழிகளில் புதைத்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இந்த இரு இராணுவ வீரர்களும் வாக்குமூலம் அளிக்கும் வீடியோ இராணுவத்துடன் போரிட்டு வரும் அரகான் படை என்று அழைக்கப்படும் கிளர்ச்சியாளர்களால் கடந்த ஜூலை மாதம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதனை அரச சார்பற்ற அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.

“டவுங் பசார் கிராமத்திற்கு அருகில் இருக்கும் முஸ்லிம் கிராமங்களை நாம் அழித்தோம். கண்ணில்பட்ட காதால் கேட்கின்ற அனைவரையும் சுடும்படி கிடைத்த உத்தரவுக்கு அமைய இரவில் நாம் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டோம். ஒரு புதைகுழியில் 30 உடல்களை நாம் புதைத்தோம்” என்று அந்த வீடியோவில் தோன்றிய ம்யோ வின் டுன் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பல பெண்கள் கற்பழிக்கப்பட்டது தொடர்பிலும் இந்த இராணுவ வீரர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இராணுவத்தின் தமது சக வீரர்கள் பெண்களை கற்பழித்து விட்டு பின்னர் கொன்றதாகவும் தாமும் ஒரு பெண்ணை அவ்வாறு செய்ததாகவும் ம்யோ வின் டுன் குறிப்பிட்டுள்ளார். “நாம் கிராமம் கிராமமாக ஆட்களை கொன்று புதைத்துக்கொண்டு சென்றோம். அது மொத்தம் 60 தொடக்கம் 70 பேர்கள் இருப்பார்கள்” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த இரு வீரர்களும் தற்போது ஹேகில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது. ரொஹிங்கிய விவகாரம் தொடர்பில் அந்த நீதிமன்றில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

2017இல் மியன்மாரில் ரொஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் காரணமாக 740,000க்கும் அதிகமானவர்கள் அண்டை நாடான பங்களாதேஷில் அடைக்கலம் பெற்றனர்.   நன்றி தினகரன் 







No comments: