மேற்கின் ஆதிக்கம் – ஒன்றிணைந்த வைத்தியம் - நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர்

 


சில தினங்களுக்கு முன் கேட்ட செய்தி என்னை திடுக்கிட வைத்தது. அந்த செய்தி இதுதான் – 2030-களில் உலகம் பெரிய உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்ளும் என்பதே. மக்களின் மாறிவரும் உணவுப்பழக்கமே இதற்குக் காரணமாகிறது. முக்கியமாக உலகில் அதிக ஜனத்தொகையைக் கொண்ட நாடுகளான இந்தியா, சைனா வாழ் மக்கள் தமது பாரம்பரியமான உணவுப்பழக்கங்களை விடுத்து புதிய வகை உணவுகளை உண்ணப் பழகுகிறார்கள் எனவும் இது ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. அடுத்து McDonalds போன்ற Fast food நிலையங்கள் எதிர்பாராத அளவு வேகமாகப் பரவுவதும் காரணமாகிறது. இத்தகைய மாற்றங்கள் மனித சுகவாழ்வைக் கெடுப்பவை எனவும் கூறப்பட்டது.

  எமது நாடான இலங்கையை நோக்குவோமானால் மூன்று நான்கு தலைமுறைக்கு முன் வாழ்ந்த இலங்கைத் தமிழர் குரக்கன், வரகு, சாமை போன்ற தானியங்களையே உண்டார்கள். இவர்கள் சுகதேகியாகவும் வாழ்ந்தார்கள். அப்படியான உடல் இன்றைய வாழ் எம்மவருக்கு இல்லை எனவும் கூறப்படுகிறது. ஏன் அதே உணவை பிற்பட்டு வந்தவர்கள் உண்ணவில்லை? குரக்கன், சாமை, வரகு போன்ற தானியத்தை எம்மவர் விதையாது அரிசி மட்டுமே சாகுபடி செய்தார்களா? அரிசி விளைச்சல் பெருகி அதை உண்டோமா? இல்லவே இல்லை. அரிசி இறக்குமதியானது. அது மட்டுமல்ல. கோதுமை மாவும் வந்திறங்கியது. அதுவும் சங்க கடைகளில் மலிவு விலைக்கு விற்பனையாகியது. இந்த கோதுமை மா வெள்ளை வெளேரென இருக்கும் காரணம்தான் என்ன? கோதுமை தானியத்தை அரைத்தால் அது பழுப்பு நிற மாவாகும். ஆனால் எமக்கு வந்ததோ வெள்ளை மா. காரணம் என்ன? கோதுமை தானியத்தில் இருக்கும் தோல் நீக்கப்பட்டு அது கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்தப்படும். அதாவது கோதுமையின் போஷாக்கு உள்ள பகுதி கால்நடைக்குப் போக மீதமுள்ள போஷாக்கற்ற பகுதியே வெள்ளை மாவாக எமக்கு ஏற்றுமதியானது. இந்த மாவின் பிறிதொரு பெயர் அமெரிக்கன் மா. நமது இலங்கை தேசம் மாவை விலை கொடுத்து வாங்கியது அமெரிக்காவிடம் இருந்து. அமெரிக்காவில் அதிகப்படியாக விளையும் கோதுமையால் உலக சந்தையில் விலை சரியாமல் இருப்பதற்காக கோதுமையை கடலில் கொட்டுவார்கள். இப்படிக் கொட்டுவதையே மலிவு விலையில் எம் போன்ற மூன்றாவது மண்டல நாடுகட்கு விற்று வந்தார்கள். வெள்ளை அரிசியையும் அமெரிக்கன் மாவையும் உண்டு உடல் பலமற்ற ஒரு சமுதாயம் உருவானது.

 

  எங்கும் காணாத ஒரு மாறுதலை இலங்கை மகாவலி கங்கையில் காணலாம். உலகின் எந்தப் பகுதியிலும் ஆறு தெளிந்த நீராகவே ஓடும், ஆனால் இலங்கையின் பெருநதியான மகாவலி கங்கை மண்ணை அரித்துக்கொண்டு மண் நிறமாக ஓடும். இதற்குக் காரணம் இலங்கையின் மலைகளில் இருந்த காடுகள் அழிக்கப்பட்டு தேயிலைத் தோட்டங்கள் அமைக்கப்பட்டமையே ஆகும். மண்ணைக் கவ்விப் பிடித்தப் பெரிய காட்டுமரங்கள் மலைகளில் அழிக்கப்பட்டுவிட்டன. அதனால் மண் அரிப்பு ஏற்பட்டு ஆற்று நீருடன் போகிறது. அவ்வாறு போகும் ஆற்றுநீருடன் நில வளமும் அரித்துப் போகிறது. நாட்டை ஆள வந்தவர் நாட்டை வளப்படுத்த வந்தார்களா அல்லது சூறையாட வந்தவர்களா?

  பிரித்தானியருக்கு பணத்தைப் பெற்றுக் கொடுத்தது எம் நாட்டில் விளைந்த தேயிலை. தேயிலைத் தோட்டங்களில் பெற்ற உயர் ரக தேயிலைத் தூள் உயர்ந்த விலையில் மேல் நாடுகட்கு ஏற்றுமதியானது. தரம் குறைந்த தேயிலையை உள்நாட்டில் விற்பதற்கு Tea Propaganda Board நிறுவப்பட்டது. பழைய சோற்று நீரில் வெங்காயத்தை மசித்துப் போட்டு அருந்திய சமுதாயத்திற்கு சுடச்சுட தகரத்தில் அடைத்த பால் ஊற்றி சீனியும் கலந்து சொட்டச் சொட்ட ருசியான தேநீர் இலவசமாக வழங்கப்பட்டது. கிராமம் கிராமமாக வீட்டுக்கு வீடு போய் காலையில் தேநீர் வழங்கி மக்களிடம் தேநீர் பழக்கத்தை ஏற்படுத்தி விட்டனர். அதனால் காலையில் தேநீர் அருந்தாமல் இருக்க முடியவில்லை. தேயிலை வியாபாரம் பெருகியது. தேநீருக்கு சேர்க்கும் சீனியும் வெளிநாட்டில் இருந்தே வந்திறங்கியது. ஒட்டு மொத்தமாக எமக்கு பொருட்களை விற்பதால் வெளிநாட்டவர் சந்தோஷமாக வாழ்ந்தனர். நாமோ எமது பாரம்பரிய ஊட்டம் மிகுந்த உணவை மறந்து இறக்குமதியாகும் வெள்ளை அரிசி, அமெரிக்கன் மா, சீனி எல்லாவற்றையும் உண்டு உடல் வலுவற்ற நோஞ்சான் சமுதாயமாக உருவாகினோம். நீரிழிவு நோய், இருதய நோய் எமதானது. இந்த நோயையும் தீர்க்கிறோம் என மருந்து விற்க அவனே வந்துவிட்டான். இன்றையக் காலத்தில் நாட்டை சூறையாட நாட்டைப் பிடித்து ஆளவேண்டியதில்லை. உங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றி உங்கள் சிந்தனையை திசைதிருப்பினால் போதும், இதற்கு நமது நாடே எடுத்துக்காட்டு.

  மருந்து தயாரிக்கும் ஸ்தாபனங்கள் மிக பெரும் பணத்தை ஈட்டும் நிறுவனங்கள். இவை எமக்கும் மருந்துகளை ஏற்றுமதி செய்கின்றன. மேற்கத்திய வைத்தியத்தைக் கற்ற வைத்தியர்கள் இந்த மருந்துகளை மட்டுமே அறிந்தவர்கள். எம்போன்ற மூன்றாவது மண்டல நாடுகளில் தாராளமாக விலைப்படுகிறது. இவ்வாறு கூறுவதால் நான் மேற்கத்திய வைத்தியமான Allopathy வைத்தியத்தைக் குறை கூறவில்லை. அதன் முக்கியத்தை நாம் யாவரும் உணர்வோம். அதே சமயம் எமது பாரம்பரிய வைத்தியமான சித்த வைத்தியம், ஆயுர்வேத வைத்தியத்தை நாம் பூரணமாக புறக்கணித்துவிட முடியாது. இந்த வைத்தியர்களோ தாமே மூலிகைகளைக் கொண்டு தயாரிப்பவர்கள். இவை நோய் தீர்க்கக்கூடியவை என்பதை நாம் அறியாதவரா? எமது குடும்ப வைத்தியர் கூறுவது, வைத்தியரிடம் நோயை மாற்றி விடுங்கோ என்றக் கூறக் கூடாதாம். ஏனெனில் ஒரு நோயில் இருந்து பிறிதொரு நோய்க்கு அவர் மாற்றி விடுவாராம். அதனால் நோயைக் குணப்படுத்துங்கோ என கேட்க வேண்டும் என்பார். இது வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் ஆழ்ந்த கருத்தை உடையது. மேற்கத்திய மருந்துகள் பக்க விளைவுகளைக் கொண்டுவரக் கூடியவை. அதைத்தான் side effects என்பார்கள். இந்த விஷயத்தில் வைத்தியரும் அதை உண்ணும் நோயாளியும் கவனமாக இருக்கவேண்டும்.

  எனது மாணவி ஒருத்தி தற்போது பல்கலைக் கழகத்தில் Medical science படித்துவருகிறாள். ஏதோ பேச்சுவாக்கிலே நான் அவளிடம் கூறினேன், நோய்க்கான மருந்துகளை மருந்து கொம்பனிகளில் வேலை பார்க்கும் இதற்காகப் பயிற்றப்பட்ட chemistry படித்தவர்களே தயாரிப்பார்கள். தாம் கண்டறிந்த formula-வை மருந்தாக பல மிருகங்களில் பரீட்சித்து, பின் மனிதருக்குக் கொடுத்துப் பார்த்து நோய் குணமானால் அந்த மருந்தைத் தயாரித்து விற்பனைக்குக் கொண்டுவருவார்கள். பின் டாக்டர்களிடம் மருந்தில் சிலவற்றையும் அதன் குணாதிசயங்களையும் எழுதி துண்டுப் பிரசுரமாக அடித்து அனுப்புவார்கள். இதைப் படித்து டாக்டர்கள் நோயாளிகளுக்குக் கொடுப்பார்கள். டாக்டர்கட்கு மருந்தின் formula பற்றி எதுவும் தெரியாது என்றேன். இதைக் கேட்ட எனது மாணவி சிறிது தடுமாறினாள். வியாதியைக் குணப்படுத்தும் டாக்டருக்கு மருந்து பற்றியும் அதன் தயாரிப்பு பற்றியும் எதுவும் தெரியாது என்பது அவளுக்கு ஒரு புதிய செய்தியாகவே இருந்தது.

  தற்போது இந்தியாவிலே மிகப்பெரிய அளவிலே மேற்கத்திய வைத்தியத்தையும், ஆயுர்வேதம், சித்த வைத்தியம் போன்ற பாரம்பரிய வைத்திய முறைகளையும் இணைத்து வைத்திய முறை கையாளப்படுகிறது. இதை மத்திய அரசே நடத்திவருகிறது. எமது நீண்ட நாள் நண்பர் Dr, தெய்வநாயகம் தலைமை தாங்கி நடத்திவருகிறார். இவர் சுவாசம் சம்பந்தமான வியாதிகளில் விசேஷ பயிற்சி பெற்றவர். Edinburgh Medical College-ல் ஆய்வுப்பட்டம் பெற்றவர். உலகளாவிய ரீதியாக மதிக்கப்படும் வைத்தியர் ஆய்வாளர்.

  எம்மவர் மட்டுமல்ல, மூலிகைகளின் மகிமையை மேற்கத்தியரும் அறிந்துள்ளார்கள். நான் சென்னையில் வாழ்ந்த காலத்தில் எனது மலையாளத் தோழி ஒருவரின் தந்தையார் தொழில் மேற்கு நாடுகளுக்கு மருத்துவ மூலிகைகளை அனுப்புவதே. இதன் மூலம் அவர் பெரும் பணம் ஈட்டினார். இன்று நிலைமை மாறியுள்ளது. மேற்கத்திய மருந்து ஸ்தாபனங்கள் இந்தியாவில் நிலங்களை வாங்கி அதில் அவர்களே மூலிகைகளைப் பயிர் செய்கிறார்கள்.

  இந்தியர்களோ அதில் வேலை பார்க்கிறார்கள். காலப் போக்கில் சித்த வைத்தியம் ஆயுர்வேத மருந்துகளை அவர்களே தயாரித்து எமக்கே வியாபாரம் செய்வார்கள். நம் டாக்டர்களும் மேற்கத்திய மருந்து என எமக்குத் தர நாமும் முழுங்குவோம். Always West is Best அல்லவா? எமது பாரம்பரிய மருத்துவமும் மூலிகைகளும் பல கால ஆய்வின் வெளிப்பாடு என்பதை நாம் மறந்து நிற்கிறோம்.  



No comments: