இலங்கைச் செய்திகள்

20வது திருத்தத்திற்கு எதிராக எத்தகைய நடவடிக்கை எடுப்பது?

முறியடிக்க நாம் முயற்சிப்போம்

ஆணைக்குழுக்களினால் எவ்விதமான பயனுமில்லை

மக்கள் தேவையே எனது இலக்கு போலி தேசியம் அல்ல

இந்திய உயர் ஸ்தானிகருடன் அங்கஜன் விசேட சந்திப்பு

வடக்கில் முதலீடுகளுக்கு உரிய கள ஆய்வின் பின்னர் அனுமதி

இந்தியாவை மீறி 13ஆவது திருத்தத்தை ஒழிக்க முடியாது

புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்களுடன் பிரதமர் மஹிந்த நேற்று சந்தித்துரையாடல்

ஆறுமுகனின் தலைமைத்துவம் ஜீவனுக்கு சிறந்த முன்மாதிரி

கட்சி பேதமின்றி அனைவருடனும் நட்பாக பழகும் இயல்புடைய தலைவர்

கருத்தாழம்மிக்க சிந்தனையாளர் அமரர் ஆறுமுகன் தொண்டமான்

மலையக மக்களுக்காக தனது இறுதி மூச்சுவரை அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர் அமரர் ஆறுமுகன்


20வது திருத்தத்திற்கு எதிராக எத்தகைய நடவடிக்கை எடுப்பது?

TNA இவ்வாரம் கூடி முடிவு −மாவை

20வது திருத்தத்துக்கு எதிராக என்ன நடவடிக்கையை எடுப்பது என்பது குறித்து இந்த வாரம் தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானிக்கவுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

கட்சியின் பாராளுமன்ற குழு இந்த வாரம் சந்திக்கவுள்ளது. அதன் போது இது குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

நாங்கள் 20வது திருத்தத்தை எதிர்க்கின்றோம் இந்த வாரம் எங்கள் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் நடைபெறவுள்ளது. அதன் போது இது குறித்து ஆராயப்படும்.

20வது திருத்தத்துக்கு எதிரான சட்ட நடவடிக்கை குறித்தும் ஆராயப்படும். ஏற்கனவே எங்கள் சட்டத்தரணிகளுடன் இது குறித்து ஆராய்ந்துள்ளோம் என்றார்.   நன்றி தினகரன் 


முறியடிக்க நாம் முயற்சிப்போம்

13 திருத்தம் இரத்து:

13 ஆவது திருத்தச்சட்டத்தை நீக்கும் துணிச்சல் அரசாங்கத்திற்கு இல்லை. இது ஒரு விளையாட்டுத்தமான விடயமல்ல. இருநாடுகளுக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் செய்துகொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தமாகும். 13 ஆவது திருத்தச்சட்டத்தை நீக்கும் முயற்சிகள் ஏதும் திறைமறைவில் முன்னெடுக்கப்டுக்கப்பட்டால் அதனை முறியடிக்க உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழத் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும் என கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் நாட்டில் பலவிதமான கருத்தாடல்கள் இடம்பெற்றுவரும் பின்புலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த விடயத்தை எவ்வாறு அவதானித்து வருகிறதென ‘தினகரன்’ பத்திரிகை வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்,

13ஆவது திருத்தச்சட்டம் தமிழ்த் மக்களுக்கான முழுமையான தீர்வு இல்லை என்பதை தமிழ் மக்கள் அதனை அறிமுகப்படுத்திய போதே தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தனர். இலங்கையில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் இருநாடுகளுக்கும் இடையில் செய்துக்கொள்ளப்பட்ட ஒப்பந்தமாக இது.இருந்தபோதிலும் இன்றுள்ள சூழலில் தமிழ் மக்களுக்கு அற்ப சொற்ப அதிகாரங்களை பகிரக் கூடிய ஒரு தீர்வுத்திட்டமாக இது உள்ளது.

13ஆவது திருத்தச்சட்டத்தை நீக்க வேண்டுமென பலர் தனிப்பட்ட ரீதியில் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். அது அவர்களது தனிப்பட்ட கருத்தாகும். அரசாங்கம் 13ஆவது திருத்தச்சட்டம் குறித்து எவ்வித கருத்துகளையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

13ஆவது திருத்தச்சட்டத்தை இலகுவாக நீக்கிவிட முடியாது. இது ஒரு விளையாட்டுத்தனமான விடயமல்ல. இரு நாடுகளுக்கும் இடையில் செய்துக்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தமாகும். ஒப்பந்தத்தை செய்துள்ள இந்தியா இந்த விடயத்தை நீக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்காது. 13ஆவது திருத்தச்சட்டத்தை நீக்குவதற்கான முயற்சிகளை அரசாங்கம் எடுக்காதென்றே கருதுகிறோம். அதற்கான துணிவு அரசாங்கத்திடம் இல்லை.

இந்தியாவில் தற்போது மோடி அரசாங்கம் உள்ளதால் அவர்கள் இதனை கண்டுகொள்ள மாட்டார்களென சிலர் கூறுகின்றனர். அவ்வாறில்லை. மோடி அரசாங்கமோ அல்லது ராஜீவ் அரசாங்கமோ அல்ல இதில் முக்கியம். இந்திய அரசாங்கம் ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளது. இலங்கையில் அரசாங்கங்கள் மாறினால் கடந்த அரசாங்கம் செய்த ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்படுவது போன்று இதனை அர்த்தப்படுத்திக்கொள்ள கூடாது. இந்தியாவில் அரசாங்கங்கள் மாறினாலும் அதன் வெளிவுறவுக் கொள்கை மாறாது. இதுதான் ஆரம்பகாலம் முதல் இந்தியா கடைப்பிடிக்கும் வரலாறு.

நாம் இந்தியாவுடன் இராஜந்திர பேச்சுவார்த்தைகளுக்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சந்திப்புகளை தற்போது மேற்கொள்வது கடினம். என்றாலும் 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் அரசாங்கம் ஏதும் நகர்வுகளில் ஈடுபட்டால் நாம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதனை முறியடிப்பதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுப்போம் என்றார்.    சுப்பிரமணியம் நிஷாந்தன்    -   நன்றி தினகரன் 


ஆணைக்குழுக்களினால் எவ்விதமான பயனுமில்லை

நாட்டு மக்களின் நலனுக்காகவே 20 ஆவது திருத்தம் முன்வைப்பு

நல்லாட்சியில் ஸ்தாபிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களின் மூலம் கிடைத்த பயன்கள் என்ன? நாட்டில் குற்றச் செயல்கள் குறைந்ததா? அதனால் மக்களுக்கு பலன்கள் கிடைத்ததா என நீதி அமைச்சர் அலி சப்ரி கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டுக்காகவும் மக்களின் நலனுக்காகவும் 20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் கொண்டுவரப்படுவதே தவிர ஜனாதிபதியோ அல்லது அவரது குடும்பமோ சொகுசாக அதிகாரங்களுடன் வாழ்வதற்காக அல்ல  என்றும் அவர் தெரிவித்தார். நாட்டையும் மக்களையும் பாதுகாக்க வேண்டி அரசாங்கம் எல்லாச் சவால்களுக்கும் தைரியமாக முகம் கொடுத்து செயல்படும்.

அமைச்சர்களான அல் சப்ரி, ரோஹித அபேகுணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வு களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

அந் நிகழ்வில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது,

நாட்டை சீராக ஆட்சி செய்வதில் 19 ஆவது திருத்தச் சட்டம் இடையூராக உள்ளன. அதனை மாற்றி ஜனாதிபதிக்கு வேலை செய்யக்கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும்.

நாட்டு மக்கள் ஜனாதிபதியையும், அரசையும் தெரிவு செய்தது புத்தகம் எழுதுவதற்கு அன்றி நிறைய வேலைகள் செய்வதற்காகும்.

கடந்த ஆட்சியில் ஸ்தாபிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களின் மூலம் கிடைத்த பலன்கள் என்ன? நாட்டில் குற்றச் செயல்கள் குறைந்ததா? அதனால் மக்களுக்கு பலன்கள் கிடைத்ததா? 69 இலட்சம் மக்கள் வாக்களித்தும் கூட ஜனாதிபதியினால் பொலிஸ் மா அதிபரை மாற்ற முடியுமா? நாட்டில் குற்றச் செயல்கள் கூடியுள்ள நிலையில் அதை கட்டுப்படுத்த வேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் எமது சகோதர கத்தோலிக்க மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. முஸ்லிம் பெயரை தாங்கிய பயங்கராத கும்பல் மேற்கொண்ட இக்கொடூர செயலை யாரும் அங்கீகரிக்க முடியாது.

இத்தாக்குதலினால் முழு முஸ்லிம்களுக்கும் அவப் பெயர் ஏற்பட்டதோடு முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக பார்க்கும் நிலையும் காணப்பட்டது.

மூவின மக்களும் இந்நாட்டில் ஒற்றுமையாக, பரஸ்பர புரிந்துணர்வுடன் வாழவேண்டும் என்பதே ஜனாதிபதியின் ஒரே இலக்காகும் என்றும் அவர் கூறினார்.   பேருவளை விசேட நிருபர்   -   நன்றி தினகரன் 


மக்கள் தேவையே எனது இலக்கு போலி தேசியம் அல்ல

சிவனேசதுரை சந்திரகாந்தன்

போலி தமிழ்த் தேசியம் பேசி தமிழ் மக்களை ஏமாற்றுபவர்களை போலன்றி சாத்தியமான செயற்பாடுகளுடன் தமிழ் மக்களுக்கான தேவைகளை பெற்றுக் கொடுப்பதில் கவனம் செலுத்துவதே தமது நோக்கமென பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (10) நிதியமைச்சின் உற்பத்தி வரி தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 54 ஆயிரத்து 198 வாக்குகளை வழங்கி பெரும் நம்பிக்கையுடன் தனக்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

போலி தமிழ்த் தேசியம் பேசி தமிழ் மக்களை ஏமாற்றுவதே இடம்பெற்று வருகின்றது. கிடைத்த சந்தர்ப்பங்களை நழுவ விட்டுவிட்டு இன்று பலர் பாராளுமன்றத்தில் வெறுமனே குரல் எழுப்பி வருகின்றனர்.

மைத்திரி, ரணில், சம்பந்தன் இணைந்த நல்லாட்சி அரசாங்கம் மிக மோசமான செயற்பாடுகளையே அதன் ஆட்சிக் காலத்தில் முன்னெடுத்துள்ளது.

அந்த வகையில் புதிய அரசாங்கத்தில் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவதற்கு தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தயாராக உள்ளது. ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்துவதும் எமது மக்களின் வளர்ச்சியிலும் நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிஷாந்தன்  - நன்றி தினகரன் 

இந்திய உயர் ஸ்தானிகருடன் அங்கஜன் விசேட சந்திப்பு

பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர், யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் (09) இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயை சந்தித்தார்.

இச்சந்திப்பில் யாழ். மாவட்டத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி, விவசாய அறிவியல் தொடர்பாகவும், யாழ்.மாவட்டத்தில் குடிநீர் மற்றும் சுகாதார, கால்வாய் வசதிகள் பற்றியும், போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பாகவும், யாழ். மக்களுக்கான வீட்டுத்திட்டங்கள், கல்வி மற்றும் யாழ். நகரில் அமைக்கப்பட்டுவரும் இந்திய கலா சார மையத்தின் கட்டுமானம் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இச் சந்திப்பில் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கு அங்கஜன் இராமநாதன் நினைவுபரிசொன்றும் வழங்கினார்.

இந்திய துணை உயர்ஸ்தானிகர் வினோத் கே. ஜேக்கப்பும் ஏனைய தூதரக அதிகாரிகளும் பங்கேற்றனர்.   பருத்தித்துறை விசேட நிருபர் - நன்றி தினகரன் 


வடக்கில் முதலீடுகளுக்கு உரிய கள ஆய்வின் பின்னர் அனுமதி

அதிகாரிகளிடத்தில் ஆளுநர் வலியுறுத்து

உரிய கள ஆய்வுகளின் பின்னர் வடமாகாண முதலீடுகளுக்கான அனுமதிகளை அளிக்குமாறு அதிகாரிகளிடத்தில் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

வட மாகாணத்தில் முதலீடுகள் செய்வதற்கான திட்டங்களை மெகா இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவன அதிகாரிகள் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸுக்கும் மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கும், பிரதம செயலாளருக்கும் மற்றும் சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கும் செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் காட்சிப்படுத்தியிருந்தனர்.

இதன்போது முதலீட்டாளர்கள் ஆடை உற்பத்தி மற்றும் நட்சத்திர விடுதி அமைப்புக்கான அனுமதிகளை அளிக்குமாறும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் கருத்து வெளியிட்ட வடமாகாண ஆளுநர் சார்ள்ஸ்,முதலீட்டாளர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஆடை உற்பத்தி நிறுவனம் மற்றும் நட்சத்திர விடுதி அமைப்பதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதோடு சீமெந்து தொழிற்சாலை போன்ற ஏனைய திட்டங்களுக்கான திட்ட அறிக்கைகளைச் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பிக்குமாறும் குறிப்பிட்டார்.  அத்துடன் முதலீட்டுத்திட்டங்களுக்கான அனைத்து உதவிகளையும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய கள ஆய்விற்குப் பின்னர் வழங்குங்கள் என்றும் வலியுறுத்திக் கூறினார். வேலனை குறூப் நிருபர் - நன்றி தினகரன் 


இந்தியாவை மீறி 13ஆவது திருத்தத்தை ஒழிக்க முடியாது

எவரும் பகற்கனவு காண வேண்டாம்

இந்தியாவை மீறி 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை ஒழிக்க முடியாது. 13ஆவது திருத்தச் சட்டத்தை ஒழித்துவிடலாமென எவரும் பகற்கனவு காணக்கூடாதென தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.யான வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

20 ஆவது அரசியலமைப்புத்திருத்தம் என்பது ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கும் செயல். பாராளுமன்ற உறுப்பினர்கள், மக்களின் கருத்துக்களை செவிமடுக்காது இது திணிக்கப்படுகின்றது.  தங்களிடம் 2/3 பெரும்பான்மை இருக்கின்றதென்பதற்காக 20 ஆவது திருத்தத்தைக் கொண்டு வருவதனை ஏற்க முடியாது.

13 ஆவது திருத்தத்தைப் பொறுத்தவரை அதிலுள்ள மாகாணசபை முறையை தமிழ் மக்கள் ஓரளவுக்கேனும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்நிலையில் இதனை ஒழிக்க வேண்டுமெனக் கூறப்படுவதனையிட்டு கவலையடைகின்றோம். தமிழ் மக்களுக்கு எந்தவித தீர்வினையும் வழங்கக் கூடாதென்ற நோக்கத்திலேயே 13 ஆவது திருத்தத்தை ஒழிக்க முற்படுகின்றனர். தமிழ் அரசியல் தலைவர்களின் பல வருட அரசியல் மற்றும் இளைஞர்களின் ஆயுதப் போராட்டங்களுக்கு கிடைத்த ஒரு சிறு தீர்வாகவே இந்த 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் உள்ளது. இதனை ஒழிக்க வேண்டுமென சிங்களப்பேரினவாதிகள் என்னதான் எதிர்ப்புக்குரல் கொடுத்தாலும் இந்தியாவை மீறி 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை ஒழிக்க முடியாது.எனவே 13ஐ ஒழித்துவிடுவோமென எவரும் பகற்கனவு காணக்கூடாது என்றார்.  லோரன்ஸ் செல்வநாயம், சுப்பிரமணியம் நிஷாந்தன் - நன்றி தினகரன் 
புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்களுடன் பிரதமர் மஹிந்த நேற்று சந்தித்துரையாடல்

அலரி மாளிகைக்கு அழைத்து பாராட்டும் தெரிவிப்பு

புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்களை அலரி மாளிகைக்கு அழைத்து பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ நேரில் பாராட்டுக்களையும் தெரிவித்தார். இந்தச் சந்திப்பில் கனடாவிலுள்ள முதலீட்டாளர்களான சுகந்தன் சண்முகநாதன் மற்றும் சதீஸ் இராஜலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

வடக்கு - கிழக்கில் இருக்கக்கூடிய முதலீடுகளை ஊக்கப்படுத்தும் முகமாகவும், மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் முகமாகவும் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

பனை அபிவிருத்தி நிறுவனத்துடன் இணைந்து சில வேலைத்திட்டங்களை செய்து வரக்கூடிய இந்த இரண்டு முதலீட்டாளர்களும் வடக்கு - கிழக்கு மக்களை தொழில் ரீதியாக உள்வாங்கியதற்காக பிரதமர் தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார். இச் சந்திப்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொண்டார். தற்போது நாட்டிலுள்ள சூழ்நிலையில் வடக்கு - கிழக்கு பகுதியில் தங்களின் முதலீடுகளை ஊக்கப்படுத்தி, அங்குள்ள மக்களுக்குத் தொழில் வாய்ப்புகளை அதிகரித்துக் கொடுப்பதனூடாக அப் பகுதிகளில் தனியார் நிறுவனங்களை வெகுவிரைவில் அதிகரிக்க வேண்டுமெனவும், அம்முயற்சிக்குத் தான் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இதன்போது உறுதியளித்தார்.    நன்றி தினகரன் 


ஆறுமுகனின் தலைமைத்துவம் ஜீவனுக்கு சிறந்த முன்மாதிரி

மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி

நீண்ட பாரம்பரியத்தின் அடுத்த வாரிசாக வந்துள்ள ஜீவன் தொண்டமான் மீது ஒரு பாரம் சுமத்தப்பட்டுள்ளது. என்றாலும் மலையக மக்களுக்காக அவர் சேவையாற்றுவார் என நம்புகின்றோம். ஆறுமுகன் தொண்டமானின் தலைமைத்துவத்தை முன்மாதிரியாக கொண்டு அவர் சேவையாற்ற வேண்டும்.

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் குடும்பம் இந்திய வம்சாவளி மக்களுக்கு அளப்பரிய சேவையை செய்துள்ளது. அமரர் ஆறுமுகன் தொண்டமானும் நானும் ஒரே சந்தர்ப்பத்தில் தான் பாராளுமன்றத்திற்கு வந்திருந்தோம். சிறந்த முறையில் பாராளுமன்றில் பணியாற்றியிருந்தோம். அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஒரு சிறந்த அரசியல் ஞானியாக காணப்பட்டார். அவரின் அரசியல் தீர்மானங்கள் மூலம் பலரை ஈர்த்திருந்தார். அவருடைய பேரன் ஜீவன் தொண்டமான் இந்த அரசியல் இடைவெளியை நிரப்ப வந்துள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவர் தொர்ந்தும் உரையாற்றுகையில் அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவருடைய மக்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள அனைத்து அரசாங்கங்களுக்கும் அழுத்தம் கொடுத்துள்ளார். அவரை எதிர்கட்சியில் பார்ப்பது மிகவும் கஷ்டமாகும். ஆனால், கடந்த நல்லாட்சியில் அவர் எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்தார்.     நன்றி தினகரன் கட்சி பேதமின்றி அனைவருடனும் நட்பாக பழகும் இயல்புடைய தலைவர்

அமரர் ஆறுமுகன் குறித்து சஜித் பிரேமதாச உரை

அமரர் ஆறுமுகன் தொண்டமான் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அவற்றுக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதில் முனைப்பாக செயற்பட்டவரென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதேவேளை, பாராளுமன்றத்திலும் வெளியிலும் எவ்வித கட்சி பேதமுமின்றி நட்புடன் பழகிய தலைவராக அவரை பார்க்க முடிகிறதென்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று அமரர் ஆறுமுகன் தொண்டமான் தொடர்பான அனுதாபப் பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

எனது தந்தை ரணசிங்க பிரேமதாசவுக்கும் ஆறுமுகன் தொண்டமானின் பாட்டனார் சௌமியமூர்த்தி தொண்டமானுக்குமிடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்தன. பிரஜா உரிமை இல்லாதிருந்த இலட்சக்கணக்கான தோட்டத் தொழிலாளர்களுக்கு அந்உரிமையை பெற்றுக் கொடுப்பதில் அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். அவரது மறைவானது இந்த ஜனநாயக நாட்டில் எமக்கும் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் மலையக மக்களுக்கு பேரிழப்பாகும். அந்த வகையில் அவரது மகன் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட அவருடைய குடும்பத்தினருக்கு எதிர்க்கட்சியின் சார்பில் எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றும் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம், சுப்ரமணியம் நிஷாந்தன்    நன்றி தினகரன் 
கருத்தாழம்மிக்க சிந்தனையாளர் அமரர் ஆறுமுகன் தொண்டமான்

கருத்தாழம் மிக்க சிந்தனையாளராகவும் சிறந்த நகைச்சுவை உணர்வாளராகவும் விளங்கிய ஆறுமுகன் தொண்டமான் மூலமாக இன்றும் அதிகளவான சேவைகளை எதிர்பார்த்திருந்த மலையக மக்களுக்கு அவரின் இழப்பு பேரிழப்பாக அமைந்துள்ளது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் (11) நடைபெற்ற அனுதாபப் பிரேரணையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், 1994 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரதிநிதியாக முதற் தடவையாக தான் பாராளுமன்றத்திற்கு பிரவேசித்த போது அமரர் ஆறுமுகன் தொண்டமானும் பாராளுமன்ற பிரவேசத்தினை மேற்கொண்டார் என்று சுட்டிக் காட்டியதுடன், அன்று முதல் இந்த உலகை விட்டுப் பிரியும் வரையில் கட்சியின் தலைமைப் பதவியிலும் தோட்ட உட்கட்டமைப்பு, சமூக அபிவிருத்தி, கால்நடைகள் அபிவிருத்தி, வீடமைப்பு, நீர் வழங்கல், தோட்ட வீடமைப்பு என பல்வேறு அமைச்சுப் பதவிகளிலும் இருந்து மலையக மக்களுக்கு மாத்திரமன்றி இந்த நாட்டு மக்களுக்கே அளப்பறிய சேவைகளை ஆற்றிய பெருமை அமரர் ஆறுமுகன் தொண்டமானைச் சாரும் .கால்நடைகள் வள அபிவிருத்தி அமைச்சராக இருந்த காலத்தில், யாழ்ப்பாணத்திற்கு வெளிநாட்டு பசுக்களின் மாடுகளின் தேவை குறித்து ஒருமுறை நான் தொலைப்பேசியிலே அவருடன் உரையாடியபோது, 'உங்களுக்குத் தேவையான பசுக்களை ஏற்றிக் கொண்டு அந்த வண்டியிலே நானும் ஏறி வருகிறேன்' என நகைச்சுவையாக அவர் கூறியிருந்தார்.' என்று அமரர் ஆறுமுகம் தொண்டமான் தன்னுடன் பகிர்ந்த நகைச்சுவை சம்பவம் ஒன்றையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அனுதாப பிரேரணையின் போது பாராளுமன்றில் பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 


மலையக மக்களுக்காக தனது இறுதி மூச்சுவரை அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர் அமரர் ஆறுமுகன்

அனுதாப பிரேரணை மீதான உரையில் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ

உயிர் பிரிவதற்கு ஒரு சில மணிநேரங்களுக்கு முன்புகூட என்னை சந்தித்தார். இச் சந்திப்பின் போதும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வளர்ச்சி மற்றும் அவர்களின் இடர்களை களைவது தொடர்பிலேயே கலந்துரையாடியிருந்தார் என்று பிரதமர், அமரர் ஆறுமுகன் தொண்டமானின் அனுதாப பிரேரணை மீதான உரையில் நேற்று தெரிவித்துள்ளார்.

அமரர் ஆறுமுகன் தொண்டமான் நாட்டை பிரிக்கும் சக்திகளுக்கு எதிராக செயற்பட்டது மாத்திரமன்றி பயங்கரவாதத்தை ஒழிக்கும் செயற்பாடுகளுக்கும் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டார்.

தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத் தலைவனாக ஆறுமுகன் தொண்டமான் இறுதி தருணத்திலும் பெருந்தோட்ட மக்கள் குறித்து கொண்டிருந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் என்ற வகையில் கடமைப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.

அமரர் ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் பேசும் போது,

சௌமியமூர்த்தி, இராமநாதன், ஆறுமுகன் தொண்டமான் அவர்களை நினைவுகூரும் போது சௌமியமூர்த்தி தொண்டமான் முதல் இலங்கை அரசியலுக்கு தொண்டமான் தலைமுறையினர் ஆற்றிய பங்களிப்பு எனக்கு நினைவிற்கு வருகிறது.

அதனால் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு அனைத்து பெருந்தோட்ட மக்களுக்கு போன்றே தனிப்பட்ட ரீதியில் எனக்கும் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்திய சம்பவமாகும். அவரது உயிர் பிரிவதற்கு ஒரு சில மணிநேரங்களுக்கு முன்புகூட என்னை சந்தித்தார். இச் சந்திப்பின்போதும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வளர்ச்சி மற்றும் அவர்களின் இடர்களை கலைவது தொடர்பிலேயே கலந்துரையாடியிருந்தார்.

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த ஆறுமுகன் தொண்டமான் தோட்ட மக்கள் இடையே பயங்கரவாத சித்தாந்தங்கள் தோற்றம் பெற இடமளிக்கவில்லை. முப்பது ஆண்டுகால யுத்தத்தை நிறைவு செய்யும் மனிதாபிமான போராட்டத்திற்கு அது பெரும் ஆதரவாக அமைந்தது. ஆறுமுகன் தொண்டமான் அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாட்டை பிரிக்கும் சக்திகளுக்கு எதிராக செயற்பட்டது மாத்திரமன்றி பயங்கரவாதத்தை ஒழிக்கும் செயற்பாடுகளுக்கும் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டார்.

நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு அவரது அந்த ஜனநாயக பண்புகள் தீர்க்கமான தாக்கம் செலுத்தியது என்பதை இத்தருணத்தில் நினைவுபடுத்த வேண்டும்.

அமைச்சர் பதவியை பெற்றுக்கொண்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும் பெருந்தோட்ட மக்களுக்காக சேவையாற்றுவதற்கு முதன்மையாக செயற்பட்ட ஆறுமுகன் தொண்டமான் பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கையுடன் தொடர்புடைய அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய போராடினார்.

லோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிஷாந்தன்     நன்றி தினகரன் 


 No comments: