எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் – 08 இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் இலக்கிய இயக்கமும் அதிகாரத்தை முதன்மைப்படுத்தும் அரசியலமைப்பும் இனமுரண்பாடும் முருகபூபதி


   

இலக்கிய , ஊடகப்பிரவேசம் செய்த காலப்பகுதியில்  மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவா அவர்களினால் 1972 பெப்ரவரி மாதம் எனக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டவர்தான் எழுத்தாளர் மு. கனகராசன்.

யாழ்ப்பாணம் மானிப்பாயைச்சேர்ந்தவர். எனினும் நீண்டகாலமாக தென்னிலங்கைவாசி. எமது நீர்கொழும்பூர் இல்லத்தில் குறிப்பிட்ட 1972 ஆம் ஆண்டு பெப்ரவரிமாதம் வெளியான மல்லிகை நீர்கொழும்பு பிரதேச சிறப்பிதழின் வெளியீட்டு அரங்கில்தான் முதல் முதலில் கனகராசனை சந்தித்தேன்.

அன்று முதல் மகரகமை புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனையில்  அவர் மறையும் வரையில்  ஏதோ ஒரு வழியில் அவருடன் தொடர்பிலிருந்தேன்.

  

அந்தமரணப்படுக்கையிலும் அவர் தனது மனைவி அசுந்தாவிடம்,  “ தனக்கு ஏதும் நடந்துவிட்டால், உடனடியாக அறிவிக்கவேண்டிய இருவர் “   என்று ஒரு சிறிய காகிதத்தில் எழுதிக்கொடுத்திருக்கிறார்.

ஒருவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மறைந்த கலைஞர் ஏ. ரகுநாதன். மற்றவர் நான். அந்தச்  சிறிய காகிதத்தை அசுந்தா எனக்கு அனுப்பியிருந்தார்.

இன்று இவர்கள் இருவரும் இல்லையென்றாகிவிட்டது. இந்தத் தொடர் பதிவில் கனகராசனை நான் முக்கிய பாத்திரமாக்குவதற்குக்காரணம்:  அவர்தான் எனக்கு ஈழத்து இலக்கிய உலகத்தின் போக்கினையும் அதன் வளர்ச்சிக்கு வகிபாகமாக விளங்கிய படைப்பாளிகள் பலரையும் முதலில் அறிமுகப்படுத்தியவர்.

   

அவருடைய கையெழுத்து மிகவும் அழகானது. ஒருநாள் அவரிடம்,

" உங்களுடைய கையெழுத்து அழகாக  இருக்கிறது” என்றேன்.  “தலை எழுத்து அப்படி அல்ல” என்றார்.  அவ்வாறு அவர் சொல்லும் போது மந்தகாசமான      புன்னகை உதிர்ந்தது.        பல  எழுத்தாளர்களின் தலை எழுத்து அவர் சொன்னது  போன்று      அழகாக    அமையவில்லை   என்பது        என்னவோ  உண்மைதான். வேறு எந்தத்  தொழிலும் தெரியாமல் எழுத்தை மட்டுமே நம்பிவாழ்வைத்    தொடங்கியவர்களின் வரிசையில்     இடம்    பெற்றவர்  மு.கனகராசன்.

இவர்       பணியாற்றிய   பத்திரிகைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம்.        இலக்கியச் சிற்றேடுகள் சிலவற்றுடனும்      நெருங்கிய        தொடர்பு      கொண்டிருந்தார்.      நான்     அறிந்த வரையில்   மு.க.       என   எம்மால்  அழைக்கப்பட்ட    மு. கனகராசன், சுதந்திரன் - தேசாபிமானி - புதுயுகம் , தினகரன்  முதலான  பத்திரிகைககளிலும்   சோவியத்நாடு இதழிலும் பணியாற்றியவர்.  சிற்பி  சரவணபவனின்  கலைச்செல்வி,              வத்தளை செல்வராஜாவின்      அஞ்சலி   முதலான  இலக்கியச்  சிற்றேடு     களில்  வேலை     செய்திருக்கிறார். மல்லிகை ஜீவாவுக்கும்  மல்லிகை தொடர்பாக      அவ்வப்போது  ஆலோசகராக  இயங்கினார்.  

     

     மரணப்படுக்கையில்      விழுவதற்கு முன்னர் இறுதியாக       தினகரனில்  வாரமஞ்சரியை  கவனித்துக்  கொண்டிருந்தார். கவிதை, சிறுகதை , நாடகம், மொழிபெயர்ப்பு,  இதழியல்  முதலான துறைகளில்       ஈடுபாடு      கொண்டிருந்த  மு.க. ,  சிறிது காலம்    சோவியத் தூதுவராலயத்தின்      தகவல் பிரிவிலும்    வேலை செய்தார்.  எழுத்தாற்றல்   மிக்க  இவரது படைப்புக்கள்  நூலாக வெளிவருவதில்தான்     எத்தனை  தடைகள்,  தடங்கல்கள்              ஏமாற்றங்கள்…?! ‘கெமுனுவின் காதலி’  என்ற  சிறிய நாடக  நூலை அச்சுக்கூடத்திலிருந்து  பெறுவதற்கு முடியாமல் பொருளாதார  நெருக்கடியில்      தவித்தார். ‘முட்கள்’  கவிதை    நூலிற்கு   பேராசிரியர்    க.கைலாசபதி   யின் முன்னுரையைப் பெற்று      அச்சடித்து,    ஒப்புநோக்கப்பட்ட    படிகளை     சுமார்     ஒரு   வருடகாலம்     கொண்டலைந்து இறுதியில்   ஒருவாறு      அச்சிட்டு   வெளியிட்டார்.

‘பகவானின்   பாதங்கள்’  கதைத் தொகுதியும்  நீடித்த  சிரமங்களுக்கு  மத்தியில்  வெளியானது. இந்தத்தொகுப்பு  சற்று வித்தியாசமானது.      இதில் இடம்பெற்ற  ஒவ்வொரு     சிறுகதை பற்றியும்      அதனைப்படித்தவர்கள்     எழுதிய   நயப்புரையையும்   இணைத்து நூலை  தொகுத்திருந்தார்.
    

“சிங்கத்      தமிழர்    நாமென்றால்      சிங்கக்     கொடியும்        நமதன்றோ” என்று  துணிச்சலாக   கவிதையும்   எழுதிய மு.க.1983    இனவாத  வன்செயலின்போது   மனைவியுடன்               தமிழகம் சென்று, அண்ணா நகரில்  சிறிது காலம்  குடியிருந்தார். எப்பொழுதும்     விரக்தியாகச்    சிரிக்கும்     இயல்பினைக்    கொண்டிருந்த  மு.க. , அறிவாலும்   ஆற்றலினாலும்  எங்கோ   உயர்ந்திருக்கவேண்டியவர்.  கரடு  முரடான மேடுபள்ளங்கள்      நிறைந்த  வரட்சியான  வாழ்க்கைப்பாதையை  அவராகத்  தேர்ந்தெடுத்தாரா…?    அல்லது  சூழல்                 அவருக்கு   பூரண   விடுதலையை  கொடுக்கத்தவறியதா...? என்பது  அவிழ்க்க முடியாத  புதிர் முடிச்சு.

மு.க.வின்     அந்திமகாலத்தை  புதுமைப்பித்தனது அந்திமகாலத்துடன் ஒப்பிடலாம்.   மு.க.வுக்கு குழந்தைகள்  இல்லை. மனைவியை    அவரும் -  அவரை  மனைவியும்  பரஸ்பரம்   குழந்தை  போன்று  நேசித்தனர்.

மு.க.  இலக்கியத்தில்  நிறைய சாதித்திருக்கக் கூடிய ஆற்றல்     நிரம்பப் பெற்றவர். ஆனால்,  அந்த   ஆற்றல்  வீண்விரையமானது                  இலக்கியத்திற்கு  நேர்ந்த  இழப்பு. ஈழத்து  இலக்கிய  வளர்ச்சியில்  சிறந்த கதைகள்  குறித்த தேர்வு நடைபெறுமாயின்  நிச்சயம்  மு.க.வின்  கதைகளும்  அதில் இடம்பெறும்.  துன்பியல்  நாடகமாகிப்போன அவரது வாழ்விலிருந்து நாம்  கற்றுக்கொள்ளவேண்டியவையும் இருந்தன. மு.க.வின் கல்லறை  இலங்கை  வவுனியாவில்.  அவரைப்பற்றிய                 நினைவுகள் எனது நெஞ்சறையில்.

கொழும்பில் அவருடன் பல இலக்கியக்கூட்டங்களுக்குச்சென்றதனால்,  பலரும் எனக்கு அறிமுகமானார்கள்.

பொரளை கொட்டாவீதியில் ( இன்றைய கலாநிதி என். எம். பெரேரா வீதி ) அமைந்திருந்த இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்காரியாலயத்திற்கும்,  கொழும்பு – 07 இல் அமைந்த சோவியத்தூதரக தகவல் பிரிவுக்கும் அடிக்கடி சென்று வந்தேன்.

இந்தத் தகவல் பிரிவு அமைந்த இல்லம் முன்னாள் அமைச்சர் ஜோர்ஜ் ராஜபக்‌ஷவுடையது.  மார்டின் விக்கிரமசிங்கா எழுதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் இயக்கிய கம்பெரலிய திரைப்படத்தின் இறுதிக்காட்சிகளில்  இந்த இல்லம் வருகிறது.  கம்பெரலிய -  தமிழில் கிராமப்பிறழ்வு என்ற பெயரில் பேராசிரியர் உவைஸ் அவர்களினால் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு படித்திருக்கின்றேன்.

கொழும்பில் பல   இடதுசாரித்தலைவர்களையும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச்சேர்ந்தவர்களையும்  கனகராசன் எனக்கு அறிமுகப்படுத்தினார்.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் எஸ்.ஏ. விக்கிரமசிங்காவை நேரில் சந்தித்து நான் எழுதிய நேர்காணல் மல்லிகையில் வெளியானது.

மார்டின் விக்கரமசிங்காவின் மகளை தெகிவளையில் சந்தித்து,  அன்னாரின் பதிப்பகத்தின் விளம்பரமும் பெற்று மல்லிகைக்கு கொடுத்தேன். அதற்காக,  இராஜாங்க அமைச்சரின் செயலாளர் சரத் அமுனுகமவையும் சந்தித்துபேசியிருக்கின்றேன். இவர் பின்னாளில் அமைச்சரானவர்.

எத்தனை அரசியல் தலைவர்களை சந்தித்தாலும் எனது தனிப்பட்ட தேவைகளுக்காக அவர்களை நாடவேயில்லை. அரசியல், தொழிற்சங்கத்தலைவர்களின் பின்னால் சென்று அவர்களின் அடிவருடிகளாக மாறிய பல கலைஞர்கள், எழுத்தாளர்களும் அக்காலப்பகுதியில்  எனது நண்பர்களாகவிருந்தனர்.

அவர்களின் பார்வையில்  “ நான் பிழைக்கத் தெரியாதவன்  “

அரசியல்வாதிகள், சினிமா நடிகர்களை முடிந்தவரையில் எட்டத்தில் வைத்துக்கொள்ளவே விரும்பினேன்.  இவர்கள் எங்கும் எப்பொழுதும் நடிப்பவர்கள்.

1983 ஆம் ஆண்டு இனக்கலவரம் வந்தபோது, கனகராசன் மனைவியுடன் தெகிவளையில் வசித்தார். தெய்வாதீனமாக உயிர்தப்பி தமிழகம் சென்று மேற்கு அண்ணாநகரில் குடியிருந்தார்.

அங்கு மீண்டும் 1984 ஏப்ரில் மாதம்  இவரை சந்தித்த கதைகளை இனிவரவிருக்கும் அங்கங்களில் தெரிவிக்கின்றேன்.   அவரது அந்த தமிழக வாழ்க்கைதான் அவரை தமிழ்த்தேசிய அரசியலின் பக்கம் திரும்பவைத்தது.

ஒரு விடுதலை இயக்கத்தின் பிரதிநிதியாக திம்பு பேச்சுவார்த்தையிலும் கலந்துகொண்டார்.

விஜயகுமரணதுங்கவும், சந்திரிக்காவும்  நல்லெண்ண சமாதானத் தூதுவர்களாக இந்திய அரசியல் தலைவர்களை பார்க்கச்சென்று, டெல்லியில் புளட் இயக்கத்தலைவர் உமா மகேஸ்வரனை சந்தித்தபோது இவரும் உடன் இருந்தார். அந்த அபூர்வமான படத்தையும் வாசகர்கள் இந்தப்பதிவில் பார்க்கலாம்.

மு. கனகராசன் என்னையும் இலக்கிய எழுத்திலிருந்து இயக்கரீதியான இலக்கியப்பணிக்கும்  இழுத்துவிட்டார். அவ்வாறு நான் 1973 இல் இணைந்த அமைப்புத்தான் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்.  எமது சங்கம் புதுமை இலக்கியம் என்ற இதழையும் வெளியிட்டது.  அத்துடன் பல  சிறப்பு மலர்களையும் வரவாக்கியது.  இச்சங்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி எனது இலங்கையில் பாரதி நூலில் ஏற்கனவே விரிவாக பதிவுசெய்துள்ளேன்.

சமகாலத்தில்  இலங்கையின் புதிய அரசாங்கம்  மீண்டும் ஒரு குடும்ப ஆதிக்க அரசின் தேவைகருதி புதிய அரசியலமைப்பினை நடைமுறைப்படுத்த முனைந்துள்ளது.

காலத்துக்கு காலம், பதவிக்கு வரும் அரசுகள் தங்கள் நலன்கருதி அரசியல் அமைப்புகளை மாற்றிவந்துள்ளன. 

அண்மையில் எனது நீண்டகால சிங்கள தோழர் ஒருவர் பின்வரும்  பிரசுரத்தை எனது பார்வைக்கும் அனுப்பிவைத்தார். அதில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது.

                                   தயவுசெய்து

20 ஆவது   அரசியலமைப்பிற்கு  (2020 ) ஆதரவளித்து வாக்களிக்க முன்வரும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள்  பெயர்களைத் தெரிவிக்கவும். 

                                     அவர்கள்

17 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கும் (2001 )

18 ஆவது  அரசியலமைப்பு திருத்தத்திற்கும் (2010 )

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கும் (2015 ) ஆதரவளித்து வாக்களித்தவர்கள்தானே…?

                         அவ்வாறெனில் ஏன்…?

 

 

1972 இலும் ஶ்ரீமா அம்மையாரின் தலைமையில் தோன்றிய அரசு புதிய குடியரசு அரசியலமைப்பினை அறிமுகப்படுத்தியது. அதன்பின்னர் ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் தலைமையிலான அரசும் 1978 இல் நிறைவேற்று அதிகாரம்கொண்ட அதிபருக்கான ஆணையை வழங்கும் அரசியலமைப்பினை நடைமுறைப்படுத்தியது.

இனநெருக்கடியும் உக்கிரமடைந்து இனவிடுதலைப்போராட்டம் வெடித்ததும் 1987 இல் இலங்கை -இந்திய ஒப்பந்தம் உருவாகியது.

இவ்வாறு எத்தனை புதிய புதிய அரசியலமைப்புக்கள் வந்தாலும்,  பாதிக்கப்பட்ட மக்கள் என்றும் பாதிக்கப்பட்டவர்கள்தான்.  எந்தவொரு ஒப்பந்தத்தினாலும் மக்களை மட்டுமல்ல  பல தலைவர்களின் உயிரையும்  பாதுகாக்கமுடியாது போய்விட்டது என்பதுதான் உண்மை!

இந்நிலை தொடரும் கதை.

நான் 1973 இல் இணைந்திருந்த இலக்கிய இயக்கமான இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அக்காலப்பகுதியில் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக  12 ஆம்சத்திட்டத்தை முன்வைத்தது.

இதுதொடர்பாக மூத்த எழுத்தாளர் சுபைர் இளங்கீரன் எழுதிய ஈழத்து முற்போக்கு இலக்கியமும் இயக்கமும் நூலில் நீங்கள் படிக்கலாம்.

எமது சங்கம், கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் அடுத்தடுத்து இரண்டு நாட்கள் ( 1975 மே 31 – ஜூன் 01 )  தேசிய ஒருமைப்பாடு மாநாட்டையும் நடத்தியது.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுத்திட்டத்தை முன்வைத்து  அனைத்து தரப்பு அரசியல் தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தையும் நடத்தியது. இந்தப்பேச்சுவார்த்தைகள் 1974 முற்பகுதியிலிருந்து தொடங்கப்பட்டது.

இந்தப்பணியில் பல்வேறு நெருக்கடிகளுக்கும் மத்தியில் செயலூக்கமுடன் இயங்கிய சங்கத்தின் பொதுச்செயலாளர்               ( அமரர் ) பிரேம்ஜி ஞானசுந்தரனை என்னால் என்றைக்குமே மறக்கமுடியாது.

அவருக்கு மும்மொழியிலும் சரளமாகப்பேசமுடியும். அத்துடன் எவருடனும்  இனிமையாகப்  பேசுவார்.   குறிப்பிட்ட மாநாடு தொடர்பாக நாடெங்கும் நாம் பிரசாரக்கூட்டங்கள் நடத்தியபோது,  அதற்கான நீர்கொழும்புக்கிளையையும் நான் உருவாக்கியிருந்தேன்.

பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றுவதற்கு கொழும்பிலிருந்து பேராசிரியர் கைலாசபதி  மலையக எழுத்தாளர் மு. நித்தியானந்தன், சிங்கள எழுத்தாளர் குணசேனவிதான ஆகியோரும் வருகை தந்தனர்.

அதற்கு முதல்நாள் இரவு,  கொழும்பில் இலக்கிய ஆர்வலர் எம். ஏ. கிஸார் அவர்களின் இல்லத்தில் சங்கத்தின் செயற்குழுக்கூட்டம் முடிந்து திரும்பிக்கொண்டிருக்கின்றேன்.

எங்கள் ஊரில்  கூட்டம் நடக்கவிருந்த இந்து இளைஞர் மன்றத்தின் முன்பக்கச்சுவரில் எமது கூட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து பெரிய சுவரொட்டி  காணப்பட்டது.  உள்ளுர் தமிழ்க்கொழுந்துகளின் வேலை என்பது எனக்குத் தெரியும்.  நான் அந்த சுவரொட்டியை கிழித்தெறிந்துவிட்டு வீட்டுக்கு வந்தேன்.

நாளை நடக்கவிருக்கும் கூட்டத்தையும் அந்தக்கொழுந்துகள் குழப்பலாம் என எதிர்பார்த்தேன்.

ஆனால், அவ்வாறு எதுவும் நடக்கவில்லை.  கைலாசபதியும் நித்தியானந்தனும் குணசேனவிதானவும் அடுத்தடுத்து  இ.போ. ச. பஸ்ஸில் வந்து இறங்கினர்.

கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது கைலாஸ் உரையாற்றுகையில் மண்டபத்தின் கூரையை கற்கல் பதம் பார்த்தன.

அப்படியிருந்தும் கைலாஸ் தொடர்ந்துபேசினார்.  மூவினத்தவர்களும் கலந்துகொண்ட கூட்டம்.

அக்கூட்டம் முடிந்து,   கொழும்பிலிருந்து வந்தவர்களை பஸ்நிலையம் வரையில் சென்று வழியனுப்பிவைத்தேன்.

அந்நிகழ்வு முடிந்து  அடுத்த நாள்  வீரகேசரி, தினகரன் பத்திரிகைகளில் தலைப்புச்செய்தியாக யாழ். பல்கலைக்கழக வளாகத்தின் தலைவராக பேராசிரியர் கைலாசபதி நியமனம் என்ற தகவல்  பெரிய எழுத்தில் தலைப்புச்செய்தியாக வந்திருந்தது.

அச்செய்தி அச்சாகும்போது கைலாபதி நீர்கொழும்பில் கல்லெறி ஓசையை கேட்டவாறு பேசிக்கொண்டிருந்தார். 

யாழ்.  பல்கலைக்கழக வளாகத்தையும் தமிழ்த்தீவிர கொழுந்துகள் எதிர்த்தன.  அதனை திறந்து வைக்க வருகை தந்த பிரதமர் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா, இப்பல்கலைக்கழகத்தில் இந்து நாகரீகமும் பிரதான பீடமாக  இருக்கும் என அறிவித்தார். இந்து நாகரீக பீடத்தின் தலைவராக ஶ்ரீ கைலாசநாதக்குருக்கள் நியமனமானார்.

அந்நிகழ்வில் கல்வி அமைச்சர்  பதியுதீன் முகம்மதுவும் கலந்துகொண்டார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தை அன்று எதிர்த்த தமிழ்த்தீவிரவாதக்கொழுந்துகளின் வாரிசுகள் இன்று அங்கே பொங்குதமிழ் – எழுக தமிழ் விழாக்களை நடத்துகின்றன.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி அரங்கில் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழாவும் கோலாகலமாக நடக்கிறது.

எதற்கும்  காலம் பதில்சொல்லும் என்பதற்கு  இத்தகைய காட்சிகள் வரலாற்றுச்சான்றுகள்.

எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கம்  அன்று  45 வருடங்ளுக்கு முன்னர்  1975 மே 31, ஜூன் 01 ஆம் திகதி நடத்திய  மாநாட்டில்  முன்வைத்த அரசியல் தீர்வுத்திட்டத்தில் ஆளும்வர்க்கத்தின்  அதிகார ஆதிக்கத்திற்கு இடமிருக்கவில்லை.

அதனை அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களிடமும் செயலாளர் பிரேம்ஜியும் சங்கத்தின் குழுவினரும் எடுத்துச்சென்று கலந்துரையாடினர்.

ஆகட்டும் பார்க்கலாம் என்ற பதில்தான் கிடைத்தது.

விடாக்கண்டர்களும் கொடாக்கண்டர்களும் அன்றும் இருந்தனர், இன்றும் இருக்கின்றனர்.

இன்னும் ஐந்து வருடங்களில் மற்றும் ஒரு அரசுவந்தால், மற்றும் ஒரு புதிய அரசியல் அமைப்பு வரும். காத்திருங்கள்!

( தொடரும் )

 

 

 

 

 



No comments: