உலகச் செய்திகள்


அமெரிக்க எதிர்ப்பையும் மீறி உலக சுகாதார ஸ்தாபனம் சீன அரசுக்கு பாராட்டு

அமெரிக்க ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளுக்கு மலேரியா மாத்திரை பலன் அளிப்பதாக தகவல்

வௌவால்களை ஆராயும் சீனப் பெண்ணை​ விசாரிக்க அமெரிக்கா வலியுறுத்தல்

இத்தாலியில் 2 மாத ஊரடங்கு தளர்வு

கொரோனா: அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு சீனா பதிலடி

ஆதாரமின்றி குற்றம் சாட்டக் கூடாது: அமெரிக்காவுக்கு ஐ.நா. கண்டனம்

உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியது இத்தாலி

கொரோனா வைரசுக்கு எதிரான போரின் அடுத்த கட்டத்தில் அமெரிக்கா இருக்கிறது

கொவிட்-19: கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் நிலையில் 'இரண்டாவது அலை' தாக்கம் பற்றி கடும் எச்சரிக்கை



அமெரிக்க எதிர்ப்பையும் மீறி உலக சுகாதார ஸ்தாபனம் சீன அரசுக்கு பாராட்டு





கொரோனா விவகாரத்தில் அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி சீனாவை உலக சுகாதார நிறுவனம் பாராட்டி உள்ளது.
கொரோனா வைரஸ் விவகாரத்தில் ஆரம்பம் முதலே சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார நிறுவனம் செயல்பட்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். உலக சுகாதார நிறுவனத்துக்கு அளித்து வந்த அமெரிக்க நிதியையும் அவர் நிறுத்தி விட்டார்.
கடந்த 30ம் திகதி கூட சீனாவின் மக்கள் தொடர்பு அமைப்பாக உலக சுகாதார நிறுவனம் செயல்பட்டு வருவதாக சாடியதுடன் அதற்காக அந்த அமைப்பு வெட்கப்பட வேண்டும் என்றும் தாக்கினார்.
உலகம் முழுக்க கொரோனா வைரஸ் தொற்றுநோய் 2 இலட்சத்து 40 ஆயிரத்துக்கு மேற்பட்டோரை கொன்றுள்ள நிலையில் அமெரிக்கா மட்டுமின்றி ஜேர்மனி, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளும்கூட கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனா மீது குற்றம் சாட்டுகின்றன.
ஆனால் கொரோனா வைரஸ் தோன்றிய வுகான் நகரில் இப்போது கடைசி கொரோனா நோயாளியும் குணம் அடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்ட நிலையில், இந்த தொற்று பாதித்த ஒருவர் கூட அங்கு இல்லை.
இதற்காக சீனாவை உலக சுகாதார நிறுவனம் பாராட்டி உள்ளது.
இதையொட்டி ஜெனீவாவில் உலக சுகாதார நிறுவனத்தின் நெருக்கடி திட்ட தொழில்நுட்ப பிரிவின் தலைவர் மரிய வான் கெர்கோவ், இணையவழியாக நிருபர்களிடம் பேசியபோது கூறியதாவது:-
சீனாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக தாக்கியவர்கள் யாரும் இல்லை, உகானில் ஒருவர்கூட இந்த தொற்று பாதித்தவர் இல்லை என்று வந்துள்ள தகவல்கள் வரவேற்கத்தகுந்தவை. இந்த சாதனைக்காக அவர்களுக்கு பாராட்டுகள்.
கட்டுப்பாடுகளை எப்படி தளர்த்துவது, எப்படி இயல்பு நிலைக்கு சமூகத்தை கொண்டு வருவது, இந்த வைரசுடனே நாம் எப்படி வாழ்ந்து முன்னோக்கி செல்வது என்பதையெல்லாம் சீனாவிடம் இருந்து உலகம் கற்றுக்கொண்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக சீனா கடுமையாக உழைத்தது. நான் அங்கு 2 வாரங்கள் இருந்தேன். அங்கு சுகாதார அமைச்சு அதிகாரிகளுடன் நேரடியாக பணியாற்றினேன். மேலும் ஆஸ்பத்திரிகளில் இருந்து சமூகங்கள் வரை பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றியபோது கொரோனா வைரஸ் பரவலை குறைக்க அவர்கள் உழைத்ததை அறிவேன்.
வுகான் நகர மக்கள் சளைக்காமல் முயற்சிகள் எடுத்தார்கள் சுகாதார பணியாளர்கள் மட்டுமல்ல வீடுகளில் உள்ள ஒவ்வொரு நபரும், பொது சுகாதார நடவடிக்கைகளை கடைப்பிடித்து நடந்தனர். இதற்காக அவர்களை மனமார பாராட்டுகிறேன்.
உங்கள் அர்ப்பணிப்புக்கும், சேவைக்கும் நன்றி தெரிவிக்கிறேன். நீங்கள் உங்களிடம் இருந்ததை உலகில் எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. புதிதாக யாருக்காவது கொரோனா வைரஸ் தாக்கினால் வுகான் மக்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும்.
சீனாவை உலக சுகாதார நிறுவனம் வெளிப்படையாக பாராட்டி இருப்பது அமெரிக்காவுக்கு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.   நன்றி தினகரன்      










அமெரிக்க ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளுக்கு மலேரியா மாத்திரை பலன் அளிப்பதாக தகவல்

Monday, May 4, 2020 - 3:03pm

அமெரிக்க ஆஸ்பத்திரிகளில் கொரோனா வைரஸ் தாக்கியவர்களுக்கு மலேரியா மாத்திரைகள் தரப்படுவதாகவும், அவை நல்ல பலன் அளிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
மலேரியா காய்ச்சல் வந்தவர்களுக்கு சிகிச்சையின்போது தரக்கூடிய ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் கொரோனா நோயாளிகளுக்கு வைரசை கொல்வதில் நல்ல பலன் அளிக்கிறது என தகவல்கள் வெளிவந்தன. அதைத் தொடர்ந்து கொரோனா நோயாளிகளுக்கு இந்த மாத்திரையை தரலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியது.
அதைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் இந்த மாத்திரைகளை இந்தியாவில் இருந்து ஏராளமாக இறக்குமதி செய்தன.
சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் கொரோனா சிகிச்சையில்இந்த மாத்திரைகளை எடுத்துக்கொண்டவர்களிலும் அதிக இறப்பு பதிவாகி உள்ளது, இது கொரோனாவுக்கு பலன் தரும் என்பதற்கு ஆதாரம் இல்லை என அறிக்கைகள் வெளியாகின. இதுபற்றி கருத்து தெரிவித்த ஜனாதிபதி டிரம்ப், இந்த மாத்திரைகள் பற்றிய நல்ல அறிக்கைகளும் வந்துள்ளன என்று ஆதரவாக கருத்து வெளியிட்டார்.
ஆனால் நியூயோர்க் உள்ளிட்ட பல இடங்களில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு இந்த ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் தான் பலன் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
டிரம்பின் வேண்டுகோளை அடுத்து அமெரிக்காவுக்கு இந்தியா 5 கோடிக்கும் அதிகமான ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவில் பல ஆஸ்பத்திரிகளில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தாக்கியவர்களுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் தரப்படுவதாக மருத்துவ ஊடக அறிக்கை (எம்டெட்ஜ்) வெளியாகி உள்ளது.
அங்கு கனெக்டிகட் மாகாணத்தில் ஆஸ்பத்திரிகளை நடத்தி வருகிற யேல் நியூ ஹெவன் சுகாதார அமைப்பில் கொரோனா வைரஸ் தாக்கியவர்களுக்கு முதல் வரிசை சிகிச்சையின்போது ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் தரப்படுகின்றன, இரண்டாவதாக டோசிலிசுமாப் மருந்துகள் தரப்படுகின்றன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதில், “யேலில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள்தான் முதலில் தரப்படுகின்றன. ஏனென்றால், அதில் சக்தி வாய்ந்த வைரஸ் தடுப்பு மற்றும் சாத்தியமான மருத்துவ நன்மை உள்ளது” என்று அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளி இதய மருத்துவ நிபுணர் நிகார் தேசாய் அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.
மேலும், “இது விலை மலிவானது, பல்லாண்டு காலமாக இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மருந்துகள் தரப்படும்போது கொரோனா நோயாளிகள் நல்லதொரு நிவாரணம் பெறுகிறார்கள். எங்களால் முடிந்ததை நாங்கள் செய்ய முயற்சிக்கிறோம்” என்றும் அவர் கூறினார்.
அமெரிக்காவில் யேல் நியூ ஹெவன் ஆஸ்பத்திரியில் உள்ள வார்டுகளில் சரிபாதி அளவில், அதாவது 400-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள்தான் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   நன்றி தினகரன் 













வௌவால்களை ஆராயும் சீனப் பெண்ணை​ விசாரிக்க அமெரிக்கா வலியுறுத்தல்

Tuesday, May 5, 2020 - 11:11am

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசின் தோற்றம் குறித்த கேள்விகளுக்கும்  சந்தேகங்களுக்கும் இன்னும் பதில் கிடைக்கவில்லை. 'வௌவால்களில் இருந்து கொரோனா வைரஸ் பரவி இருக்கலாம்' என்றும் 'எறும்பு திண்ணிகளிடம் இருந்து மனிதருக்கு பரவி இருக்கலாம்' என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
ஆனால்  அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் 'சீனாவில் வூஹான் நகரில் உள்ள  வைராலஜி ஆராய்ச்சி மையத்தில் இருந்து சீன ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்டது தான் கொரோனா. அது அங்கிருந்து கசிந்து இருக்கலாம்' என  சீனா மீது குற்றம்சாட்டி வருகின்றன
இந்நிலையில்  வூஹான் வைரலாஜி ஆராய்ச்சி மையத்தின்  மூத்த பெண் ஆராய்ச்சியாளரும்  'பேட் வுமன்' (வௌவால் பெண்மணி) என அழைக்கப்படுபவருமான  ஷி ஷெங்கிலி மீது  உலகின் கவனம் திரும்பி உள்ளது. 18 வருடங்களாக கொரோனா குடும்ப வைரஸ் குறித்தும் வவ்வால்கள் குறித்தும் இவர் ஆராய்ச்சி செய்து வருகிறார். உடல் முழுவதும் வைரஸ் கிருமிகள் இருந்தும் வவ்வால் மட்டும் எப்படி பாதிக்காமல் இருக்கின்றன என்பது குறித்து அறிய  இந்தியா  அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் சென்று  அங்குள்ள மலை குகைகளில் உள்ள வவ்வால்களை பிடித்து வந்து  சீனாவில் ஆராய்ச்சிகளை செய்து இருக்கிறார்.
கொரோனா வைரஸ் கசிந்ததாக அமெரிக்கா கூறும்  வூஹான் ஆராய்ச்சி மையத்தின் 'பி4' சோதனை கூடத்தில்தான் ஷி ஷெங்கிலி இந்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இவர்  2013ல் வௌவால் ஒன்றின் உடலில் இருந்து ஒரு கொடிய வைரசைக் கண்டறிந்தார். இது கொரோனா வைரசோடு  96.2 ஒத்துப் போவதால் ​வௌவாலிடம் இருந்து தான்  கொரோனா பரவியிருக்கும் எனக் கூறி வருகிறார்.
“கொரோனா வைரஸ் வுகான் நகரில்  கடல்வாழ் உயிரினங்களை விற்கிற சந்தையில் இயற்கையாக உருவான வைரஸ் என்று சொல்லப்படுவதில் உண்மை இல்லை. இந்த வைரஸ் அந்த சந்தைக்கு பக்கத்தில் அமைந்துள்ள வுகான் வைராலஜி நிலையத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டதுதான்  அங்கிருந்து கசிந்துதான் அது உலகம் முழுவதும் இப்போது பரவி விட்டது” என்பதுதான் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் தொடர் குற்றச்சாட்டு.
அந்த வைராலஜி நிலையத்தின் இயக்குனர் பொறுப்பில் இருந்தவர் இந்த வௌவால் பெண்தான்.
கடந்த டிசம்பர் மாதம் 1-ம் திகதி கொரோனா வைரஸ் வுகான் நகரில் முதன்முதலாக தென்பட்டதாக உலகத்துக்கு தெரிய வந்தபோதே  இந்த வௌவால் பெண் காணாமல் போய்விட்டார்.
அவரைப் பற்றி எழுந்துள்ள பரபரப்பு குற்றச்சாட்டு  அவர் கொரோனா வைரஸ் பற்றிய மர்ம தகவல்கள் மற்றும் இரகசியங்களுடன் மேற்கத்திய நாடு ஒன்றுக்கு தாவி விட்டார் என்பதுதான்.
இந்த குற்றச்சாட்டை  அந்த வௌவால் பெண் இப்போது மறுத்திருக்கிறார். இந்த மறுப்பு எப்படி வந்திருக்கிறது?
திடீரென காணாமல் போய்  மூளைச்சாவு அடைந்து விட்டார் என்றெல்லாம் கிசுகிசுக்கப்பட்டு  இப்போது பொதுவெளிக்கு வந்து  “இல்லை.. இல்லை.. நான் உயிரோடுதான் இருக்கிறேன்” என்று காட்டிக் கொண்டிருக்கிற வட கொரியா தலைவர் கிம் ஜாங் அன் போல இவரும் வெளியுலகில் தோன்றி இருக்கிறாரா? என்றால்  அதுதான் இல்லை.
இப்போது ‘வீசாட்’ என்ற சமூக ஊடகத்தின் வழியேதான் அவர் மறுப்பு தெரிவித்து இருக்கிறார். அதில் அவர் என்ன சொல்லி இருக்கிறார்?
“ நானும்  குடும்பமும் நன்றாகவே இருக்கிறோம் அன்பு நண்பர்களே...
நாட்டை விட்டு தாவிச்செல்வது என்பது எத்தனை கடினமானது... அது ஒரு போதும் நடக்காது.. நாங்கள் தவறாக எதையுமே செய்து விடவில்லை. அறிவியலின் மகத்தான நம்பிக்கையுடன் சொல்கிறேன். மேகங்கள் கலைந்து சூரியனைக் காணும் நாள் வரும். அப்போது சூரியன் பிரகாசிப்பதைக் காண்போம்”.
'ஷி ஷெங்கிலி தனது ஆய்வு மூலம் கொரோனா வைரசை உருவாக்கியிருக்கிறார். அந்த வைரஸ் சோதனை கூடத்தில் இருந்து கசிந்து இருக்கலாம். இதனால்  அவரிடம் விசாரணை நடத்த வேண்டும்' என  அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிற்கு ஆதரவான ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்க துவங்கியுள்ளனர். இதற்கு பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.  நன்றி தினகரன் 











இத்தாலியில் 2 மாத ஊரடங்கு தளர்வு

Wednesday, May 6, 2020 - 9:34am

இத்தாலியில் சுமார் 2 மாதம் அமலில் இருந்த ஊரடங்கு முடிவுக்கு வந்துள்ளது. அங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடு இத்தாலி. கொரோனா பரவலைத் கட்டுப்படுத்த  நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை முதன் முதலில் இத்தாலி தான் அமுல்படுத்தியது. தற்போது வரை இத்தாலியில் 2 இலட்சத்து 11 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 28 ஆயிரத்து 884 பேரின் உயிரை கொரோனா பறித்துள்ளது.
எனினும் அங்கு கடந்த 2 வாரங்களாக புதிதாக கொரோனா பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் இத்தாலியில் சுமார் 2 மாதம் அமுலில் இருந்த ஊரடங்கு முடிவுக்கு வந்துள்ளது. அங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
கட்டுமான பணி நடைபெறும் இடங்கள்  தொழிற்சாலைகள்  அலுவலகங்கள் மற்றும் ஹோட்டல்கள் ஆகியவற்றில் பணிபுரிந்த சுமார் 40 இலட்சம் பேர் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளனர். உணவகங்கள் திறந்திருந்தாலும் அங்கு பார்சல்கள் மட்டுமே வழங்க கட்டுப்பாடு உள்ளது.
ஊரடங்கு தளர்வு மக்களுக்கு மகிழ்ச்சியளித்தாலும் கொரோனா குறித்த அச்சத்துடனேயே அவர்கள் நடமாடுகின்றனர். முகக் கவசம் அணிந்திருப்பதுடன் சமூக இடைவெளியையும் கடைப்பிடித்து வருகின்றனர்.   நன்றி தினகரன் 











கொரோனா: அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு சீனா பதிலடி

Wednesday, May 6, 2020 - 9:51am

சீனா கொரோனா வைரஸை திட்டமிட்டு பரப்பியதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அரசு தொடர் குற்றச்சாட்டுகளை அடுக்கி வந்தது. இதற்கு தற்போது சீன அரசு பதில் அளித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்  மற்றும் அமெரிக்க மாநில செயலாளர் மைக் பாம்பியோ ஆகியோர் கொரோனா வைரஸை  சீனா திட்டமிட்டு பரப்பி அமெரிக்க பொருளாதாரத்தை முடக்கப் பார்க்கிறது என கடந்த சில நாட்களாக தொடர் குற்றச்சாட்டை முன்வைத்து வந்தனர்.
வூஹான் வைராலஜி ஆய்வுகூடத்தில் இருந்து சீன அரசு வேண்டுமென்றே கோவிட்-19 மாதிரியை கசியவிட்டு ஐரோப்பிய நாடுகள் வழியாக அமெரிக்காவுக்கு கொரோனாவைப் பாரப்பியது என அமெரிக்கா குற்றம்சாட்டி அதற்கு தங்களிடம் பல்வேறு ஆதாரங்களும் உள்ளன எனவும் தெரிவித்து இருந்தது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது பலவிதமான வதந்திகளும் பரவி வந்தன. கொரோனா பாதிப்பு முடிவடைந்ததும் இரு நாடுகளுக்குள்ளும் போர் மூளும் அபாயம் ஏற்படும் என பலர் அச்சம் தெரிவித்தனர்.
இதனால் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பனிப்போர் நீடித்து வந்தது. தற்போது சீன அரசு அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ளது.அமெரிக்காவின் பிரபல ஏபிசி தொலைக்காட்சிக்கு அமெரிக்க மாநில செயலாளர் மைக் பாம்பியோ பேட்டி அளித்து இருந்தார்.
அதில் அவர் சமீபத்தில் சீனாவை கடுமையாக சாடி பேசி இருந்தார். சீனா மீது பொருளாதாரத் தடை கொண்டுவர வேண்டும் என அவர் தெரிவித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து சீனாவின் அரசு இதழான குளோபல் டைம்ஸ்-ல் பாம்பியோ ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சீனாவுக்கெதிராக அடுக்கி வருகிறார் என கூறி இருந்தது.
சீனா மீது குற்றஞ்சாட்ட தங்களிடம் ஆதாரம் உள்ளது என வாய் வார்த்தையால் கூறினால் போதாது. அதற்காக ஆதாரத்தை மக்கள் முன்னிலையில் காட்டி பேசவேண்டும். அமெரிக்கர்களை டிரம்ப் அரசு இவ்வாறு பேசி முட்டாள்கள் ஆக்கிவருகிறது. உண்மை என்னவெனில் பாம்பியோவிடம் சீனா மீது குற்றம்சாட்ட ஒரு நம்பகமாக ஆதாரமும் இல்லை என சீனா கூறியுள்ளது. மேலும்  சீன வெளியுறவுத்துறை அமைச்சு பத்திரிகைத் தொடர்பாளர் கெங் ஷாங் கூறுகையில்  அமெரிக்க அரசு மக்கள் இறப்பைத் தடுக்கத் தவறிவிட்டது. தனது தவறை மறைத்து மக்களை திசை திருப்பவே சீனாவை குற்றஞ்சாட்டி வருகிறது என்றார்.   நன்றி தினகரன் 









ஆதாரமின்றி குற்றம் சாட்டக் கூடாது: அமெரிக்காவுக்கு ஐ.நா. கண்டனம்

Thursday, May 7, 2020 - 2:59pm

‘கொரோனா வைரஸ்  சீனாவின் வூஹான் நகரில் உள்ள ஆய்வகத்தில் இருந்து தான் பரவியதாக அமெரிக்கா கூறியுள்ளது. ஆனால்  இதற்கான ஆதாரத்தை அமெரிக்கா  இதுவரை தரவில்லை. ஆதாரமின்றி யார் மீதும் குற்றச்சாட்டு கூறக் கூடாது’ என  ஐ.நா.  தெரிவித்துள்ளது.
ஐ.நா. வின் சுகாதார அமைப்பான  உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால நடவடிக்கைகளுக்கான தலைவர் மைக்கேல் ரியான் கூறியதாவது: கொரோனா வைரஸ் உலகம் முழுதும் கோர தாண்டவமாடுகிறது. இந்த நோய்க்கு இதுவரை  2.30 இலட்சம் பேர் பலியாகி விட்டனர். புகார்கொரோனா வைரஸ்  சீனாவின் வூஹான் நகரில் உள்ள ஆய்வகத்தில் இருந்து தான்  முதல் முதலாக பரவத் துவங்கியதாகவும்  அது குறித்த தகவல்களை சீனா மறைத்து விட்டதாகவும்  அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்  குற்றம்சாட்டியுள்ளார். . இதற்காக  சீனா மீது நடவடிக்கை எடுக்கும்படி  அமெரிக்க வெளியுறவு அமைச்சர்  மைக் போம்பியோவும் கூறியுள்ளார்
ஆனால்  அதற்கான ஆதாரங்களை உலக சுகாதார நிறுவனம் கேட்டபோது  சீனாவின் செய்தி தொடர்பு துறை போல் செயல்படுவதாக  எங்கள் மீதே  அமெரிக்க ஜனாதிபதி குற்றம் சாட்டியுள்ளார். வூஹான் நகரில் உள்ள ஆய்வகத்தில் இருந்து தான்  கொரோனா வைரஸ் பரவத் துவங்கியது என்பதற்கான எந்த ஆதாரத்தையும்  அமெரிக்கா இதுவரை அளிக்கவில்லை.
ஆதாரமின்றி யார் மீதும் குற்றம் சாட்டக் கூடாது. காதில் வந்து விழுந்த செய்திகள் அடிப்படையில்  ஒருவர் மீது குற்றம் சாட்டி  விசாரணை நடத்தி  அது  உண்மை இல்லை என தெரிந்து விட்டால்  வேறு மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்பதை  அமெரிக்கா உணர வேண்டும்.
இது  அறிவியல் பிரச்சினையிலிருந்து மாறி  அரசியல் ரீதியான பிரச்னையாகி விடும். கொரோனா வைரஸ் தொடர்பாக  சீனா  அமெரிக்கா உள்ளிட்ட எந்த நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆலோசனை கூறினாலும்  அதை உலக சுகாதார நிறுவனம் பரிசீலிக்கும். இவ்வாறு  அவர் கூறினார்.
குஜராத் மாநில சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கொரோனா வைரசை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடிக்கும்படி  உலகம் முழுதும் உள்ள மருத்துவ நிபுணர்களுக்கு  உலக சுகாதார நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்து பரிசோதனை ஆய்வுகளை நடத்தும்படியும் கூறியுள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று  குஜராத்தில்   அஹமதாபாத்  சூரத்  வதோதரா  ராஜ்கோட் ஆகிய மருத்துவமனைகளிலும்  இந்த பரிசோதனை முயற்சிகளை துவங்கவுள்ளோம். எந்த பிரச்சினையும் ஏற்படாத வகையில்  சர்வதேச அளவில் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில்  இந்த பரிசோதனை நடக்கும்.   நன்றி தினகரன் 








உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியது இத்தாலி




எலிக்கு செலுத்தி வெற்றிகரமாக சோதனை
உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக இத்தாலி விஞ்ஞானிகள் கூறி உள்ளனர். தடுப்பூசி எலிக்கு செலுத்தப்பட்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மனித குலத்தையே உருக்குலைத்துள்ள கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிப்பில் பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒரு சில நாடுகளில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் சோதனை அடிப்படையில் நல்ல பலனைக் கொடுப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சில ஆய்வுகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன.
ஆனால் கொரோனாவுக்கு இதுவரை எந்த நாடும் மருந்து கண்டுபிடித்ததாக உறுதி செய்யப்படவில்லை. கொரோனா தடுப்பு மருந்து தொடர்பாக உலக சுகாதார அமைப்பும் அதிகாரபூர்வமாக தகவல் வெளியிடவில்லை.
இந்நிலையில்  உலகின் முதல் கொரோனா தடுப்பூசி மருந்தை உருவாக்கியிருப்பதாக இத்தாலி கூறியிருப்பதாக பல்வேறு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டாகிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்த தடுப்பூசி  ரோம் நகரில் உள்ள ஸ்பல்லான்ஷானி மருத்துவமனையில் சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது. முதலில் இந்த தடுப்பூசி எலிக்கு செலுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. ஒரு ஊசி போட்டதும் அந்த எலியில் ஆன்டிபாடிகள் உருவாகி உள்ளன. மனித உடலிலும் வைரசின் செயல்பாட்டை தடுத்துள்ளது.
மேலும்  தடுப்பூசியை பரிசோதித்தபோது  இது மனித அணுக்களில் உள்ள வைரஸை அழித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. தடுப்பூசியால் கொரோனா வைரஸ் அழிந்திருப்பது உலகிலேயே இதுதான் முதல் முறை என்று டாகிஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி லூய்கி  இத்தாலி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
இத்தாலியில் இதுவரை தயாரிக்கப்பட்ட தடுப்பூசி ஆய்வுகளில் இது மிகவும் முன்னேறிய கட்டம் என்று கூறிய அவர்  கோடை காலத்தில் மனிதர்களுக்கு இந்த மருந்தை செலுத்தும் முழுமையான ஆராய்ச்சி தொடங்கும் என்றார்.
தடுப்பூசியை உருவாக்கும் செயல்முறையை விரைவுபடுத்துவதற்கு  சர்வதேச அளவில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.   நன்றி தினகரன் 













கொரோனா வைரசுக்கு எதிரான போரின் அடுத்த கட்டத்தில் அமெரிக்கா இருக்கிறது




கொரோனா வைரசுக்கு எதிரான போரின் அடுத்த கட்டத்தில் அமெரிக்கா இருப்பதாக டிரம்ப் கூறினார்.
அமெரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 12 இலட்சத்தை கடந்து வேகமாக சென்று கொண்டிருக்கிறது. இதே போன்று பலியானவர்களின் எண்ணிக்கையும் 72 ஆயிரத்தை தாண்டி விட்டது.
இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம்  என்-95 முக கவசங்களை தயாரிக்கிற  பீனிக்சின் ஹனிவெல் இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கு சென்று பார்வையிட்டார். அங்கு அதன் பணியாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அமெரிக்காவில் கொரோனா வைரசின் பாதிப்பு குறைந்து வருகிறது. நாம் இப்போது கொரோனா வைரசுக்கு எதிரான போரின் அடுத்த கட்டத்தில் உள்ளோம். இது மிகவும் பாதுகாப்பான கட்டம். அமெரிக்கா படிப்படியாக திறக்கப்படுகிறது. நமது மக்களின் ஆழமான அர்ப்பணிப்புக்கு நன்றி.
அமெரிக்கா கிட்டத்தட்ட 250 ஆண்டுகளுக்கு முன் விடுதலை பெற்றது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் நமது சுதந்திரத்தை வெளிநாட்டினருக்கு வழங்க அரசியல்வாதிகள் அனுமதித்தனர். ஆனால் நாங்கள் அதை திரும்ப எடுத்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் அதை திரும்ப எடுத்து வருகிறோம். நீங்கள் இப்போது வேலை வாய்ப்பு பெற்றுள்ள அமெரிக்கர்களின் எண்ணிக்கையை பாருங்கள். அது தெரியும்.
எங்கள் நிர்வாகம் 2 எளிய விதிகளில் நம்பிக்கை வைத்திருக்கிறது. ஒன்று  அமெரிக்க பொருட்களையே வாங்க வேண்டும்  மற்றொன்று   அமெரிக்கர்களுக்கே வேலைவாய்ப்பைத் தர வேண்டும் இதுதான் அந்த 2 விதிகள். நமது நாட்டின் மக்கள் போர்வீரர்கள். உங்கள் உதவியுடன் நாங்கள் கொரோனா வைரசை வீழ்த்தி வெற்றி காண்போம். நமது எதிர்காலத்தை பெரிதாக உருவாக்குவோம். அமெரிக்க இதயங்களுக்கு  அமெரிக்க கைகளுக்கு  அமெரிக்க ஆன்மாக்களுக்கு பெருமை சேரட்டும்.
நீங்கள் நல்ல தரமான முக கவசங்களை தயாரிக்கிறீர்கள். மற்ற நாடுகளைப் போல் மோசமான முக கவசங்கள் இல்லை. இதைப்போன்று நல்ல நிறுவனம் இல்லை. துணிச்சல் நிறைந்த நமது டாக்டர்கள்  தாதிகள்  கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் போரிடுகையில் அவர்களை பாதுகாக்க இந்த கவசங்கள் பயன் படுகின்றன. 150 தொழிலாளர்கள் இரவு பகலாக 3 ஷிப்டுகளில் தினமும் பணிபுரிகிறீர்கள். வாரத்தில் 6 நாட்கள் வேலை செய்கிறீர்கள். நீங்கள் செய்ததை எண்ணிப்பாருங்கள். நீங்கள் இந்த நம்ப முடியாத தொழில் துறையின் ஒரு பகுதியாக இருக்கிறீர்கள். இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் இது மிகப்பெரிய அணி திரட்டல் ஆகும். ஒரு கண்ணுக்குத் தெரியாத எதிரியை நம்புவது கடினம். ஆனால் அது ஒரு மோசமான எதிரி.
உங்களுக்கு முன் இருந்த தலைமுறை தேசபக்தர்களைப் போலவே இந்த தொழில் நிறுவனத்தின் தொழிலாளர்களும் நமது தேசத்தை பாதுகாப்பதற்கும்  ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும்  அவர்களின் இதயத்தையும்  ஆன்மாவையும் ஊற்றுகிறார்கள்.
முன்னதாக டிரம்ப்  பூர்விக அமெரிக்கர்களுடன் ஒரு வட்டமேசை கலந்துரையாடலில் கலந்து கொண்டார். அப்போது அவர் கொரோனா வைரசை கடுமையான எதிரி என வர்ணித்தார். அதே நேரத்தில் நாம் அந்த எதிரியை வெற்றி கொள்வோம் என குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசும்போது  “இது வரை வேறு எந்த அரசும் செய்திராத வகையில்  பூர்வீக அமெரிக்க குடும்பங்கள் மற்றும் பழங்குடியினர் வாழ்வை நாங்கள் மேம்படுத்துகிறோம்” என குறிப்பிட்டார்.
மேலும்  கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில்  பிரான்ஸ்  இத்தாலி  ஸ்பெயின்  நைஜீரியா ஆகிய நாடுகளுக்கு அமெரிக்கா உதவுவதாகவும் கூறினார்.    நன்றி தினகரன் 









கொவிட்-19: கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் நிலையில் 'இரண்டாவது அலை' தாக்கம் பற்றி கடும் எச்சரிக்கை



கொரோனா வைரஸுக்கு எதிரான முடக்குதலை தளர்த்துவதற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இந்த வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தாக்கம் பற்றி சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது மேலும் அதிகமான உயிரிழப்புகள் மற்றும் நோய்த் தொற்றை ஏற்படுத்தும் அச்சம் நிலவி வருகிறது.
“நாம் சகிக்க முடியாத பின்னடைவுக்கான அச்சுறுத்தலை மேற்கொண்டுள்ளோம்” என்று கொலம்பியா பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் மற்றும் நோய் எதிர்ப்புக்கான மையத்தின் மருத்துவர் இயன் லிப்கின் குறிப்பிட்டுள்ளார்.ஜெர்மனி நிர்வாகம் வைரஸ் மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தினால் அதற்கான திட்டங்களை வகுக்க ஆரம்பித்துள்ளது. புதிதாக நோய்த் தொற்றியவர்கள் மற்றும் அவர்களின் தொடர்புகளை கண்டறிவதை இத்தாலி தீவிரப்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் அமுல்படுத்தியிருக்கும் முடக்க நிலையை இன்னும் தளர்த்தாத சூழலில் இந்த வைரஸின் புதிய அலை குறித்து அவதானம் செலுத்தியுள்ளது.
“இரண்டாவது அலை ஒன்று இருக்கும் ஆனால் பிரச்சனை எந்த அளவு நீடிக்கும் என்று கணிக்க முடியாது. அது சிறிய அலையா அல்லது பெரிய அலையா என்பது பற்றி இப்போதைக்கு கூற முடியாது” என்று பிரான்சின் பஸ்சர் நிறுவன வைரஸ் தொற்று பிரிவுத் தலைவர் உலிவியர் ஸ்சார்ட்ஸ் தெரிவித்துள்ளார்.    
அமெரிக்காவில் சுமார் பாதி அளவான மாநிலங்களில் முடக்க நிலை தளர்த்தப்பட்டு பொருளாதார செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதோடு, மக்கள் இடைவிடாது வீட்டை விட்டு வெளியேறும் அளவு அதிகரித்திருப்பதாக கைபேசி தரவுகளை மேற்கொள்காட்டி உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பொதுச் சுகாதார நிர்வாகத்தை கவலைகொள்ளச் செய்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் புதிய தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு அவசியமானது என நிபுணர்கள் கருதும் தீவிர மருத்துவ சோதனைகளை பல மாநிலங்களும் மேற்கொள்ளத் தவறியுள்ளன. 
அமெரிக்காவில் 14 நாட்களில் புதிய நோய்த் தொற்று மற்றும் பாதிப்பில் குறைவு அடைந்திருக்கும் நிலையில் முடக்கநிலையை தளர்த்துவது தொடர்பில் டிரம்ப் நிர்வாகத்தின் வழிகாட்டல்களை கடைப்பிடிப்பதில் பல ஆளுநர்களும் அழுத்தங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர்.
“முறையான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் கட்டுப்பாடுகளை தளர்த்தினால், துரதிருஸ்டவசமாக மேலும் பல உயிரிழப்புகள் மற்றும் நோய்த் தொற்றுகளை நாம் சந்திக்க வேண்டி வரும்” என்று வொசிஷ்டன் கெய்சர் பமிலி அறக்கட்டளையின் உலக சுகாதார கொள்கைகளுக்கான பணிப்பாளர் ஜோஷ் மிசவுட் தெரிவித்தார்.    ஆளுநர்கள் முடக்க நிலையை தளர்த்தியதைத் தொடர்ந்து அயோவா மற்றும் மிசவுரி மாநிலங்களில் புதிய சம்பவங்கள் திடமாக அதிகரித்து வரும் அதேவேளை, ஜோர்ஜியா, டென்னசி மற்றும் டெக்சாஸ் மாநிலங்களில் புதிய நோய்த் தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. 
மதுபான விடுதிகள் மீண்டும் திறக்கப்படுவது மக்கள் பெருமளவில் ஒன்றுகூடுவது தமது கட்டுப்பாடுகளை இழப்பதோடு, விளையாட்டு நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் ஆகியன மிக ஆபத்தான இரண்டு விடயங்களாகும் என்று லிப்கின் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை உலகெங்கும் நான்கு மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதோடு உயிரிழப்பு கால் மில்லியனை எட்டியுள்ளது. எனினும் மட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள், உயிரிழப்பு எண்ணிக்கையை கணிப்பதில் நாடுகளுக்கு இடையிலான வேறுபாடுகள் மற்றும் சில அரசுகள் உண்மையான எண்ணிக்கையை மறைப்பது போன்ற காரணிகளால் இதன் பாதிப்பு அளவு குறைத்து மதிப்பிடப்படுவதாகவும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.   
கொவிட்-19 தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் நாடாக உள்ள அமெரிக்காவில் 76 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருப்பதோடு 1.2 மில்லியன் பேர் நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். மறுபுறம் ஐரோப்பாவில் 140,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். 
குறிப்பாக ரஷ்யாவில் வைரஸ் தொற்று தீவிரம் கண்டுள்ளது. பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகளை பின்தள்ளி ரஷ்யாவில் 177,000 க்கும் அதிகமானவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்படி கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் ரஷ்யா ஐந்தாவது இடத்தில் உள்ளது.
ஆசியாவில் கொவிட்-19 வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000ஐக் கடந்துள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் முதன்முறை வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்ட சுமார் நான்கு மாதங்களுக்குப் பின்னர் ஆசியா இந்த நிலையை எட்டியுள்ளது. உயிரிழந்தவர்களில் சுமார் 4,600 பேர் சீனாவைச் சேர்ந்தவர்களாவர். அதையடுத்து, இந்தியா மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், ஜப்பான் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த நிலையில் உள்ளன.
வைரஸ் பரவலால் முன்னர் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த தென் கொரியா, சீனா, தாய்வான், ஹொங்கொங் ஆகியன தற்போது வழக்க நிலைக்குத் திரும்பி வருகின்றன.
இந்தியா, இந்தோனேசியா போன்ற நாடுகள் வைரஸ் பரவலை நிலைப்படுத்தப் போராடி வருகின்றன.
குறிப்பாக பாகிஸ்தானில் ஒரே நாளில் 1,764 பேருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அதன் முடக்கநிலை நீக்கப்படவிருக்கும் வேளையில் இத்தகவல் வெளியானது. புதிதாய் பாதிக்கப்பட்டவர்களையும் சேர்த்து, அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,000ஐத் தாண்டியுள்ளது. மேலும் 30 பேர் உயிரிழந்திருப்பதோடு, பாகிஸ்தானில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 594 ஆக அதிகரித்துள்ளது.
அந்நாடு, பொருளாதார மந்தநிலையைச் சந்திக்கும் நிலையில் கட்டுப்பாடுகள் கட்டங்கட்டமாகத் தளர்த்தப்படும் என்று பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.
ஆனால், வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்தால் கட்டுப்பாடுகள் மீண்டும் அமுலாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இருப்பினும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்று நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.
இதேவேளை ஆபிரிக்காவில் போதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிடில் கொவிட்-19 வைரஸினால் 1 இலட்சத்து 90 ஆயிரம் பேர் வரை பலியாவார்கள் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா பாதிப்பு பற்றி உலக சுகாதார அமைப்பின் ஆபிரிக்கா பிரிவு 47 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளது.  இதுபற்றி அந்த அமைப்பின் ஆபிரிக்காவுக்கான மண்டல இயக்குனர் மத்ஷிதிசோ மொயத்தி அறிக்கையில் தெரிவித்துள்ள செய்தியில், கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் போதிய அளவு மேற்கொள்ளவில்லை எனில், நோய் தொற்று ஏற்பட்ட முதல் ஆண்டில் ஆபிரிக்காவில் பலி எண்ணிக்கை 83 ஆயிரம் முதல் 1 இலட்சத்து 90 ஆயிரம் வரை செல்லக் கூடும். இதுவே பாதிப்பு எண்ணிக்கையானது 2.9 முதல் 4.4 கோடி வரை செல்லக் கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆபிரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் உள்ளது போன்று வேகமாக பெருகாவிட்டாலும், நெரிசல் மிக்க பகுதிகளில் மெல்ல பரவும் என்றும் அறிக்கையில் அவர் தெரிவித்து உள்ளார். ஆபிரிக்காவில் அடுத்த பல ஆண்டுகளுக்கு அன்றாட வாழ்வில் ஒரு பிரச்சினையாக கொரோனா பாதிப்பு மாறக் கூடும். 
அதனால் பல நாட்டு அரசுகளும் சரியான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்.  நாம் கொரோனா பாதிப்பு பற்றி சோதனை செய்து, கண்டறிந்து, தனிமைப்படுத்தி பின்னர் சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை உள்ளது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.   நன்றி தினகரன் 





No comments: