அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 31 – உடல் – சரவண பிரபு ராமமூர்த்தி

உடல்தோற்கருவி

 

கோவில்களில் மட்டுமே இசைக்கப்படும் தொன்மையான தோற்கருவி உடல். தவிலைப் போலவே இருக்கும் உடல், அதைவிட சற்றுப் பெரியது. ஓங்காரத் தொனியில் ஒலிக்கக் கூடியது. உடல் பருத்து, ஓரங்கள் சுருங்கி, இரண்டு முகங்களிலும் தோல் கட்டப்பட்ட கருவி. தவிலைப் போல் அல்லாமல் உடலின் வலந்தலை, இடந்தலை இரண்டும் ஒரே அளவு கொண்டவை. பலாமரக் கட்டையில் தோலைக் கட்டி, புளியங்கொட்டை பசை கொண்டு இழுத்து ஒட்டி உடல் தயாரிக்கப்படுகிறது. இந்த புளியங்கொட்டை பசை மிகவும் பலம் வாய்ந்தது. புளியங்கொட்டையை நன்கு ஊறவைத்து, அரைத்து, தகுந்த பதத்தில் காய்ச்சினால், அதை மிஞ்ச வேறெந்த பசையும் இல்லை. தவிலில் வடந்தலைக்கு கன்றுத்தோலும், இடந்தலைக்கு ஆட்டுத்தோலும் வார்க்கப்படும். உடலுக்கு இருபுறமும் ஆடு அல்லது மாட்டுத்தோல் வார்க்கப்படும்.  சீர்காழி, திருவையாறு பகுதிகளில் உடல் செய்யப்பட்டது. அண்மைக்காலமாக மரத்திற்கு பதில் உலோகத்தில் உடல் தயாரிக்கப்படுகிறது.

   

தவிலின் ஒரு முகத்தில் குச்சியாலும், மற்றொரு முகத்தில் கை அல்லது கூடுகள் கொண்டும் வாசிப்பார்கள். உடலின் இருமுகங்களையும் குருவிக்கொம்புக் குச்சி கொண்டே வாசிப்பார்கள். பல கோவில்களில் ஒரு முகம் தான் இசைக்கப்படும். குருவிக்கொம்பு குச்சி என்பது திருவண்ணாமலை, வேலூர் வட்டாரக் காடுகளில் கிடைக்கும் ஒருவகை செடியில் ஒடிக்கப்படுகிறது. வளையும் தன்மையுடையது. அரளிக்குச்சி, சவுக்குக்குச்சிகள் கொண்டும் சிலர் வாசிக்கிறார்கள். இப்பொழுது பெரும்பாலும் நெகிழி குச்சி தான். பெரிய உடல், சின்ன உடல், சன்ன உடல் என்று அளவின் அடிப்படையில் மூன்று வகை உடல்கள் உள்ளன.

 

காஞ்சிபுரத்துக் கோவில்களில் பெரும்பாலும் உடல் இசைக்கப்படுவதை நாம் காணலாம். காஞ்சி வரதர் கோவிலில் உடல் முக்கிய பங்கு வகிக்கிறது. தினப்பூசை பலி, புறப்பாடு என்று எப்பொழுதும் இக்கோவிலில் உடல் ஒலிக்கின்றது. இக்கோவிலின் வாத்திய மிராசு திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கூறுகையில் வரதருக்கு உடல் தினப்படி வாசிப்போம். அனைத்து புறப்பாடு நிகழ்வுகளிலும் உடல் இசைக்கப்படும். நாங்களே உடலை சரி செய்வது அல்லது புதிய உடல் கட்டுவது ஆகியவற்றை செய்துகொள்கிறோம். இதை எங்கள் பாக்கியமாகக் கருதி இந்த கைங்கர்யத்தை விடாமல் செய்து வருகின்றோம் என்கிறார்.

   

 காஞ்சி உலகளந்த பெருமாள் கோவிலில் உடல் மாலைப்பூசையில் நாதசுரத்துடன் இசைக்கப்படுகிறது உடல். வீதியுலா நாட்களில் நகரா உடன் சேர்த்து இசைக்கப்படுகிறது. சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோவிலில் உடல் விழா நாட்களில் இசைக்கப்படுகிறது. காஞ்சி பவளவன்னர் கோவிலில் உடல் தினமும் பூசை காலத்தில் இசைக்கப்படும். காஞ்சியின் மற்ற பெருமாள் கோவில்களில் உடல் மெல்ல வழக்கொழிந்து விட்டது.

 

ஏகாம்பரநாதர், கச்சபேசர், காமாட்சியம்மன் கோவில்களிலும் உடல் முக்கிய இடம் பிடித்துள்ளது. ஏகாம்பரநாதர் கோவிலில் ஆறுகாலப் பூசை, திருமுழுக்கு ஆகிய நேரங்களில் உடல் இசைக்கப்படுகிறது. உடல் எப்படி இசைக்கப்படுகிறது என்கிற தொனியில் இருந்து அது இறைவனுக்கு உணவு படைக்கப்படும் வேளையா அல்லது வீதியுலா செல்லும் வேளையா என்பதை வேறுபடுத்த முடியும் என்கிறார் இக்கோவில் கலைஞர் திரு கார்த்திக்கேயன். வீதியுலாவிற்கு இறைவன் புறப்படும் நேரத்தில் இங்கே உடலின் இருமுகங்களும் இசைக்கப்படுகின்றன.  காமாட்சியம்மன் கோவிலில் உடல் மூன்று வேளை இசைக்கப்படுகிறது. விழா நாட்களிலும் இசைக்கப்படுகிறது. விடையாற்றி நாட்களில் சன்ன உடல் இசைக்கப்படுகிறது. கச்சபேசர் கோவிலில் திருமுழுக்கு வேளையிலும் வீதியுலா நேரத்திலும் உடல் இசைக்கப்படுகிறது. குமரக்கோட்டம் முருகன் கோவிலில் உடல் தினமும் திருமுழுக்கு காலங்களில் மூன்று வேளை இசைக்கபடுகிறது. திருநீர்மலை, திருவல்லிக்கேணி, திருவள்ளூர், சிங்கப்பெருமாள் கோவில், மயிலை மாதவ பெருமாள்/கேசவப் பெருமாள் ஆகிய கோவில்களிலும் உடல் உண்டு. திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் உடல் இசைக்கப்படுகிறது.

    

திருச்சி கோவில்களில் உடல் இசைக்கப்படுகிறது. திருச்சி தாயுமானவர் கோவிலில் பெரிய உடல் உள்ளது. திருவானைக்கா கோவிலில் தினம் காவிரி தீர்த்தம் கொண்டு வரப்படும் வேளையில் உடல் இசைக்கப்படுகிறது. இக்கோவிலில் இரண்டு அளவுகளில் உடல் உள்ளது. மதிய பூசையில் பூசகர் அம்மன் வேடமிட்டு சம்புகேசருக்கு பூசைக்குச் செல்லும் நேரத்தில் உடல் இசைக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை அம்மன் புறப்பாட்டின் பொழுதும் உடல் ஒலிக்கும். மற்ற விழா நாட்களிலும் உடல் இசைக்கப்படும்.

 

திருவரங்கம் அரங்கநாதர் கோவிலில் உடல் அதி முக்கிய இடம் பிடித்துள்ளது. பழைமையான மிகப் பெரிய உடல்கள் இக்கோவிலில் உள்ளன. பெருமாள், தாயார், ஆழ்வார்கள் என்று அனைத்து புறப்பாட்டிற்கும் பெரிய உடலே இசைக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் அனைத்து விழா நாட்களிலும் உடல் ஒலிப்பத்தை காணலாம். விசேடமாக கொடியேற்றம், திருப்பள்ளியொடம்(தெப்பம்), உறையூர் சேர்த்தி விழாக்களில் பெரிய உடல் தனித்துவத்துவமாக ஓலிக்கும். இந்நிகழ்வுகளில் தரையில் வைத்து இசைக்கிறார்கள். வீதியுலா நேரத்தில் தோளில் தொங்கவிட்டு வாசிக்கிறார்கள். காண்க காணொளி பகுதி. இக்கோவிலில் திருமஞ்சன உடல், சின்ன உடல் என்று வேறு இரண்டு உடல் வகைகளும் புழக்கத்தில் உள்ளன. இகோவிலின் சித்திரை, தை, பங்குனி தேரோட்டத்தில் தேரின் பின்புறம் பெரிய உடல் தொங்க விடப்பட்டு தேருக்கு முட்டுக்கட்டை போடுபவர்கள், தேரை பின்பு இருந்து தள்ளும் கட்டையை இயக்குபவர்களை உற்சாகமூட்ட இசைக்கப்படுகிறது. திருவானைக்கா கோவிலிலும் இவ்வழக்கம் உள்ளது. புல்டோசர் வைத்து தள்ளப்படும் தேர்களில் இவ்வழக்கம் நீக்கப்பட்டு விட்டது. திருவெள்ளறை செந்தாமரைக்கண்ணன் திருக்கோயிலில் மிகப்பெரிய உடல் உள்ளது. பங்குனி விழா நாட்களில் இசைக்கப்படும்.

   

மன்னார்குடி இராசகோபாலர் கோலிலில் பித்தளையாலான பெரிய உடல் இசைக்கப்படுகிறது. இக்கோவிலில் தவண்டை, திருசின்னம், நட்டு முட்டு, மிருதங்கம், எக்காளம் ஆகிய பாரம்பரிய கருவிகளும் புழக்கத்தில் உள்ளன. சீர்காழி அடுத்த திருநாங்கூர் 11 பெருமாள் கோவில் சிலவற்றில் உடல் உள்ளது. தை மாதம் நடைபெறும் திருமங்கையாழ்வார் மங்காளாசாசன விழாவில் இவ்வுடல்கள் அவருடன் 11 கோவில்களுக்கு செல்லும் வழியில் இசைக்கப்படுகிறது. பெரிய எக்காளம், திருச்சின்னம் ஆகியவையும் உண்டு.

 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தை மாதம் நடைபெறும் திருவூடல் ருவூடல் ஆகிய திருவிழாக்களில் உடல் முக்கிய இசைக்கருவியாக விண்ணதிர முழங்குகிறது. மேலும் இக்கோவிலில் மாசிமகத்தன்று நடைபெறும் வல்லாள மகாராஜனுக்கு அண்ணாமலையார் மகனாக இருந்து திதி கொடுக்கும் சடங்கிலும் உடல் ஒலிக்கின்றது. மதுரை அங்கயற்கண்ணம்மை கோவிலில் உடலை சுற்று தவில் என்கிறார்கள். தவில் நாதசுரத்துடன் சேர்த்து தாளம் போல் இசைக்கப்படுகிறது. சிதம்பரம் ஆடல்வல்லான் கோவிலில் தெருவடைச்சான் விழாவிலும், இரந்துன்னும் இறைவர்(பிட்சாடனர்) புறப்பாட்டிலும் உடல் இசைக்கப்படுகிறது. திருவிடைமருதூர் கோவிலிலும் உடல் உண்டு.

 

 

தமிழகம் முழுவதும் இயங்கும் சிவகாண வாத்தியக் குழுவினர் அனைவரும் உடல் வைத்து உள்ளார்கள். அழிவின் விளிம்பில் இருக்கும் பல பாரம்பரிய இசைக்கருவிகளை மீட்டு அவைகளை மீண்டும் கோவில்களில் ஒலிக்கச் செய்வதில் இவர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இவர்களுக்கு சில கோவில் நிர்வாகங்கள் குடைச்சல் கொடுத்தாலும் தளராது இப்பணியைத் தொடர்கிறார்கள். இக்குழுக்களுக்கு முன்னோடியாக விளங்குவது கோசைநகரான் என்கின்ற அமைப்பே ஆகும். ”கோசை நகர் வாழ வந்த பெருமாளே” என்பது திருப்புகழ். கோசை நகர் என்று முன்பு அழைக்கப்பட்து தற்கால சென்னை கோயம்பேடு. இங்கு தான் கோசைநகரான் அமைப்பு உள்ளது. இதன் நிறுவனத் தலைவராக இருப்பவர் சிவத்திரு சிவகுமார் அவர்கள். தமிழர் இசைக் கருவிகளை மீட்டெடுப்பதற்காக தனது வேலையை விட்டுவிட்டு இதையே தனது தலையாய பணியாக பல வருடங்களாக செய்து வருகிறார். இவர்கள் 24 மணி நேரமும் திறந்திருக்கும் தொல் தமிழர் இசைக்கருவிகள் கண்காட்சியை கோயம்பேட்டில் நடத்தி வருகிறார்கள்.  தமிழர்களின் தொலைந்து போன பல இசைக்கருவிகளை மீட்டெடுத்து அவைகளை காட்சிப்படுத்தி, மீட்டுருவாக்கம் செய்து, அவைகளை தேவைப்படுபவர்களுக்கு கொடுத்தும் வருகிறது இந்த அமைப்பு. இவர்களிடம் தரமான உடல் இசைக்கருவிகள் கிடைக்கின்றன. பழமை முறையிலமைந்த உடல் இசைக்கருவிகள் எங்கும் செய்யப்படுவது இல்லை என்றாலும் இவர்களிடம் கேட்டால் செய்து கொடுப்பார்கள் என்கிறார் இந்த அமைப்பின் தலைவர் திரு சிவகுமார் அவர்கள். மேலும் இக்காலத்தில் பயன்படுத்தப்படும் உடல்கள் இவரிடமும், ஈரோடு பவானி போன்ற ஊர்களிலும் கிடைக்கின்றன.

 

உடல் இசைக்கருவி தமிழகத்தில் நிறைய கோவில்களில் காணப்படுகிறது, ஆனால் அவை இசைக்கப்படாமல் சுவற்றில் ஆணியில் தொங்கிக் கொண்டு இருக்கும். புதுவை பி.கோதண்டராமன் அவர்கள் எழுதி, 1945ல் வெளிவந்த ”தமிழர் இசைக்கருவிகள்” என்கிற நூலில் புதுவை காளத்தீச்வரன் கோவிலில்(செட்டிக் கோவில்) உடல் இசைக்கருவி பயன்படாமல் ஆணியில் தொங்குவதாக எழுதியுள்ளார். 1945லேயே இந்த நிலைமை என்றால் 2020ல் சொல்ல வேண்டுமா? புதியதாக பாரம்பரிய மர உடல்களை யாரும் அவ்வளவு எளிதில் செய்யப்போவது இல்லை. கோவில்களில் இருக்கும் உடல்களை சரியாக பராமரித்து பழுது நீக்குவது ஆகியவை தான் நாம் செய்யக்கூடியது. உங்கள் ஊர் கோவிலில் இக்கருவி இருந்தால் அவற்றை பழுதி நீக்கி இயங்க செய்யல்லம். ஆதீன கோவில்களில் சுலபமாக பாரம்பரிய இசைக்கருவிகளை மீண்டும் இசைக்கச் செய்யலாம். புதிதாக பதவிக்கு வரும் நமது ஆதீனங்கள் இதை முன்னெடுக்க வேண்டும். எடுத்துக்காட்டாக காஞ்சி சங்கர மடத்தில் பாரம்பரியமாக பல தொல்லிசைக்கருவிகள் தொடர்ந்து புழக்கத்தில் உள்ளது. இதை பின்பற்றி தமிழ் மடங்களும் நமது தொன்மையான இசைக்கருவிகள் பயன்படுத்தி அவற்றை அழிவில் இருந்து காக்க வேண்டும்.

 

புழக்கத்தில் உள்ள இடங்கள்

·       திருவரங்கம் அரங்கநாத பெருமாள் திருக்கோவில்

·       திருவானைக்கா சம்புகேசர் திருக்கோவில்

·       திருச்சி தாயுமானவர் திருக்கோவில்

·       திருவெள்ளறை செந்தாமரைக்கண்ணன் திருக்கோயில்

·       காஞ்சிபுரம் வரதராச பெருமாள் திருக்கோவில் மற்றும் காஞ்சியில் உள்ள மற்ற பெருமாள் கோவில்கள்

·       காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில்

·       காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோவில்

·       காஞ்சிபுரம் காமாட்சியம்மன் திருக்கோவில்

·       திருவாரூர் தியாகேசர் திருக்கோவில்

·       மன்னார்குடி ராஜகோபால பெருமாள் திருக்கோவில்

·       திருப்பெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில்

·       சிவ வாத்திய குழுவினர்

 

காணொளி:

https://youtu.be/quQtLUcX8Fg

https://youtu.be/HYUWc9JEk7Y

https://youtu.be/9EHLrGrvCco

https://youtu.be/oaoxDXKlBDU

https://youtu.be/kTmnC4_gVkE

https://youtu.be/Z49af5v4wEw

https://youtu.be/uJi60fvr1aA

https://youtu.be/rFV0mPMYi8M

https://youtu.be/rsXXBd41kuY

https://youtu.be/Oszn1RX_WGQ

https://youtu.be/NcuPqgfLF14

https://youtu.be/JQlZ7TVt6So

https://www.youtube.com/watch?v=OC8n1RBhrqQ

https://www.youtube.com/watch?v=TdwaFt0cZzM

https://www.youtube.com/watch?v=TdwaFt0cZzM&t=109s

https://www.youtube.com/watch?v=kD4haauGMB4

https://www.youtube.com/watch?v=YL4n_dZTvdk

https://www.youtube.com/watch?v=OyV6MdImxFk&feature=youtu.be

https://www.youtube.com/watch?v=iXeShoJ97S4&feature=youtu.be

 

நன்றி:

1.     திரு PRK ரஞ்சித்குமார், ஸ்ரீரங்கம்,

2.     திரு கிருஷ்ணமூர்த்தி, வாத்திய மிராசு, அ/மி வரதராஜ பெருமாள் கோவில், காஞ்சிபுரம்.

3.     திரு ராகவ பட்டர் , ஸ்தானிகம், அ/மி பவளவண்ண பெருமாள் கோவில், காஞ்சிபுரம்.

4.     P. Sambamurthy, Catalogue of Musical Instruments Exhibited in the Government Museum, Chennai 

5.     வெ. நீலகண்டன், வாழ்விழந்து வரும் கிராமிய இசைக் கருவிகள்

6.     Lalitha M/Nandhini M - Proceedings of National Seminar on PRISTINE GLORY of Kanchipuram, Sankara University, Enathur, Kanchipuram

 

 


No comments: