ஊடக அறிக்கை: 8-5-2020 இலங்கையில் நல்லாட்சிக்கான அவுஸ்திரேலியாவின் அனுசரணை அமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கை


Australian Advocacy for Good Governance in Sri Lanka Inc.
ශ්‍රී ලංකාවේ යහපාලනය සඳහා වූ ඔස්ට්‍රේලියානු සහයෝගිතාව
இலங்கையில் நல்லாட்சிக்கான அவுஸ்திரேலிய அனுசரணை இணை
Reg No. A0062162S

கொவிட்-19 பரவிக்கொண்டிருப்பது மிகத்தெளிவாக இருந்த வேளையிலும், உலக சுகாதார அமைப்பு உலகளாவிய நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தியிருந்த போதிலும், இலங்கை ஜனாதிபதி பாராளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்து –– அதுவும் அரசியலமைப்பு அனுமதிக்கும் அதி முதல் தினமான பங்குனி 2 இல் கலைத்து –– பொதுத்தேர்தலுக்கு உத்தரவிட்டார். எனினும் கொரொனா தொற்றினால் மக்கள் எதிர்கொண்டுள்ள பாரிய சுகாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, தேர்தல் ஆணைக்குழு தேர்தலை ஏப்ரல் 25 இல் இருந்து ஜுன் 20 இற்கு தள்ளிப்போட்டது. தற்போதைய சூழ்நிலையில், சுதந்திரமும் நியாமுமான தேர்தல் ஒன்று இடம்பெற முடியுமா என்ற கவலை பல்வேறு அரசியல் கட்சியினர் மத்தியில் காணப்படுகிறது.
இன்றைய இடைக்கால அரசு சுகாதார நெருக்கடியை பொதுத் தேர்தலில் அரசியல் லாபம் பெறுவதற்குப் பயன்படுத்துவதாகத் தோன்றுகிறது. கொடிய கொரோனாவைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமுலில் இருந்தபொழுது, அரசாங்கத்துடன் இணைந்துள்ள அரசியல் கட்சிகள் வீட்டுக்கு வீடு பிரச்சாரங்களையும் கூட்டங்களையும் நடத்தி தமது தேர்தல் வெற்றியை மேம்படுத்தினர். அரசுசார் அரசியல்வாதிகள் கொவிட்-19 நிவாரணப் பொதிகளை நாடு பூராவும் வினயோகித்திருந்ததும் பரவலாக அறியப்பட்டதே. நாட்டில் மிகவும் வறுமைப்பட்ட பலவீனமான மக்களிடமிருந்து அரசியல் லாபம் பெற செய்யப்பட்ட ஓர் தரக்குறைவான கட்டாயப்படுத்தலாக –– ஏன் லஞ்சமாகவே –– பலரும் இதைப் பார்க்கிறார்கள். இதுபோன்ற கேள்விக்குரிய நிவாரணம் மற்றும் நிதியுதவித் திட்ட்ங்களைக் கண்டிப்பவர்கள், கடுமையான போலீஸ் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற ஜனநாயகத்தில் அரசாங்கம் எப்போதும் “மக்களின், மக்களால், மக்களுக்காக” ஆனதாய் இருத்தல்வேண்டும். இலங்கையில் எப்போதாவது மக்களை முன்னிறுத்த சிறந்ததோர் நேரம் இருந்திருக்குமாயின், அது இப்பொழுதுதான். ஓர் அரசாங்கம் ஆளப்படுவோரின் ஒப்புதலுடன் இருப்பது அவசியம் மட்டுமல்லாது (இவ்வரசாங்கம் அதை இன்னும் பரிசோதிக்க வேண்டியுள்ளது), தனக்கு வாக்களித்தவர்களை மட்டுமின்றி, ஏனைய வாக்காளர்களையும் அவர்தம் பிரதிநிதிகளையும் மதித்து நடத்தல் வேண்டும்.

இலங்கை அரசியலமைப்பின் பிரிவு 70(5), பாராளுமன்றம் கலைக்கப்படும்போது புதிய பாராளுமன்றத்தின் முதல் அமர்வுநாளை ஜனாதிபதி குறிப்பிடவேண்டும் என்றும், அந்த நாள் பாராளுமன்ற கலைப்பு அறிவிக்கப்பட்ட மூன்று மாதத்திற்குள் இருக்கவேண்டும் என்றும் கூறுகிறது. இதன் பிரகாரம் புதிய பாராளுமன்றம் 2 ஜூன் 2020 இற்கு முன் கூடவேண்டும். ஆயினும் தேர்தலை ஜூன் 20 இல் நடத்த முடிவெடுத்திருப்பதானது நிச்சயம் அரசியலமைப்பு சட்டக் குழப்பங்களுக்கே வழிவகுக்கும். அநேகமாக எல்லா எதிர்க்கட்சியியினரும் பாராளுமன்றத்தை மீளக்கூட்டி அரசியலமைப்புக்கமைய இணக்கப்பாட்டுடன் ஓர் முடிவுக்கு வரவேண்டுமென ஜனாதிபதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  மேலும், அரசியலமைப்பின் பிரிவு 148 இன் படி, பாராளுமன்றம் ‘பொது நிதி’ மீது பூரண கட்டுப்பாடு கொண்டுள்ளது. பொதுச் சேவையைத் தொடரவும் தற்போதைய சுகாதார நெருக்கடியை மேற்கொள்ளவும் இருக்கும் ஒரே வழி, குறைநிரப்பு மதிப்பீடுகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அவை அதிகப்படியான அங்கத்தவர்களால் நிறைவேற்றப்பட வேண்டும். ஜனாதிபதி இதை செய்வதற்கு அரசியலமைப்புப் பிரிவு 70(7) இடமளிக்கிறது.   

தேர்தல் தொகுதிகள் தோறும் மக்கள் பல சமூக இடைவெளிக் கட்டுப்பாடுகள், நீடித்த ஊரடங்குகள், மற்றும் வேலை இழப்புகளால் திண்டாடுகிறார்கள். முன்வரிசை மருத்துவப் பணியாளர்கள் பலர் நம்பகரமான தற்காப்புச் சாதனக் குறைவால் கூடியளவு கொரோனா தொற்று ஆபத்தையும், மனநலப் பிரச்சினைகளையும் எதிர்கொள்கிறார்கள். இச்சூழ்நிலையில், நாடு ஒரு பொதுத்தேர்தலை சந்திக்கத் தயாரில்லை என்பதும், கொரோனாவிலிருந்து பாதுகாப்பான தேர்தல் பிரச்சாரங்களை நடத்தும் சாத்தியக்கூறுகள் இல்லை என்பதும் தெரிந்ததே. 
எங்கும் பயமும் அங்கலாய்ப்பும் சூழ்ந்த நிலையில், தேர்தலில் மக்கள் சரியான தெரிவை மேற்கொள்ளும் ஆற்றலும், ஏன் அதில் பங்குபற்றும் அவாவும், அருகிப்போயுள்ளது என்பதே உண்மை. அரசியல்வாதிகளுக்கும் ஆட்சியதிகாரத்தினருக்கும் மத்தியில் ஒத்த கருத்தை ஏற்படுத்த இதுவே தக்க தருணம். மக்களை பிளவு படுத்துவதற்கோ, அல்லது அவர்களின் குடியுரிமைகளை அடக்குவதற்கோ, அல்லது பயங்கரவாத தடைச்சட்டத்தைக் கொண்டு அரசியல் எதிரிகளை மௌனிக்கச்செய்வதற்கோ அல்ல. வாக்காளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமலும், எதிர்க்கட்சியினரின் விருப்புகளுக்கு மாறாகவும் நடத்தப்படும் தேர்தல் என்றும் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனுமே பார்க்கப்படும்.
கொரோனாவைரஸ் நெருக்கடியானது உலகெங்கும் பல நியமங்களை மீறியுள்ளது. சமூக மற்றும் பொருளாதார விடயங்களில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினரின் இருபக்க இணக்கப்பாட்டு அணுகுமுறையும், சுகாதார வல்லுனர்களின் ஆலோசனைகளை மதித்துச் செயல்படுத்தியும், இவையனைத்திலும் திறமை மிக்க சிவில் நிர்வாக மற்றும் பாதுகாப்புப் படையினரின் உதவியை உள்வாங்கியும் செயல்பட்டதன் மூலம், பாரிய சவால்களை நல்லமுறையில் கையாண்ட சர்வதேச அரசுகளிடமிருந்து இலங்கையும் நல்ல பாடங்களை கற்க முடியும்.
வற்புறுத்தல் அல்ல, மாறாக ஒத்திசைவுதான் இன்றைய இலங்கையின் அவசிய தேவை. முன்னெப்போதுமில்லாத சுகாதார மற்றும் பொருளாதாரப் பேரழிவு சூழ்ந்துள்ள இவ்வேளையில், விவேகமும் பகுத்தறிவும் உள்ள தலைவர்களின் தேசப்பற்றுப் பொறுப்பு இதுவாகும்.
கையொப்பமிடப்பட்டது:

கலாநிதி லயனல் போபகே
தலைவர்
இலங்கையில் நல்லாட்சிக்கான அவுஸ்திரேலிய அனுசரணை (இணை)
மெல்பன், ஆஸ்திரேலியா
மோபைல்:         +61 405 452 130
மின்னஞ்சல்:   lionel.bopage@gmail.com


No comments: