வாழ்நாளை வரமாக்கி சேவையாற்றும் மருத்துவர்கள்
மனவுளைச்சற் குட்பட்டு தற்கொலைக்கு முயலுகிறார்
மதுகுடிக்கும் பெருங்குடியர் மதுகிடைப்ப தில்லையென
மனவுளைச்சற் காளாகி தற்கொலைக்கு போகின்றார்
உயிரெடுக்கும் மதுவதனை உயர்வெனவே கருதுகிறார்
உயிர்கொடுக்கும் மருத்துவரை உணரவவர் மறுக்கின்றார்
உயிர்பறிக்கும் கொரனோவின் உக்கிரத்தை அறியாமல்
உயர்குடியர் மதுவதனை நாடுவதே வியப்பாகும் !
கூழ்குடிக்க வழிகாணா அலைகிறது ஒருகூட்டம்
கும்மாளம் அடிப்பதற்குத் துடிக்கிறது மறுகூட்டம்
குடிக்கமது இல்லையெனக் குதிக்கிறது பெருங்கூட்டம்
அழித்திவிடும் கொரனோவோ அதுபாட்டில் பெருகிறது
சுற்றுலா கவிழ்ந்ததென்று சுற்றுவார் அலறுகிறார்
சுயநினைவு இல்லாமல் திரிகிறார் ஒருகூட்டம்
கற்பனையில் மூழ்கிடுவார் கஞ்சாவை நாடுகிறார்
கருவறுக்கும் நினைப்போடு கொரனோவோ வருகிறது !
உலகநிலை மனமிருத்தி நடப்பதுதான் பெருங்கடமை
அறிவெமக்கு ஆண்டவனால் அளித்த பெருவரமாகும்
பொறுப்புடனே நடந்துநாம் போக்கிடுவோம் கொரனோவை !
No comments:
Post a Comment