ஈழத்து எழுத்தாளர் மாவை வரோதயன் நினைவுகள் செப்டெம்பர் 12 பிறந்த தினம் ! “ ஈதல் தமிழுக்கானாய் இன்சொல்லின் இருப்பினாய் எங்கிருந்து சொல்லெடுக்க இயல்பினை நயந்துரைக்க...? “ சுபாஷினி சிகதரன் - மெல்பன்


செப்டெம்பர் 12 ஆம் திகதி மகாகவி பாரதியின் நினவு தினம்.  இதே தினத்தில்தான் எனது நேசத்திற்குரிய உடன்பிறவாச் சகோதரன் ஈழத்து எழுத்தாளர் மாவை வரோதயன் அண்ணாவின் பிறந்த தினமுமாகும்.

அதனால் பாரதியாரின் நினைவு வரும்போதெல்லாம்,  1965 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி பிறந்து, 2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி அற்பாயுளில் மறைந்துபோன மாவைவரதோயன்  அண்ணா அவர்களும் நினைவுக்கு வந்துவிடுவார்.

இன்றைய தினம் நான் எனது முகநூலில் பகிர்ந்துகொண்டதை  வாகர்களிடத்தில் சமர்ப்பிக்கின்றேன்.

    

எனது கைத்தொலைபேசி அழைப்பிற்கு மறுமுனையில் ஒலிவாங்கியின் அதிர்வும், கூட்டத்தின் சலசலப்பும் சேர்ந்து இரைந்தன. இவற்றிற்கு மேலாக, "வந்துடுறன், இப்ப இன்னும் அரை மணித்தியாலத்துக்குள்ள. நீங்கள் வெளியில போகமுதல் வந்துடுவன்" என்ற வரோதயன் அண்ணனின் படபடத்த அவசரக்குரல் ஒலித்தது. பதினைந்து, இருபது நிமிடங்களிலேயே வரோதயன் அண்ணா வீட்டுக் கதவைத் தட்டினார்.

 

அவுஸ்திரேலியா வந்து இரு வருடங்களின் பின் இரண்டாயிரத்து ஆறில் இலங்கை சென்றிருந்த நேரம், வரோதயன் அண்ணாவைத் தொடர்பு கொண்டு நான் வந்திருக்கும் செய்தி சொன்னேன். தமிழ்ச்சங்கத்தில் இலக்கியக்கூட்டம் இருப்பதாகவும், உடனேயே கையோடு என்னை வந்து பார்ப்பதாகவும் கூறினார். கொழும்பு - வெள்ளவத்தை ஹம்டன் ஒழுங்கையில் நாம் வாடகைக்கு இருந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் வீடு கொழும்புத் தமிழ்ச்சங்கத்திற்கு மிக அருகில்தான் அமைந்திருந்தது. நான் தொலைபேசியில் அழைத்து அவசரப்படுத்திய போது வரோதயன் அண்ணா கூட்டத்தின் பிரதான பேச்சாளராகப் பேசிக்கொண்டிருந்தார். தன் பேச்சைச்

சுருக்கமாகவே முடித்துக்கொண்டு மற்றையோரிடம் கூறிவிட்டு அவசரமாக என்னைப் பார்க்க ஓடிவந்து விட்டார்.

"ஐயோ வரோதயன் அண்ணா, நீங்கள் பேசிக்கொண்டிருக்கிறது எனக்குத் தெரியாது".

"அதொண்டும் பிரச்சினையில்ல. நீங்கள் அவசரமா வெளியில போகவேணும் எண்டனிங்கள். இண்டைக்கு விட்டால் இனி ஏலுமோ தெரியாது".

 

அதன் பின்னர் எப்போதுமே நான் அவரைக் காண இயலவில்லை!

 

காலம் சில சந்திப்புக்களை ஏற்படுத்தும் போது வாழ்க்கையின் இறுக்கம் அதன் பயன்பாட்டை அறியவும் அனுபவிக்கவும் செய்துவிடாமல் தடுக்கிறது. வாழ்வின் அல்லற்பாடுகளுக்குள் சிக்கித்தவித்து, பின் வாழவேயில்லை என ஒரு கணத்தில் திடுக்குற்றுத் தவித்துத் திரும்பி நோக்கினால் வாழ்க்கை நிறையத் தூரம் கடந்து விடுகிறது.

 

வரோதயன் அண்ணனின் அறிமுகம் எனக்கு அப்பாவின்  மூலம்தான் கிடைத்து. அவரின் மூத்த குழந்தைக்கு இயன்மருத்துவ உதவி செய்வதற்காக அப்பா அவர் வீடு சென்று வந்து கொண்டிருந்தார். வழமையாக நடப்பது போலவே அப்பாவின் இயல்பினால் வெறும் இயன்மருத்துவம் சம்பந்தப்பட்ட நட்பு என நில்லாமல் நாம் ஓரளவு குடும்ப நண்பர்களாகவும் ஆகிவிட்டிருந்தோம். இதன் பிரகாரம் வரோதயன் அண்ணா சுகாதாரப் பணியாளராக வேலை செய்த வெலிசறை மார்புநோய் வைத்தியசாலையின் பணியாளர் தங்கு விடுதியின் வீட்டிற்கு எம் எல்லோரையும் அழைத்து உபசரித்து, குடும்பத்தினரை அறிமுகம் செய்து, வைத்தியசாலை சுற்றுவட்டாரத்தைச் சுற்றிக்காட்டி, தனது வேலைகள் பற்றி, காச நோய் பற்றி ஆர்வமாக அளவளாவினார்.

 

எனது வாசிப்புப் பழக்கமும், அவ்வப்போது ஏதாவது தோன்றுவதைக் கிறுக்கி வைக்கும் பழக்கமும் இலக்கியவாதியும், எழுத்தாளருமான வரோதயன் அண்ணாவுக்கு அப்பாவினால் தெரிய வந்தது. தவிர, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தீபாவளி நாளொன்றில் நடத்திய தொலைபேசியினூடான ஒரு உடனடிக் கவிதைப் போட்டியில் நான் முதலாவதாகத் தேர்வு செய்யப்பட்டது பற்றிக் கேள்வியுற்றதை அடுத்து, வரோதயன் அண்ணா என்னையும் ஒரு இலக்கியவாதியாக வளர்த்து எடுக்க வேண்டுமெனக் கங்கணம் கட்டிக் கொண்டார்.

 

அந்த நேரத்தில் கொழும்புத் தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினர், தேசிய கலை இலக்கியப் பேரவையின் கொழும்பு மாவட்ட இலக்கியச் செயலாளர் ஆகிய பதவிகளை வகித்து வந்தார். இளமைக் காலத்தில் உதயன், சஞ்சீவி, வீரகேசரி, தினகரன் பத்திரிகைகளிலும், ஈழத்துச் சஞ்சிகைகளிலும் எழுதியுள்ளார். இவருக்கு எழுத்தாளர்கள் வேல் அமுதனும், கோகிலா மகேந்திரனும் வழிகாட்டிகளாக இருந்துள்ளனர். 'மாவை வரோதயன்' எனும் புனை பெயரில் எழுதும் இவர் சத்தியகுமாரன் என்ற இயற்பெயர் கொண்டவர். இவரின் சிறுகதைகள் 'வேப்பமரம்' எனும் தொகுதியாகவும், கவிதைகள் 'இன்னமும் வாழ்வேன்' எனும் தொகுதியாகவும், சிறுவர் பாடல்கள் 'ஒற்றுமையாய் வாழ்வோம்' எனும் தொகுதியாகவும் நூல்களாக வெளிவந்துள்ளன.

 

எழுத்து, நேர் சிந்தனை, அநீதியும் பொய்மையும் கண்டு பொங்கும் குணம் இவற்றைக் கொண்ட வரோதயன் அண்ணா, எந்தவித சமாளிக்கும் குணமும் தெரியாத என்னுடன் மிக இலகுவாகப் பாசத்துடன் ஒட்டிக் கொண்டுவிட்டார். இந்தளவிற்கும் பெரிய மனிதர் தொடர்பும், நீண்ட இலக்கியப் பயணமும் உள்ளவருக்கு வெறுமே வாய் காட்டுகின்ற, இரண்டும் கெட்டானாயிருந்த என்னால் எவ்வித நன்மையும் இல்லை. இருந்தும் எந்தவிதத்திலும் சளைக்காமல் ஒரு மூத்த தமையனின் உரிமையுடனும் அன்புடனும் எப்படியாவது என்னை முழு இலக்கிய வட்டத்தினுள் இழுத்தெடுத்து உயர்த்த வேண்டுமென எப்போதும் அறிவுறுத்தி, ஊக்கப்படுத்திய வண்ணம் இருந்தார்.

 

எனக்குப் பிறவியிலேயே பிடிவாதக் குணம். பின்விளைவு உணர்ந்த பிடிவாதம் அவசியமானது. ஆனால் சில பிடிவாதங்கள் பேதைமையின் வெளிப்பாடு.

 

என்னைக் கலை இலக்கியப் பேரவையில் சேர்ப்பதற்கும், பயிற்சிப் பட்டறைக்கு அனுப்புவதற்கும் வரோதயன் அண்ணா படாத பாடு பட்டார். எனக்கோ கழகங்கள் ஒவ்வொன்றுக்குள்ளும் பொதுவாக நடக்கும் அரசியல்களால் எவற்றிலும் இணையக்கூடாதென்ற தீர்மானம். தனது உதவியுடன் எனக்கு எந்தவித மனத் தொய்வும் ஏற்படாது என வாக்களித்து தன் தகுதியை மீறி என்னை ஆக்கினைப்படுத்தினார். ஆனால் மரமண்டைக் குணம் கொண்ட நான் அவருடன் சேர்ந்து கொள்ளவில்லை. இருபதின் வயதுகளில் அதற்கேற்ற சிந்தனைத்திறன் எனக்கு இருக்கவில்லை. வயதிற்கேற்ற முதிர்ச்சி எப்போதுமே எனக்கு இருந்ததில்லை. என்றும் தீராத வாழ்க்கை - குடும்பப் பிரச்சனைகளில் மனம் உழல்வதும், இதனால் ஏற்படும் நேரமின்மையும் ஒரு காரணம். கடந்து போனவை நினைவில் உறைக்கும் போது எம் கைகளிலும்கூட எதுவும் இல்லை என்பதும் புலப்படுகிறது.

 

இருந்தும் வரோதயன் அண்ணாவின் தூண்டுதலால் கொழும்புத் தமிழ்ச்சங்கக் கூட்டங்களுக்கு அவ்வப்போது சென்று வந்தேன். தமிழ்ச்சங்க நூல் நிலையத்தால் எனக்குக் கொழும்புத் தமிழ்ச்சங்கம் மிகவும் பரிச்சயம். 'வேப்பமரம்' நூலிற்கு நான் எழுதி அனுப்பிய விமர்சனக் கடிதத்தைத் தொடர்ந்து, தமிழ்ச்சங்கத்தில் நூல் நயவுரைக்கு எனது பேச்சைப் பிடிவாதமாக ஒழுங்கு செய்தார். மேடைப் பேச்சு அனுபவமற்ற என்னை மிகவும் ஊக்கப்படுத்தி, நான் பதற்றமுறாமல் இருக்கும் பொருட்டு, ஒரு குழந்தைக்குத் தந்தை போன்று, என் பின்னால் எனக்கு அருகிலேயே நின்று கொண்டார். இப்போது 'வேப்பமரம்' நூலில் நான் குறித்து வைத்தவைகளைப் பார்க்கும் போது எதனையும் நான் ஆழமாகப் பேசவில்லை என்பது தெரிகிறது. ஆனால்,  அன்று தமிழ்சங்கத்திற்கு வந்திருந்த முதியவர்களும், வரோதயன் அண்ணாவும் உற்சாகமளிக்கும் பொருட்டு என்னை மிகவும் பாராட்டினர். அதன் பின்னர் சில்லையூர் செல்வராசன் நினைவு தினத்திற்கு, இலக்கியவாதிகள் சேர்ந்து சில்லையூர் செல்வராசன் கவிதைகள் வாசிக்கும் நிகழ்வு தமிழ்ச்சங்கத்தில் ஒழுங்குபடுத்தப்பட்டது. திருமதி கமலினி செல்வராசனுடன் பேசி என்னையும் ஒரு பங்காளராக வரோதயன் அண்ணா இணைக்க வைத்தார். இவற்றின் பின்னரும் நான் எவற்றிலும் இணைய மறுத்து விட்டேன். அதன்பிறகு நான் பேசியது பல வருடங்கள் கழித்து  மெல்பனில் ஜேகேயின் 'கந்தசாமியும் கலக்சியும்' நூல் நயவுரை கூட்டத்தில்தான்.

 

வெள்ளவத்தை வரும்போது வரோதயன் அண்ணா அவ்வப்போது எமது வீட்டிற்கு வருகை தந்து எம்முடன், முக்கியமாக என்னுடன் மனம்விட்டுக் கதைப்பது வழமை. சொந்தத்தில் காதலித்துத் திருமணம் முடித்தது, அதனால் முரண்பட்ட உறவினர், தனதும் மனைவியினதும் அன்றாட வாழ்க்கையைச் சிரமப்பட்டு நடத்த வேண்டிய கட்டுப்பட்ட ஊதியம், மனைவியின் நீண்டதூர வேலைப் பயணம், எழுத்து, இலக்கியம், எழுத்துலகப் பொய்மைகள், தேசத்தின் சீரழிவு எனப் பலதும் கதைத்து சிறிதளவு மனம் ஆறும் இடமாக எமது வீடு அவருக்குச் சில வேளைகளில் இருந்துள்ளது. முடிவில்லாத பாரங்களைச் சுமந்து கொண்டு, அதற்கு மேலால் கனவு காணும் உணர்வுமிக்க மனிதன் இந்த மாவை வரோதயன்.

 

ஒருமுறை வீட்டில் பேசிக்கொண்டிருக்கும் போது, எனது அம்மா நான் பிறந்தபோது எனக்கு 'விசாலி' எனப் பெயர் சூட்ட நினைத்துப் பின்னர் ஏனோ மாற்றிவிட்ட கதையை ஆதங்கத்துடன் வரோதயன் அண்ணாவிடம் கூறியிருந்தேன். எனக்கு 'விசாலி' என்ற பெயரை வைக்காத கதை பற்றி அம்மாவிடம் நான் சில வேளைகளில் நகைச்சுவையாக விசனப்படுவது அவர் அறிந்திருந்தார். நான் அவுஸ்திரேலியா வரும் முன்னர் எனக்கு அளித்த வாழ்த்துப்பாவில் என்னை தனது மூத்த குழந்தையின் பெயரைக் கொண்டு "ஆரணி மண்ணில் அவதரித்தாள்" எனத் தொடங்கி, பின் வரிகளில் என்னை 'விசாலி' என விளித்து எழுதியிருந்தார்.

 

நான் அவுஸ்திரேலியா வந்த போது 'வைபர்', வட்ஸ் அப்' எனப் பெரிதாக எந்த இலகு தொடர்பாடலும் இருக்கவில்லை. இருந்தும் எப்போதாவது வீட்டிற்குத் தொலைபேசி எடுக்கும் போது, வரோதயன் அண்ணனுடனும் ஒழுங்கு முறை வைத்துக் கதைக்க வேண்டுமெனத் தோன்றியதில்லை. தெரிந்தவர்கள், நெருக்கமானவர் பற்றிய நலன்களை அம்மாவிடம் கேட்டுக்கொள்வதுடன் சரி. இலங்கை சென்ற போது கூட ஒரு முழுநாளை ஏற்பாடு செய்து வரோதயன் அண்ணாவுடன் இருந்து கதைத்திருக்கவில்லை.

 

வரோதயன் அண்ணா மூளைப் பகுதியில் ஏற்பட்ட புற்று நோயால் திடீரெனப் பாதிக்கப்பட்டிருப்பதும், பல நாட்கள் தலைவலி இருந்தும் அவர் சென்று பரிசோதிக்கவில்லை என்பதும், வைத்தியத்திற்காக இந்தியா சென்றிருப்பதும் அப்பா யார் மூலமோ அறிந்து எனக்குத் தெரிவித்தார். அவரையோ, மனைவியையோ தொடர்பு கொள்ளும் எந்த வழிமுறையும் அகப்படவில்லை. பின்னர் இறுதி நாட்களில் அவர் யாழ்ப்பாணத்தில் இருந்தார். எவர் மூலமும் அவர்களுடைய தொடர்பு இலக்கத்தை நேரத்துடன் அப்பாவால் பெற்றுக்கொள்ளவோ, எனது அழுகைக்குப் பதில் சொல்லவோ முடியவில்லை

 

எந்த விரதமும், நாள் கோளும் பார்க்காத நான், ஒரு வெள்ளிக்கிழமை நாள் முழுவதும் சாப்பிடாமல், எந்த அலுவலும் பார்க்காமல், ஏதாவது இறை அதிசயம் நடந்து, வரோதயன் அண்ணா மீள வேண்டுமெனப் பிடிவாதமாக வேண்டியபடியே இருந்தேன். மறுநாள் காலை எனது அம்மா தொலைபேசியில் அழைத்து முதல்நாள் இரவு அவர் காலமாகிவிட்ட செய்தியைக் கூறினார்.

 

இன்று நான் வரோதயன் அண்ணாவை நினைக்காத நாட்கள் மிக அரிது. அவரின் இளம் குடும்பம், அவர்களின் நிலை, அவரின் கனவு இவற்றை நினைக்கும் தோறும் மனதில் வேதனை அழுத்திச் செல்லும். இன்றெல்லாம் அடிக்கடி வாசிப்பு, இலக்கியம், தனிப்பட்ட வாழ்க்கை என யாருடனாவது ஏதாவது பகிர்ந்துகொள்ள வேண்டிய பெரும் உந்துதல் ஏற்படும் போது வரோதயன் அண்ணனின் இல்லாமை மிகப்பெரிய வலியை ஏற்படுத்துகிறது.

 

ஒவ்வொருவரின் மரணமும் அவரின் குடும்பத்தினருக்கு தாளமுடியாத வேதனை. சிலரின் மரணம் அவர்களுடன் தொடர்புபட்ட சிலருக்கு நாட்கள் பல சென்ற பின்னரும் என்றும் எண்ணிப்பார்க்கும், இட்டு நிரப்ப முடியாத பெரும் இழப்பு. வரோதயன் அண்ணாவின் இல்லாமை எனக்கு இவ்வாறே!

 

பதினொரு ஆண்டுகளின் முன் இவ்வுலக வாழ்வை நீத்த மாவை வரோதயன் என்ற சத்தியகுமாரனுக்கு இன்று ஐம்பத்தி ஐந்தாவது பிறந்த தினம்.

 

வரோதயன் அண்ணாவின் நினைவுமலருக்கு நான் எழுதிய வரிகள்:

ஈதல் தமிழுக்கானாய் இன்சொல்லின் இருப்பினாய்

எங்கிருந்து சொல்லெடுக்க இயல்பினை நயந்துரைக்க?

நோதல் சேர்வாழ்வில் நொடிப்பொழுதும் தமிழனாய்

நேர்மை உன்னாயுதத்தால் நிமிர்விலும் தூயவன்!

காதற் குடும்பம்விட்டுக் காததூரம் சென்றதேன்?

கடவுளின் தவறிதுவோ? காலனின் கெடுதியோ?

ஏதும் இல்லாதார்க்கு இறைவா வஞ்சமேன்?

இல்வாழ்வின் சிறகொடிக்க ஏனிந்த அவசரம்?

 

மொழியென்ற ஏரெடுத்தாய் முழுவதும் நிறைபோகம்

முறையற்ற நேசத்தாலுன் முதுகெல்லாம் பாரம்

அழியாத கனவுகளாலுன் உளமெல்லாம் வீரம் 

'இன்னமும் வாழ்வேன்'என்று இறுதியாய் எங்குற்றாய்?

வழிவேறு தேடியின்று வருந்திய கனவுகளை

வாழ்விக்கத் தவிப்புற்று வேறுலகு உற்றனையோ! - எங்கள்

விழிநீரின் மையெடுத்து விளைவித்துப் புதுக்கவிதை

விதிமாற்றக் கட்டளைகள் வினவாயோ இறைவனிடம்?

 

கவிஞ! சொல்லடுக்கின் கருத்தாழத்திற் சத்தியனே!

காசில் செல்வந்த காவு இன்று வந்ததேன்?

செவியே ஏனிருந்தாய்? செய்தியிது கேட்பதற்கா? - தமிழ்ச்

செவிலித்தாய் குழந்தையின்றிச் சங்கமது தவித்ததையோ!

புவியே! உண்மைகளின் புதுமுகங்கள் புனைந்திதயப்

பூக்களில் இவன்வரிகள் பிறப்பியுங்கள் தேனாக - அதனை

அவியென்று அளியுங்கள் ஆன்மாவின் அமைதிக்காய்

அந்தமின்றி வாழ்கின்றான் அண்ணல் இன்னமும்.

---0---

 

 

 

 

 

No comments: