மழைக்காற்று ( தொடர்கதை ) --- அங்கம் 52 முருகபூபதி


டுத்தடுத்த வாரங்களில் ஜீவிகா எடுத்த அதிரடி முடிவுகளைக்கண்டு  அபிதா சற்று கலங்கியிருந்தாலும் வெளியே காண்பிக்காமல் எந்தச்சலனமுமற்று  தான் இருப்பதாக பாவனைகாண்பித்தவாறு குட்டி ஈன்ற பூனையைப்போன்று நடமாடினாள்.

 

ஜீவிகாவின் இந்த முடிவுகளுக்கு லண்டனிலிருக்கும் அவளது பெரியப்பா சண்முகநாதனின் மகள் தர்ஷினிதான் காரணம் என்பதையும்  அபிதா புரிந்துகொண்டாள்.

‘ சபாஷ் சரியான போட்டிதான்  ‘  வஞ்சிக்கோட்டை வாலிபன் திரைப்படத்தில் வில்லன் நடிகர் வீரப்பாவின் அந்த புகழ்பெற்ற  வசனம் அபிதாவின்   நினைவுக்கு  வந்தது.

அந்தப்படம் வெளியானபோது அவள் பிறந்திருக்கவில்லை.  அவளது அம்மாதான் நடிகைகள் பத்மினி, வைஜயந்திமாலா பற்றி அடிக்கடி சொல்லி, தன்னையும் நாட்டியம் கற்றுக்கொள்ள நந்தினி ரீச்சரிடம் அனுப்பியிருந்தார். நந்தினி ரீச்சர் வீட்டில்தான் முதல்தடவை அந்தப்படத்தின்  போட்டி நடனக்காட்சியை பார்த்தவள் அபிதா.

நந்தினி ரீச்சர், படத்தின் கெஸட்டை பிளேயரில் போட்டுவிட்டு,  ரிமோட் கொன்ரோலரினால்,  காட்சிகளை நகர்த்தி தனக்கும் இதர மாணவிகளுக்கும்  காண்பித்ததும், நடிகை  பத்மினியின் இதர படங்களில் வரும் நாட்டியக்காட்சிகளும் சபாஷ் சரியான போட்டி வசனமும்  அபிதாவின் நினைவில் சஞ்சரித்தது.

என்னவிருந்தாலும்,  ஜீவிகாவும் லண்டன் தர்ஷினியும்  உறவினர்கள். இன்று சண்டை பிடிக்கலாம். நாளை சேர்ந்துகொள்ளலாம். சேருவது இனம். மாறுவது குணம்தானே..?

லண்டனிலிருந்து வேவு பார்ப்பதற்கு அந்த தர்ஷினி அபிதாவை கடந்துவிட்ட இரண்டு வாரங்களுக்குள் பல தடவை தொடர்புகொண்டுவிட்டாள்.

  

நுவரேலியா சென்றிருக்கும் சுபாஷினி, நிகும்பலையில் இல்லை என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டுதான்,  அவள் தன் மூலமாக இங்குள்ள செய்திகளையும் ஜீவிகாவின் நடவடிக்கைகளையும் அறியவிரும்புகிறாள்.

அதனால்,  அவளுக்குப்பிடி கொடுக்காமல் பேசிவரும் அபிதா, வெகு உஷாராக நாட்களை கடத்துவதற்கும் தன்னை தயார்ப்படுத்திக்கொண்டாள்.

இந்த வீட்டின் வேலைக்கும் சமையல்  பணிகளுக்கும் தன்னை அழைத்து மாதம் முடியுமுன்னரே சம்பளமும் தருபவள் ஜீவிகா. அதனால் இவளுக்குத்தான் விசுவாசமாக இருக்கவேண்டும் என்பதிலும் அபிதா மிகவும் உறுதியாக இருந்தாள்.

எங்கிருந்தோ வேலைக்காரியாக வந்திருக்கும் தான், தனக்குரிய எல்லையுடன் நின்றுகொண்டால் தனக்கும் மற்றவர்களுக்கும் எந்தப்பிரச்சினையும் இல்லை. அப்படித்தானே இருக்கவேண்டும்…?  அபிதா தனக்குத்தானே கேட்டுக்கொண்டாள்.   அப்போது சில நாட்களுக்கு முன்னர் அந்த வீட்டில்  நிகழ்ந்த சம்பவம் ஒன்றும்  நினைவறையிலிருந்து எட்டிப்பார்த்ததும்  தன்னையும் அறியாமல் சிரித்து விட்டாள்.

அவளது சிரிப்பு ஜீவிகாவுக்கும் கேட்டுவிட்டது. அபிதா தரையை கூட்டிக்கொண்டிருந்தபோதுதான் அந்த ஞாபகமும் வந்தது.  ஜீவிகா அப்போது தன்னைக்கடந்து செல்வாள் என்பதை அபிதா எதிர்பார்த்திருக்கவில்லை.

 “ என்ன… உங்களுக்குள்ளேயே சிரிக்கிறீங்க , என்ன நடந்தது ..? “ 

 “ ஒன்றுமில்லை.  ஒரு சுண்டெலி எனது அறையிலிருந்து வெளியே ஓடியது. அதுதான் சிரித்தேன்.  அன்றைக்குத்தான்  லண்டன் அய்யா சொல்லி, விநாயகர் சதுர்த்திக்கு மோதகம் அவித்து படைத்தேன். அதே நாள்தான் எலித்தொல்லைக்கும் மருந்து வைத்தேன்.  படத்திலிருந்த விநாயகரும் மோதகம் சாப்பிடவில்லை. அவரது வாகனம் எலியும் தனக்கு வைத்த விஷத்தை சாப்பிடவில்லை. புத்திசாலியான எலிதான். அதுதான் அம்மா சிரிப்பு வந்தது.  “ என்றாள் அபிதா.

ஜீவிகாவுக்கும் சிரிப்பு வந்தது.  தனது அறையில் சேகரமாகக் கிடந்த பழைய பத்திரிகைக்கட்டுக்களை எடுத்து வந்து,  கொரிடோரில் அடுக்கினாள். 

 “ இந்த பத்திரிகைகளுக்குள்ளிருந்துதான் அந்த எலி வெளியே ஓடிவந்திருக்கும்.  எலிப்புலுக்கை கிடந்தது. அபிதா,  பழைய பேப்பர்கள் எடுக்கும் ஒரு நாடார் கடை , டவுனில் சென்மேரிஸ் தேவலாயத்திற்கு பக்கத்தில் கடலைக்கடை,  தென்னம்பாணி விற்கும் கடைகளுக்கு பக்கத்தில் இருக்கிறது.  ஓட்டோவில் ஏற்றி, இவற்றை கொடுத்துவிட்டு வருவோமா..?  “ எனக்கேட்டாள் ஜீவிகா. 

 “ ஓட்டோவுக்கு கொடுக்கும் பணம் பழையபேப்பர் விற்பதால் கிடைக்காது அம்மா. வேண்டாம்.  “ என அபிதா மறுத்தாள்.

 “ நான்  பணம் எதிர்பார்த்தா, இந்த பழையதையெல்லாம் கொடுக்கப்போகிறேன் அபிதா..?  இங்கே இருக்கும் குப்பை, கூளம் எல்லாவற்றையும் தள்ளிவிடவேண்டும்.   “

 ‘ அடுத்து என்னையும் தள்ளிவிடவா போகிறீர்கள் ..?   ‘ என்ற வினா  அபிதாவின் மனதில் தொக்கி,  வாய்க்குள் மடிந்துபோனது.

 “  முதலில் தேவையில்லாதவற்றை நீங்கள் தீர்மானியுங்க.  அவற்றை  என்ன செய்யவேண்டும் என்பதையும் சொல்லுங்க. இந்த வீட்டை விட்டுச்செல்வதுதான் என்ற முடிவுக்கு நீங்கள் உறுதியாக வந்திருந்தால், சுபா, மஞ்சு, கற்பகம் ரீச்சருக்கெல்லாம் சொல்லவேண்டும்தானே.  “ ஜீவிகாவை ஏறிட்டுப்பார்த்தவாறு  அபிதா கேட்டாள்.

நெற்றிபட்டையும் சுருங்கியது.  ஜீவிகா மிகவும் அவசரப்படுவதாகவும் தோன்றியது.  இந்த வீட்டிலிருந்த மற்றவர்களுடன் அதிக நேரத்தை செலவிட்டிருப்பதும், ஆனால், எஜமானியான ஜீவிகாவுடன் அவ்வாறு நேரத்தை செலவிடாதிருந்திருந்ததும்தான்,  இவளது உள்ளத்துணர்வுகளை புரிந்துகொள்ளமுடியாதிருந்தமைக்கான காரணம்.

 “ நான் அவர்களுக்கு சொல்லிவிட்டேன்  “  என்று அபிதாவை நேருக்கு நேர் பார்க்காமலேயே ஜீவிகா சொன்னதும் அபிதா சற்று நிலைகுலைந்துவிட்டாள்.

 “ அப்படியா…?  “ என பதிலுக்கு கேட்டவள், அதற்குமேல் எதுவும் பேசாமல்,  தானும் சேர்ந்து ஜீவிகாவின் அறையை துப்பரவு செய்தாள்.

சமையலறை மேசையிலிருந்த அபிதாவின் கைத்தொலைபேசி சிணுங்கியது.

 “ அபிதா… உங்களுக்கு கோல்…. “ ஜீவிகா உரத்துச்சொன்னாள்.

 “இருக்கட்டும் அம்மா, பிறகு யார் என்று பார்த்து பேசுகிறேன்.  “  அபிதா சுரத்தில்லாமல் சொல்லிவிட்டு வேலையில் மூழ்கினாள்.

சிலவேளை லண்டனிலிருந்து தர்ஷினி எடுக்கக்கூடும் என்பதனாலேயே அந்த அழைப்பினை அபிதா அலட்சியம் செய்தாள்.

கைத்தொலைபேசி மீண்டும் ஒலித்து நின்றது.  ஜீவிகா, அபிதாவை வேலைசெய்ய விட்டுவிட்டு, வெளியே வந்து, சீலனுக்கு அழைப்பு எடுத்து பேசத்தொடங்கினாள்.

அவன் மறுமுனையிலிருந்து ஏதும் கிலுகிலுப்பூட்டும் பேச்சுக்களை பேசவேண்டும். ஜீவிகாவின் நாணச் சிரிப்பிலிருந்து அபிதாவால் புரிந்துகொள்ளமுடிந்தது.

ஜீவிகாவின் அறையின் கதவை மூடி தரையை கூட்டித்துப்புரவுசெய்யும் பாவனையுடன்  அந்த உரையாடலை கேட்பதை அபிதா தவிர்த்தாள்.

ஜீவிகா எடுத்துள்ள அதிரடியான முடிவுகளினால்,  தன்னைத்தவிர மற்றவர்கள் எந்தவகையிலும் பாதிக்கப்படப்போவதில்லை.

அவரவர் தொழில் நிமித்தம் இங்கே வந்தார்கள்.  போவதற்கும் தயாராகிவிட்டார்கள்.  நானும் தொழில் நிமித்தம்தான் இந்த நிகும்பலையூருக்கு வந்தேன்.  வேலைக்காரி – சமையல்காரி – எடுபிடி ஆள் -  தோட்டக்காரி வேலை முடிந்துவிட்டால்,  எங்கே இடம்மாற்றம் கிடைக்கும்.  மற்றும் ஒரு வீட்டுக்குப்போய் கழுவித்துடைக்கவேண்டியதுதனா..?  எவ்வளவு காலத்திற்கு மற்றப்பெண்டுகளின் ஊத்தை உடைகளை கழுவி, காயப்போட்டு மடித்துவைப்பது. சாப்பிட்டு, அருந்திய எச்சில் பாத்திரங்களை கழுவி, துடைத்து வைப்பது..? வீட்டுக்கு வேலைக்கு வரும் பணிப்பெண்களுக்கும் வேலைக்காரராக வரும் ஆண்களுக்கும்  எதிர்காலம் என்ன…? வெளிநாடுகளில் வீடுகளில் வேலையாட்களை நிரந்தரமாக  வைத்திருப்பதில்லை என்றும், ஏதும் வேலைகள் வந்தால் மாத்திரம் அழைத்து வேலையைச்சொல்லி, முடித்துவிட்டு, கேட்கும் கூலியை கொடுத்தனுப்பும் நடைமுறைதான் இருப்பதாகவும் பத்திரிகையில் படித்திருந்த கட்டுரை ஒன்றிலிருந்து அபிதா தெரிந்துவைத்திருந்தாள்.

வீடு துப்பரவு செய்ய, தோட்டத்தில் புற்களை மரங்களை வெட்டுவதற்கெல்லாம் அததற்கென்று பயிற்சி பெற்றவர்கள் இருக்கிறார்களாமே.  அவர்களை கிளீனர்கள் என்றும் கிராஸ் கட்டர் என்றும் அழைப்பார்களாமே.  அப்படியானால், அந்த வேலைகளையெல்லாம் இங்கே உடனிருந்து அடிமைகள் போன்று செய்து,  தரப்படும் கூலியுடன் வாழ்க்கையை ஓட்டும் வேலைக்காரர்களுக்கு என்ன பெயர்..? ஓ… இருக்கவே இருக்கிறது, சேர்வன்ட் போய், சேவர்ன்ட் கேர்ள், 

நானும் அவர்களில் ஒருத்திதானே..?

அந்த எல்லைதானே எனக்கும் வரையறைசெய்யப்பட்டுள்ளது.

ஜீவிகா,  வெளிவராந்தாவில் நடமாடியவாறு சீலனுடன் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள்.  அபிதா, தனக்கு வந்து, தான்  எடுக்காமல்விட்டிருந்த அழைப்பு யாருடையது என்பதை பார்த்தாள்.

நுவரேலியாவிலிருந்து சுபாஷினி.  வெளியே வெய்யில் காய்ந்தது.  உலரப்போட்டிருந்த துணிகளை எடுத்துவரும் சாட்டில், வீட்டின் பின்புறம் சென்று, சுபாஷினிக்கு அழைப்பெடுத்து பேசினாள்.

தனக்கு திருமணம் நிச்சயமாகவிவிட்ட செய்தியுடன் சுபாஷினி பேசத்தொடங்கினாள்.  வீட்டில் விட்டு வந்துள்ள தனது உடைகளையும் மற்றும் உடைமைகளையும் தனியாக எடுத்துவைக்கச்சொன்னாள் சுபாஷினி.

 “  அபிதா,  அவற்றில் உங்களுக்கு அளவான சில உடுப்புகள் இருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள்.  திருமணத்திற்குச்சொன்னால் வரமுடியுமா..?  “

 “ நான் தனியே எப்படி வருவது சுபா.  எனக்கு இடம்வலம் தெரியாது.  ஜீவிகாவுக்கும் சொல்வீங்கதானே..?  அவுங்க வந்தால் என்னையும் அழைத்துவரவிரும்பினால், வரமுடியும்.  மஞ்சுளா வருவாதானே..?  “

 “ ஓமோம். அவள் இல்லாமலா..?  அவள் தாயுடன் வருவாள்.  அடுத்தது அவளுக்கும் என்னுடைய தம்பிக்கும்தானே… வருங்கால மச்சாள்.  எல்லாம் நிச்சயமாகிவிட்டது.  தம்பியும் கண்டியோடு போய்விடுவான்.  ஒன்று சொல்ல மறந்திட்டேன். தம்பியும் நானும்  இரண்டு நாட்களுக்கு முன்னர் கண்டிக்குப்போயிருந்தோம்.  மஞ்சுவின் அம்மாவின் வீடு மாளிகை மாதிரி.  பெரிய பணக்காரர்கள்தான். ஆனால், ஏன் மஞ்சு எங்களுடன் அனாதையைப்போல இருந்தாள் என்பதுதான் புரியவில்லை.  மஞ்சுவின் தாய்க்கு உங்களை கண்டிக்கு அழைத்து தன்னோடு வைத்துக்கொள்ளும் எண்ணமும் இருக்கிறது அபிதா.  “ என்று சுபாஷினி சொன்னதும், அபிதாவுக்கு சினம்வந்தது. மூக்கு நுனி வியர்த்தது.

 “ ஏன்… எதற்கு..?  அங்கே வந்தும் கழுவித்துடைப்பதற்கா…? இங்கே கழுவித்துடைத்தாயிற்று… இனி கண்டியிலா..? அடுத்து நுவரேலியாவிலா..?   ஜீவிகா தன்னோடு கொழும்புக்கே வரட்டுமாம். அங்கே போனால், அவவுக்கும் அவவின்ட காதல் புருஷனுக்கும் கழுவித்துடைக்கவேண்டியதுதான்.   வெளியே விறாந்தாவிலிருந்து அவனுடன்தான் போனில் கொஞ்சிக்கொண்டிருக்கிறாள்.  “ அபிதா எரிச்சல் பற்றியவளாக பொரிந்தாள்.

 “ சொரி அபிதா.  நாங்கள் உங்களை அப்படியா நடத்தினோம். ஏன் உங்களுக்கு கோபம் வருகிறது.   டேக் இட் ஈஸி…  “ என்றாள் மஞ்சுளா.

 “ மஞ்சு நான் வைத்த கறிவேப்பிலை மரம் நன்றாக வளர்ந்திருக்கிறத.   இந்த வீட்டை அந்த லண்டன்காரி விற்றால், நான் நட்டு வளர்ந்த எத்தனை மரம் செடி, கொடிகளையும் விட்டுவிட்டு போகப்போகிறேன் தெரியுமா..? நீங்கள் எல்லாம் வேலைக்குப்போனதன்பிறகு நான் பேசிக்கொண்டும் தண்ணீர் வார்த்துக்கொண்டிருக்கும் ஜீவன்கள்.  இவற்றை விட்டு பிரிவதுதான் மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது.  இறுதியில் அவையும் என்னைப்போன்று அனாதையாகப்போகின்றன.  நானும் நான் நட்டு வைத்த கறிவேப்பிலையாகிவிட்டேன். “ என்று அந்தச்செடியை பரிவோடு தடவிக்கொண்டு சொன்னாள் அபிதா.

அவ்வாறு அபிதா சொன்னதும்,  எவ்வாறு தேறுதல் சொல்வது என்று தெரியாமல் மறுமுனையிலிருந்த சுபாஷினி தவித்தாள்.

யார் யாரை எங்கே சந்திப்போம்..? எங்கே விட்டுப்பிரிவோம்..? என்பதும் தெரியாமல்தானே வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.  இருக்கும் வரையில் எவ்வாறு நேசமாக இருந்தோம்.  முரண்பட்டோம்,  சின்ன சின்ன விடயங்களுக்கும் கோபப்பட்டோம். எது எதற்கு பிடிவாதம் காண்பித்தோம்…? எப்படியெல்லாம் அர்த்தமற்று சிரித்து மகிழ்ந்தோம்..? 

 “ அபிதா… மன்னித்துக்கொள்ளுங்கள். நீங்கள் இப்போது நல்ல மூடில் இல்லை என்பது மாத்திரம் தெரிகிறது. பிறகு ஆறுதலாகப்பேசுவோம்.  “ சுபாஷினி  துண்டித்தாள்.

அபிதாவின் முகம் வியர்த்தது.  குனிந்து அணிந்திருந்த சோர்டியின் முனையை எடுத்து துடைத்துக்கொண்டாள். மேலே இரண்டு சிட்டுக்குருவிகள் வட்டமிட்டு பறந்தன.  அவற்றை கண்வெட்டாமல் பார்த்துக்கொண்டு நின்றாள்.  சிட்டுக்குருவிகளுக்கும் கட்டுப்பாடில்லை. வீசும் தென்றலுக்கும் சொந்த வீடு இல்லை. அடுத்த பிறவியென்று ஒன்று இருந்தாள் அந்தக்குருவியைப்போன்று பிறந்துவிடவேண்டும்.  பெருமூச்சு அவளிடமிருந்து உதிர்ந்தது.

 “  என்ன… அபிதா… மரங்களுடன் பேசிக்கொண்டிருக்கிறீங்களா…. “  ஜீவிகா,  அவளைத் தேடிக்கொண்டு பின்வளவுக்கு வந்தாள்.

 “ இல்லையம்மா… காயப்போட்ட உடுப்புகளை எடுக்க வந்தேன். மரங்களைப்பார்த்ததும், அதிலும் இந்த கறிவேப்பிலை மரத்தைப்பார்த்ததும் கவலை வந்துவிட்டது. ஏனம்மா…? நீங்களே லண்டன் பெரியப்பாவுடன் பேசிப்பார்த்து இந்த வீட்டை ஒரு விலைக்கு வாங்கி விடுங்களேன்.  இந்த மரங்களை விட்டுப்போவதுதான் கவலையாக இருக்கிறது.   “ என்றாள்  அபிதா.

 “  நடக்கக்கூடிய கதையை பேசுங்க அபிதா… விற்றாலும் விற்பா அந்த தர்ஷினி.  எனக்கு மாத்திரம் விற்கமாட்டாள்.  சீலன் இப்போதும் சொன்னார். உங்களையும் கொழும்போடு வரட்டுமாம்.  அவரும் வெள்ளவத்தையில் ஒரு வீட்டை வாடகைக்கு பார்த்துவிட்டார். நீங்கள் எங்களோடு இருக்கலாம். அந்த ரீவி ஷோவுக்கும் போகலாம். பிரச்சினையில்லை.  என்ன சொல்றீங்க… இந்த மரங்களை கட்டிப்பிடித்து அழவேண்டாம்.   “

அபிதா மௌனமாக கறிவேப்பிலை மரத்தையே பார்த்துக்கொண்டு நின்றாள்.

( தொடரும் )

 

 

 

  

 

 

 


No comments: